• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எனக்காக பண்ண மாட்டீங்களா?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (49)

|

- ராஜேஷ்குமார்

மாதவன் சொன்னதைக் கேட்டு ஈஸ்வரின் முகமும், தீபக்கின் முகமும் சட்டென்று நிறம் மாறிப்போக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
தீபக் கேட்டான். " மாதவன்..... நீ என்ன சொல்றே..... ? வளர்மதிக்கு இவ்வளவு சீக்கிரத்துல மயக்கம் தெளிய வாய்ப்பு இல்லையே.... நீ என்ன மயக்க மருந்தை யூஸ் பண்ணினே .... ? "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 49

" ரோகிப்னால் ஸார் "

" எவ்வளவு ஆம்பியூல் ? "

" ஒன் ஆம்பியூல் "

தீபக் தனக்குப் பக்கத்தில் இருந்த டாக்டர் ஜான் மில்லரிடம் திரும்பி ஆங்கிலத்தில் மாதவன் சொன்னதை மொழி பெயர்த்துவிட்டு கேட்டான்.

" ரோகிப்னால் ஒரு ஆம்பியூல் கொடுத்தால் ஒரு பெண் எவ்வளவு நேரம் மயக்க நிலையில் இருப்பாள் டாக்டர் ......? "

ஜான் மில்லர் உடனடியாக பதில் சொன்னார்.

" எப்படியும் பத்து மணி நேரமாகும். இதுவே ஒரு ஆணுக்கு கொடுக்கப்பட்டால் எட்டு மணி நேரம். அதற்குக் குறைவாக மயக்கத்திலிருந்து மீள வாய்ப்பேயில்லை. அந்த வளர்மதி இவ்வளவு சீக்கிரத்தில் விடுபட்டு இருக்கிறாள் என்றால் ரோகிப்னால் மயக்க மருந்து வீரியமற்றதாக இருக்க வேண்டும். வாருங்கள் அந்தப்பெண்ணைப் போய் சோதித்து பார்த்துவிடலாம் "

ஜான் மில்லர் சொல்ல மாதவனும் தலையாட்டினான். தயக்கமான குரலில் சொன்னான்.

" டாக்டர் சொல்றமாதிரிதான் இருக்கும் ஸார் "

" சரி, நீ முன்னாடி போ.....நாங்க வர்றோம்..... " ஈஸ்வர் சொன்னார்.

மாதவன் தலையாட்டிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட மூன்று பேரும் தொடர்ந்தார்கள். ஜான் மில்லர் நடந்துகொண்டே கேட்டார்.

" அந்த சி.பி.ஐ.பெண் அதிகாரி சில்பாவும், நமக்கு உதவியாய் இருந்த நர்மதாவும் இதே ஃபார்ம் ஹவுஸில்தானே இருக்கிறார்கள் .... ? "

" ஆமாம் டாக்டர் "

" அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் .... ? "

" தனித்தனியான அறைகளில் அடைத்து வைத்து இருக்கிறோம். ஆரம்ப நாட்களில் சாப்பிட அடம்பிடித்தார்கள். எனவே சாப்பிட வைத்து தூங்க வைப்பதற்காக ஊசிகள் போட வேண்டியிருந்தது டாக்டர் "

" மிஸ்டர் ஈஸ்வர்..... ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி பசி எடுப்பதற்க்காகவும், தூங்க வைப்பதற்காகவும் ஊசிகள் போடுவது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதித்து நாம் மேற்கொள்ளப்போகும் " தி ஷெல்ஃபிஷ் ஜீன்" "தி ப்ளைண்ட் வாட்ச் மேக்கர் ஜீன்" போன்ற சோதனைகளை வெற்றிகரமாக நடத்த முடியாதபடி செய்துவிடும். இனிமேல் அது மாதிரியான ஊசிகளை போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் "

" தெரியும் டாக்டர்..... நீங்கள் ஏற்கெனவே இதைப்பற்றி போனில் பேசும்போது சொல்லியிருக்கிறீர்கள். சில்பாவும், நர்மதாவும் சாப்பிட அடம்பிடிக்கும்போது மட்டும்தான் அதுமாதிரியான ஊசிகளைப் போடுவோம். மற்ற நாட்களில் இல்லை. நீங்களும் தீபக்கும் இப்போது வந்து விட்டீர்கள். இனி அந்த ஊசிகளைப் போடுவதை நிறுத்திவிடுவோம் "

" செய்யப்போகும் ஜீன் சம்பந்தப்பட்ட இரண்டு சோதனைகளுமே ஒரு வார காலத்திற்குள் முடிந்துவிடும். சோதனையின் முடிவு பாஸிட்டீவ் என்று தெரிய வந்தால் மேலும் ஒரு வாரம் இங்கே இருக்க வேண்டியிருக்கும்" டாக்டர் ஜான் மில்லர் சொல்ல ஈஸ்வர் நடந்து கொண்டே தாழ்ந்த குரலில் பேசினார்.

" டாக்டர்..... போலீஸ் முன்பு போல் இல்லை. இப்போது வேகம் எடுத்துவிட்டார்கள். டெல்லி சி.பி.ஐ.யும் இதில் களம் இறங்கிவிட்டது. ஆரம்பத்தில் நாம் செய்த ஒரு சிறிய தப்பு இன்றைக்கு பெரிய அளவில் பூதாகரமாகி அதனுடைய நிழல் நம்மீது விழ ஆரம்பித்துவிட்டது. அந்த நிழல் நம்மைத் தொடராமல் இருப்பதற்காக நமக்கு விசுவாசமாய் இருந்த அபுபக்கரையும், மனோஜையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொல்ல வேண்டியதாகிவிட்டது "

ஜான் மில்லர் சிரித்தார்.

" மிஸ்டர் ஈஸ்வர்.....உங்க மகன் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார். இந்த " தி ஷெல்ஃபிஷ் ஜீன்" "தி ப்ளைண்ட் வாட்ச் மேக்கர் ஜீன்" சோதனைகள் இரண்டுமே ஒரு மாபெரும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான அஸ்திவாரங்கள். அதற்கான கட்டிடத்தை எழுப்பும்பொழுது இது போன்ற உயிரிழப்புகள் சாதாரணம். அபுபக்கரும், மனோஜூம் எவ்வளவு தூரம் நம்மோடு பயணிக்க முடியுமோ அவ்வளவு தூரம்தான் நம்மோடு பயணிக்க முடியும். அவர்களை இனி மறந்துவிடுங்கள். நமக்கு இப்போது வேண்டியது மூன்று மனித எலிகள். அதுவும் பெண் எலிகள். அந்த பெண் எலிகளும் இப்போது நம் கைகளில் அடுத்து வரப்போகும் சில நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை. அதிகப்பட்சமாய் 15 நாட்கள் போதும். அதற்குப்பிறகு உலகத்திலேயே யாருமே கண்டுபிடிக்க முடியாத ஒரு உயிரியல் உண்மைக்கு சொந்தக்காரர்களாகிவிடுவோம். அந்த உண்மைக்கு நாம் சொல்வதுதான் விலையாக இருக்க! ம் "

ஜான் மில்லர் உற்சாகமான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மரங்களுக்கு இடையில் தெரிந்த அந்த சிறிய கட்டிடத்துக்குள் மாதவன் உள்ளே நுழைந்து ஒரு சிறிய நடைபாதையில் நடந்து அந்த அறைக்கு முன்பாய் நின்றான். கையில் வைத்திருந்த சாவியால் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான். மூன்று பேரும் பின் தொடர்ந்தார்கள். அரையிருட்டில் இருந்த அறையை ஒரு ஸ்விட்ச்சின் மேல் கையை வைத்ததின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான். சுவரோரமாய் போடப்பட்டிருந்த கட்டிலில் வளர்மதி துவண்டு போன உடம்போடு மல்லாந்து தெரிந்தான். உதடுகள் லேசாய் பிளந்திருக்க பல்வரிசை மெல்ல எட்டிப்பார்த்திருந்தது.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 49

டாக்டர் ஜான் மில்லர் அவளருகே போய் நின்று குனிந்து முகத்தைப் பார்த்துவிட்டு இடதுகையின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்த்தார்.

" குட் " என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர் தீபக்கை ஏறிட்டார்.

" ஷி ஈஸ் ஹெலித்தி..... நோ ப்ராப்ளம் "

தீபக் கேட்டான்.

" சுய உணர்வு இருக்கிறதா டாக்டர்? "

" இருப்பது போல் தெரியவில்லை... மயக்கத்தின் பிடியில்தான் இன்னமும் இருக்கிறாள் "

முகத்தில் கோபம் பொங்க, தீபக் மாதவனைத் திரும்பிப் பார்த்தான்.

" இவ எந்திரிச்சு உட்கார முயற்சி பண்ணிட்டு இருக்கிறதாய் நீ சொன்னே ? "

" நான் சாவி துவாரம் வழியா பார்க்கும்போது அப்படிதான் தெரிஞ்சுது ஸார் "

" நல்லா யோசனை பண்ணிச்சொல்லு "

மாதவன் விழித்தான். " ஸாரி ஸார்..... எனக்கு கொஞ்சம் குழப்பமாய் இருக்கு....."

தீபக் ஜான் மில்லரிடம் திரும்பினான்.

" ஹி ஈஸ் கன்ஃப்யூஸ்ட்.... என்ன செய்யலாம் டாக்டர் ? மறுபடியும் ஒரு ஆம்பியூல் ரோகிப்னால் இஞ்செக்சன் போட்டு விடலாமா ? "

ஜான் மில்லர் தீர்க்கமாய் தலையை ஆட்டி மறுத்தார். " வேண்டாம்.... ரத்தத்தில் அதிகளவு ரோகிப்னால் கலந்ததால் அது உயிர்க்கு ஆபத்தாய் முடியலாம். நான் இவளை சோதித்துப் பார்த்ததில் இப்போது இவளுக்கு மயக்கம் தெளிகிற மாதிரி தெரியவில்லை.... எப்படியும் நாளைக்கு காலையில்தான் கண் விழிப்பாள். அதுவரைக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை "

ஈஸ்வர் மெல்லச் சிரித்தார்.

" வளர்மதிக்கு அப்படியே ராத்திரியில் நினைவு திரும்பிவிட்டாலும் அவளால் இந்த பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்க முடியாது டாக்டர். இன்னும் சிறிது நேரத்தில் எட்டு அல்சேஷன் நாய்களை வெளியே அவிழ்த்து விட்டுவிடுவோம். எந்த திசையிலிருந்தும் யாரும் உள்ளே வர முடியாது. வெளியிலும் யாரும் போக முடியாது "

தீபக் ஈஸ்வரிடம் திரும்பினான்

" அப்பா..... ஜான் மில்லர் பயணக் களைப்பில் இருக்கார். அவர் முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு காலையில் பேசுவோம் "

" அதுவும் சரிதான்..... இந்த மாதவன் பண்ணின வேலையால எல்லார்க்கும் டென்ஷன். டாக்டர்க்கு அமர்க்களமான டின்னர் காத்திட்டிருக்கு..... வா இந்த வழியாவே டைனிங் ஹாலுக்குப் போயிடலாம்"

ஈஸ்வர் சொல்லிக்கொண்டே முதல் நபராய் நடக்க தீபக் ஜான் மில்லரோடு அவரைப் பின்தொடர்ந்தான்.

****

திரிபுரசுந்தரி வீடு வந்து சேர்ந்து, களைத்துப்போன உடம்போடும் கசந்து போன மனதோடும் சோபாவுக்கு சாய்ந்தபோது அவளுடைய செல்போன் மெலிதான டெஸிபிலில் அழைத்தது.

செல்போனை எடுத்து சோர்வான கண்களோடு அழைப்பது யார் என்று பார்த்தாள்.

மறுமுனையில் ஏசிபி அன்பரசன் அழைத்துக்கொண்டு இருப்பது டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

செல்போனை எடுத்துப் பேசினாள் திரிபுரசுந்தரி.

" சொல்லுங்க அன்பரசன் "

" மேடம்.... இப்பத்தான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது. எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாய் இருக்கு. சஸ்பெண்ட் பண்ற அளவு நீங்க எந்தத் தப்பையும் பண்ணின மாதிரி எனக்குத் தெரியலையே "

விரக்தியாய் சிரித்தாள் திரிபுரசுந்தரி.

" அது சஸ்பெண்ட் பண்ணினவங்களுக்கே தெரியாது அன்பரசன் "

" மேடம்...... நீங்க இந்த அநியாயத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போக முடியாதா .... ? "

" முடியும்..... ஆனா டி.ஜி.பி.பஞ்சாபகேசன் இந்தப் பிரச்சினையை சி.எம்.மோட செல்வரைக்கும் கொண்டு போயிட்டார். நான் கோர்ட்டுக்குப் போனா அது சி.எம்.மோட கோபத்தையும், ஆத்திரத்தையும் அதிகமாக்கும்... "

" அப்படீன்னா மெளனமாய் இருக்கப் போறீங்களா மேடம் .... ? "

" அது எப்படி இருக்க முடியும் அன்பரசன். என்னோட இன்வெஸ்டிகேஷன் இந்த கேஸில் தொடரும் ? "

" மே....மேடம்..... நீங்க சஸ்பெண்ட் பண்ணப்பட்டு இருக்கும்போது இன்வெஸ்டிகேஷன் எப்படி சாத்தியம் ? "

" ஏன் எனக்காக நீங்க பண்ண மாட்டீங்களா ? "

" மேடம்.... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை.... "

" நான் உங்களுக்குப் பின்னாடி இருக்கேன். நீங்க இந்த கேஸை எப்படி இன்வெஸ்டிகேட் பண்ணினா குற்றவாளிகளை நெருங்கலாம்ன்னு சொல்றேன். நீங்க உங்க வழக்கமான வேலைகளைப் பார்த்துகிட்டே இந்த கேஸையும் டீல் பண்ணுங்க ....... வளர்மதியை நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே நாம ட்ரேஸ் அவுட் பண்ணியாகனும்..... "

" மே...மே.....மேடம் "

" சொல்லுங்க அன்பரசன் "

" குற்றவாளிகள் யாரு.... அவங்க எந்தத் திசையில் இருக்காங்க என்கிற அடிப்படையான விஷயமே தெரியாதபோது நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே எப்படி வளர்மதியைக் கண்டுபிடிக்க முடியும் ? "

" முடியும் "

" எப்படி மேடம் ? "

" இப்ப நீங்க எங்கே இருக்கீங்க அன்பரசன் ? "

" ஜி.ஹெச்ல இருக்கேன் மேடம். மனோஜோட பாடியை மார்ச்சுவரிக்கு கொண்டு வந்துட்டோம். எக்ஸ்டர்னல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வாங்கிட்டு ஒரு அரைமணி நேரத்துல வீட்டுக்குக் கிளம்பிப் போயிடுவேன் "
திரிபுரசுந்தரி தயக்கமான குரலில் கேட்டான்.

" அன்பரசன் ..... இன்னிக்கு ஒருநாள் ராத்திரி எனக்காக கண்விழிக்க முடியுமா......? நான் கொடுக்கிற இன்ஸ்ட்ரக்சன்படி நீங்க செயல்பட்டா குற்றவாளிகளை நெருங்கிவிட முடியும். வளர்மதியை மட்டுமல்ல கடத்தப்பட்ட சி.பி.ஐ. டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சில்பாவையும் நம்மகிட்டேயிருந்து தப்பிச்சுட்டு போன நர்மதாவையும் கண்டுபிடிக்க முடியும் "

" எப்படி மேடம்... ? "

" நேர்ல வாங்க சொல்றேன் "

" இன்னும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே உங்க வீட்ல இருப்பேன் மேடம் "

" அயாம் வெயிட்டிங் " சொல்லிவிட்டு செல்போனை அணைத்தாள் திரிபுரசுந்தரி

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X