• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அவங்க உங்க ஒய்ஃப்பா ஸார்?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (46)

|

-ராஜேஷ்குமார்

வளர்மதி சற்றே பயத்தோடு திரும்ப தனக்கு வெகு அருகாக யாரோ நின்றிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டுப் போனவளாய் நகர முயன்றாள். ஆனால் உயரமாய் நின்றிருந்த அந்த நிழல் உருவம் சட்டென்று தன் கையில் வைத்து இருந்த துணியை வீசி அவளுடைய முகத்தை விநாடிக்கும் குறைவான நேரத்தில் மூடியது. திமிர முயன்று கத்த நினைத்த வளர்மதியின் உதடுகள் வலுவான ஒரு கையால் சாத்தப்பட, இன்னொரு கை அவளுடைய தோள்பட்டையை அழுத்திப் பிடித்தது. சரியான இரும்புப் பிடி.

தன்னுடைய உடம்பை அசைக்க முடியாமல் வளர்மதி தோற்றுக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய முகத்தைப் பொத்தியிருந்த ஈரமான துணியிலிருந்து ஒருவித மருந்து நெடி அடித்து அவளைத் துவள வைத்தது. நுரையீரல்களில் ஒரு வலி பரவியது.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 46

இது ஏதோ ஒரு மயக்க மருந்து. இதை சுவாசித்துவிடக்கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய விழிகள் தன்னிச்சையாய் மூடுவதை அவளால் உணர முடிந்தது. அடுத்த சில விநாடிகளில் தன்னை யாரோ வலுக்கட்டாயமாய் தள்ளிக்கொண்டு போய் சில அடி தூரத்தில் நின்றிருந்த ஒரு காரின் பின் சீட்டில் படுக்க வைப்பதையும், அடுத்த சில விநாடிகளில் கார் புறப்பட்டு செல்வதையும் உணர்ந்து எழ முயன்றாள். அசைக்க முடியாத அளவுக்கு உடம்பு கற்பாறையாய் மாறியிருந்தது.

கார் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்த போதே வளர்மதி தன்னுடைய சுயநினைவிலிருந்து சிறிது சிறிதாய் நழுவி மயக்க நிலையைத் தொட்டுக்கொண்டிருந்தாள்.

****

ஹாஸ்பிடல் அக்கவுண்ட் செக்சனிலிருந்து வெளிப்பட்ட ஹரி காரிடாரில் நடந்து காம்பெளண்ட் கேட்டைக்கடந்து சாலைக்கு வந்து சற்றுத் தொலைவில் நின்றிருந்த தன் காரைப் பார்த்து போனான். காரை நெருங்கியவன் ஆச்சர்யப்பட்டான்.

கார்க்குள் வளர்மதி இல்லாமல் போகவே சிறிது சந்தேகத்தோடு கைப்பிடியை இழுத்துப் பார்த்தான். காரின் கதவு திறந்து கொண்டது.

” கார் சாவியின் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி வளர்மதி காரை அன்லாக் செய்திருக்கிறாள். ஆனால் கார்க்குள் ஏறி உட்காராமல் எங்கே போனாள் .... ? ”

” நான் வரக் கொஞ்சம் தாமதமானால் மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குள் போயிருப்பாளோ .... ? ”

ஹரி யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஹாஸ்பிடலின் கேட்டருகே ஸ்டூல் போட்டு அதில் உட்கார்ந்திருந்த வாட்ச்மேன் குழப்பத்தோடு எழுந்து வந்தார்.

” என்ன ஸார்.... தேடறீங்க .... ? ”

” ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்தி மஞ்சள் புடவை கட்டிகிட்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்த ஒரு பொண்ணை நீங்க பார்த்தீங்களா..? ”

” அவங்க உங்க ஒய்ஃப்பா ஸார் .... ? ”

” ஆமா..... ”

” பார்த்தேன் ஸார்..... கையில ஒரு லெதர் பேக் வெச்சிருந்தாங்க..... ”

” அவங்கதான்......”

” இந்த கார்கிட்டதான் வந்து டிக்கியை தொறந்திட்டு இருந்தாங்க ஸார்..... அந்த சமயத்துல ட்யூட்டி டாக்டரோட கார் வரவும் காம்பெளண்ட் கேட்டைத் திறக்க அந்தப் பக்கமாய் போயிட்டேன் ஸார். அதுக்கப்புறம் அவங்களை நான் பார்க்கலை ”

ஹரி வேகவேகமாய் காரைச் சுற்றி வந்து அதன் டிக்கியைத் திறந்து பார்த்தான்.

உள்ளே பேக் இருந்தது. வாட்ச்மேன் எட்டிப் பார்த்துவிட்டு சொன்னார்.

”அவங்க பேக்கை வெச்சுட்டு மறுபடியும் ஹாஸ்பிடலுக்குள்ளே போயிருக்கலாம் ஸார். உங்க போனிலிருந்து அவங்க போனை காண்டாக்ட் பண்ணிப் பாருங்க ஸார் ”

” இந்த யோசனை நமக்குத் தோணாமே போச்சே ” என்கிற எண்ணத்தோடு தன்னுடைய செல்போனை எடுத்து வளர்மதியின் செல்போன் எண்ணைத் தொட்டான்.

மறுமுனையில் நீளமான மெளனம்.

” போன் ஆக்டிவேஷனில் இருந்தால் ஏதாவது ஒரு ரெக்கார்டட் வாய்ஸாவது கேட்க வேண்டுமே ”

கேட்கவில்லை.

வாட்ச்மேன் குரல் கொடுத்தார்.

” என்ன ஸார்.... அவங்க போனை அட்டெண்ட் பண்ணலையா .... ? ”

” பண்ணலை.... ”

” எதுக்கும் ஒரு தடவை ஹாஸ்பிடலுக்குள்ளே போய் பார்த்துட்டு வந்துடுங்க ஸார்..... ” வாட்ச்மேன் சொல்லிவிட்டு ஒரு ஆம்புலன்ஸ் வேன் ஹாஸ்பிடலுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு வேகவேகமாய் ஹாஸ்பிடல் கேட்டை நோக்கிப் போனார்.

ஹரியின் இதயத்துக்கு நடுவே பயம் ஒரு கத்தியாய் மாறி குறுக்கே ஒரு கீறலைப் போட்டது.

” ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது ”

” வளர்மதி கார்க்கு வந்து டிக்கியைத் திறந்து லெதர் பேக்கை வைத்திருக்கிறாள் ”

” அதற்குப்பிறகு எங்கே போனாள் .... ? ”

” ஒருவேளை வாட்ச்மேன் சொல்கிற மாதிரி ஹாஸ்பிடலுக்குள்ளே அம்மாவைப் பார்க்கப் போயிருப்பாளோ ? ”

ஹரி வியர்த்து வழியும் முகத்தோடு ஹாஸ்பிடலின் உள்ளே இருக்கும் அம்மாவின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டாள்.

” அம்மா ”

” என்னடா ஹரி ? ”

” அம்மா..... என்னோட செல்போன் சார்ஜர் அங்கேயிருக்கா? ”

” இன்னுமா.... நீயும் வளர்மதியும் வீட்டுக்கு கிளம்பிப் போகலை ? ”

” இதோ கிளம்பிட்டோம்மா.... ஹாஸ்பிடலை விட்டு வெளியே வர்ற நேரத்துல அக்கவுண்ட் செக்சனிலிருந்து கூப்பிட்டு டிஸ்சார்ஜ் பில் கொடுத்தாங்க”

” பில்லைக் கொடுக்க இதுவா நேரம் ? ”

” அவங்களுக்கு எத்தனையோ வேலையம்மா..... என்னோட செல்போன் சார்ஜர் அங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லம்மா ”

” ஒரு நிமிஷம் இரு..... பார்த்துச் சொல்றேன் ” என்று மறுமுனையில் சொன்ன சிவகாமி அடுத்த சில விநாடிகளிலேயே சொன்னாள்.

” சார்ஜர் இங்க இல்லையே ? ”

” சரிம்மா ” என்று சொல்லி செல்போனை அணைத்த ஹரிக்கு ஒட்டு மொத்த உடம்பும் கலவர பூமியானது போன்ற உணர்வு. இருதயத்துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.

” வளர்மதி காரை அன்லாக் செய்து டிக்கியில் பேக்கை வைத்துவிட்டு எங்கே போயிருப்பாள் ? ”

தவிப்போடு சுற்றும் முற்றும் பார்த்தவனின் பார்வைக்கு காரின் பின் சக்கரங்களுக்கு நடுவில் ஒரு செல்போன் சிதறிய நிலையில் கழன்று கிடந்த பாட்டரியோடு தட்டுப்பட அதை குனிந்து எடுத்தான்.

அந்த செல்போனின் மேல் கவர் நிறத்தைப் பார்த்ததுமே அது வளர்மதியின் செல்போன்தான் என்று உடனே புரிந்தது. பதட்டம் தணியாமல் கார்க்கு கீழே குனிந்து பார்த்தான். இடது பக்க சக்கரத்துக்கு கீழே காரின் சாவி தன்னுடைய உலோக நுனியைக் காட்டியபடி மினுமினுத்தது. கைவிரல்கள் நடுங்க சாவியை எடுத்துக்கொண்டவனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே கார்க்கு சாய்ந்து நின்று கொண்டான்.

” வளர்மதிக்கு ஏதோ ஆபத்து ”

” என்ன செய்யலாம் ? ”

” போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு முதலில் விஷயத்தைக் கொண்டு போகணும் ”

ஹரி தன்னுடைய செல்போனை எடுத்து உடனே தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தான். குரல் தொண்டையினின்றும் சிரமமாய் எழுந்தது.

” மேடம்.... நான் ஹரி பேசறேன் ”

” சொல்லுங்க ஹரி.... உங்க குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு. அப்பாவுக்கு மறுபடியும் ஏதாவது பிரச்சினையா ? ”

” அப்பாவுக்கு எந்த பிரச்சினையும் இல்ல மேடம் ”

” அப்புறம் ? ”

” அ....அ.....அது வந்து மேடம்.......”

” என்ன ஹரி..... வாட் ஹேப்பண்ட் எனி அப் நார்மல்ஸி ? ”

” எஸ் மேடம்.... வளர்மதியைக் காணோம் ...... ”

செல்போனின் மறுமுனையில் திரிபுரசுந்தரி பெரிதும் அதிர்ந்து போனவளாய் கேட்டாள்.

” எ....எ.....என்ன சொல்றீங்க ஹரி..... வளர்மதியைக் காணோமா ? ”

” ஆ....ஆமா.... மேடம் ” என்று குரல் அடைக்கச் சொன்ன ஹரி சற்று முன்பு நடந்த சம்பவங்களைச் சில விநாடி நேரத்தில் சொல்லி முடித்தான்.

திரிபுரசுந்தரி பதறிப் போனவளாய்க் கேட்டாள்.

” ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து கார்கிட்டே வளர்மதி நின்னுட்டு இருக்கும்போது யாரோ அவளைத் தாக்கி கடத்திட்டு போயிருக்கலாம் இல்லையா ஹரி ? ”

” ஆமா.... மேடம்..... அப்படித்தான் நடந்திருக்கணும். ஏன்னா வளர்மதியோட செல்போனும் கார் சாவியும் கீழே விழுந்திருந்தது ”

” இப்ப அந்த ரோட்ல உங்க கார் மட்டும்தான் நின்னுட்டிருக்கா..... இல்லை வேற ஏதாவது வெகிகிள்ஸ் இருக்கா ? ”

” என்னோட கார் மட்டும்தான் இருக்கு மேடம் ”

” சரி...... நீங்க கார்ல இருங்க. நான் சில ஏற்பாடுகளை பண்ணிட்டு உடனே ஹாஸ்பிடலுக்கு புறப்பட்டு வர்றேன் ”

” ப்ளீஸ்.... இங்க நீங்க வராதீங்க மேடம் .... ”

” ஏன் வரவேண்டாம்ன்னு சொல்றீங்க ...... ”

” அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறேன் மேடம்..... ”

” அப்படி ஏன் நினைக்கிறீங்க ஹரி. வளர்மதிக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும்ன்னா ஹாஸ்பிடலுக்கு வெளியே பொருத்தப்பட்டு இருக்கிற சி.சி.டி.வி. காமிராக்களோட ஃபுட்டேஜைப் பார்க்கணும்..... ஹாஸ்பிடல் கேட்ல இருக்கிற செக்யூர்டி ஆட்களை என்கொயர் பண்ணனும். இப்பவே சம்பவம் நடந்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சு.... நாம சில வேகமான நடவடிக்கைகளை எடுத்தாத்தான் வளர்மதியை மீட்க முடியும் ”

” நீங்க சொல்றது சரிதான் மேடம். ஆனா அப்பா பி.பி.பிரச்சினையிலிருந்து குணமாகி நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிப் போகிற நிலைமையில் இருக்கார். இந்த நேரத்தில் வளர்மதியைக் காணோம். அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு தெரிய வரும்போது அப்பாவால அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்க முடியுமான்னு தெரியலை. அம்மாவுக்கும் வளர்மதி மேல என்னைக்காட்டிலும் ஒரு படி பிரியமும் பாசமும் அதிகம். அம்மாவாலேயும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்க முடியாது ”

” நீங்க சொல்றது எனக்குப் புரியுது ஹரி. ஆனா வளர்மதி காணாமே போன விஷயத்தை எத்தனை மணி நேரத்துக்குத்தான் உங்க ஃபாதர், மதர்கிட்டேயிருந்து மறைக்க முடியும்....... ? ”

” மே....மே......மேடம் ”

” என்ன சொல்லுங்க ....... ? ”

” அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வளர்மதி காணாமல் போன விஷயத்தை நாளைக்கு சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் தெரியாதபடி பார்த்துக்க என்னால முடியும். அதுக்குள்ளே வளர்மதியை உங்களால கண்டுபிடிச்சு கொடுக்க முடியுமா மேடம் ....... ? ”

திரிபுரசுந்தரி மறுமுனையில் மெளனமாய் இருந்தாள். ஹரி பொறுமை காத்துவிட்டு தயக்கமாய் குரல் கொடுத்தான்.

” மேடம்.... நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை ”

” ஸாரி ஹரி..... நீங்க சொன்ன அந்த கால கெடுவுக்குள்ளே வளர்மதியை கண்டுபிடிக்க முடியும்ன்னு எனக்குத் தோணலை. காரணம் வளர்மதிக்கு முன்னாடி சில்பா, நர்மதான்னு ரெண்டு பெண்கள் காணாமே போயிருக்காங்க. அவங்களைப் பத்தின தகவலே இன்னும் டிபார்ட்மெண்ட்டுக்கு கிடைக்கலை. இப்போ வளர்மதி மிஸ்ஸிங்..... எதிரிகள் சாதாரண நபர்கள் கிடையாது. நிறைய போராடவேண்டியிருக்கும் ”

திரிபுரசுந்தரி சொல்லச் சொல்ல ஹரி தன்னுடைய உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் இடிந்து கொண்டிருந்தான்.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44], 45, 46]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X