For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம்- அத்தியாயம் 6

By Shankar
Google Oneindia Tamil News

அந்த இருவரும் காரை நோக்கிப் போக நித்திலனும், சாதுர்யாவும் ஒருவரை ஒருவர் பதட்டப் பார்வைகளால் நனைத்துக் கொண்டார்கள்.

அவர்களை நோக்கி நடந்தபடி சாதுர்யா குரல் கொடுத்தாள்.

"கார்ல யாரும் இல்லை..."

"பார்த்துடலாம்...." சொல்லிக் கொண்டே ஒருவன் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். பின்னால் நின்றிருந்தவன் கேட்டான்.

"என்ன ?"

"உள்ளே யாரும் இல்லை..."

"கார் லேசாய் அசைஞ்ச மாதிரி இருந்ததே?"

"ஆமா... நானும் நோட் பண்ணினேன்"

"டிக்கியை ஓப்பப் பண்ணச் சொல்லு."

"அவங்களை என்ன கேட்கிறது.... நானே ஓப்பன் பண்றேன்" சொன்னவன் ட்ரைவிங் சீட்டுக்கு அடியில் இருந்த டிக்கியின் லாக்கரை விடுவித்தான்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 6

டிக்கி உயர்த்தப்பட்டது.

உள்ளே டூல் செட்டும், ஸ்டெப்னி டயரும் தட்டுப்பட ஆத்திரத்தோடு சாத்தினான். நித்திலன் சாதுர்யா இரண்டு பேரும் பரஸ்பரம் கண்களால் பேசிக் கொண்டார்கள்.

"அந்தப் பொண்ணு கார்லதானே இருந்தா?"

"ஆமா"

"காணோம்"

"எப்படின்னு தெரியலையே?"

பைக் பேர்வழிகளில் ஒருவன் நித்திலனுக்குப் பக்கத்தில் வந்தான்.

"அய்யாவோட பொறந்தநாளுக்குப் போறதாய் சொன்னீங்க இல்லையா?"

"ஆமா...."

"அழைப்பிதழ் இருக்கா?"

"ம்... இருக்கு"

"காட்டுங்க"

நித்திலன் டாஷ்போர்டைத் திறந்து அழைப்பிதழை எடுத்துக் காட்டினான். அவன் பார்த்துவிட்டு கேட்டான்.

"அய்யாவுக்கு நீங்க சொந்தமா?"

"ஆமா..... ஆனா கொஞ்சம் தூரத்து சொந்தம்"

"உங்க பேரு....?"

"நித்திலன்"

"கார்ல என்ன ப்ராப்ளம்?"

"ட்ரான்ஸ்ஃபார்ம்ல ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. சரி பண்ணிட்டேன். நாங்க புறப்படலாமா.... இல்லை ... இன்னமும் என்கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் பாக்கியிருக்கா?"

"நீங்க போகலாம்...."

அவர்கள் சொல்லிவிட்டு பைக்குகளில் ஏறி கிளம்பி போய்விட காரின் பானட்டைச் சாத்தினான் நித்திலன். சாதுர்யா அவனுடைய தோளைத் தொட்டாள்.

"நித்தி! ஆச்சர்யமில்லை?"

"எது... அந்தப் பொண்ணு ரேகா கார்ல இல்லாததைத்தானே சொல்றே?"

"ஆமா... அவ கார்ல இல்லைன்னு எனக்கு முன்னாடியே தெரியும்"

"என்னது தெரியுமா..... எப்படி...?"

"நான் பார்த்தேன்"

"பார்த்தியா.... எதை....?"

"அந்த ரேகா நம்ம காரோட அடுத்தப் பக்க டோரை சத்தம் வராதபடி திறந்துகிட்டு முட்டி போட்டு தவழ்ந்துகிட்டே போய் அதோ அந்த வீராணம் ஏரி காலத்து காலியான சிமெண்ட் குழாய்க்குள்ள செட்டில் ஆயிட்டதை...!"

சாதுர்யா பிரமிப்போடு பார்த்தாள்.

"அந்த குழாயா?"

"ஆமா...." நித்திலன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரேகா அந்த வீராணம் குழாயிலிருந்து மெல்லத் தலையை நீட்டினாள். சாதுர்யா அவளை நோக்கிப் போய் கை கொடுத்து தூக்கி விட்டாள். ரேகா மூச்சு வாங்கிக் கொண்டே கேட்டாள்.

"அவங்க போயிட்டாங்களா?"

"போயிட்டாங்க..... வா.... இப்படி வந்து மறைவாய் உட்காரு.... இனிமே அவங்க வரமாட்டாங்க...!"

"உங்க உதவிக்கு ரொம்பவும் நன்றி.... உங்க காரை மட்டும் நான் பார்க்காமே இருந்திருந்தா அவங்ககிட்டே நான் மாட்டி இந்நேரம் உயிரை விட்டிருப்பேன்"

"அவங்க ஏன் உன்னைத் துரத்தணும்?"

"அது... வந்து...." என்றவள் பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உதடுகளை ஈர்ப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

"ஸ்கை வ்யூ' டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?"

"பெசன்ட் நகர்ல இருக்கே.... அதுதானே?"

"ஆமா.... அங்கதான் நான் ஸ்பை ஏஜெண்டாய் ஒர்க் பண்றேன். நேத்திக்கு எதிர்கட்சி பிரமுகர் ஒருத்தர் ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார். அந்த அசைமெண்ட்படி எக்ஸ் சிஎம் முகில்வண்ணனின் அறுபதாவது பிறந்த தின விழா நிகழ்வுகளை வீடியோவாய் எடுத்துத் தர வேண்டிய பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. நானும் என்னோட கம்பெனி கலீக் அகிலன் என்கிற ஒருத்தரும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாய் எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் பண்ணை வீட்டுக்குப் பக்கத்தில் போனோம். அழைப்பிதழ் இல்லாமல் யாரும் உள்ளே போகமுடியாதுன்னு தெரிஞ்சதும் பண்ணை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற சவுக்குத் தோப்பு வழியாய் நான் மட்டும் உள்ளே போக முடிவு பண்ணினேன். அகிலன் என்னை சவுக்குத் தோப்புக்குள்ளே இறக்கிவிட்டு பைக்ல போயிட்டார். இதை முகில்வண்ணனோட ஆட்கள் நாலு பேர் பார்த்துட்டாங்க. ரெண்டு பேர் என்னையும் ரெண்டு பேர் அகிலனையும் துரத்த ஆரம்பிச்சாங்க..... நான் காலேஜ் டேஸ்ல கோல்ட் மெடல் வாங்கின அத்தலடிக். மூணு கிலோமீட்டர் என்னைத் துரத்திட்டு வந்தாங்க. என்னோட வேகத்துக்கு அவங்களால ஈடு கொடுக்க முடியலை. அகிலன் அந்த பைக் பேர்வழிகள்கிட்டேயிருந்து எப்படியோ தப்பிச்சுட்டார்ன்னு நினைக்கிறேன். உங்க கார் மட்டும் என்னோட பார்வையில் படாமே இருந்திருந்தா என்னால தப்பிச்சிருக்க முடியாது...."

சாதுர்யா ரேகாவிடம் கேட்டான்.

"சரி.... உன்னோட அடுத்த மூவ் என்ன...?"

"எதிர்கட்சி பிரமுகர் கொடுத்த இந்த அசைன்மெண்டை கண்டினியூ பண்ணினால் நான் வெட்டுப்பட்டுத்தான் சாகணும். நூற்றுக்கும் மேற்பட்ட முகில்வண்ணனோட ஆட்கள் முதுகில அரிவாளை சொருகிகிட்டு திரிஞ்சுட்டு இருக்காங்க... கையில் அழைப்பிதழ் இருந்தாலும் ஒரு நபரை அவங்க சந்தேகப்பட்டுட்டா கேள்விகளால துளைச்சு எடுத்துடறாங்க. இனிமே அந்த இடத்துக்கு நான் போக முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ரோட்ல பஸ் போக்குவரத்து ஆரம்பமாயிடும். ஏதாவது ஒரு பஸ்ஸைப் பிடிச்சு நான் சென்னை போயிடுவேன்.'

"உன் கூட வந்த அந்த அகிலனுக்கு போன் பண்ணி வரச்சொல்லு"

"நான் போன் பண்ணி பேசிட்டேன். ஆனா அவர் வரமாட்டார். டிடெக்டிவ் ஏஜென்ஸி ரூல்ஸ்படி ஒரு ஆபத்தான இடத்துல ரெண்டு பேர் மாட்டிகிட்டா ஒருத்தராவது தப்பிச்சடணும். மாட்டிகிட்ட நபரை காப்பாற்ற தப்பிச்ச நபர் அந்த இடத்துக்கு போகக் கூடாது. மாட்டிகிட்ட நபர் அவரோட சொந்த புத்திசாலித்தனத்தால தப்பிச்சு வரணும்....!"

"டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இப்படியொரு ரூல் இருக்கா ?"

"இது மாதிரியான ரிஸ்கி ரூல்ஸ் நிறைய இருக்கு,.... ஆனா ரிஸ்க் எடுத்து ஒரு அசைன்மெண்டை முடிச்சுக் கொடுத்தா லட்சக்கணக்கில் ஃபீஸ் கிடைக்கும். அதிலும் பார்ட்டி அரசியல்வாதியாய் இருந்துட்டா ஒரு கோடி ரூபாயைக் கூட ஒருநாள் வருமானமாய் பார்த்துடலாம்!"

நித்திலனும் சாதுர்யாவும் ரேகாவை பிரம்மிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் பரபரத்தாள்.

"அதோ! ஒரு பஸ் வருது... நான் கிளம்பறேன். நீங்க பண்ணின உதவிக்கு என்னோட நன்றி."

இருவரும் திரும்பி பார்த்தார்கள். 'பாண்டிச்சேரி டூ சென்னை' பெயர்பலகை எலக்ட்ரானிக் புள்ளிகளில் மின்ன அந்த ஸ்டேட் பஸ் வேகமாய் வந்து கொண்டிருந்தது.

ரேகா ஓடிப் போய் சாலையின் குறுக்கே நின்று கையைக் காட்ட பஸ் நின்றது. ஏறிக்கொண்டு ஜன்னல் வழியே கையசைத்தாள்.

பஸ் புறப்பட்டு தங்கள் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒரு சின்ன கலக்கத்தோடு காருக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

"நித்தி"

"ம்"

"என்ன பண்ணலாம்?"

"முகில்வண்ணனோட பண்ணை வீட்ல கெடுபிடிகள் நிறைய இருக்கும் போலிருக்கே...!"

"சென்னைக்கு போயிடலாம்ன்னு சொல்றியா?"

"இன்னொரு தடவை அப்படி சொல்லாதே. முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குள்ளே நாம நுழையறோம். எந்த ஒரு வேலையை முடிக்க வந்தோமோ அதை முடிக்கிறோம்."

"நுழையறது முக்கியமில்லை. ஒரு நூலிலை பிசகினாலும் நம்ம ரெண்டு பேரையும் நாலு துண்டாக்கி சவுக்கு மரத் தோப்புக்குள்ளே ஆழமாய் குழி தோண்டி புதைச்சுடுவாங்க....!ட

"அப்படீன்னா நீ ஒரு காரியம் பண்ணு"

"என்ன...?"

"அந்த ரேகா பஸ்ஸைப் பிடிச்சு சென்னைக்கு போன மாதிரி நீயும் போயிடு...."

நித்திலனின் பின்னத்தலையைத் தட்டினாள் சாதுர்யா.

"எனக்கு பயம்ன்னு உன்கிட்டே சொன்னேனா?"

"பின்னே நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்?"

"இதோ பார் நித்தி.... முகில்வண்ணன் மாதிரியான ஒரு மோசமான அரசியல்வாதியை இந்த தமிழ்நாடு என்னைக்குமே பார்த்தது இல்லை. அவரோட மகன் செந்தமிழும் சரி, மருமகன் மணிமார்பனும் சரி பஞ்சமாபாதகங்களுக்கு அஞ்சாத ஆட்கள். சென்னையில் இருக்கிற பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படை அமைப்புகளை ஒண்ணாய் சேர்த்து ஒரு யூனியனை ஸ்டார்ட் பண்ணி அந்த யூனியனுக்குத் தலைவராய் இருக்கிற ஒரு எக்ஸ் சி.எம்மை நம்ம நாட்ல மட்டும்தான் பார்க்க முடியும்."

"நீ இப்ப என்ன சொல்ல வர்றே சாதுர்யா?"

"அந்த ரேகா என்ன சொன்னாளோ அதைத்தான் நான் சொல்லப்போறேன். முகில்வண்ணனோட பண்ணை வீட்ல நாம மாட்டிக்கிற மாதிரியான ஒரு நிலைமை ஏற்பட்டா நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தப்பிச்சுடணும். அது நீயாக இருந்தாலும் சரி. என்னைக் காப்பாத்த நீயோ, உன்னைக் காப்பாத்த நானோ முயற்சி எடுக்கக் கூடாது."

"சா.... து...ர்...யா"

"என்ன?"

"இப்ப எனக்கு கொஞ்சம் பயம் வருது...!"

"அந்தக் கொஞ்ச பயம் நமக்கு அவசியம்... நித்தி! நீ காரை எடு...!"

கார் நகர்ந்தது.

சிறிது சிறிதாய் வேகம் பிடித்து முகில்வண்ணனின் பண்ணை வீட்டை நோக்கிப் பறந்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 6th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X