• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதாவது பிரச்சினையா.... ? விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (52)

|

- ராஜேஷ்குமார்

மாதவன் அறைக்கதவை மெல்லத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். நீலநிறத்தில் மங்கலாய் எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் அறையில் இருந்த பொருட்களை நிழல் உருவங்கள் போல் காட்டியது. கட்டிலை நோக்கி மெல்ல நடை போட்டான்.

அறையின் சுவரோரமாய் போடப்பட்டிருந்த கட்டிலை நெருங்கிய மாதவனை அதிர்ச்சி அலைகள் புரட்டிப் போட்டன.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 52

”கட்டிலில் வளர்மதி இல்லை. ”

திடுக்கிட்டுப் போனவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். பதினாறுக்கு பதினாறு என்ற அளவிலான அந்தப் பெரிய அறைக்குள் வளர்மதி ஒளிந்து கொள்ளக்கூடிய வகையில் உயரமான பெரிதான எந்த ஒரு பொருளும் இல்லை. விழிகள் பயத்தோடு சுழன்று அறையுடன் அட்டாச் செய்யப்பட்டிருந்த அந்த சிறிய டாய்லட் ரூம் மாதவனின் பார்வையில் பட, அதை நோக்கி மெல்ல நடந்து போய் கதவருகே நின்று அதன் தாழ்ப்பாளை இழுத்துப் பார்த்தான்.

டாய்லட் கதவு உட்புறமாய் தாழிடப்பட்டிருந்தது. மாதவனின் மனசுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சியும் பெரிதாய் ஒரு பயமும் ஒரு சேர அரும்பியது.

”வளர்மதி டாய்லட்டுக்குள்தான் இருக்கிறாள் ”

நாளைக்குக் காலையில் தெளிய வேண்டிய மயக்கம் இந்த நள்ளிரவு நேரத்திலேயே தெளிந்து, கட்டிலினின்றும் எழுந்து நடந்து டாய்லட் அறைக்கு கவனமாக போகும் அளவுக்கு சுயஉணர்வோடு இருக்கிறாள். இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டாய்லட் அறையிலிருந்து அவளாக வெளிப்படும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

மாதவனின் மூளைக்குள் மளமளவென்று யோசனைகள் அரும்பிக் கொண்டிருக்க சத்தம் காட்டாமல் நகர்ந்து அறையை விட்டு வெளியே வந்தான். கதவை ஒசை வராமல் சாத்திவிட்டு தன்னுடைய செல்போனை எடுத்து ஜோன்ஸை தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது. மாதவன் கிசுகிசுப்பாய் பேசினான்.

” ஜோன்ஸ் ”

” என்ன மாதவன்.... குரல்ல இவ்வளவு பயம் ஏதாவது பிரச்சினையா .... ? ”

” பிரச்சினைதான்...... வளர்மதிக்கு மயக்கம் தெளிஞ்சு இப்போ சுய உணர்வோடு இருக்கா.... ”

” நீ என்ன சொல்றே..... உன்னைப் பார்த்ததும் சத்தம் போட்டாளா .... ? ”

” இல்லை ”

” அப்புறம் .... ? ”

” நான் கதவைத் திறந்துகிட்டு உள்ளே போனபோது அவ அறைக்குள்ளே இல்லை..... நான் உள்ளே வந்தது அவளுக்குத் தெரியாது. இப்போ அட்டாச்சடு டாய்லட்டுக்குள்ளே இருக்கா...... மயக்கம் நல்லாத் தெளிஞ்சிருந்தாத்தான் எழுந்து நடக்க முடியும்....அவளால நடக்க முடியுதுன்னா நாம கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கணும்..... ”

” நீ இப்போ எங்கே இருக்கே .... ? ”

” ரூமுக்கு வெளியே வந்துட்டேன் ”

” சரி.....ரூமோட கதவை வெளிப்பக்கமாய் பூட்டிட்டு வெயிட் பண்ணு. நான் இப்போ வந்துடறேன். வளர்மதி டாய்லட்டிலிருந்து வெளியே வர்ற வரைக்கும் நாம வெயிட் பண்ணி உள்ளே போனாத்தான் அவளை சமாளிக்க முடியும். அவசரப்பட்டா காரியம் கெட்டுடும் ”

” அது எனக்குத் தெரியாதா என்ன.... நீ லேட் பண்ணாமே புறப்பட்டு வா.... ”

” இதோ புறப்பட்டேன் ”

” சரி.... சார்லி எதுக்காக குறைச்சுது .... ? ”

” நீ சொன்ன மாதிரி காட்டுப்பன்றிகளோட நடமாட்டம்தான்..... ரெண்டு நாளைக்கு முள்வேலியை எலெக்ட்ரிஃபை பண்ணினாத்தான் அதுங்க இந்தப் பக்கம் வராது.... ”

” இங்கே வந்து எல்லாத்தையும் பேசிக்கலாம். நேரம் போய்கிட்டிருக்கு.... சீக்கிரமா வா..... ”

” இதோ வந்துட்டேயிருக்கேன் ”

****

ஜோன்ஸ் செல்போனை அணைத்துவிட்டு இருட்டில் தெரிந்த அந்த பாதையில் வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.

அந்தக் குளிரான இரவு வேளையிலும் உடம்பு வியர்த்து ஊற்றியது. மூளையின் செல்கள் பயமாய் யோசித்தது.

” இவ்வளவு சீக்கிரத்தில் வளர்மதி மயக்கத்திலிருந்து மீள வாய்ப்பேயில்லை. அப்படியே சுய உணர்வுக்கு வந்தாலும் எழுந்து நிற்கவும், நடக்கவும், தடுமாற்றம் இல்லாமல் பாத்ரூம் போய் வரவும் எப்படியும் ஒரு நாளாகிவிடும்... அந்த அளவுக்கு வீரியம் வாய்ந்த மயக்க மருந்து ரோகிப்னால், தப்பு யாரிடம்.... மாதவனிடமா, வளர்மதியிடமா.... இல்லை மருந்திடமா .... ? ”

யோசித்துக்கொண்டே மூச்சு வாங்க நடந்தவனை திடீரென்று இரிடியம் செல்போன் அழைத்தது. பதட்டமாய் எடுத்துப் பார்த்தான்.

மறுமுனையில் தீபக்.

வாய் உலர்ந்து போனவனாய் செல்போனை காதுக்கு ஒற்றிப் பேசினான்.

” ஸார்... ”

” ஜோன்ஸ்..... நாய் குரைக்கிற சத்தம் கேட்டுகிட்டேயிருந்தது. என்ன எதுன்னு போய்ப் பார்த்தியா .... ? ”

” இப்ப பார்த்துட்டுதான் ஸார் வந்துட்டுகிட்டிருக்கேன் ”

” என்ன பிரச்சினை .... ? ”

” நார்த் வெஸ்ட் மூலையில் இருக்கிற காட்டுப்பகுதியிலிருந்து நம்ம ஃபார்ம் ஹவுஸீக்குள்ளே காட்டு பன்றிகள் வரப் பார்க்குது ஸார். அதான் நாய் குரைக்குது..... ”

” முட்டாள்....அந்த பவுண்டரியை எல்க்ட்ரிக்கல் ஃபென்ஸிங் பண்ண வேண்டியதுதானே .... ? ”

” நாளைக்கே பண்ணிடறேன் ஸார் ”

” இதோ பார் ஜோன்ஸ்...... நம்ம ஃபார்ம் ஹவுஸோட எல்லைக்குள்ளே எந்த ஒரு ஜீவராசியும் எட்டிப்பார்க்கக்கூடாது. நாளையிலிருந்து நாய்கள் தேவையில்லாமே குரைக்கக்கூடாது. டாக்டர் ஜான் மில்லர்க்கு இது புதிய இடம். இப்படி நாய்கள் ராத்திரியில் குரைச்சுட்டிருந்தா அவர் எப்படி தூங்குவார் ? அவர்க்கு சரியானபடி தூக்கமில்லைன்னா.... மறுநாள் காலையில் எப்படி புத்துணர்ச்சியோடு இருப்பார்.... நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப்

புரியுதா ஜோன்ஸ்.... ? ”

” புரியுது.... ஸார்..... ”

” நாளைக்கு முதல் காரியமாய் ஃபார்ம் ஹவுஸோட நாலாபக்கமும் போய் ஃபென்ஸிங்கை எல்க்ட்ரிஃபை பண்ணிடு ”

” பண்ணிடறேன் ஸார் ”

தீபக் மறுமுனையில் செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட, ஜோன்ஸ் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு நடந்தான்.

இரண்டு நிமிட வேகமான நடை. வளர்மதியை அடைத்து வைத்து இருந்த கட்டிடப்பகுதி பார்வைக்குத் தட்டுப்பட்டது. வியர்த்து வழிகிற உடம்போடு நெருங்கினான்.

அறையின் கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

” மாதவன் எங்கே .... ? ”

சுற்றும் முற்றும் பார்த்தான் ஜோன்ஸ். மாதவன் அந்த இடத்தில் இருப்பதற்கான ஒரு சின்ன அறிகுறி கூட தெரியவில்லை.

” ரூமை பூட்டிவிட்டு எங்கே போனான் இந்த மாதவன் .... ? ”

” என்னைத் தேடிக்கொண்டு போயிருப்பானோ ? அப்படி போயிருந்தால் என் பார்வையில் பட்டிருப்பானே .... ? ”

ஜோன்ஸ் கலக்கத்தோடு பூட்டின் அருகே போய் நின்று அறைக்குள் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுத்து கவனித்தான்.

அறைக்குள்ளே அசாத்திய நிசப்தம்.

அடிவயிற்றில் பரவிக்கொண்ட பயத்தோடு அறையை விட்டு நகர்ந்து போய் கட்டிடத்துக்குப் பின்புறமாய் நின்று கொண்டு தன்னுடைய இரிடியம் செல்போனை உயிர்ப்பித்து மாதவனின் செல்போனைத் தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் ரிங் போவதற்கு பதிலாக ஜோன்ஸின் இரிடியம் செல்போனின் திரையில் ”சம்திங்க் வென்ட் ஆன் ராங்க் ” என்ற வாசகம் ரத்தச்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து ஒளிர்ந்து மங்கியது. நான்கைந்து தடவை முயற்சித்தும் அதே வாசகம் வரவே, ஜோன்ஸின் இருதயத்துடிப்பு ஒரு டெலிபிரிண்டராய் மாறி தடதடத்தது.

” மேற்கொண்டு என்ன செய்யலாம் .... ? ”

” தீபக்கிற்கு போன் செய்து நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களைச் சொல்லிவிடலாமா .... ? ”

ஜோன்ஸ் பயமாய் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அவனுக்குப் பின்புறம் சற்றுத்தள்ளி ஏதோ சத்தம் கேட்டது. சட்டென்று திரும்பினான்.

ஐம்பதடி தொலைவில் அந்த உருவம் தெரிந்தது. மெல்ல நடந்து வந்தது. ஜோன்ஸ் உற்றுப் பார்த்தான்.

மாதவன் வந்து கொண்டிருந்தான். கையில் ஏதோ ஒரு ஆயுதம்.

****

திரிபுரசுந்தரி உறங்காத கண்களோடும் அடித்துக்கொள்கிற இதயத்தோடும் சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள்.

நேரம் சரியாய் 2 மணி.

படுக்கையின்றும் எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக்குக் காலையில் சூரியன் தலைகாட்டுவதற்குள் ஹரிக்கு வளர்மதியைப்பற்றிய ஒரு நல்ல செய்தியை சொல்லியாக வேண்டும். கட்டிலினின்றும் இறங்கி மெல்ல அறைக்குள் உலாவ ஆரம்பித்தாள். ஒரு ஐந்து நிமிடம் கரைந்திருந்த போது லேண்ட்லைன் டெலிபோனோடு இணைக்கப்பட்டிருந்த இண்டர்காம் மெலிதாய் முணுமுணுத்தது.

ரிஸீவரை எடுத்து காதில் வைத்தாள் திரிபுரசுந்தரி. மறுமுனையில் வீட்டு வாட்ச்மேன் பேசினார்.

” அம்மா..... ”

” சொல்லு பெரியசாமி ”

” உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக ஹரின்னு ஒருத்தர் வந்திருக்கார் ”

திரிபுரசுந்தரியின் முகம் வியப்புக்கு உட்பட்டது.

” பேர் என்ன சொன்னார் ஹரியா .... ? ”

” ஆமாம்மா ”

” சிவப்பா உயரமா சுருட்டை முடியோடு இருக்காரா .... ? ”

” ஆமாம்மா ”

” உள்ளே அனுப்பு பெரியசாமி ”

” அ...அ....அம்மா.... ”

” என்ன .... ? ”

” கார்ல அவர் மட்டும் இல்லை.... வேற ரெண்டு பேரும் இருக்காங்க. அவங்களைப் பார்த்தா கொஞ்சம் சந்தேகமாய் இருக்கு ”

திரிபுரசுந்தரி சில விநாடிகள் யோசித்துவிட்டு கேட்டாள்.

” அந்த ரெண்டு பேரும் ஜெண்ட்சா .... ? ”

” ஆமாம்மா ”

” ஹரிகிட்டே ரிஸீவரைக் குடு..... நான் பேசறேன் ”

” இதோ தர்றேம்மா.... ”

அடுத்த சில விநாடிகளில் ஹரியின் குரல் கேட்டது.

” மேடம்.... ”

” என்ன ஹரி.... இந்த நேரத்துல .... ? ”

” ஸாரி மேடம்.... உங்களுக்குத் தொந்தரவு தர்றதா நினைக்க வேண்டாம். உங்களால வளர்மதியைக்கண்டு பிடிச்சு காப்பாத்த முடியாதபோது நானாவது முயற்சி பண்ணித்தானேயாகணும் ”

” என்ன ஹரி.... இப்படி பேசறீங்க.... ? ”

” வேற எப்படி பேசச் சொல்றீங்க மேடம். உங்களைப் பொறுத்தவரை வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர். ஆனா எனக்கு ஒய்ஃப். நான் உயிர்க்கு உயிரா நேசிக்கிற என்னோட மனைவி. நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே என்னோட வளர்மதியை நான் மீட்டாகணும். அதுக்கான ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்கேன். அதைப்பத்தி போன்ல பேச நான் விருப்பப்படலை. அதான் நேர்லயே நேரம் காலம் பார்க்காமே வந்துட்டேன் ”

சரி.... உங்க கூட வந்திருக்கிற அந்த ரெண்டு பேர் யாரு .... ? ”

வந்து சொல்றேன் மேடம்.....

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X