Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...".. பைவ் ஸ்டார் துரோகம் (49)

Subscribe to Oneindia Tamil

- ராஜேஷ்குமார்

முகில்வண்ணனும், சாமுவேலும் வெளிறிப்போன முகங்களோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலர்க்கொடி பேச்சை ஆரம்பித்தாள்.

" மாமா....! உங்க மாப்பிள்ளையோட மரணத்திற்கும், மகனோட மரணத்திற்கும் காரணம் நீங்களாகத்தான் இருக்க முடியும் என்கிற உண்மையை நானும் கயல்விழியும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டோம். எப்படி கண்டுபிடிச்சோம்ன்னு நீங்க கேட்கலாம். அது ரொம்பவும் சுலபம் மாமா.... உங்க மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்ட மாதிரி ஒரு ஆக்டிங் கொடுத்தீங்க...... ஃபேமிலி டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தார். டாக்டர் ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு வெளியே வந்து வேற ஒரு டாக்டருக்கு போன் பண்ணி பேசும்போது எக்ஸ் சி.எம்க்கு வந்தது ஹார்ட் அட்டாக் மாதிரி தெரியலை. மாப்பிள்ளை இறந்த அதிர்ச்சியின் காரணமாய் தசை இறுக்கம் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்திருக்கலாம்ன்னு சொன்னார். டாக்டர் அப்படி சொல்லும்போது கூட எனக்கும் கயல்விழிக்கும் சந்தேகம் வரலை... ஆனா ராத்திரி ஒரு மணிக்கு மேல் ட்ரைவர் சாமுவேல் உங்க அறைக்கு வர்றதும் ரொம்ப நேரம் அந்த அறையில் தங்கியிருந்து உங்ககூட பேசறதும் எங்களுக்கு பெரிய நெருடலாய் இருந்தது. ஒரு சாதாரண கார் ட்ரைவருக்கும் உங்களுக்கும் எது மாதிரியான தொடர்பு இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு உங்க ரெண்டு பேரோட நடவடிக்கைகளையும் கவனிக்க ஆரம்பிச்சோம். ஒரு மைக்ரோ "ரிஸீவர் பக்" கைப் பொருத்தி உங்களுக்குள்ளே எது மாதிரியான பேச்சு வார்த்தை போய்கிட்டு இருக்குங்கிறதை தெரிய வந்தபோது நானும் கயல்விழியும் அதிர்ந்து போயிட்டோம். பணத்துக்கு முன்னாடி உங்களுக்கு உயிர்கள் முக்கியமில்லை என்கிற உண்மையையும் புரிஞ்சுகிட்டோம் "

Rajesh Kumars Five Star Droham serial episode 49

மலர்க்கொடி சற்றே பேச்சை நிறுத்த கயல்விழி அதே கோபத்தோடும் சீற்றத்தோடும் தொடர்ந்தாள்.

" எங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு என்கிற உண்மை உங்களுக்கு தெரிஞ்சா நாங்களும் உயிரோடு இருக்க மாட்டோம் என்கிற பயம் எங்களுக்கு இருந்ததால நானும் அண்ணியும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்காமே மெளனமாய் இருந்தோம். உங்களோட நடவடிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி எங்களை மாத்திகிட்டோம்..... ! "

கயல்விழி பேசிக்கொண்டு இருக்கும்போதே முகில்வண்ணன் முகத்தில் இருந்த அதிர்ச்சியும் பயமும் சிறிது சிறிதாய் கரைந்து காணாமல் போய் அவருடைய உதடுகளில் கேலிப்புன்னகையொன்று உதித்தது.

" சாமுவேல் "

" அய்யா "

" என்னோட மகளும், மருமகளும் இப்படி திடீர்ன்னு எனக்கு எதிராய் திரும்புவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை...... நீ எதிர்பார்த்தியா..?"

" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...... "

" இப்ப இவங்க ரெண்டு பேர்க்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு. என்ன பண்ணலாம் சொல்லு..... ! "

" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைங்கய்யா "

முகில்வண்ணன் இப்போது வாய்விட்டு சிரித்தார். "'பெண்புத்தி பின்புத்தி'ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.... அந்த பழமொழி என்னோட மகளுக்கும், மருமகளுக்கும் சரியா பொருந்துது சாமுவேல்..... நான் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவன்னு தெரிஞ்சிருந்தும் இந்த சமாதி நிலவறைக்குள்ளே வந்த பிறகு தன்னோட சுயரூபத்தை காட்டி மணிமார்பன் மாதிரி செந்தமிழ் மாதிரி உயிரைவிடத் தயாராயிட்டாங்க.... ரெண்டு பேரையும் இங்கேயே முடிச்சுட்டு வெளியே கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணிட வேண்டியதுதான்.... வேலையை ஆரம்பி..... ! "

" அ...அ....அய்யா........" சாமுவேல் குரலை இழுக்க முகில்வண்ணன் வியப்போடு அவனைப் பார்த்தார்.

" என்ன சாமுவேல் .... தயங்கிட்டு இருக்கே.... ? அந்தப் பெட்டிக்குப் பின்னாடி மறைச்சு வெச்சிருக்கிற அந்த அரிவாளை எடுத்துக்க.....ஏற்கனவே ரெண்டு விஷப் பாம்புகளை போட்டுத் தள்ளின மாதிரி இவங்களையும் போட்டுத்தள்ளு இவங்க ரெண்டு பேரையும் உயிரோடு விடக்கூடாது "

" சரிங்கய்யா...... நீங்க சொல்லி நான் எதை செய்யாமே விட்டிருக்கேன்" என்று சொன்ன சாமுவேல் இரண்டடி பின்னால் நகர்ந்து போய் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த அந்த பளபளப்பான அரிவாளை எடுத்துக் கொண்டான்.

மலர்க்கொடி சற்றும் பதட்டம் இல்லாமல் அசையாமல் நின்றிருக்க கயல்விழி முகில்வண்ணனை ஏறிட்டாள்.

" அப்பா..... ஒரு நிமிஷம்..... ! 'பெண்புத்தி பின்புத்தி'ன்னு இப்ப ஒரு பழமொழி சொன்னீங்க. ஆனா அதனோட அர்த்தத்தை தப்பா சொல்லிட்டீங்க..... அந்த பழமொழியோட உண்மையான அர்த்தம் இதுதான். 'பின்னால் வரப்போகிற ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுபவள்தான் பெண்' அதனால்தான் சென்னையிலிருந்து வரும்போது இந்த பிஸ்டலை எடுத்துட்டு வந்தேன் "

சொன்ன கயல்விழி விநாடிக்கும் குறைவான நேரத்தில் தன் இடுப்பின் சேலை மறைவுக்கு கையைக்கொண்டு போய் அங்கே பதுங்கியிருந்த அந்தச்சிறிய துப்பாக்கியை எடுத்தாள்.

அந்த விநாடியே சாமுவேலின் மார்பை குறி பார்த்து சுட்டாள். சின்னதாய் புகை கக்கிக்கொண்டு சீறிப்பாய்ந்த தோட்டா சாமுவேலின் இடதுபுற மார்பில் பாய்ந்து ஒரு ரத்தக்குழியைப் பறிக்க அவனுடைய விழிகள் திகைத்து உடம்பு ஸ்தம்பித்து பிறகு வந்த சில விநாடிகளில் முன்பக்கமாய் இரண்டாய் மடங்கி விழுந்தான்.

Rajesh Kumars Five Star Droham serial episode 49

முகில்வண்ணன் அதிர்ந்து போனவராய் சாமுவேலின் அருகே ஒடிப்போய் சற்றுத்தள்ளி விழுந்திருந்த அரிவாளை எடுக்க முயல கயல்விழி குரலை உயர்த்தினாள்.

" அப்பா..... ! அடுத்த தோட்டா உங்க மார்பில் பாயாமல் இருக்கணும்ன்னா இப்ப நீங்க நின்னுட்டிருக்கிற இடத்தைவிட்டு ஒரடி கூட எடுத்து வைக்கக்கூடாது. மீறி எடுத்து வெச்சா பெத்த அப்பான்னு கூட பார்க்காமே சுட்டுத் தள்ளுவேன். ஏன்னா நான் உங்க பொண்ணு. உங்களுக்கு எப்படி ஈவு இரக்கம் இல்லையோ அதே மாதிரிதான் எனக்கும் இல்லை...... "

முகில்வண்ணன் வெளிறிப்போன முகத்தில் பெருகி வழியும் வியர்வையுடன் அப்படியே நின்று கயல்விழியை பயத்தோடு பார்க்க, மலர்க்கொடி வறண்ட சிரிப்போடு இரண்டடி முன்னால் வந்தாள்.

" என்ன மாமா அப்படி பார்க்கறீங்க...... ? ஊழல் பணம் 500 கோடி ரூபாயை காப்பாத்தறதுக்காக பெத்த மகனையும் மாப்பிள்ளையையும் சாமுவேல் மூலமாய் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட போது உங்க இதயத்தை கழட்டி வெச்ச மாதிரி நாங்களும் இப்போ எங்க இருதயங்களை கழட்டி வீட்ல வெச்சுட்டு வந்திருக்கோம். போன நிமிஷம் உயிரோடு இருந்த சாமுவேல் இந்த நிமிஷம் உயிரோடு இல்லை. இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிற நீங்க எந்த நிமிஷம் வேணும்ன்னாலும் உயிரைவிட வேண்டியிருக்கும் ........ ! "

மலர்க்கொடி பேச பேச முகில்வண்ணன் நடுங்கும் உடம்புடன் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்து இரண்டு கைகளையும் கூப்பினார்.

" என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கம்மா, என் மகன் செந்தமிழும் மாப்பிள்ளையும் இந்த 500 கோடி பணத்துக்காக என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டாங்க. என்னோட உயிரைக் காப்பாத்திக்கத்தான் நான் அவங்களை சாமுவேல் மூலமாய் முடிச்சேன் "

"உங்களைத் தீர்த்துக்கட்ட அவங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டது உங்களுக்கு எப்படி தெரியும் ..... ? "

"அது.... வந்து..... வந்து...... "

"சொல்லுங்க மாமா ..... எப்படி தெரியும் ..... ? "

"செந்தமிழோடும் மாப்பிள்ளையோடும் நெருங்கிப்பழகற ஃப்ரண்ட்ஸ்களில் ஒருத்தன் சொன்னான்மா "

" அவன் ஏன் பொய் சொல்லியிருக்ககூடாது ..... ? "

" அவன் அப்படி பொய் சொல்லக்கூடியவன் அல்ல "

" சரி அவன் அப்படியே உண்மை சொன்னதாகவே வெச்சுக்குவோம். உங்க உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக, மகனையும் மாப்பிள்ளையையும் கொலை செய்யாமே ரெண்டு பேரையும் கூப்பிட்டுப் பேசி சுமுகமாய் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்து இருக்கலாம் இல்லையா ..... ? "

"அது.... வந்து..... வந்து...... "

"அந்த சமயத்துல மகன் மாப்பிள்ளை உயிரைக் காட்டிலும் உங்களுக்கு 500 கோடி பெரிசாபட்டிருக்கு ..... ? "

முகில்வண்ணன் முகத்தில் வியர்வை பெருகி வழிந்தது. " நான் பண்ணினது தப்புதாம்மா "

" அது தப்புன்னு தோண உங்களுக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டிருக்கு மாமா! மலர்க்கொடி கிண்டலாக சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முகில்வண்ணனின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

கயல்விழி கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி முகில்வண்ணனை குறி பார்த்துக்கொண்டே சொன்னாள்.

" அப்பா.... போன்ல யாருன்னு பாருங்க" அவர் நடுங்கும் விரல்களோடு செல்போனை எடுத்து பார்த்துவிட்டு சொன்னார்.

கமிஷனர் ஆபீஸிலிருந்து சார்லஸ் என்கிற கான்ஸ்டபிள் கூப்பிட்டுகிட்டு இருக்கார்

" ஒ..... அந்த இன்ஃபார்மர் கான்ஸ்டபிளா ..... ? "

"ஆமா.... "

" சரி...... ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க. எதைப் பேசணுமோ அதைப்பத்தி மட்டும்தான் பேசணும்..... "

முகில்வண்ணன் செல்போன் எண்ணைத் தேய்த்துவிட்டு மெல்ல குரல் கொடுத்தார்.

" ஹலோ "

" ஸார்.... நான் சார்லஸ் "

" ம்..... சொல்லு.... "

" என்ன ஸார்.... குரல் ஒரு மாதிரி இருக்கு. உடம்பு சரியில்லையா ..... ? "

" நல்லாத்தான் இருக்கேன்..... விஷயம் என்னான்னு சொல்லு.... "

" ஸார் .....நான் எவ்வளவே உன்னிப்பாய் கண்காணிச்சும் ஒரு விஷயத்துல ஏமாந்துட்டேன் "

" என்ன சொல்லு ? "

" தமிழ்நாடு இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த அருள், நித்திலன், சாதுர்யா இந்த மூணு பேரும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளோடு இன்னும் ரெண்டு நாள்ல செந்தட்டி கிராமத்துக்கு வந்து உங்ககிட்டே ஒரு விரிவான விசாரணையை நடத்த இருக்கிறதாய் சொன்னேன் ஸார். ஆனா இப்போ அவங்க பிளானை மாத்திட்டாங்க ஸார்... நேத்து மிட்நைட் அந்த மூணு பேரும் கார்ல புறப்பட்டு உங்க கிராமத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. என்னோட கணக்குப்படி இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே உங்க கிராமத்துல அவங்க இருப்பாங்க. நீங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருந்துக்குங்க ஸார்..... "

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+