For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அமிர்தம் நீ என்ன சொல்ற...?" ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (20)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் அமிர்தம் சொன்னதைக் கேட்டு முகில்வண்ணன், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், செந்தமிழ் மூன்று பேரும் அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து நேர்கோடுகளாய் மாறினார்கள்.

கஜபதியும் திகைத்து மேற்கொண்டு பேச முடியாமல் திணற கமிஷனர் மேற்கொண்டு பேசுமாறு கண்ணால் சைகை காட்டினார்.

கஜபதி தோளில் போட்டிருந்த துண்டால் முக வியர்வையை ஓற்றியபடி பேச்சைத் தொடர்ந்தார்.

“அமிர்தம் ......நீ என்ன சொல்ற......? அந்த வேன் டிரைவர் நீலகண்டன் இப்போ உயிரோடு இல்லையா......? “

rajesh kumar series five star dhrogam 20

“ஆமா...... நான் இப்போ இந்த ராத்திரி நேரத்துல ராயப்பேட்டை ஜி.எச்சிலிருந்துதான் பேசிட்டிருக்கேன்“

“ஏன் ..... என்னாச்சு...... அவனுக்கு......? “

“ஓரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் ஓரு டாஸ்மார்க் கடை பாரில் இருந்து யாரோ ஓருத்தர் எனக்கு போன் பண்ணி உங்ககிட்ட வேன் டிரைவராய் வேலை பார்க்கிற நீலகண்டன் இங்கே குடிச்சுட்டு போதை தெளியாமே ரோட்டோரமாய் விழுந்து கிடக்கிறார். அவர்க்கு மனைவி குடும்பம்ன்னு எதுவும் இல்லாததினால உங்களுக்கு தகவல் தர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார்“

“பேசினது யாரு ......? “

“தெரியலை..... “

“எந்த நெம்பரிலிருந்து உனக்கு போன் வந்தது......? “

“நீலகண்டனோட செல் நெம்பரில் இருந்துதான்..... “

“அதாவது நீலகண்டனோட செல்போனையே எடுத்து உனக்கு

போன் பண்ணி தகவல் சொல்லியிருக்கான்“

”ஆமா...... ”

”சரி, அந்த நீலகண்டன் எப்படி செத்தான் ......? போதை அதிகமாய் இருந்ததுதான் காரணமா......? “

”இல்லை..... ”

”பின்னே..... ?”

”அவன் தலையோட பின்பக்கத்துல ஓரு பெரிய ரத்த காயம் இருந்தது. நீலகண்டனை மொதல்ல ஓரு பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனேன். அங்கிருந்த டாக்டர்ஸ் ரத்த காயத்தை பார்த்துட்டு ராயப்பேட்டை ஜி. ஹெச்சுக்கு கொண்டு போகச் சொல்லிட்டாங்க...... கொண்டு போனேன்”

”அந்த சமயத்துல நீலகண்டனோட உடம்புல உயிர் இருந்ததா......? “

ம்.... லேசா முனகிட்டு இருந்தான், அவன்கிட்ட பேச்சு கொடுத்து பார்த்தேன். எந்த பதிலும் இல்லை ...... ராயப்பேட்டை ஜி. ஹெச்ல டாக்டர்ஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கும்போதே உயிர் போய்விட்டது. பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணாமே கொடுக்க முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க...... பாடி இப்ப மார்ச்சுவரியில இருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல கஜபதி. நீலகண்டனுக்கு குடும்பம்ன்னு எதுவும் இல்லை. சிந்தாதிரிப்பேட்டை கூவம் கெனால் ரோட்ல ஓரு வீடு எடுத்து தங்கியிருக்கான். இப்ப நீ சொல்ற விஷயங்களை எல்லாம் கேட்டா என்னோட அடி வயிறு கலங்குது...... விவகாரம் பெரிசாயிருக்கும் போலிருக்கே.....! ”

“அமிர்தம் ......நீ பயப்படாதே..... இன்னும் ஓரு பத்து நிமிஷம் கழிச்சு உனக்கு போன் பண்றேன்... “ சொல்லி செல்போனின் இணைப்பை துண்டித்த கஜபதி முகில்வண்ணனை ஏறிட்டார்.

“அண்ணே நான் ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு போய் அமிர்தத்தை பார்க்கட்டுமா......? “

முகில்வண்ணன் இருண்டு போயிருந்த முகத்தோடு கமிஷனரிடம் திரும்பினார்.

“என்ன பண்ணலாம் ஆதிமுலம்......?”

“ ஸார்.... கஜபதி இப்போ ராயப்பேட்டை ஜி. ஹெச்சுக்கு போறதால எந்த ஓரு பிரயோஜனமும் இல்லை. உங்க மாப்பிள்ளை மணிமார்பனுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வேற ஓரு வழியில்தான் முயற்சி பண்ணனும் ....... “ சொன்ன கமிஷனர் ஆதிமுலம் செல்போனை எடுத்துக் கொண்டார். காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஓரு எண்ணைத் தொட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.

“க்ரைம் ப்ராஞ்ச்“

“எஸ்...... ஸார்“

“மிஸ்டர் வேல்முருகன் ......?”

“ஸ்பீக்கிங் ஸார்...... “

“வேல்முருகன் ........ திஸ் ஈஸ் வெரி இம்பார்ட்டண்ட் நீங்க உடனடியாய் ஓரு இன்வெஸ்டிகேஷன்ல இறங்கணும். நாளைக்குக் காலை சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால் எனக்கு ஓரு யூஸ்புல்லான ரிப்போர்ட் வேணும்.......! நான் சொல்றதை கவனமாய் கேளுங்க...... “

“எஸ்...... ஸார்“

******

அழைப்பு மணி கதறும் சத்தம் கேட்டு அப்போதுதான் ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் இருந்து திரும்பியிருந்த அமிர்தலிங்கம் போய்க் கதவைத் திறந்தார்.

வெளியே –

கஜபதியும், அவரோடு திடகாத்ரமான ஓரு இளைஞனும் நின்றிருப்பதை பார்த்துவிட்டு முகம் மாறினார்.

“என்ன கஜபதி ........ மறுபடியும் போன் பண்ணுவேன்னு நினைச்சேன்.... “

“அதான் நேர்லயே வந்துட்டேனே.....! இது பெரிய இடத்து விவகாரம். காணாமே போனது சாதாரண நபர் கிடையாது. முன்னாள் முதலமைச்சரோட மாப்பிள்ளை...... அதுதான் நேரம் காலம் பார்க்காம இன்வெஸ்டிகேஷன் போயிட்டிருக்கு.... இவர் க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி. பேரு வேல்முருகன் இவரோட விசாரணைக்கு நீ ஓத்துழைப்பு தரணும்.....! “

அமிர்தலிங்கம் அந்த இளைஞனைப் பார்த்து ஓரு கும்பிடு போட்டார். “வணக்கம் ஸார்“

வேல்முருகன் பதிலுக்கு “வணக்கம்“ சொல்லி கைகளை குவித்துவிட்டு அதிரடியாய் அந்த கேள்வியை கேட்டார்.

வேன் டிரைவர் நீலகண்டனோட பின்னந்தலையில் ஓரு ரத்த காயம் இருந்ததாய் சொல்லியிருக்கீங்க. அந்தக்காயம் எப்படி ஏற்பட்டதுன்னு டாக்டர்ஸ்கிட்டே கேட்டீங்களா......?”

“கேட்டேன் ஸார்“

“அவங்க பதிலுக்கு என்ன சொன்னாங்க......?”

“போஸ்ட்மார்ட்டம் பண்ணின பிறகுதான் அதைப்பத்தி சொல்ல முடியும்ன்னு சொல்லிட்டாங்க.....! ““

“நீலகண்டனுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததா......?”

“அப்படியெல்லாம் இருந்த மாதிரி தெரியலை ஸார்“

“முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை பற்றி நீலகண்டன் என்னிக்காவது உங்ககிட்ட பேசியது உண்டா......?”

“இல்லை ஸார்“

“சரி ..... அவன் வீடு சிந்தாதிரிப்பேட்டையில் எங்கே இருக்குன்னு தெரியுமா......?”

“தெரியும் ஸார்“

“வாங்க வந்து காட்டுங்க......“

“இப்பவேவா......?”

“ஆமா ........ இதுக்கெல்லாம் ராகு காலம் எமகண்டம் பார்த்துட்டு இருக்க முடியாது. புறப்படுங்க..... அவன் வீட்டின் பூட்டை உடைச்சு உள்ளே போய் பார்த்தாத்தான் ஏதாவது தடயம் கிடைக்கும்“

புறப்பட்டார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்து சென்னையின் போக்குவரத்தற்ற சாலையில் போலீஸ் ஜீப் புயல் காற்றைச் சீறி அரைமணி நேரம் பயணித்து சிந்திரிப்பேட்டையின் எல்லைக்குள் நுழைந்தது.

காற்றில் நிரந்தரமாய் உறைந்து போயிருந்த கூவத்தின் மணத்தோடு சாலையின் இரண்டு பக்கமும் குடிசைகள் விடாப்பிடியாய் வந்து கொண்டிருக்க அமிர்தலிங்கம் டிரைவருக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தார்.

“ இன்னும் நேரா போங்க. கூவம் கெனால் ரோடு வரும்... ரோட்டுக்கு முன்னாடியே முப்பாத்தாள் கோயில் வரும். அதுக்கு பக்கத்து சந்துல கடைசி வீடு. சந்துக்குள்ள ஜீப் போகாது. கோயிலுக்குச் சற்று தள்ளி நிறுத்திவிட்டு நடந்துதான் போகணும்.....! “

அவர் சொன்னபடியே ஜீப் பயணித்து கோயிலுக்கும் பக்கத்தில் போய் நின்றது. அமிர்தலிங்கம் முதல் ஆளாய் இறங்கி அந்த சந்துக்குள் நடந்தார். கஜபதியும், வேல்முருகனும் தொடர்ந்தார்கள்.

குப்பைத்தொட்டி அருகே படுத்து இருந்த நாய் ஓன்று எழுந்து நின்று குரைக்கலாமா வேண்டாமா என்று சில விநாடிகள் யோசித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டது.

ஓரு நிமிட நடை

அமிர்தலிங்கம் நின்றார்.

“இந்த வீடுதான் ஸார்“

வேல்முருகன் அந்த வீட்டை பார்த்தார். பழைய வீடு. சிதிலமான படிக்கட்டுகள்.

அரையிருட்டில் நிதானமாய் படிகளில் ஏறினார். வீடு பூட்டி இருப்பதற்கு அடையாளமாய் ஓரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த “மாஸ்டர் கீ பன்ச்“சை எடுத்துக்கொண்ட வேல்முருகன் அந்த பூட்டை திறப்பதற்கு தகுதியான ஓரு சாவியைத் தேடிக்கொண்டிருந்த போது –

அந்த சத்தம் கேட்டது.

வீட்டுக்குள் யாரோ நடக்கும் சத்தம். அதைத் தொடர்ந்து ஓரு நாற்காலி இழுபடும் சத்தம்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 20th episode of Rajeshkumars new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X