Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கயல் இது?.. பைவ் ஸ்டார் துரோகம் (51)

Subscribe to Oneindia Tamil

- ராஜேஷ்குமார்

மிருணாளினி இல்லைன்னு எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்றீங்க..?" கயல்விழி கேட்க வேல்முருகன் சொன்னார்.

"ஏன்னா...... அந்த மிருணாளினி கடந்த ஒரு வார காலமாய் என்னோட கண்காணிப்பில் க்யூ பிராஞ்ச் செல்லில் பத்திரமாய் இருக்காங்க. எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் மகன், மாப்பிள்ளை ரெண்டு பேர்களின் மரணத்திற்கும் காரணம் மிருணாளினிதான்னு நம்ப வைக்கிறதுக்காக யாரோ முயற்சி பண்ணிட்டு இருக்கிறதும் தெரிய வந்திருக்கு"

"அந்த யாரோ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா......?"

Rajesh Kumars Five Star Droham serial episode 51

" இல்லை.... ஆனா இப்போ இருக்கிற சிட்டிங் சி.எம். வஜ்ரவேல் மீதும் கவர்னரின் பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா மீதும் லேசா சந்தேகம் இருக்கு. அந்த சந்தேகத்துக்கான ஒரு ஆதாரத்தை காவல்துறையின் உளவுப்பிரிவு அதிகாரி ஞானசேகரன் கொடுத்திருக்கார்"

" என்ன ஆதாரம் ?"

" மும்பையில் இருந்து சென்னை வந்த தாதா இஷ்மி பர்மானுக்கும் கவர்னரோட பி.ஏ.வுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்து இருக்கு. ஈ.சி.ஆர் ரோட்டில் பிடிபட்ட இஷ்மி பர்மான் கிட்டே சோதனை நடத்தியதில் ஒரளவுக்கு விஷயங்கள் வெளியே வந்தது. இப்ப அவைகளின் பேரில் ஒரு மறைமுகமான விசாரணையும் நடந்துகிட்டு இருக்கு. போலீஸ் விசாரணையின்போது மிகவும் மோசமாய் அடிபட்டு உயிர்க்குப் போராடிகிட்டு இருந்த இஷ்மி பர்மானை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போக முயற்சி பண்ணினபோது யாரோ அவனை கடத்திகிட்டு போயிட்டதால மேற்கொண்டு அவன்கிட்டயிருந்து எந்த ஒரு விஷயத்தையும் வாங்க முடியலை. இஷ்மி பர்மான் உயிரோடு இருக்கக்கூடாதுங்கிறதுதான் கடத்திகிட்டு போனவங்களோட நோக்கமாய் இருந்திருக்கும்.....!"

கயல்விழி போலியாய் ஒரு பதட்டத்தை வரவழைத்துக் கொண்டபடி கண்களில் நீரோடு பேச ஆரம்பித்தாள்.

" ஸார்.....நீங்க சொல்ற விஷயங்களை வெச்சுப் பார்க்கும்போது இஷ்மி பர்மானை கடத்திகிட்டு போன மாதிரிதான் என்னோட அப்பாவையும், சாமுவேலையும் அந்த யாரோ கடத்திகிட்டு போயிருக்கணும் " என்று சொல்லிவிட்டு கயல்விழி பெரிதாக அழ ஆரம்பித்துவிட, அந்த அழுகையில் மலர்க்கொடியும் இணைந்து கொண்டாள்.

Rajesh Kumars Five Star Droham serial episode 51

" இதோ பாருங்கம்மா..... நான் போலீஸ் கமிஷனராய் இருந்தாலும் அப்பா கூட நான் நெருங்கிப் பழகியிருக்கேன். அவர் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் பண்ணி பணத்தை எங்கோ பதுக்கி வெச்சிருக்கார்ன்னு வெளியே ஒரு பேச்சு இருக்கு. அது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது. சென்னையில் இருக்கிற பண்ணை வீட்டில் ஐ.டி. ஆபீஸர்ஸூம், சி.பி.ஐ.ஆபீஸர்ஸூம் சோதனை போட்ட போது நானும் ஸ்பாட்ல இருந்தேன். அந்த வீட்டை அங்குலம் அங்குலமாய் அலசிப் பார்த்தும் பணம் கிடைக்கலை. அவர் அந்த பணத்தை எங்கே மறைச்சு வெச்சிருக்கார்ன்னு தெரிஞ்சுக்கத்தான் அவரை யாரோ கடத்தியிருக்கணும். ஒரு வேளை ட்ரைவர் சாமுவேல் கூட அவரைக் கடத்திகிட்டு போயிருக்கலாம். நீங்க கவலைப்படாதீங்கம்மா...... அப்பாவைக் கடத்திகிட்டு போனவங்க அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தையும் உண்டாக்கமாட்டாங்க. எப்படியும் அடுத்த

24 மண் நேரத்துக்குள்ளே அப்பாவை எப்படியும் கண்டு பிடிச்சுடலாம். நீங்க ரெண்டு பேரும் இனிமேல் ரொம்பவும் ஜாக்கிரதையாய் இருக்கணும். மணிமார்பன் உயிரோடு இல்லை. திரிசூலம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருந்த செந்தமிழும் நேற்றைக்கே இறந்துட்டார். உங்களுக்கும் அப்பாவுக்கும் செந்தமிழோட மரணம் அதிர்ச்சியாய் இருக்குமேன்னுதான் நேற்றைக்கு இன்ஃபாரம் பண்ணலை"

கமிஷனர் ஆதிமுலம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மலர்க்கொடி உடம்புக்கு ஒரு செயற்கை நடுக்கத்தைக் கொடுத்து மயக்கம் வருவது போல் பாவ்லா காட்டி கண்கள் சொருகி கயல்விழி மேல் சாய அவள் "அண்ணீ ! " என்று பெரிய அலறலோடு மலர்க்கொடியைத் தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.

சென்னை..

வாரம் ஒன்று கரைந்து போயிருக்க, பண்ணை வீட்டின் உள்ளறையில் உட்கார்ந்து அந்த முற்பகல் வேளையில் டீ குடித்தபடி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள் கயல்விழியும் மலர்க்கொடியும்.

செய்தி வாசிக்கும் அந்த நியூஸ் ரீடர் பெண் நேர் பார்வை பார்த்தபடி ஏற்ற இறக்கங்களோடு சொல்லிக்கொண்டு இருந்தாள்.

Rajesh Kumars Five Star Droham serial episode 51

" தன் சொந்த கிராமத்திற்கு ஒய்வு எடுக்கச்சென்று காணாமல் போன முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனைத் தேடும் பணி தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது. இதற்காக போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்தின் தலைமையில் சிறப்பு காவல் படையென்று 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. கார் ட்ரைவர் சாமுவேலே அவரைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இதற்கிடையில் முகில்வண்ணன் மகள் கயல்விழிக்கும் மருமகள் மலர்க்கொடிக்கும் சிறப்பு பந்தோபஸ்து அளிக்கப்பட்டு வீட்டைச் சுற்றிலும் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" .

டீயைக் குடித்தபடி நியூஸ் கேட்டுக் கொண்டிருந்த கயல்விழியும் மலர்க்கொடியும் புன்னகையோடு கூடிய பார்வைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள்.

அதே விநாடி -

அந்த டி.வியின் செய்திச் சேனல் வயிற்றைக் கலக்கும் பின்னணி இசையோடு அந்த பிரேக்கிங் நியூஸை ஒளிபரப்ப ஆரம்பித்தது.

Rajesh Kumars Five Star Droham serial episode 51

மலர்க்கொடியின் விழிகள் வியப்பில் நிலைத்தன.

" என்ன கயல் இது ..? "

உதடு பிரியாமல் கயல்விழி சிரித்தாள்.

" தெய்வம் நின்று கொல்கிறது அண்ணி "

" பழி ஒரிடம் பாவம் ஒரிடம் "

" அந்த வஜ்ரவேலுக்கு பரிதாபப்படாதீங்க அண்ணி. அந்த ஆளு உங்க மாமனாரைக் காட்டிலும் மோசமான ஆளு. எத்தனை பேரோட குடியைக் கெடுத்து இந்த சி.எம்.போஸ்ட்டுக்கு வந்திருக்கார்ன்னு தெரியுமா ? எல்லா அரசியல்வாதிகளும் சட்டத்தில் இருக்கிற ஒட்டைகளை உபயோகப்படுத்தி குற்றம் செஞ்சிருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிச்சுக்குவாங்க. ஆனா இந்த வஜ்ரவேல் சட்டத்தையே ஒட்டை போட்டுகிட்டு வெளியே வந்த ஆளு. செஞ்ச தப்புக்கெல்லாம் அவர்க்கு தண்டனை கிடைக்கலை. செய்யாத தப்புக்குத்தான் தண்டனை அனுபவிக்கப் போறார்...... "

"அந்த கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா இதுல வசமா மாட்டிகிட்டார் போலிருக்கு "

" அண்ணி அந்த ஆள் ஒரு கூட்டு களவாணி. யார் சி.எம்.போஸ்ட்டுக்கு வந்தாலும் சரி, மாட்டிக்காமே ஊழல் பண்றது எப்படின்னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவான். உங்க மாமனாரும் இந்த ஆளும் பழைய பார்டனர்ஸ். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஊழல் பணத்தை பங்கு போட்டுக்கிற விஷயத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு ரெண்டு பேரும் முகத்தைத் திருப்பிகிட்டவங்கதான், அதுக்கப்புறம் பேச்சு வார்த்தையே இல்லாமே போயிருச்சு. உங்க மாமனார் தன்னோட சஷ்டியப்த பூர்த்திக்குக்கூட அந்த ஷிவ்ராம் தத்தாத்ரேயாவைக் கூப்பிடலை "

" கயல் "

" என்ன அண்ணி ? "

" பேச்சுக்குப்பேச்சு உங்க மாமனார் உங்க மாமனார்ன்னு சொல்றியே..... என்ன இருந்தாலும் உனக்கு அவர் அப்பாதானே ? "

" அவர் தப்பானவர்ன்னு எனக்கு எந்த நிமிஷம் தெரிஞ்சதோ அந்த நிமிஷத்திலிருந்தே அவரை அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு அருவெறுப்பாயிருக்கு அண்ணி. இனிமேல் அவர் எப்பவுமே உங்க மாமனார்தான்" சொன்ன கயல்விழி டி.வி. ரிமோட் கண்ட்ரோலை எடுத்து பிரேக்கிங் நியூஸ் வால்யூமை அதிகப்படுத்தினாள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+