• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு பயமாயிருக்கு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (51)

|

-ராஜேஷ்குமார்

ஜோன்ஸ் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நிதானமான நடையோடு மாதவனை நெருங்க, அவன் கைவிரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை சுண்டி எறிந்துவிட்டு மெல்லச் சிரித்தான்.


” என்ன ஜோன்ஸ்..... இவ்வளவு பெரிய உடம்பை வெச்சுகிட்டு சீக்குக் கோழி மாதிரி நடந்து வர்றே .... ? ”

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 51

அந்தக் குளிரான இரவிலும் ஜோன்ஸின் முகம் வியர்த்து மினுமினுப்பாய் தெரிந்தது.

” எனக்கு பயமாயிருக்கு மாதவன் ”

” ஈஸ்வர்கிட்டே வேலை செய்யறவங்க பயப்படக்கூடாது ஜோன்ஸ். இந்தா.... இந்த குவார்ட்டரை முதல்ல குடி. டைனோ ப்ராண்ட் விஸ்கி. ரத்தத்துல இது கலந்தாலே உள்ளே இருக்கிற பயம் காணாமே போயி ஒரு யானையோட பலம் வரும் ”

” இது ஈஸ்வர் யூஸ் பண்ற ப்ராண்ட் ஆச்சே......உனக்கு எப்படி கிடைச்சுது? ”

” அபுபக்கரை சுத்தம் பண்ணினதுக்காக ஈஸ்வர் சந்தோஷப்பட்டு ரெண்டு குவார்ட்டர் பாட்டில் கொடுத்தார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நான் ஒரு பாட்டிலை முடிச்சேன். நீயும் இதை முடி....... ”

ஜோன்ஸ் அந்த குவார்ட்டர் பாட்டிலை வாங்கி அதனுடைய மூடியைத் திருகி எறிந்துவிட்டு ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு பக்கத்தில் இருந்த புதர்ப்பகுதியை நோக்கி பாட்டிலை எறிந்தான். அது ஒரு சின்ன சத்தத்தோடு உடைந்து சிதறியது.

மாதவன் ஜோன்ஸை நெருங்கி அவன் தோள் மீது கையை வைத்தான்.

” ஜோன்ஸ்.... இப்ப நாம பண்ணப்போறது தப்பான காரியம் கிடையாது. வளர்மதி மயக்கத்தில் இருக்கும்போதே அவளுக்குத் தெரியாமலேயே அவளுடைய கற்பைக் கொஞ்சம் சேதம் பண்ணப் போறோம். எந்த ஒரு பெண்ணையும் பார்த்து நான் இதுவரைக்கும் மனசளவில்கூட சலனப்பட்டது கிடையாது. ஆனா வளர்மதியைப் பார்த்தபோதுதான் என்னால என்னோட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்க முடியலை. உன்கிட்ட இந்த விஷயத்தை நான் சொன்னபோது உனக்கும் அந்த ஆசை இருக்கிறதா சொல்லி சிரிச்சே.... சரியா ஒண்ணரை மணிக்கு வர்றதாய் சொன்னே... ஆனா நீ சொன்ன நேரத்துக்கு வராததினாலதான் நான் உனக்கு போன் பண்ண வேண்டியதாயிருச்சு ”

ஜோன்ஸின் ரத்த ஒட்டத்தில் இப்போது போதை கலந்துவிட்டிருக்க அவன் கோணலாய் சிரித்தபடி சொன்னான்.

” அந்த சி.பி.ஐ. பொண்ணு சில்பா, நமக்கு உதவியாய் இருந்த நர்மதா இவங்களையெல்லாம் கடத்திட்டு வந்த போது அவங்களைத் தொடணும்ங்கிற ஆசை எனக்கு வரலை. ஆனா இந்த வளர்மதியைப் பார்த்தபோதுதான் அந்த உணர்ச்சி வந்தது. அது ஏன்னுதான் எனக்கும் புரியலை ”

” காரணத்தை நான் சொல்லட்டுமா .... ? ”

” சொல்லு ”

” எந்த ஒரு குடும்ப பெண்கிட்டேயும் இருக்க முடியாத ஒரு அசாதாரண துணிச்சலும், சாணக்யத்தனமும் அவளோட அழகை நம்முடைய பார்வைக்கு அதிகப்படியாய் காட்டியிருக்கு.... ”

” காரணம் எதுவாகவோ இருந்துட்டு போகட்டும். மொதல்ல ரூமை ஒப்பன் பண்ணு. மணி ரெண்டாகப் போகுது. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் ஈஸ்வர் எந்திரிச்சு வாக்கிங் போய்கிட்டே நாய்களோடு விளையாட ஆரம்பிச்சுடுவார் ”

மாதவன் அறைச்சாவியை எடுத்துக்கொண்டு பூட்டை நோக்கி சென்ற விநாடி ஃபார்ம் ஹவுஸின் வடமேற்கு மூலையிலிருந்து நாயின் குரைப்புச் சத்தம் கேட்டது.

ஜோன்ஸ் லேசாய் பதட்டமாகி மாதவனைப் பார்த்தான்.

” மாதவன்..... இது சார்லியோட குரைக்கிற சத்தம்தானே .... ? ”

” ஆமா.... அப்படித்தான் தெரியுது ”

” எதுக்காக இப்படி குரைக்குதுன்னு தெரியலையே .... ? ”

” எனக்குத் தெரியும்..... சார்லி காவலுக்கு இருக்கிற பகுதியை ஒட்டியிருக்கிற காட்டுப்பகுதியில் பன்றிகளோட நடமாட்டம் நாலைஞ்சு நாளா அதிகமாயிருக்கு. குறிப்பா மிட்நைட் ரெண்டு மணிக்கு மேல சார்லி கொஞ்ச நேரத்துக்கு இப்படித்தான் குரைக்கும்..... ”

” சார்லி இப்படி குரைச்சு நான் கேட்டதில்லையே .... ? ”

” நீ ஃபரண்ட் கேட்ல இருக்கிறதால அந்தக் குரைப்புச் சத்தத்தை கவனிச்சிருக்க மாட்டே .... ? ”

” இல்லை மாதவன்.... சார்லியோட குரைப்புச் சத்தத்துல ஏதோ வித்தியாசம் தெரியுது. நான் போய் ஒரு நடை பார்த்துட்டு வந்துடறேன். நீ ரூமுக்குள்ளே இரு....”

” நான் சொன்னதுல உனக்கு நம்பிக்கையில்லையா ஜோன்ஸ்.... ? ”

” இல்ல மாதவன்.... மனசுக்குள்ளே சந்தேகத்தை வெச்சுகிட்டு நாம சந்தோஷமாய் இருக்க முடியாது. போய் என்னான்னு பார்த்துட்டு ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே வந்துடறேன் ” சொன்ன ஜோன்ஸ் தன்னுடைய இடுப்பின் மறைவுக்கு கையைக்கொண்டு போய் டிஜிட்டல் ஹை பவர் டார்ச்சையும், ஒரு ரிவால்வரையும் உருவிக்கொண்டு ஃபார்ம் ஹவுஸின் வடமேற்கு திசையை நோக்கி நடந்தான்.

மாதவன் நடந்து செல்லும் ஜோன்ஸையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அறையின் பூட்டுக்கு சாவியைக் கொடுத்தான்.

” க்ளிக் ” பூட்டு விடுபட கதவைக் கொஞ்சமாய் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தான் மாதவன்.

****

திரிபுரசுந்தரி சட்டென்று தூக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து உட்கார்ந்தாள். டீபாயின் மேலிருந்த அவளுடைய செல்போன் வைபரேஷன் மோடில் மெலிதாய் உறுமிக்கொண்டிருந்தது.

எதிர்புற சுவற்றில் அப்பியிருந்த எலக்ட்ரானிக் வால்க்ளாக் நேரம் 1.45 என்பதை அடர்த்தியான சிவப்பு நிறத்தில் காட்டிக்கொண்டிருக்க மனம் பயமாய் யோசித்தது.

” இந்நேரத்துக்கு போன் செய்வது யார் .... ? ”

செல்போனை எடுத்துப் பார்த்தாள் திரிபுரசுந்தரி. மறுமுனையில் ஹரி கூப்பிட்டுக்கொண்டிருந்தான். செல்போனை நடுக்கமாய் காதுக்கு ஒற்றினாள்.

” சொல்லுங்க ஹரி ”

” வளர்மதியைப் பற்றின தகவல் ஏதாவது கிடைச்சுதா மேடம் .... ? ” கேட்ட ஹரியின் குரல் அழுகையில் உடைந்து போயிருந்தது.

” ஏதாவது நல்ல செய்தி கிடைச்சிருந்தா நான் உடனே உங்களுக்கு போன் பண்ணியிருப்பேனே ஹரி .... ? ”

” என்னால தூங்க முடியலை மேடம்.... ரொம்பவும் பயமாயிருக்கு ”

” டோண்ட் பி அப்ரய்ட் ஹரி..... அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் அன்பரசன் வளர்மதியைக் கண்டு பிடிக்கிற புதிய முயற்சியில் இறங்கியிருக்கார். அவர் ரொம்பவும் திறமையான போலீஸ் ஆபீஸர். பல சிக்கலான குற்றவியல் சம்பந்தப்பட்ட கேஸ்களை எல்லாம் ஒரு புதிய கோணத்தில் இன்வெஸ்டிகேட் பண்ணி குற்றவாளிகளை கார்னர் பண்ணியிருக்கார். அவரோட வீரச்செயலைப் பாராட்டி போன வருஷம் தமிழக அரசு விருதும் கொடுத்திருக்காங்க ”

” மேடம்..... அஸிஸ்டெண்ட் கமிஷனர் அன்பரசனை நான் அண்டர் எஸ்டிமேட் பண்ணி பேசறதாய் நீங்க நினைக்க வேண்டாம். நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே நாம வளர்மதியை மீட்கணும்ன்னா நீங்க போலீஸோட ஹை அஃபிஷியல்ஸைப் பார்த்துப் பேசணும்.... உங்க ஒட்டு மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டும் ஒரு ஆர்மி மாதிரி செயல்படணும் ” ஹரி சற்றே குரலை உயர்த்தி பேச திரிபுரசுந்தரி பெருமூச்சோடு மெளனம் காத்தாள்.

” என்ன மேடம்..... பேச்சைக் காணோம்..... லைன்ல இருக்கீங்களா .... ? ”

” ஹரி .... அயாம் ஆன் த லைன்.... உங்க நியாயமான கோபமும் வருத்தமும் எனக்குப் புரியுது.... ஆனா..... அட் திஸ் டைம் அயாம் ஹெல்ப்லஸ்..”

” ஹெல்ப்லஸா...... என்ன சொல்ல வர்றீங்க மேடம். எனக்கு ஒண்ணும் புரியலை.... ”

” ஹரி.... உங்ககிட்டே நான் எதையும் மறைக்க விரும்பலை.... ஐ ஹேவ் பீன் சஸ்பெண்டட் ஃப்ரம் த சர்வீஸ் ”

” மே....ட......ம்...... ”

” எஸ்..... டி.ஜி.பி. கிட்டே நான் கொஞ்சம் கடுமையான முறையில் பேசிட்டதால சி.எம். செல்லில் இருந்து எனக்கு சஸ்பெண்ட் ஆர்டரை இஷ்யூ பண்ணிட்டாங்க. நான் நாளைக்கு யூனிஃபார்ம் போட்டுகிட்டு ஆபீஸ் போக முடியாது ..... ”

” மே....ட......ம்...... ” ஹரி மறுமுனையில் உடைந்து போனவனாய் குரல் கொடுத்தான். ” நீங்க இப்ப சொன்ன இந்த இடியை என்னால டைஜஸ்ட் பண்ண முடியலை. பதவியில் இருக்கும் போதே உங்களுக்கு அதிகாரம் இல்லாத போது இப்ப பதவியில் இல்லாத போது எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்மதியை மீட்கப் போறீங்க .... ? ”

” எனக்குப் பின்னாடி அன்பரசன் இருக்கார். அவர் நிச்சயமாய் நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே வளர்மதி இருக்கிற இடத்தை ட்ரேஸ் அவுட் பண்ணிடுவார் ”

” ஸாரி மேடம்.... எனக்கு நம்பிக்கையில்லை ”

” ஹரி.... பி.... பாஸிட்டீவ்.... நேர்மறையா பேசுங்க. எதிர்மறையான எண்ணங்களை மனசுக்குள்ளே நுழைய விடாதீங்க ”

” ஒன்ஸ் அகெய்ண் ஸாரி மேடம்.... நீங்க சொன்ன இந்த புத்திமதியை நான் இன்னொருத்தர்க்கு வேணும்ன்னா சொல்ல முடியும். ஆனா அந்தப் பிரச்சினைகளை நாம சந்திக்கும்போதுதான் அதனோட வலி தெரியும். நான் இப்ப ஒரு தூக்க மாத்திரையை போட்டுகிட்டு தூங்கப்போறேன். நாளைக்கு நான் கண் விழிக்கும்போது உங்ககிட்டயிருந்து ஒரு நல்ல செய்திவரும் என்று எதிர்பார்க்கிறேன் ”

” வரும் ஹரி..... கண்டிப்பாய் வரும் ”

” இந்த ஒரு சின்ன சந்தோஷத்தோட தூங்கப்போறேன். குட்நைட் மேடம் ”

” குட்நைட் ”

ஹரி மறுமுனையில் செல்போனின் இணைப்பைத் துண்டித்தான். திரிபுரசுந்தரியும் கனத்த மனதோடு தன்னுடைய செல்போனை அணைக்க முயன்ற விநாடி ஒரு ”வாட்ஸ் அப்” செய்தி உள்ளே வருவதற்கான ”அலர்ட்” டோனின் சிறிய மியூஸிக் சிதறல் கேட்டது. அதைத் தொடர்ந்து செல்போனின் டிஸ்ப்ளேயின் சதுரத்திற்குள் ”மெஸேஜ் ஃப்ரம் அன்பரசன்” என்ற வாக்கியமும் உற்பத்தியாயிற்று.

பதட்டத்தோடு ”வாட்ஸ் அப்” ஆப்ஷனுக்குப் போய்ப் பார்த்தாள். ஆங்கிலத்தில் டைப் செய்திருந்த ஒரு நீளமான கடிதம் பார்வைக்குத் தட்டுப்பட்டது. தவிப்புடன் படிக்க ஆரம்பித்தாள்.

”மேடம்..... இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் வெட்கமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. நான் உங்களோடு பேசிவிட்டு வீட்டுக்குத்திரும்பிய சிறிது நேரத்தில் எனக்கு டெப்டி கமிஷனர் குரு கண்ணனிடம் இருந்து ஹாட் லைன் போன் கால் வந்தது. எடுத்துப் பேசியதும் அவர் கேட்ட முதல் கேள்வி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு எதற்காகப் போனீர்கள்..... என்ன பேசினீர்கள் என்பதுதான். நான் அவர் கேட்ட கேள்விக்கு எதையும் மறைக்காமல் நீங்கள் என்னிடம் சொன்ன எல்லா விபரங்களையும் அவரிடம் சொன்னேன். அவர் அதையெல்லாம் கேட்டுவிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அதிகாரியின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்பப் பெண்ணான வளர்மதியை ஒரு போலீஸ் இன்ஃபார்மராக பணிபுரிய வைத்ததே பெரிய குற்றம். அந்தக் குற்றத்திற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் நம்முடைய போலீஸ் டிபார்ட்மெண்ட் தலையிடாது. நீங்களும் இதில் மூக்கை நுழைக்கக்கூடாது. இது என்னுடைய உத்தரவு அல்ல. டி.ஜி.பியின் உத்தரவு. இந்த உத்தரவை நீங்கள் மீறும்பட்சத்தில் இலாகா பூர்வமான நடவடிக்கைக்கு உட்பட நேரிடும். எனவே பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்றார். நான் டெப்டி கமிஷனர்க்கு பதில் சொல்ல முயற்சித்தபோது அவர் கோபமாக, ” இனிமேல் நீங்கள் எதுவும் பேசி நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ” என்று சொல்லி ஹாட் லைனை கட் செய்து விட்டார். மேடம்..... இப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வளர்மதியை கண்டுபிடிக்கும் விஷயத்தில் நான் நம்முடைய டிபார்ட்மெண்ட்டுக்குத் தெரியாமல் ஒரு குண்டூசியைக்கூட நகர்த்தி வைக்க முடியாது. மீறி செயல்பட்டால் நானும் சஸ்பெண்ட் ஆர்டரை கையில் வாங்கிக் கொள்ள வேண்டி வரலாம். எனக்கு அடுத்த ஆறுமாத காலத்திற்குள் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் நான் வேலையை இழக்க நேரிட்டால் என்னுடைய கல்யாணம் மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது மேடம். எனவே நீங்கள் எனக்குக் கொடுத்த அசைன்மெண்ட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் மேடம். இதையெல்லாம் நான் உங்களிடம் நேரில் வந்து பேச முடியாது. செல்போனில் பேசினால் எனக்கு வார்த்தை வராது. அதனாலதான் நான் வாட்ஸ் அப்பில் என்னுடைய நிலைமையை விளக்கி ஒரு கடிதமாக எழுதியுள்ளேன். இதைப் படித்துவிட்டு டெலிட் செய்துவிடுங்கள். மீண்டும் உங்களிடம் மன்னிப்பைக் கோரும் அன்பரசன் ”

வாட்ஸ் அப் செய்தியைப் படித்து முடித்த திரிபுரசுந்தரியின் உடம்பும் மனசும் சிறிது சிறிதாய் இடிந்து கொண்டிருந்தது.


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X