For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க.. ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (24)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செந்தமிழ் அந்தப் பெண்ணின் வலது கையைப் பார்த்தான்.

அவளுடைய வலது கையின் மணிக்கட்டுப்பகுதியில் M.M.S என்ற ஆங்கில எழுத்துக்கள் பச்சைக் குத்தப்பட்டிருப்பது பளிச்சென்று தெரிந்தது.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் செந்தமிழை ஏறிட்டார்.

பொதுவாக உங்க மாப்பிள்ளை மணிமார்பனை கட்சித்தொண்டர்களும் சரி, அவருடைய நண்பர்களும் சரி, எம்.எம்ன்னுதானே கூப்பிடுவாங்க...... !"

"ஆமா ஸார்....... !"

rajesh kumar series five star dhrogam 24

"இந்தப் பெண்ணோட கையில் பச்சைக் குத்தப்பட்டு இருக்கிற முதல் இரண்டு எழுத்துக்களான M.M ஏன் மணிமார்பனின் பெயரைக் குறிக்கிற எழுத்துக்களாய் இருக்ககூடாது... ? அந்த 'S' என்ற எழுத்து அவளுடைய பெயரில் முதல் எழுத்தாகக்கூட இருக்கலாம்" கமிஷனர் சொல்ல செந்தமிழ் தலையாட்டினான். "இவ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டா போதும். மாப்பிள்ளையோட கொலைக்கு காரணமானவங்களை சுலபமாய் நெருங்கிடலாம்... !" என்னோட கணிப்பும் அதுதான். மொதல்ல நீங்க அப்பாவைப் பார்த்துக்குங்க. நான் இப்ப ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்" சொன்ன போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் மார்ச்சுவரி அறைக்கு வெளியே வந்து சற்றுத்தள்ளி மரத்துக்குக் கீழே நின்றிருந்த வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் அட்டென்ஷனுக்கு வந்து தளர்ந்தார்கள்.

"வேல்முருகன் "

"ஸார்........ "

"கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனிக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூலில்தான் ஓரு பெண்ணிடம் அந்த நீலகண்டன் ஸ்லிப்பரில் அடி வாங்கினான்னு அந்த தொழில்காரி லலிதா சொன்னா......? "

"ஆமா ஸார்....... !"

"இப்போ மணிமார்பனோடு சேர்ந்து புதைக்கப்பட்டு இருக்கிற பெண் ஓரு வேளை அந்தப் பெண்ணாய் இருக்கலாமோ......? "

"எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ஸார். அதனால்தான் அந்தப் பெண்ணோட பாடி மார்ச்சுவரிக்கு வந்ததும், அவ முகத்தை என்னோட செல்போன்ல போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலமாய் லலிதாவை கஸ்டடி பண்ணி வெச்சுருக்கிற தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் மாலதிக்கு அனுப்பினேன். லலிதாகிட்டே அந்தப் பெண்ணோட போட்டோவைக் காட்டி, நீலகண்டனை ஸ்கூல் வாசல்ல வெச்சு ஸ்லிப்பரில் அடிச்சது இந்தப் பொண்ணுதானான்னு கேட்கச் சொன்னேன். இன்ஸ்பெக்டர் மாலதியும் நான் அனுப்பிய வாட்ஸ்அப் போட்டோவை லலிதாகிட்டே காட்டி கேட்டிருக்காங்க. அவ போட்டோவைப் பார்த்துட்டு நான் பார்த்த பொண்ணு இவ இல்லைன்னு சொல்லியிருக்கா"

rajesh kumar series five star dhrogam 24

சில விநாடிகள் மெளனமாய் இருந்த ஆதிமுலம் பிறகு நிமிர்ந்தார்.

"வேல்முருகன் "

"ஸார் "

"கோடம்பாக்கம் ஏரியாவில் அந்த ஸ்கூல் எங்கே இருக்குன்னு ட்ரேஸ் பண்ணிட்டீங்களா......? "

"பண்ணிட்டேன் ஸார்"

"அந்தப் பொண்ணு யார்ன்னு கண்டுபிடிக்க நீங்க அந்த பலான லேடி லலிதாவைக் கூட்டிகிட்டு நாளைக்கு எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு போறீங்க......? "

"ஏழுமணிக்கு ஸார்....... "

"ஸ்கூலுக்கு வெளியே எதிர்ப்பக்கத்துல ஜீப்பை நிறுத்திகிட்டு அந்தப் பொண்ணை அப்ஸர்வ் பண்ணப் போறீங்களா? "

"இல்லை ஸார்"

" தென்..... வாட்ஸ் யுவர் இன்வெஸ்டிகேஷன் அப்ரோச்......? "

" அந்த ஸ்கூல் பிரின்ஸிபாலையே நேரிடையாக பார்த்து விபரத்தைச் சொல்லி விசாரிக்க வேண்டியதுதான் ஸார்"

"ஓ.கே. .......... விசாரணை ரகசியமாய் இருக்கட்டும்....... நீங்க போலீஸ் டிபார்ட்டுமெண்ட்ன்னு அந்த ஸ்கூல் பிரின்ஸிபாலுக்கு தெரிய வேண்டாம். தேவைப்பட்டா சொல்லுங்க"

"எஸ் ஸார் "

"அந்த பிரின்ஸிபாலோட பேர் என்ன ? "

"தெய்வநாயகி"

*****

மறுநாள் காலை ஏழரை மணி.

ஐம்பது வயதின் விளிம்பில் இருந்த பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகியின் அறையில் அவளுக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தார்கள் வேல்முருகனும், லலிதாவும். தெய்வநாயகி லலிதாவிடம் கேட்டாள்.

"அந்தப் பொண்ணை இந்த ஸ்கூல் வாசலில்தான் பார்த்தியா? "

"ஆமா மேடம் "

" அப்ப நேரம் எவ்வளவு இருக்கும் ? "

"நாலுமணியிலிருந்து நாலரை மணிக்குள்"

"எப்படியிருந்தான்னு மறுபடியும் ஓரு தடவை சொல்லு"

லலிதா சொன்னாள். " சிவப்பாய்...... அழகாய்..... சுருட்டை முடியோடு..... "

"மறுபடியும் அந்தப் பொண்ணைப் பார்த்தா உன்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா......? "

"முடியும் மேடம் ......!"

" நீ சொல்ற அடையாளங்களோடு எந்த ஓரு டீச்சரும் இங்கே வேலை பார்க்கல. இருந்தாலும் இது டீச்சர்ஸ் க்ரூப் போட்டோ. போன மாசம் ஆண்டு விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோ..... மொத்தம் 37 டீச்சர்ஸ். ஓவ்வொரு போட்டோவையும் நிதானமாய் பாரு... "

பிரின்ஸிபால் தெய்வநாயகி தன் மேஜையின் இழுப்பறையைத் திறந்து மவுண்ட் செய்யப்பட்டு இருந்த அந்தப் பெரிய போட்டோவை எடுத்து லலிதாவிடம் நீட்டினாள். லலிதா அதை வாங்கி பார்வையைப் பதித்தாள்.

மொத்தம் மூன்று வரிசைகளில் அந்த மூப்பத்தேழு ஆசிரியைகளும் பல்வேறு வயதுகளில் காமிராவைப் பார்த்து விதவிதமாய் புன்னகை செய்து இருந்தார்கள்.

லலிதா போட்டோவில் இருந்த முகங்களை உன்னிப்பாய்ப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தலையாட்டினாள். வேல்முருகனை ஏறிட்டபடி சொன்னாள் "நான் அன்னிக்குப் பார்த்த பெண் இந்தப் போட்டோவில் இல்லை ஸார்"

"எதுக்கும் இன்னொரு தடவை பார்த்துரு......சில பேர் நேர்ல பார்க்க ஓரு மாதிரியாகவும், போட்டோவில் ஓரு மாதிரியும் இருப்பாங்க"

"இல்ல ஸார்....... அந்தப் பொண்ணு போட்டோவில் இல்லை.... என்னால மறக்க முடியாத முகம்.... அது...... !"

தெய்வநாயகி குறுக்கிட்டாள்.

"ஸார்....... அந்தப் பொண்ணு யாராக இருக்கக்கூடும் என்பதை என்னாலே ஓரளவுக்கு கெஸ் பண்ண முடியுது!"

"சொல்லுங்க மேடம் ......!"

"இங்கே படிக்கிற ஸ்டூடண்ட்ஸில் யாராவது ஓருத்தரோட அம்மாவாகக்கூட அந்தப் பெண் இருக்கலாமில்லையா......? "

"மே...பி.... இன்னிக்கு சாயந்தரம் நாலுமணியிலிருந்து நாலரை மணி வரைக்கும் அந்த ஓரு கோணத்திலேயும் அந்தப் பெண் பார்வைக்கு தட்டுப்படறாளான்னு பார்த்துட வேண்டியதுதான். இந்த விஷயத்துல உங்களுடைய ஓத்துழைப்பு வேணும் மேடம் "

"ஷ்யூர் ....... நீங்களும் இந்தப் பெண்ணும் சரியாய் நாலுமணிக்கு என்னோட ரூமுக்கு வந்து இங்கே சி.சி.டி.வி. காமிரா யூனிட்டுக்கு முன்னாடி உட்கார்ந்துடுங்க...... ஸ்கூல் எண்ட்ரன்ஸ் கேட்ல நுழையறவங்க யாராக இருந்தாலும் காமிராவோட பார்வைக்கு சிக்காமே இருக்க முடியாது...... ஓரு வேளை அந்தப் பெண் இன்னிக்கு வரமுடியாமே போனாலும் நாளைக்கு வரலாம்!"

"ஓ.கே. மேடம்........ தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட் கோப்ரேஷன்..... இன்னிக்கு ஈவினிங் வர்றோம்"

"வெல்கம் "

தெய்வநாயகி எழுந்து நின்று கைகூப்பினாள்.

வேல்முருகனும், லலிதாவும் அந்த அறையைவிட்டு வெளியேறி காம்பெளண்டைத் தாண்டும் வரை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்த தெய்வநாயகி தன் செல்போனை எடுத்து உயிர்ப்புக்குக் கொண்டு வந்து ஓரு எண்ணைத் தேய்த்துவிட்டு பேசினாள்.

"மிருணாளினி.... ! இப்ப நீ எங்கே இருக்கே? "

"வீட்லதான் மேடம்! ஏன் என்ன விஷயம் மேடம் ? உங்க பேச்சுல ஓரு டென்ஷன் தெரியுது"

"டென்ஷன் படாமே என்ன பண்றது.... ? போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க...... "

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 24
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X