ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம்- அத்தியாயம் 9

Posted By:
Subscribe to Oneindia Tamil

முகில்வண்ணன் "வணக்கம்.... முத்துபாண்டியன்" என்று சொல்ல மறுமுனையில் அந்த முத்துபாண்டியன் சிரித்தார்.

"என்ன முகில்.... உன்னோட அறுபதுக்கு அறுபது சஷ்டியப்த பூர்த்தி அமர்க்களமாய் களை கட்டிடுச்சு போலிருக்கு,... சென்னையில் ஒரு சந்து பொந்து பாக்கி இல்லாமே எல்லா முச்சந்திலேயும் விதவிதமாய் போஸ் கொடுத்து சிரிச்சிட்டிருக்கே... எலக்‌ஷன் கூட பக்கத்துல இல்லை. எதுக்காக இப்படி பணத்தை வீணாய்....?"

"செலவு பண்றேன்னு கேட்கிறியா முத்துபாண்டி? காரணம் இல்லாமே நான் கரன்ஸியை வெளியே எடுப்பேனா ...? நான் ஒருத்தந்தான் ஊழல் பண்ணி பணத்தைச் சேர்த்தவன் மாதிரியும், மத்தவன் எல்லாம் உத்தமன் மாதிரியும் நம்ம கட்சியோட பெரிசு பொதுச் செயலாளர் எனக்கு மந்திரி பதவி கொடுக்காமே ஒதுக்கி வெச்சிருக்கார். அவர் ஒதுக்கி வெச்ச அன்னிக்கே நான் கட்சியை ரெண்டா உடைச்சு ஒரு புதிய கட்சி ஆரம்பிச்சிருப்பேன். அப்படி பண்ணியிருந்தா கட்சி ஆட்சி பண்ண முடியாம கவுந்து இருக்கும். ஆட்சியில நம்ம கட்சி இருந்தாத்தான் மத்திய அரசுக்கும் நம்ம கட்சி மேல ஒரு மரியாதை இருக்கும். நாம்பளும் நினைச்சதைச் சாதித்துக் கொள்ள முடியும்ன்னு நினைச்சு புதுக்கட்சி ஆரம்பிக்கிற முடிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு கட்சிக்கு விசுவாசமாய் இருந்தேன். இருந்தாலும் என்னோட தனிப்பட்ட பலம் எப்படியிருக்குன்னு நம்ம கட்சிக்கும், மத்தியில் இருக்கிற கட்சிக்கும் காட்ட வேண்டாமா என்ன...? அதுதான் இவ்வளவு தடபுடல்... அது சரி... முத்துபாண்டி நீ என்ன என்கூட போன்ல பேசிட்டு இருக்கே... ஃபங்க்‌ஷனுக்கு நீ வரலையா....?"

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 9

முகில்வண்ணன் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே மாப்பிள்ளை மணிமார்பன் தன் கையில் வைத்திருந்த செல்போனோடு அவரிடம் குனிந்தான்.

"மாமா... சி.எம். செங்குட்டுவன் இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாராம். நாம எல்லாரும் வாசலுக்குப் போய் நின்னு வரவேற்பு கொடுக்கலைன்னா நல்லாயிருக்காது.... புறப்படலாமா?"

"ஆமா....மாப்ள....! செங்குட்டுவன் ஒரு மாதிரியான ஆளு.... அந்தாளை குளிப்பாட்டிகிட்டே இருந்தாத்தான் நாம ஒரு வாய் நிம்மதியாய் சாப்பிட்டு எட்டுமணி நேரம் தூங்க முடியும்..." முகில்வண்ணன் சொல்லிக் கொண்டே எழுந்தார். தன்னிடம் இருந்த செல்போனை மகன் செந்தமிழிடம் கொடுத்துக் கொண்டே, "இந்த போன் லைன்ல முத்துப்பாண்டியன் இருக்கான். ரெண்டு வார்த்தை பேசிட்டு கட் பண்ணிடு," குரலைத் தாழ்த்திப்பேசியவர் செல்போனை நீட்டினார்.

செந்தமிழ் செல்போனை வாங்கி தன் காதுக்கு ஒற்றி "ஹலோ" என்றான்.

மறுமுனையில் மெளனம்.

"அப்பா ! முத்துபாண்டியன் போனை கட் பண்ணிட்டார் போலிருக்கு..."

"சரி.... சரி.... மறுபடியும் போன் வந்தா பேசு... இல்லேன்னா விடு...." முகில்வண்ணன் பட்டு வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு அறையினுன்றும் வெளிப்பட, கஜபதி நித்திலன், சாதுர்யாவோடு எதிர்பட்டார்.

"தலைவரே...! யார் வந்திருக்காங்கன்னு பார்த்தீங்களா?" இரண்டு பேரையும் காட்டிக் கொண்டே கேட்டார் கஜபதி.

முகில்வண்ணனின் பரந்த நெற்றி குழப்பமான வரிகளுக்கு உட்பட்டது.

"யாரு?"

"நம்ம முத்து பாண்டியனோட பையனும் அவரோட மருமகளும்..." வேகவேகமாய் நடந்து கொண்டிருந்த முகில்வண்ணன் பிரேக் அடித்த மாதிரி நின்றார்.

"என்ன சொன்னே...?"

கஜபதி திரும்பவும் சொன்னார். முகில் வண்ணன் நித்திலனிடம் ஒரு சிரிப்புடன் திரும்பினார். ' "தம்பி... இப்பத்தான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அப்பாகிட்டே பேசினேன். நீங்க வர்றதைப் பத்தி அவர் ஒண்ணுமே சொல்லலையே?"

நித்திலன் என்ன பதில் சொல்வது என்று திணறி கொண்டு இருக்கும்போதே செந்தமிழ் குறுக்கிட்டான்.

"அப்பா...! நீங்கதான் முத்துபாண்டியன் அங்கிள் கிட்டே போன்ல சரியா பேசலையே. சி.எம். வந்துட்டதால நீங்க புறப்பட்டீங்க. நான் அவர் கூட பேச முயற்சி செஞ்சேன். அதுக்குள்ளே லைன் கட்டாயிடுச்சு. பையனையும் மருமகளையும் அனுப்பி வெச்சிருக்கேன்னு சொல்றதுக்காகத்தான் போன் பண்ணியிருப்பார் அங்கிள்."

நித்திலனிடம் நிமிர்ந்தார் முகில்வண்ணன்.

"என்ன தம்பி அப்படியா....?"

"ஆமாம்" என்பது போல் வியர்வை மின்னும் முகத்தோடு தலையாட்டி வைத்தான் நித்திலன்.

"வாங்க தம்பி... போலாம்.... சி.எம். மை வரவேற்க போக வேண்டியிருந்தால அப்பா கிட்டே சரியா பேச முடியலை. உங்க பேர் என்ன தம்பி....?"

"நித்திலன்"

"பேர் புதுசா இருக்கே ...." சொன்னவர் அவன் தோளில் கை போட்டபடியே நடக்க ஆரம்பித்தார்.

"தம்பி... நானும் உங்க அப்பாவும் இருபது வருச காலமாய் ஒரேகட்சியில் இருந்தோம். ஒற்றுமையாய்தான் இருந்தோம். கட்சியோட மாவட்ட செயலாளர் போஸ்ட்டுக்கு ரெண்டு பேருமே போட்டி போட்டோம். அன்னிக்கு எங்களுக்குள்ளே ஏற்பட்ட பகைதான் இன்னமும் முழுசா கரையாமே அப்பப்ப எட்டிப் பார்க்குது. இனிமே அந்தப் பகையும் இருக்காது. ஏன்னா நீதான் அவர்க்கு பதிலா உன் ஒய்ஃப்போடு வந்துட்டியே....?"

என்று சொல்லிச் சிரித்தவர் சாதுர்யாவிடம் திரும்பினார். "ரெண்டு பேரும் மத்தியானம் வரைக்கும் இருந்து விருந்து சாப்பிட்டுத்தான் போகணும்... தலையைக் காட்டிட்டு போகிற வேலையெல்லாம் வேண்டாம்".

திடீரென்று வெளியே பேண்ட் வாத்திய சத்தம் கேட்டது. மணிமார்பன் அவசரப்படுத்தினான்.

"மாமா....சி.எம். வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வாங்க....!"

முகில்வண்ணன் உட்பட எல்லோரும் வேக வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட நித்திலனும் சாதுர்யாவும் சற்றே பின்தங்கி ஒதுங்கினார்கள். சாதுர்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினாள்.

"நித்தி...! உன்னோட திடீர் அப்பா முத்துபாண்டியன் முகில்வண்ணனுக்கு போன் பண்ணி பேசியிருக்கார் போலிருக்கு. பேசப் பேச சி.எம். வந்துட்டதால தொடர்ந்து பேச முடியாமே போயிருக்கு..."

"வாழ்க சி.எம்....!"

"சரி... இனிமே என்ன பண்ணப் போறோம்?"

"ரெண்டு பேரும் மத்தியானம் வரைக்கும் இருந்து விருந்து சாப்ட்டுப் போறோம்."

"நித்தி... கொஞ்சம் உன்னோட பார்வையை உயர்த்தி நம்ம ரெண்டு பேரோட தலைக்கு மேல என்ன தொங்கிட்டிருக்குன்னு பாரு..."

நித்திலன் தன்னுடைய விழிகளை உயர்த்திப் பார்த்துவிட்டு "ஒரு பெரிய லஸ்தர் லேம்ப்" என்றான்.

"என்னோட பார்வைக்கு என்ன தெரியுது தெரியுமா?"

"என்ன?"

'அரிவாள்'

"பயப்படறியா?"

"பயப்படாமே என்ன பண்றது... அதிர்ஷ்ட தேவதை ஒரு தடவை ரெண்டு தடவை காப்பாத்துவா... நம்ம பக்கத்திலேயே இருப்பான்னு நம்பிட்டு இருக்க முடியாது..."

"சி.எம். இப்போ ஃபங்க்‌ஷனுக்கு வந்துட்டதால இனிமேல் உன்னையும் என்னையும் யாரும் கவனிக்க மாட்டாங்க... நாம அபாயக்கட்டிடத்தைத் தாண்டிட்டோம்.. சாதுர்யா..."

"அப்படீன்னு நீ நினைச்சுட்டு இருக்கே. ஆனா நீயும் நானும் இன்னமும் அபாயக் கட்டத்துக்குள்ளேதான் இருக்கோம்..."

"எதை வெச்சு சொல்றே ?"

"அந்த முத்துபாண்டியன் ஒருவேளை இந்த பங்க்‌ஷனுக்கு புறப்பட்டு வந்துட்டார்ன்னா...."

"அப்படி வர்றவராய் இருந்தா இந்நேரம் வந்து இருப்பார். அந்த முத்துபாண்டியனை நீ மறந்துடு...!"

"டேய்... நித்தி... உனக்கு எமகாதக தைரியண்டா"

"எனக்கு பொன்னாடையைப் போர்த்தி ஒரு விழா எடுக்கிற வேலையெல்லாம் இப்ப வேண்டாம்.... வா... எதுக்காக வந்தோமோ அந்த வேலையைப் பார்ப்போம்... உன்னோட காதுக்குள்ளே ஃபிக்ஸ் பண்ணியிருக்கிற இன்விஸிபிள் ஹியரிங் எய்ட் பத்திரமாய் இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்க"

"பார்த்துகிட்டேன்....!"

"கூட்டத்துல யாரும் உன் மேல மோதாதபடி பார்த்துக்க வேண்டியது முக்கியம். ஏன்னா தோள்பட்டையில் யாராவது பலமாய் மோதிட்டா காதுக்குள்ளே இருக்கிற ஹியரிங் எய்ட் தெறிச்சு கீழே விழ வாய்ப்பு இருக்கு..."

"சரி இப்ப எங்கே போறோம்...?"

"சி.எம். உள்ளே வந்தாச்சுன்னு நினைக்கிறேன். இப்ப அந்த இடத்துக்குப் போறோம். வி.வி.ஐ.பிக்கள், முக்கிய அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இப்படி எல்லாரையும் கண்காணிக்கனும். முகில் வண்ணனோட கால்ல யார் யார் விழறாங்கன்னு லிஸ்ட் பண்ணி அந்த வீடுகளை மட்டும் ஒரு நாள் சோதனை போட்டா போதும் கோடிக்கணக்கான பணத்தை வெளியே கொண்டு வந்துடலாம்."

இருவரும் பேசிக் கொண்டே ஃபங்க்‌ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். ஒட்டு மொத்த கூட்டமும் முதலமைச்சர் செங்குட்டுவனை வரவேற்க முன் வாசலுக்கு போயிருந்ததால் நாற்காலிகள் காலியாய் தெரிந்தன.

பின்வரிசை நாற்காலிப் பகுதிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.

அதே விநாடி...

வெள்ளுடுப்பு யூனிஃபார்ம் அணிந்த ஒரு நபர் ட்ரேயில் காப்பி டம்ளர்களோடு அவர்களுக்கு முன்பாய் வந்து நின்றார்.

"ஸார் காப்பி?"

"வேண்டாம்..."

"மேடம் உங்களுக்கு ?"

"நோ தேங்க்ஸ்..."

"ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க... இந்த அதிகாலைவேளையில் காப்பி சாப்பிட்டால்தானே வந்த வேலையை சுறுசுறுப்பாய் பார்க்க முடியும்... உளவு வேலை பார்க்கிறது சாதாரணமான விஷயமா என்ன?"

- தொடரும்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 8th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற