• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்ரஸ் ஞாபகம் இருக்கா? .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (42)

|

-ராஜேஷ்குமார்

அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் அன்பரசன் ஜீப்பின் முன்பக்கம் ட்ரைவர்க்கு அருகே உட்கார்ந்திருக்க, பின்புறம் ஆறுபேர் கொண்ட கமேண்டோ அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்கைகளுக்கு சாய்ந்திருந்தார்கள்.

ஜீப் உக்கடம் பஸ் நிலையத்தைக் கடந்து கடல்போன்று பரந்திருந்த வாலாங்குள ஏரிக்காற்றை சுவாசித்தபடி விரைந்தது. நேரம் இரவு ஒன்பதரை மணியைத் தாண்டியிருந்தாலும் போக்குவரத்து இன்னமும் அடர்த்தி குறையாமல் போக்குவரத்து சிக்னல்களில் சிறைபட்டிருந்தது.

போலீஸ் ஜீப் மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு பை பாஸ் ரோட்டில் திரும்பிய போது ஏசிபியின் செல்போன் தன்னுடைய டயல்டோனை மெலிதாய் கசியவிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு பவ்யமாய் ஒற்றினார்.

” சொல்லுங்க மேடம் ”

மறுமுனையில் போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி பேசினாள்.

” என்ன அன்பரசன் ....... மனோஜ் வீட்டை நெருங்கிட்டீங்களா ......? ”

” பை பாஸ் ரோட்டில் திரும்பிட்டோம் மேடம். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே அங்கே போயிடுவோம் ”

” மனோஜ் வீட்டு அட்ரஸ் ஞாபகம் இருக்கா ......? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 42

” இருக்கு மேடம். நெம்பர் 15, தேர்ட் க்ராஸ் அன்பு நகர். உள்ளே நுழைஞ்சதுமே ஒரு பெரிய பார்க் வரும். பார்க்கையொட்டின மாதிரி இருக்கிற வீடுதான் மனோஜோடது. இல்லையா மேடம் ......? ”

” யெஸ்.....யூ ஆர் கரெக்ட்..... நீங்க மனோஜ் வீட்டுக்குப் போறது டிபார்ட்மெண்ட்ல இருக்கிற வேற யார்க்கும் தெரியாதே ......? ”

” தெரியாது மேடம் ”

” நீங்க உள்பட கமேண்டோ ஆபீஸர்ஸ் எல்லாருமே மஃப்டியில்தானே இருக்கீங்க ......? ”

” எஸ் மேடம் ”

” ஜீப்ல முன்பக்கமும், பின்பக்கமும் இருக்கிற போலீஸ் என்கிற வார்த்தையை ஒயிட் பேப்பர் ஒட்டி பி.டபிள்யூ.டி என்கிற வார்த்தைகளை எழுதச் சொல்லியிருந்தேன். எழுதிட்டீங்களா ......? ”

” ஐ...... ஹேவ் டன் ஆல் தட் ஆக்டிவிட்டீஸ் ஏஸ் யூ செட் மேடம் ”

” குட்..... மனோஜ் ஒரு ஃபாரன்ஸிக் ஆபீஸர் நீங்க அவர்கிட்டே நடத்தப்போற இன்வெஸ்டிகேஷன் சாஃப்ட்டாவே இருக்கட்டும். அவர் உங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காதபட்சத்தில் அவரை என்கிட்டே பேச வையுங்க ”

” எஸ்..... மேடம் ”

” ஆல் த பெஸ்ட் ”

இரண்டு பக்க செல்போன்களும் ஊமையாகிவிட ஜீப் இப்போது பைபாஸ் ரோட்டில் வேகம் பிடித்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை விழுங்கியது. ட்ரைவர் சொன்னார்.

” ஸார்..... ரோட்டோட ரைட் சைடில் அந்த அன்பு நகர் வருது ”

” பார்த்து யூ டர்ன் எடு வாசு.... லாரிகள் குடிபோதையோடு வர்ற நேரம் ”

ஜீப் வேகத்தைக் குறைத்துக்கொண்டு யூ டர்ன் எடுத்து திரும்பி அன்பு நகர் என்று இன்டெக்ஸ் போர்டு காட்டிய வழியில் திரும்பியது. நேர்த்தியாய் கட்டப்பட்ட வீடுகள் ரோட்டின் இரண்டு புறமும் பெரியதும், சிறியதுமாய் வர ஏசிபி அன்பரசன் குரல் கொடுத்தார்.

” வாசு...... அந்தப்பக்கம் மரங்கள் நிறைய தெரியுது. அதுதான் பூங்காவாய் இருக்கணும்ன்னு நினைக்கிறேன் ”

” ஆமா..... ஸார்.... பாரதி பூங்கான்னு ஒரு போர்டு தெரியுது.....”

”அந்த இடத்துல இருட்டான இடம் பார்த்து ஜீப்பை நிறுத்திக்க ”

” எஸ் ஸார் ” ட்ரைவர் வாசு ஜீப்பின் பிரகாசமான விளக்குகளை சற்றே மங்கலாக்கிக்கொண்டு போர்ட்டை விட்டுத் தள்ளி ரோட்டோரமாய் நிறுத்தினார். ஜீப்பின் ஒட்டு மொத்த விளக்குகளும் அணைந்து போக ஏசிபி திரும்பி பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த கமேண்டா படை அதிகாரிகளைப் பார்த்து

குரலைத் தாழ்த்தினார்.

” சார்லி, குமரேஷ், தியாகு நீங்க மூணுபேர் மட்டும் என்கூட வாங்க. மத்தவங்க ஜீப்லயே இருங்க.... மனோஜ்கிட்டே ஏதாவது பிரச்சினைன்னா நான் தகவல்

தர்றேன். அந்த சமயத்துல நீங்க வந்தா போதும் ”

” எஸ்.... ஸார் ”

ஏசிபி அன்பரசன் ஜீப்பை விட்டு இறங்க, பின்புறம் இருந்து கட்டுமஸ்தான உடல்களோடு கமேண்டோ அதிகாரிகள் சார்லி, குமரேஷ், தியாகு முன்று பேரும் உதிர்ந்தார்கள்.

அன்பரசன் சுற்றும் முற்றும் பார்த்தார். இரண்டொருவர் பூங்கா ஒரமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

” அநேகமாய் அந்த வீடாய்தான் இருக்கும். என்னை ஃபாலோ பண்ணி வாங்க ” சொன்ன ஏசிபி பரவியிருந்த அரைகுறையிருட்டில் மெல்ல நடந்து பார்க்கையொட்டியிருந்த அந்த வீட்டுக்கு முன்பாய் நின்று காம்பெளண்ட் கேட்டின் இடதுபக்க சுவர் பில்லரை உற்றுப் பார்த்தார்.

15 என்ற எண் கறுப்பு பெயிண்ட் பின்னணியில் வெள்ளை பெயிண்டின் உதவியோடு பளிச் சென்று தெரிந்தது.

” சார்லி ”

” ஸார் ”

” இதுதான் மனோஜோட வீடு. வாங்க உள்ளே போகலாம். மனோஜ் கிட்டே நான் பேசும் போது நீங்க யாரும் குறுக்கே எதுவும் பேச வேண்டாம். அவரோட முகபாவங்களை மட்டும் உன்னிப்பாய் அப்ஸர்வ் பண்ணினா போதும் ”

” எஸ் ஸார் ” மூன்று பேரும் மெதுவான குரலில் சொல்ல, அன்பரசன் காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார். முன்புறம் எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட் வெளிச்சத்தில் ஒரு சிறிய போர்டிகோவும் அதற்குள் குடியிருந்த இரண்டு டூவீலர்களும் பளிச்சென்று தெரிந்தன.

வீட்டின் கண்ணாடி ஜன்னல்களில் வெளிச்ச சதுரங்கள் தெரிய, உள்ளே டி.வி.யொன்று உயிரோடு இருப்பதற்கு அறிகுறியாக பின்னணி இசையோடு குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

அன்பரசன் காலிங்பெல் இருக்கும் இடத்தை தேடிப்பிடித்து அதன் குமிழின் மேல் தன்னுடைய கட்டை விரலை வைத்தார்.

உள்ளே ஒரு பறவைக்கூட்டம் கத்திக்கொண்டே பறப்பதைப் போன்ற சத்தம். அதைத் தொடர்ந்து டி.வி.சத்தம் நின்று போக அடுத்த சில விநாடிகளில் தாழ்ப்பாள் விலகியது.

கதவு திறந்தது.

லுங்கியும் பனியனும் அணிந்து கையில் ஒரு புத்தகத்தோடு அந்த இளைஞன் நின்றிருந்தான்.

” இது மனோஜ் வீடுதானே ......? ”

” ஆமா ”

” அவர் இருக்காரா ......? ”

” இல்லையே.... வெளியே போயிருக்கார். நீங்க ......? ”

” அவரோட ஃப்ரண்ட்ஸ். இந்தப் பக்கமாய் வந்தோம். அப்படியே பார்த்துட்டு போலாம்ன்னு நினைச்சு...... பை....த.....பை மனோஜ் எங்கே போயிருக்கார் ? ”

” ஸாரி...... தெரியலை..... யாரையோ பார்க்க சாயந்தரம் புறப்பட்டுப் போனார் ”

” நீங்க யாரு..... ? ”

” நான் மனோஜோட கஸின் பிரதர் அயாம் பிரேம்குமார் ”

” நீங்களும் மனோஜ் கூடத்தான் ஸ்டே பண்ணியிருக்கீங்களா..... ? ”

” இல்ல ஸார். என்னோட நேட்டீவ் ப்ளேஸ் சென்னை. நான் இங்கே இருக்கிற ஃபாரஸ்ட் காலேஜ்ல ஒரு ”ஜாப்” க்கான இண்டர்வியூவை அட்டெண்ட் பண்றதுக்காக வந்திருக்கேன். நாளை கழிச்சு மறுநாள் இண்டர்வியூ நான் இங்கே ரெண்டு நாளா ஸ்டே பண்ணியிருக்கேன். இண்டர்வியூ முடிஞ்சதும் நான் உடனே ஊருக்கு கிளம்பிடுவேன் ”

” இந்த வீட்ல உங்களைத்தவிர இப்ப வேற யார் இருக்காங்க ..... ? ”

” யாருமில்லை ..... ”

” மனோஜ் இப்போ எங்கே இருப்பார்ன்னு சொல்ல முடியுமா ..... ? ”

அந்த இளைஞன் பிரேம்குமார் சற்றே கோபமாய் அன்பரசனைப் பார்த்தான்.

” என்ன ஸார்...... ஏதோ போலீஸ் விசாரணை பண்றமாதிரி கேள்விகளைக் கேட்டுகிட்டு இருக்கீங்க ? ”

அன்பரசன் மெலிதாய் புன்னகைத்தபடி சொன்னார். ” நீங்க கேட்டது சரிதான். நாங்க போலீஸ் பீப்பிள்தான். மனோஜ்கிட்டே ஒரு என்கொயரி பண்ண வேண்டியிருக்கு..... ”

” எ...எ....என்ன என்கொயரி ஸார் ? ” அந்த இளைஞன் பிரேம்குமார் சற்றே மிரண்டு போனவனாய் கேட்டான்.

” அதையெல்லாம் உங்ககிட்டே சொல்ல வேண்டியதில்லை. மனோஜ் இப்போ எங்கே இருக்கார்ன்னு நிஜமாவே உங்களுக்கு தெரியாதா ? ”

” தெரியாது ஸார் ”

” சரி.... வாங்க உள்ளே உட்கார்ந்து பேசலாம் ” அன்பரசன் சொல்லிக் கொண்டே முன்புறம் இருந்த அறைக்குள் நுழைய கமேண்டோ அதிகாரிகளும் அவரைப் பின்தொடர்ந்து உள்ளே போனார்கள். அந்த இளைஞன் வியர்த்து வழிந்தவனாய் சுவரோரமாய் போடப்பட்டிருந்த சோபாக்களைக் காட்டினான்.

” ப்ளீஸ் ஸார் ”

அன்பரசன் உட்கார்ந்து கொண்டே கேட்டார்.

” நீங்க இங்கே எத்தனை நாளா ஸ்டே பண்ணியிருக்கிறதாய் சொன்னீங்க ? ”

” ரெண்டு நாளா ”

” மனோஜ் ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிறார். அவர் வேலைக்குப் போயிட்டா நீங்க வீட்ல இருப்பீங்களா ? இல்ல வெளியே போயிடுவீங்களா? ”

” நான் வெளியே போகமாட்டேன் ஸார். இண்டர்வியூவை அட்டெண்ட் பண்றதுக்காக வீட்லயே இருந்து படிச்சிட்டிருப்பேன். சமையல் செய்யறதுக்கு ஒரு பொண்ணு இருக்கா. வேளா வேளைக்கு வந்து சமைச்சு வெச்சுட்டு போயிடுவா ”

” கடந்த ரெண்டு நாட்களில் மனோஜைப் பார்க்க இந்த வீட்டுக்கு யாராவது வந்தாங்களா ? ”

” வரலை ஸார் ”

” நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க ” அந்த பிரேம்குமார் சில விநாடிகள் யோசித்துவிட்டு தீர்க்கமாய் தலையாட்டினான்.

” இல்ல ஸார் யாரும் வரலை.... ”

” உங்க செல்போன் எங்கே ? ”

” உள்ளே இருக்கு ஸார் ”

” போய் எடுத்துட்டு வாங்க ”

பிரேம்குமார் சில விநாடிகள் தயக்கமாய் இருந்துவிட்டு உள்ளே போய் செல்போனை எடுத்து வந்தான்.

அன்பரசன் சொன்னார். ” மனோஜூக்கு போன் பண்ணி அவர் எங்கேயிருந்தாலும் உடனடியாய் இங்கே வரச் சொல்லுங்க..... ”

”ஸ...ஸ....ஸார் ”

” என்ன ? ”

” மனோஜ் அண்ணன் என்ன தப்பு பண்ணினார்ன்னு அவரை என்கொயரி பண்ண வந்திருக்கீங்க ? ”

” காரணம் சொன்னாத்தான் போன் பண்ணுவீங்களா ? ”

” அப்படியில்ல ஸார்.... இதோ போன் பண்றேன்..... ” சொன்ன பிரேம்குமார் மனோஜின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயல அன்பரசன் குறுக்கிட்டார்.

” ஒரு நிமிஷம் .... நான் சொல்றமாதிரிதான் மனோஜ்கிட்டே பேசணும். ஸ்பீக்கர் ஆன்ல இருக்கட்டும் ”

தலையாட்டினான் பிரேம்குமார்.

*****

கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருந்த ”ஜாய்ஸ்” Barன் அரையிருட்டுக்குள் மூலையோர மேஜையில் தனியாய் உட்கார்ந்து ஒரு ஸ்மால் ப்ளாக் ஹார்ஸ் விஸ்கியை குடித்துவிட்டு லார்ஜ் சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போது மனோஜின் போன் சிணுங்கலாய் கூப்பிட்டது. எடுத்துப்பார்த்துவிட்டு பேசினான்.

” சொல்லு பிரேம்குமார் ”

” அ....அ....அண்ணா.... நீ இப்போ எங்கேயிருக்கே ? ”

” ஒரு அபிஷியல் மீட்டிங்கில் இருக்கேன். விஷயம் என்னான்னு சொல்லு ”

” அண்ணா ..... என்னோட உடம்புக்கு முடியலை. ஹைஃபீவராய் இருக்கு. மாத்திரை போட்டுப் பார்த்தேன். டெம்பரேச்சர் குறையலை. டாக்டர்கிட்டே போகணும். என்னால தனியா போக முடியும்ன்னு தோணலை. நீ உடனே புறப்பட்டு வர்றியா ? ”

பதட்டமாய் மனோஜ் எழுந்தான்.

” இதோ புறப்பட்டேன்....... பத்தே நிமிஷத்துல அங்கே இருப்பேன் ”

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X