• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அ....அ....அண்ணா… விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (44)

|

-ராஜேஷ்குமார்

மனோஜ் செல்போனை எடுத்து இடது காதின் மடலுக்கு அழுத்தமாய் பொருத்திக்கொண்டு பிரேம்குமாரோடு பேசியபடியே தன் வீட்டில் வேறு ஏதாவது சத்தம் கேட்கிறதாவென்று உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தான்.

அடுத்த சில விநாடிகளிலேயே அதற்கு பலனும் கிடைத்தது. யாரோ தொண்டையை செருமுவதும், பிரேம்குமார் பேச வேண்டிய வார்த்தைகளை மெல்லிய குரலில் பிராம்ப்டிங் செய்வதும் மனோஜூக்குக் கேட்டது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 44

மனோஜின் உடம்பில் இருந்த எல்லா வியர்வை சுரப்பிகளும் திறந்து கொண்டன. இருதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது. ” எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது ”

செல்போனின் மறுமுனையில் பிரேம்குமாரின் குரல் மறுபடியும் கேட்டது.

” அண்ணா..... நீ வீட்டுக்கு வர இன்னும் எவ்வளவு நேரமாகும் .... ? ”

” இதோ வந்துட்டேயிருக்கேன். பிரேம்.... ரெட் ஃபீல்ட் ஏரியாவில் திடீர்ன்னு ட்ராபிக் ஜாம். நல்லா மாட்டிகிட்டேன். நீ பயப்படாமே இரு.... நான் இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவேன். வந்ததுமே டாக்டர்கிட்டே போயிடலாம். புலியகுளத்துக்குப் போனா டாக்டர் சர்வேஷ்வரன் இருப்பார். ஒரு ஊசி போட்டா சரியாயிடும்

” அ....அ....அண்ணா…..! ”

” சொல்லு பிரேம்.... ”

” எனக்கு பயமாய் இருக்ண்ணா ”

” என்ன பயம் .... ? ”

” நீ இங்கே வந்து சேர்றதுக்குள்ளே எனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ”

” ஒண்ணும் பயப்படாதே.... இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்குப் பக்கத்துல இருப்பேன்... தைரியமாய் இரு ”

மனோஜ் பேசிவிட்டு செல்போனை அணைத்தான். உடம்பு முழுவதும் நிற்காத வியர்வை.

நடுங்கும் கையோடு இரிடியம் செல்போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

” ஸ...ஸார் ...... என்னோட கஸின் பிரதர் பிரேம்குமார் பேசினதைக் கேட்டீங்களா .... ? ”

ஈஸ்வர் மறுமுனையில் மெல்லச் சிரித்தார்.

” போலீஸ்காரங்க பிரேம்குமார்க்கு நல்லாவே சொல்லித் தர்றாங்க. உண்மையாகவே ஒருத்தர்க்கு காய்ச்சல் இருந்தா இவ்வளவு சத்தமாகவும், தெளிவாகவும் பேச முடியாது ”

” ஸார்.... போலீஸூக்கு என்மேல எப்படி சந்தேகம் வந்ததுன்னு தெரியலை”

” எப்படியோ எக்ஸ்போஸ் ஆயிட்டே. கவலையை விடு...... ஜோன்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல உன்கிட்டே வந்துடுவான். உன்னோட காரை அதே ரோட்ல ஏதாவது ஒரு மரத்துக்கு கீழே வெளிச்சம் அதிகம் படாத இடத்துல நிறுத்திடு. காரைப் பத்தி கவலைப்படாதே. இப்ப நீ போலீஸ் விரிச்சிக்கிற வலையில் சிக்காமே வெளியே வர்றதாதான் முக்கியம் ”

” புரியது ஸார் ”

” கார்க்குள்ளேயே ரிலாக்ஸாய் இருந்து வெயிட் பண்ணு. ஜோன்ஸ் இன்னும் கால் மணி நேரத்துக்குள்ளே உன்கிட்டே வந்துடுவான் ”

” சரி ஸார் ” மனோஜ் செல்போனை அணைத்துவிட்டு காரை நகர்த்தி அருகில் இருந்த ஒரு மரத்தடிக்கு கொண்டு போய் வெளிச்சம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருக்க சரியாய் 15 நிமிடம் கழித்து அந்த ஆடி கார் வெண்ணிறத்தில் ஒரு தேர் போல் வந்து நின்றது.

ஜோன்ஸ் காரினின்றும் வெளிப்பட்டான். மனோஜின் காரை நெருங்கி கதவைத் திறந்து ட்ரைவிங் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.

மனோஜ் ஜோன்ஸை ஏறிட்டான்.

” என்ன புறப்படலாமா ..... ஜோன்ஸ் ஃப்ளைட் எத்தனை மணிக்கு ? ”

” போன் பண்ணி விசாரிச்சேன் ஸார். ஃப்ளைட் ஒரு மணி நேரம் லேட்... இந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே நாம சில பாதுகாப்பு ஏற்பாடுகளை பண்ணனும் ”

” பாதுகாப்பு ஏற்பாடுகளா ? ”

” ஆமா ஸார்..... ”

” ஈஸ்வர் அதைப்பத்தி என்கிட்டே ஒண்ணுமே சொல்லலையே ? ”

” அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் என்கிட்டேயே சொன்னார் ஸார் ” என்று சொன்ன ஜோன்ஸ் தன் சட்டைப் பாக்கெட்டில் குத்தியிருந்த பால்பாயிண்ட் பென் ஒன்றை எடுத்தான்.

” மனோஜ் ஸார் ...... இதுமாதிரியான ஒரு பால்பாயிண்ட் பேனாவை நீங்க வேற எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா ? ”

மனோஜ் அந்தப் பேனாவை வாங்கிப் பார்த்தான். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அழகாய் இருந்த அந்த பால்பாயிண்ட் பேனாவை திருப்பிப் பிடித்து அதன் பின்புறம் இருந்த குமிழை அழுத்தினான். பால்பாயிண்ட் பேனாக்களுக்கே உரித்தான அதன் எழுதும் முனை வெளியே வரவில்லை.

” உள்ளே ரீஃபில் இல்லையா ? ”

மனோஜ் கேட்க ஜோன்ஸ் சிரித்தான்.

” இது பால்பாயிண்ட் பேனா இல்ல ஸார். பால்பாயிண்ட் பேனா மாதிரியே இருக்கிற ஸ்பிரேயர் பென் ”

மனோஜின் விழிகளில் வியப்பு பரவியது.

” என்னது ஸ்பிரேயர் பென்னா ? ”

” ஆமா ஸார் ”

” இந்த ஸ்பிரேயர் பென் இப்ப எதுக்கு ? ”

” இதுக்குத்தான் ஸார் ” என்று சொன்னவன் மனோஜின் கையில் இருந்த ஸ்பிரேயர் பென்னை சட்டென்று பறித்து விநாடிக்கும் குறைவான நேரத்தில் அதை மனோஜின் முகம் முழுக்க பீய்ச்சினான். இடது கையில் வைத்திருந்த கர்ச்சீப்பால் தன் முகத்தை பொத்திக்கொண்டான்.

மனோஜ் நிலைமையை உணர்ந்து ஜோன்ஸின் கையில் இருந்த ஸ்பிரேயர் பென்னைப் பறிப்பதற்குள் கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு எரிச்சலும், இதயம் பிசைபடுவதைப் போன்ற வலியும், மனோஜை அப்படியே ஒரு பக்கம் சரிய வைத்தன. நுரையீரல் காற்றுக்காக வேகவேகமாய் சுருங்கித் துடிக்க மனோஜ் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தான். ஜோன்ஸ் மனோஜின் தோளைத் தொட்டான். ” இன்னும் ஒரே ஒரு நிமிஷம்தான். அப்புறம் நீங்க போலீஸ் கண்டுபிடிக்க முடியாத இடதுக்கு பத்திரமாய் போய் சேர்ந்துடுவீங்க. ஈஸ்வர் ஸார் உங்களுக்கு செஞ்ச பாதுகாப்பு ஏற்பாடு இதுதான் ”

ஜோன்ஸ் சிரிப்போடு பேசிக்கொண்டிருக்கும் போதே மனோஜின் இதயத் துடிப்பு நின்று போயிருந்தது. கண்கள் நிலைத்திருக்க, தலை ஒரு பக்கமாய் தொங்கியது. மனோஜின் நாசியருகே கை வைத்துப் பார்த்த ஜோன்ஸ் தன்னுடைய செல்போனை எடுத்து ஈஸ்வரைத் தொடர்பு கொண்டான்.

” ஸார்.... வேலை முடிஞ்சுது...... ”

” பிரச்சினை ஏதும் இல்லையே ? ”

” ஒரு பிரச்சினையும் இல்லை ஸார்.... பத்தே செக்கண்ட்தான்.... பாய்ஸன் பென் ஸ்பிரேயர் உண்மையிலேயே வெரி பவர்ஃபுல் ”

” சரி..... இனிமேல் என்னென்ன பண்ணனும்ன்னு நான் சொன்னது ஞாபகம் இருக்கா ஜோன்ஸ்? ”

” என்ன ஸார் இது,,,,,, நீங்க சொன்னது எனக்கு ஞாபகம் இல்லாம போகுமா ? மனோஜோட டெட்பாடியை அவரோட காரின் பின்சீட்ல அவர் தூங்கறமாதிரி படுக்க வெக்கணும் ”

” அப்புறம் ? ”

” காரை ஸ்டார்ட் பண்ணி ஏ.ஸியை ஃபுல்லா ஒடவிடணும். கார் கண்ணாடிகளை ஏத்திவிடணும் ”

” சரி..... அப்புறம் ? ”

” கார்ல இருக்கிற ஏ.ஸி ப்ளோயர்ஸ்க்குள்ளே பாய்ஸன் பென் ஸ்பிரேயரை யூஸ் பண்ணி பாய்ஸன் திரவத்தை தெளிச்ச உடனேயே நான் காரை விட்டு இறங்கிடணும் ”

ஈஸ்வர் மெல்ல சிரித்தார். ” அதுக்கு முன்னாடி நீ..... முக்கியமாய் பண்ண வேண்டிய ஒரு வேலையா மறந்துட்டே ஜோன்ஸ்? ”

” என்ன ஸார் ? ”

” மனோஜ்கிட்டே இருக்கிற நம்ம இரிடியம் செல்போனையும், அவன் சாதாரணமா உபயோக்கிற ஆண்ட்ராய்ட் செல்போனையும் எடுத்துக்கணும்ன்னு சொல்லியிருந்தேன் ”

” ஸாரி ஸார் மறந்துட்டேன் ”

” உடனடியாய் அதைப் பண்ணு ”

” இதோ..... இப்பவே எடுக்கறேன்..... ஸார் ”

” அதை முதல்ல பண்ணிட்டு மத்த வேலைகளை ஆரம்பி. ரோட்ல ஜன நடமாட்டம் இருக்கா ? ”

” ஒரு ஈ காக்கா கூட இல்ல ஸார். அதுவும் கார் நின்னுட்டிருக்கிற இடம் யாரோட பார்வைக்கும் படாத இடமாய் இருக்கு ”

” சரி.... இன்னும் ரெண்டு நிமிஷத்துல வேலையை முடிச்சுட்டு ஏர்போர்ட் கிளம்பிடு. போற வழியிலேயே மனோஜோட சாதாரண ஆண்ட்ராய்ட் செல்போனை சைபர் க்ரைம் ப்ராஞ்ச் ட்ரேஸ் பண்ண முடியாத அளவுக்கு நாசம் பண்ணிடு....” ஈஸ்வர் மளமளவென்று உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு மறுமுனையில் செல்போனை அணைத்தார்.

********

ஹெல்த்தி டேஸ் ஹாஸ்பிடல்

நேரம் பத்து மணி

ராமபத்ரன் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்திருக்க, வளர்மதி வார இதழ் ஒன்றைப் புரட்டியபடியே ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தாள். ஹாஸ்பிடலின் எல்லா திசைகளிலும் அரைகுறை மின் வெளிச்சமும், நிசப்தமும் பரவியிருந்தது.

வார இதழில் வெளியாகியிருந்த ஒரு சிறுகதையைப் பார்த்துவிட்டு அதைப் படிக்கலாமா வேண்டாமா என்று வளர்மதி யோசித்த விநாடி அவளுடைய செல்போன் வைபரேஷனில் கிர்ர்ர்..... என்றது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். மறுமுனையில் கமிஷனர் திரிபுரசுந்தரி.

அறையில் இருந்தபடி பேசினால் மாமனாரின் தூக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று நினைத்த வளர்மதி அறையினின்றும் வெளிப்பட்டு வராந்தாவில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேச ஆரம்பித்தாள்.

” மேடம் ”

” என்ன வளர்...இப்ப வீட்ல இருக்கியா இல்ல ஹாஸ்பிடல்ல இருக்கியா? ”

” ஹாஸ்பிடல்ல மேடம்.... அத்தையும் என்னோட ஹஸ்பெண்ட்டும் வீட்டுக்குப் போனவங்க இன்னும் வரலை. எப்படியும் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடுவாங்க. அவங்க வந்ததும் நானும் அவரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவோம். அத்தை மட்டும்தான் ஹாஸ்பிடல்ல இருப்பாங்க. ஏன்னா இந்த ஹாஸ்பிடல் விதிகளின்படி ஒருத்தர்தான் பேஷண்ட்டோடு ஸ்டே பண்ண முடியும் ” என்று பேசிக்கொண்டே போன வளர்மதி சட்டென்று குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.

” மேடம்.... நீங்க அனுப்பிச்சு வெச்ச கமேண்டோ போலீஸ் விங் மனோஜ் வீட்டுக்குப் போய் அவரை மடக்கிட்டாங்களா ? ”

” இன்னும் இல்ல வளர் ”

” என்னாச்சு மேடம் ? ”

” மனோஜ் வீட்ல இல்லையாம் ? ”

” அப்புறம் ? ”

” மனோஜோட கஸின் பிரதர் பிரேம்குமார்ன்னு ஒருத்தன்தான் வீட்ல இருந்திருக்கான். அவன்கிட்டே மனோஜ் எங்கேன்னு கேட்டு இருக்காங்க. அந்த பிரேம்குமாரையே தனக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலுக்குப் போகணும்ன்னு மனோஜூக்கு போன் பண்ணி சொல்ல வெச்சிருக்காங்க. மனோஜூம் உடனடியாய் புறப்பட்டு வர்றேன்னு சொல்லி வீட்டுக்கு வந்துட்டு இருக்காராம் ”

” மனோஜூக்கு சந்தேகம் வந்திருக்காதே மேடம் ? ”

” வர வாய்ப்பில்லை வளர்.... சரியான முறையில் ப்ளான் பண்ணித்தான் போயிருக்காங்க. மனோஜ் அவர் குடியிருப்புப் பகுதியில் நுழைஞ்சதுமே அவர் மறுபடியும் தப்பிச்சுப் போகாதபடி கண்காணிக்க வெளியே ரோட்டோரமாய் நின்னுட்டிருக்கிற ஜீப்புக்குள்ளே மூணு கமாண்டோ ஆபீஸர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க .... ”

” மேடம்.... நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது”

” எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை சொல்லு ”

” மனோஜை நம்மால பிடிக்க முடியாது. நீங்க அனுப்பின போலீஸ் அந்த வீட்ல இன்னிக்குப் பூராவும் விடிய விடிய காத்திருந்தாலும் சரி அவர் வீட்டுக்கு வரப் போறதில்லை....மேடம் ”

செல்போனின் மறுமுனையில் திரிபுரசுந்தரி திகைத்துப்போனவளாய்க் கேட்டாள்.

” எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே ? ”

(தொடரும்)


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X