Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12

Subscribe to Oneindia Tamil

- ராஜேஷ்குமார்

அதிர்ச்சியில் நான்கு பேரும் அந்தக் குழியைச் சூழ்ந்து நின்றார்கள்.

நித்திலனின் கையில் இருந்த செல்போனின் டார்ச் வெளிச்சம் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனை இப்போது துல்லியமாய் காட்டியது. சாதுர்யா பயத்தில் உறைந்து போய் நிற்க கஜபதியும், பத்ரியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 12

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தட்டுப்படவில்லை. தொலைவில் முதல் மந்திரியை வரவேற்கும் ஆர்ப்பாட்டமான சத்தங்கள் மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.

"என்ன பண்ணலாம் பத்ரி.... மணிமார்பனோட உடம்புல இன்னமும் அசைவு இருக்கு.. குழிக்குள்ளே இறங்கி ஆளை எடுத்து வெளியே போடலாமா..?"

"வேண்டாம் கஜபதி... மணிமார்பனை யாரோ தாறுமாறாய் வெட்டி இருக்காங்க... ஏகப்பட்ட இடத்துல வெட்டு விழுந்திருக்கும் போலிருக்கு... உயிர் போய்விட்டு இருக்கு... பிழைக்க வாய்ப்பில்லை.... நாம பார்த்தும் பார்க்காதது போல் கிளம்பிட வேண்டியதுதான். நாம இன்னமும் இதே இடத்துல நின்னுட்டிருந்தா இந்தக் கொலைப் பழியிலேயும் மாட்டிக்க வேண்டியதுதான்... இந்த இடத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அந்த அளவுக்கு நல்லது...!"

நித்திலனும், சாதுர்யாவும் குழிக்குள் விழுந்து கிடந்த மணிமார்பனையே பார்த்துக் கொண்டிருக்க பத்ரி நித்திலனின் தோளில் கையை வைத்தார்.

"நித்திலன்! மணிமார்பன் செத்துக்கிட்டு இருக்கான். இரக்கம் காட்டவோ, மனிதாபமான முறையில் நடந்து கொள்ளவோ இது நேரம் இல்லை... அதோ இன்னும் கொஞ்சதூரம் நடந்தா போதும். காம்பெளண்ட் சுவர் வந்துடும். தாண்டி குதிச்சு போயிட்டே இருப்போம்."

பத்ரி நித்திலனின் கையைப் பற்றி இழுக்க அவன் தயங்கினான். "ஒரு நிமிஷம் பத்ரி"

"என்ன...?"

"குழியில் விழுந்து கிடக்கிற மணி மார்பனுக்கு பக்கத்துல செல்போன் ஒண்ணு இருக்கு. அது மணி மார்பனோட செல்போனாய் இருக்கலாம். அது நம்ம கைக்கு கிடைச்சா எக்ஸ் மினிஸ்டர் முகில்வண்ணன் பற்றியே பல விஷயங்கள் நமக்கு தெரிய வாய்ப்பு இருக்கு..."

பத்ரி குழிக்குள் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னார்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 12

"நீங்க சொல்றது சரிதான் நித்திலன்... ஆனா, நாம இந்தக் குழிக்குள்ளே இறங்கி எப்படி அந்த செல்போனை எடுக்க முடியும்?"

"கொஞ்சம் முயற்சி பண்ணினா எடுத்துட முடியும். இதோ குழியோட இடது பக்கம் அவ்வளவு ஆழம் கிடையாது. நான் வேணும்ன்னா இறங்கி...!"

"வேண்டாம் நித்திலன்..... நாம இங்கே நின்னுட்டு இருக்கிற ஒவ்வொரு விநாடியும் நமக்கு ஆபத்து. உடனடியாய் மூவ் ஆயிடறது பெட்டர்..."

"ஒரே நிமிஷம்.....! செல்போனை எடுத்துட்டு வந்துடறேன்." நித்திலன் குழியின் இடது பக்கமாய் ஓடி ஆழம் குறைவாய் இருந்த பகுதிக்குப் போய் மண்டியிட்டு உட்கார்ந்தான். பிறகு வலது காலை குழிக்குள் மெதுவாய் இறக்கி சறுக்கிக் கொண்டே கீழே போனான். அவனுடைய கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தை சிதறடித்து குழிக்குள் இருந்த இருட்டை விரட்டிவிட்டு ரத்தத்தில் நனைத்து மல்லாந்திருந்த நித்திலனையும் அவனுக்குப் பக்கத்தில் விழுந்திருந்த செல்போனையும் காட்டியது.

செல்போனை கையில் எடுத்துக் கொண்ட நித்திலன் மணிமார்பனையும் பார்த்தான். உயிர்த்துடிப்பு அடங்கி விட்டதற்கு அடையாளமாய் அவனுடைய விழிகள் நிலைத்துப் போயிருந்தது.

சாதுர்யா பதட்டமாய் குரல் கொடுத்தாள்.

"நித்தி....! சீக்கிரம் மேலே வா...."

"இதோ வந்துட்டேன்...," நித்திலன் குழியினின்றும் எம்பி அதன் விளிம்பைப் பற்றிக் கொண்டு மூச்சிறைக்க மேலே வந்தான்.

"மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லை..."

"இனிமேல் நாம உயிரோடு இருக்கிறதுதான் முக்கியம். ம்... வாங்க.."

"நித்திலன் ... மொதல்ல உங்க செல்போன் டார்ச் லைட்டை ஆஃப் பண்ணுங்க..."

செல்போனின் டார்ச் அணைந்தது.

கஜபதி முதல் ஆளாய் ஓட, அவரைப் பின் தொடர்ந்து பத்ரி, நித்திலன், சாதுர்யா மூன்று பேரும் வியர்த்து வழிய ஓடினார்கள்.

நான்கடி உயரமே இருந்த காம்பெளண்ட் சுவரை நெருங்கினார்கள். சுவரின் ஓரமாய் கிடந்த ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி நின்று சுவரின் விளிம்பில் காலை வைத்து மறுபக்கம் எட்டிப் பார்த்த கஜபதி அதிர்ந்து போனவராய் கீழே இறங்கினார்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 12

"பத்ரி...!"

"என்ன கஜபதி...?"

"நாம சுவர் ஏறி தப்பிக்க முடியாது போலிருக்கே?"

"ஏன்..?"

"அந்த கல்லு மேல ஏறி நின்னு பாரு"

பத்ரி பதட்டத்தோடு அந்தக் கல்லின் மேல் ஏறி நின்று மறுபக்கம் பார்த்தார். அவருடைய முதுகுத் தண்டுவடம் முழுவதும் மைனஸ் ஜீரோ டிகிரி குளிர் பாய்ந்த மாதிரியான உணர்வு.

அவரின் மறுபக்கம் தெரிந்த சவுக்குமரத் தோப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு கையில் பெரிய டார்ச் லைட்டோடும், இன்னொரு கையில் அரிவாளோடும் சுற்றும் முற்றும் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

பத்ரியைத் தொடர்ந்து நித்திலனும், சாதுர்யாவும் ஏறிப் பார்த்துவிட்டு முகங்கள் மாறினார்கள்.

"இப்ப என்ன பண்றது..?"

"இந்த வழியில் தப்பிக்க முடியலைன்னா வேற எந்த வழியிலும் தப்பிக்க முடியாது..." கஜபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் சட்டைப் பையில் சைலண்ட் மோடில் இருந்த செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

'யார் கூப்பிடறாங்கன்னு தெரியலையே' பதட்டத்தோடு செல்போனை எடுத்துப் பார்த்தார்.

அது வாட்ஸ் அப் அழைப்பு.

முகில்வண்ணனின் மகன் செந்தமிழ் அழைத்துக் கொண்டிருந்தான்.

"பத்ரி! செந்தமிழ் கூப்பிடறான்... பேசறதா வேண்டாமா...?"

"நல்லதோ... கெட்டதோ... பேசிடு... நிலைமையோட சீரியஸ்னஸ் தெரிஞ்சாத்தான் மேற்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு நம்மால யோசிக்க முடியும்...!"

கஜபதி வாட்ஸ் அழைப்பை அனுமதித்து விட்டு பேசினார். "எ...எ...என்ன செந்தமிழ்...?" ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.

"கஜபதியண்ணே.... நீங்க எங்கே இருக்கீங்க... கடந்த அரைமணி நேரமாய் பார்வையிலேயே தட்டுப்படலை..."

"நான் இங்கதான் இருக்கேன்"

"இங்கேன்னா எங்கே...?"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 12

"டைனிங் செக்‌ஷன் பக்கம்... ஆட்கள் ஒழுங்காய் வேலைப் பார்க்கிறாங்களான்னு பார்க்க வந்தேன்...!"

"மொதல்ல அந்த இடத்திலிருந்து கிளம்பி ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு வாங்க... சி.எம். மேடையில் உட்கார்ந்துட்டார். அவர் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவர்க்கு போட வேண்டிய ஊட்டி மெகா ரோஜாப்பூ மாலையும் வெள்ளிச் செங்கோலும் மேடைக்கு வரணும். அந்த ரெண்டும் உங்க பொறுப்பில்தானே இருக்கு..?"

"ஆமா... அந்த ரெண்டையும் நம்ம வீட்டு பூஜையறைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு ரூம்ல வெச்சு பூட்டி அந்த அறையோட சாவியை உங்க தங்கச்சிக்கிட்டே கொடுத்திருக்கேன்."

"என்னண்ணே இது...! உங்ககிட்டே இரு பொறுப்பைக் கொடுத்தா அதை யார்கிட்டேயாவது கொடுத்துட்டு உங்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலையைப் பார்க்கப் போடறீங்க...? ஆமா நம்ம மாப்பிள்ளை உங்களைப் பார்த்தாரா...?"

"இல்லையே...!"

"அவர் உங்களைத்தானே தேடிட்டு இருந்தார்."

"எதுக்கு...?"

"வேற எதுக்கு... சி.எம்.முக்கு போட வேண்டிய மெகா மாலையும், கொடுக்க வேண்டிய செங்கோலும் உங்க பொறுப்பில்தானே இருக்கு?"

"மாப்பிள்ளை மணிமார்பனை நான் பார்க்கலையே?"

"நீங்க திடீர்ன்னு காணாம போயிட்டா மாதிரி அவரையும் இப்ப கொஞ்ச நேரமாய் காணோம்... எங்கிருக்கார்ன்னும் தெரியலை. போன் பண்ணினா அவரோட செல்போன் 'ஸ்விட்ச் ஆஃப்'ல இருக்கு. யார்க்குமே பொறுப்பு இல்லாமே போச்சு...! அப்பாவுக்கு நடக்கிற ஒரு பெரிய ஃபங்க்‌ஷன் இது.. இந்த ஃபங்க்‌ஷனை பயன்படுத்தி சி.எம்.மை குளிப்பாட்டி வெச்சாத்தான் அப்பா சம்பாதிச்சு வெச்சிருக்கிற சொத்துக்கு எந்த ஒரு பயமுறுத்தலும் இல்லாம இருக்கும். உங்களுக்குப் புரியுதாண்ணே?"

"புரியுது..."-

"உடனே புறப்பட்டு வாங்க.... நீங்களும் மேடையேறி சி.எம்.மை ரெண்டு வார்த்தை பாராட்டிப் பேசணும்"

"சரி.... வர்றேன் தம்பி..."

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 12

"வரும்போது அப்படியே மாப்பிள்ளை மணிமார்பன் கண்ணுல பட்டா அவரையும் கூட்டிட்டு வாங்க... மாப்பிள்ளை எங்கே எங்கேன்னு அப்பா கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை."

"ம்...ம்..." என்று முனகிக் கொண்டே செல்போனை அணைத்தார் கஜபதி. பத்ரியைப் பார்த்தார்.

"இப்ப என்ன பண்றது....?"

"வேற வழியில்லை கஜபதி... நாம நாலு பேரும் ஃபங்க்‌ஷன் முடிகிற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது."

"மணிமார்பன் கொலையானது யார்க்கும் தெரியலை போலிருக்கு...!"

"நாமும் தெரியாதது போல இருந்துட வேண்டியதுதான்.... ம்... வாங்க ஃபங்க்‌ஷனுக்குப் போலாம்."

நான்கு பேரும் அந்த வைகறை இருட்டில் மறுபடியும் வெளிச்சமாய் தெரிந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+