For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 7

By Shankar
Google Oneindia Tamil News

நித்திலனும் சாதுர்யாவும் முகில்வண்ணனின் பண்ணை வீட்டை நெருங்கிக் கொண்டு இருந்தார்கள். சாலையின் இரண்டு பக்கமும் பத்தடிக்கு ஒன்று வீதம் கட்டப்பட்ட ட்யூப்லைட்டுகள் ஃப்ளக்ஸ் பேனர்களோடு பிடிவாதமாய் வந்து கொண்டிருந்தன.

தெரு ஓரங்களில் வெளியூர் கட்சித் தொண்டர்கள் கொடி கட்டிய வேன்களில் க்வார்ட்டர்க்கும் கோழி பிரியாணிக்கும் விசுவாசமாய் கோஷங்கள் போட்டபடி காத்துக் கொண்டிருந்தார்கள்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 7

ஃப்ளக்ஸ் பேனர்கள் நிறம் நிறமாய் பொய் பேசின.

வாழும் சரித்திரமே!

எதிரிகளின் சிம்ம சொப்பனமே!

முக்கனிச் சாறே!

மூவேந்தர்களின் ஒட்டு மொத்த உருவே!

அரசியலின் அதிசயமே! நீ நினைத்தால் கங்கையும் இணையும்.

அந்த இமயமும் இரண்டாய் பிரியும்.

நித்திலன் காரை ஓட்டிக் கொண்டே சிரித்தான், "சாதுர்யா...! ஃப்ளக்ஸ் போர்டு வாசகங்களைப் படிச்சியா...?"

"ம்... படிச்சிட்டுத்தான் வர்றேன். ஒவ்வொரு போர்டையும் படிக்கும் போது ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் பார்த்த மாதிரி இருக்கு. எப்படி இவங்களால இப்படியெல்லாம் எழுத முடியும்..? ரெண்டு தடவை சி.எம்மாய் இருந்த முகில்வண்ணன் எப்படிப்பட்ட ஆளுன்னு எல்லார்க்கும் தெரியும். அவர்க்கு சொத்து எப்படி சேர்ந்ததுன்னும் தெரியும். இருந்தாலும் இந்த மாதிரியான ஆட்கள் ஏதோ ஒரு வகையில் ஜெயிச்சுட்டுத்தான் இருக்காங்க...!"

"காரணம் நம்ம மக்கள்தான்... நல்ல அரசியல்வாதிகளை இப்போதும் அவங்களால தேர்ந்து எடுக்க முடியும். ஆனா முடியாது. காரணம் ஒரு காலத்தில் வாக்குச் சீட்டு கூர்மையான ஒரு ஈட்டி மாதிரி இருந்தது. ஆனா, இப்போ அது ரூபாய் நோட்டால செஞ்ச ஏரோவாய் மாறிடுச்சு...!"

"நித்தி...! தமிழ்பட ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் பேசி நாம பார்க்க வந்த வேலையைக் கோட்டை விட்டுடாதே.... பண்ணை வீட்டை நெருங்கிட்டோம்.!"

நித்திலன் குனிந்து பார்த்தான்.

முகில்வண்ணனின் பண்ணை வீடு மின் விளக்குகளால் மொய்க்கப்பட்டு சொர்க்கபுரி போல் தெரிந்தது. இரண்டு அடுக்குகளில் வளையம் போட்டிருந்த போலீஸார், வந்து கொண்டிருந்த கட்சி பிரமுகர்களை தனிவழியில் அனுப்பிக் கொண்டு இருக்க மற்றவர்களை மெட்டல் டிடெக்டர் உடம்பு முழுவதும் முகர்ந்து பார்த்துவிட்டு உள்ளே அனுப்பியது.

"சாதுர்யா! உள்ளே போக கெடுபிடிகள் பலமாய் இருக்கும் போலிருக்கே...?"

"நம்மகிட்டதான் முறையான இன்விடேஷன், பேட்ஜும் இருக்கே...?"

"இருந்தாலும் இருதயம் உதறுது ... உன்னையும் என்னையும் ஐ.டி. பீப்பிள்ன்னு யாராவது ஸ்மெல் பண்ணிட்டா இன்னிக்குத்தான் நம்ம வாழ்க்கையோட கடைசி நாள்...."

"ஆஹா...! இப்படிப்பட்ட ஒரு த்ரில்லான நாளைத்தான் இத்தனை நாளாய் எதிர்பார்த்துட்டிருந்தேன்... நித்தி...!"

"சாதுர்யா! உனக்கு கொஞ்சம் கூட பயமாய் இல்லையா?"

"நீ இருக்கும் போது எனக்கு என்னடா பயம்...? உன்னோட பலம் என்னான்னு உனக்குத் தெரியாது. எனக்குத்தான் தெரியும்."

"அதானே பார்த்தேன்" சொல்லிக் கொண்டே நித்திலன் காரை பார்க்கிங்கில் நிறுத்தினான். இறங்க முயன்ற சாதுர்யாவைத் தடுத்தான்.

"ஒரு நிமிஷம் சாதுர்யா"

"என்ன?"

"அந்த டேஷ் போர்டை ஓப்பன் பண்ணு," அவன் சொல்ல சாதுர்யா முகம் நிறைய குழுப்பத்தோடு காரின் டேஷ்போர்டைத் திறந்தாள்.

"எதுக்கு?"

"உள்ளே என்ன இருக்குன்னு பாரு"

பார்த்தான்.

ஒரு சிறிய பாலிமர் பெட்டி தீப்பெட்டி சைஸில் தெரிந்தது. எடுத்து திறந்து பார்த்தாள். உள்ளே அவரை விதை வடிவத்தில் அந்த கறுப்பு நிற வில்லைகள் தெரிந்தது.

"நித்தி ... என்ன இது...?"

"இன்விஸிபிள் ஹியரிங் எய்ட்..."

"என்னது... ஹியரிங் எய்டா....?"

"ஆமா.... உனக்கு ஒண்ணு... எனக்கு ஒண்ணு"

"நமக்கென்ன காது செவிடா...?"

நித்திலன் புன்னகையொன்றை தன் உதடுகளால் பரவ விட்டான். சாதுர்யா எரிச்சலாகி முறைத்தாள்.

"நித்தி! அந்த மர்மயோகி புன்னகைக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது... இது எதுக்கு நமக்கு?"

"சாதுக்குட்டி! இது ஹியரிங் எய்ட் கிடையாதுடா"

"பின்னே"

"மினியேச்சர் சி.சி.டி.வி. காமிரா... இதை காதுக்குள்ளே ஃபிக்ஸ் பண்ணிகிட்டா டிவைஸ் மாதிரியே தெரியாது. நம்ம காதோட துவாரம் மாதிரிதான் தெரியும். இப்ப பாரு...," சொன்ன நித்திலன் அந்த அவரை விதை வடிவத்தில் இருந்த டிவைஸை எடுத்து வலது காதின் துவாரத்தில் பொருத்திக் கொண்டான். சாதுர்யாவுக்கு காதைக் காட்டினான்.

"ஏதாவது வித்தியாசமாய் தெரியுதா?"

"ஆஹா .... எங்கடா பிடிச்ச இதை...?"

"கோலாலம்பூரிலிருந்து என்னோட ஃப்ரண்ட் கிருஷ்ணா அனுப்பி வெச்சான்."

"நீ சொல்லவேயில்லை...!"

"இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் இதுமாதிரியான விஷயங்கள் வெளியே வரணும். இந்தா நீயும் எடுத்து ஃபிக்ஸ் பண்ணிக்கோ... மொதல்ல லேசா உறுத்துற மாதிரி இருக்கும். பிறகு சரியாயிடும்."

பிரமித்துப் போயிருந்த சாதுர்யா அந்த டிவைஸை எடுத்து வலது காதின் துவாரத்தில் வைக்க அது சரியாய் பொருந்திக் கொண்டது.

"நித்தி அற்புதம், எனக்கே அளவெடுத்து பண்ணின மாதிரி இருக்கு"

"இந்த விநாடியில் இருந்து அது ஒரு சி.சி.டி.வி. காமிரா மாதிரி ஒர்க் பண்ண ஆரம்பிச்சுடும். நம்ம செல்போன் காமிராக்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை....! என்ன சாது... தமிழ்பட ஹீரோயின் மாதிரி அப்படியொரு ரொமான்ஸ் லுக் விடறே... டூயட் பாடணும் போல் இருக்கா....!"

"நித்தி... நீ பார்க்கிறதுக்கு சுமாராய் இருந்தாலும் கூட உன்னை நான் ஏன் காதலிச்சேன் தெரியுமா... உன்கிட்டே இருக்கிற ஒரு விதமான புத்திசாலித்தனமான கெட்டிக்காரத்தனம்...."

"அது உன்கிட்ட இல்லேன்னு தெரிஞ்சுதான் நானும் உன்னைக் காதலிச்சேன். காரைவிட்டு இறங்கி ட்யூட்டியைப் பார்ப்போம்."

இருவரும் காரை விட்டு இறங்கினார்கள். ஆர்ப்பாட்டமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்த முகப்பு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வாயிலை நெருங்கும் முன்பாகவே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மறித்தார்.

"இன்விடேஷன் ப்ளீஸ்"

காட்டினார்கள். வாங்கி சரி பார்த்தவர் வாசலின் இரண்டாவது கேட்டை நோக்கி கைகாட்டினார்.

"அங்கே போய் வெரிஃபை பண்ணி சீல் போட்ட பின்னாடி நீங்க உள்ளே போகலாம்"

நித்திலனும் சாதுர்யாவும் வாசலின் இரண்டாவது கேட்டை நோக்கி நகர்ந்தார்கள். சாதுர்யா முனகினாள்.

"ஏர்போர்ட் இமிக்ரேஷன் ரேஞ்சுக்கு செக்கிங் இருக்கும் போலிருக்கே....நித்தி"

"மடியில் கனம். அதுதான் பயம்..."

இரண்டாவது கேட்டில் க்ரே நிற சபாரியில் தடித்தடியாய் நான்கு பேர் நின்றிருந்தார்கள். எஃக்கை உருக்கி வார்த்த மாதிரி உடம்பு வாகு.

மெளனமான இரண்டு நிமிஷ அழைப்பிதழ் பரிசோதனைக்குப் பிறகு முத்திரை குத்தப்பட்டது. மண்டபத்தில் மூன்றாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. இருவரும் நிம்மதி பெருமூச்சொன்றை சத்தம் இல்லாமல் வெளியேற்றியபடி மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒரு ஐம்பதடி நடந்து இருப்பார்கள்

நித்திலனின் இடது தோள்பட்டையின் மேல் ஒரு கை விழுந்தது. கழுத்து எலும்பு நொறுங்கிவிடும் அளவுக்கு கனம் தெரிந்தது.

மூச்சுத் திணறிப் போய் திரும்பினான் நித்திலன்.

அந்த நடுத்தர வயது நபர் ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்தில் நின்றிருந்தார். அரசியல்வாதிகளின் யூனிஃபார்மான வெள்ளை சர்ட் வெள்ளை வேஷ்டியில் தெரிந்தார். முகத்தின் முப்பது சதவீத பரப்பை மீசைக்கு குத்தகைக்கு எடுத்திருக்க, நேற்றிரவு குடித்த சீமைச்சாராயம் சிவப்பேறிய கண்களில் தெரிந்தது. ஒரு பூசணிக்காயைத் திருடி வயிற்றுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டவர் போல் தொந்தியை வளர்த்து வைத்திருந்தார்.

அவருடைய கை இன்னமும் நித்திலனின் இடது தோள்பட்டையை அசுரத்தனமாய் பிடித்திருக்க, ஒரு கோணல் சிரிப்போடு சொன்னார்.

"நீ எல்லாரையும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. இந்த கஜபதியை யார்ன்னு நினைச்சே!"

கல்லோடு கல் உரசிய தினுசில் அவர் பேச நித்திலன் உறைந்தான். காதில் பொருத்தியிருந்த ஹியரில் எய்ட் அவர் உலுக்கிய உலுக்கலில் கழன்று விழுந்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 7th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X