For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எ...எ..ன்ன ஸார்....சொல்றீங்க... பைவ் ஸ்டார் துரோகம் (35)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

அருள் சொன்னதைக் கேட்டு ஒரு சில விநாடிகள் மெளனமாய் இருந்த வேல்முருகன் பிறகு அந்த கேள்வியைக் கேட்டார்.

"கஜபதி அப்படி சொல்லி போனைக் கட் பண்ணினதும் நீங்க மறுபடியும் அவரோட செல்போன் நெம்பரை காண்டாக்ட் செய்யலையா...? "

"உடனே காண்டாக்ட் பண்ணினேன். ஆனா போன் "ஸ்விட்ச் ஆஃப்" ஆகியிருந்தது....... கஜபதியோட தற்கொலை முடிவை தடுத்து நிறுத்தறதுக்காக அதே நிமிஷம் கார்ல புறப்பட்டு அவரோட வீட்டுக்கு வந்தேன். வீட்டோட வாசல் திறந்திருந்தது.காரை வெளி வாசலில் நிறுத்திட்டு உள்ளே போனேன். முன்பக்க அறைகள் ரெண்டும் இருட்டில் இருக்க பக்கவாட்டு அறையில் மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மனசைத் திடப்படுத்திகிட்டு உள்ளே போய் பார்த்தேன். கஜபதி தூக்கில் தொங்கிட்டு இருந்தார். எனக்கு என்ன செய்யறதுன்னு தோணல. உடனடியாய் நித்திலனுக்கு போன் பண்ணி தகவல் கொடுத்தேன்...... "

வேல்முருகன் மேற்கொண்டு பேசும் முன்பு அவர்க்குப் பின்பக்கம் "ஸார்" என்ற குரல் கேட்டு திரும்பினார்.

rajesh kumar series five star dhrogam

இன்ஸ்பெக்டர் பிரசன்னா நின்றிருந்தார்.

"என்ன...? "

"கஜபதியோட பாடியை இறக்கிட்டோம் ஸார். அவர் உடம்புல ஒரு சின்ன காயம் கூட இல்லை ஸார்...... அவரோட சட்டை பாக்கெட்டில் இந்த போட்டோ மட்டும் இருந்தது ஸார்" சொன்ன இன்ஸ்பெக்டர் அந்த போட்டோவை வேல்முருகனிடம் நீட்ட அவர் வாங்கிப் பார்த்தார்.

போட்டோவில் கஜபதி நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவர்க்குப் பின்னால் ஒரு இளம்பெண் கையில் குழந்தையோடும், அவள் அருகே இளைஞன் ஒருவனும் சிரித்துபடி நின்றிருந்தார்கள்.

"யார் இது ...? "

"ஸார்..... இது கஜபதியோட பொண்ணு சுமதி. இவர் சுமதியோட கணவர் சம்பத். குழந்தை விஜேஷ்......." என்று சொன்ன இன்ஸ்பெக்டர் தயக்கத்தோடு சொன்னார்.

"போட்டோவோட பின்பக்கம் பார்த்துருங்க ஸார்"

வேல்முருகன் போட்டோவை திரும்பிப் பார்க்க ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட இரண்டு வரிகள் பார்வைக்குத் தட்டுப்பட்டன.

தோள்களைக் குலுக்கி உஷ்ணமாய் பெருமூச்சுவிட்ட வேல்முருகன் பிரசன்னாவை ஏறிட்டார்.

"சுமதிக்கு தகவல் கொடுத்தீங்களா ...? "

"நாங்க இங்கே வந்து ஃபார்மாலீடீஸைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சுமதி வந்துட்டாங்க ஸார்"

"சுமதிக்கு எப்படி விஷயம் தெரிந்தது...? "

"கஜபதி அருள் ஸாருக்கு போன் பண்ணி பேசின மாதிரியே சுமதிக்கும் போன் பண்ணி தன்னோட வாழ்க்கையை முடிச்சுக்கப் போறதாய் சொல்லியிருக்கார். தாம்பரத்துல குடியிருக்கிற சுமதி பதறியடிச்சுகிட்டு குழந்தையும், கையுமாய் டாக்ஸி பிடிச்சு வந்துட்டாங்க"

" இப்ப சுமதி எங்கே...? "

"தூக்கில தொங்கிட்டு இருக்கிற அப்பாவோட உடம்பைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மயக்கமாயிட்டாங்க... இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சு எழுந்து உட்கார்ந்து சகஜ நிலைமைக்கு திரும்பியிருக்காங்க..... " பக்கத்தில் இருந்த ஒரு அறையைக் காட்டி கொண்டே பிரசன்னா செல்ல வேல்முருகன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

கட்டிலில் குழந்தை தூங்கிக்கொண்டிருக்க பக்கத்தில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த சுமதி அழுகையோடு எழுந்தாள். அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட வேல்முருகன் நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

"இதோ பாரம்மா...... சிலமணிநேரத்துக்கு முன்னாடி உன்னோட அப்பா பெசண்ட் பீச்சுல எங்க கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும்போது உற்சாகமான மனநிலைமையில்தான் இருந்தார். தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் அவரோட மனசுக்குள்ளே இருந்திருந்தா பீச்சுக்கே வந்திருக்க மாட்டார்........ என்னோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவில் அவர் தற்கொலை பண்ணிக்க வாய்ப்பே இல்லை..... நீ என்னம்மா நினைக்கிறே...? "

rajesh kumar series five star dhrogam

சுமதி அழுகைக்கு அணை போட முயன்று குரல் தழுதழுத்தாள்.

"அப்பா தற்கொலை பண்ணிக்க வாய்ப்பு இருக்கு ஸார்"

"எப்படி சொல்றே...? "

"ரெண்டு வாரத்துக்கு முன்னால் அப்பா என்னைப்பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். எப்பவுமே அவர் உற்சாகமாய் இருப்பார். ஆனா அன்னிக்கு அவரைப்பார்க்கும்போது சோர்வாய் தெரிஞ்சார். ஏம்பா உடம்பு சரியில்லையான்னு கேட்டேன். அதுக்கு அவர் உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கம்மா..... மனசுதான் சரியில்லைன்னு சொன்னார். தொடர்ந்து அவர் பேசும்போது இந்த அசிங்கம் பிடிச்ச அரசியல் வாழ்க்கை அலுத்துப் போச்சும்மா..... பொய் பேசாமே நாட்களை நகர்த்த முடியலைன்னு சொன்னார்.

நான் அதுக்கு உங்களுக்கு அரசியல் பிடிக்கலைன்னா வெளியே வந்துடுங்கப்பான்னு சொன்னேன். அதுக்கு அவர்......... "சுமதி மேற்கொண்டு பேச முடியாமல் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டாள். வேல்முருகன் கேட்டார்.

"அப்பா என்ன சொன்னாரம்மா ...? "

சுமதி அழுகையை மென்று விழுங்கிவிட்டு சொன்னாள். "அரசியலை விட்டு நான் வெளியே வரணும்ன்னா செத்துதாம்மா போகணும். அதுவும் ஒரு நாளைக்கு நடக்கும்ன்னு சொல்லிட்டு கண் கலங்கினார். நானும், என்னோட கணவரும் அவர்க்கு ஆறுதல் சொன்னோம்"

"இப்ப..... உங்க ஹஸ்பெண்ட் வரலையா...? "

"வரலை.....மும்பையில் இருக்கிற ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலைக்கு இருக்கார். அப்பாவைப்பற்றிய தகவலை அவர்க்கு கொடுத்துட்டேன். அடுத்த ஃப்ளைட்ல புறப்பட்டு வர்றேன்னு சொல்லிட்டார்"

"அவர் பேர் என்ன...? "

"ஜானகிராமன்"

"அவர் மும்பையில் இருக்கார். நீங்க இங்கே இருக்கீங்க..... காரணம் என்னான்னு சொல்ல முடியுமா...? "

"மும்பையில் இருக்கிற ஒரு ஐ.டி.கம்பெனியில் அவர் ஒரு நல்ல போஸ்டில் இருக்கார். ரிசைன் பண்ண விருப்பமில்லை. பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை சென்னை வந்துட்டு போவார்" அந்த சுமதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேல்முருகன் செல்போன் "திடுக்" கென்று விழித்துக் கொண்டு கூப்பிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம். வேல்முருகன் அறைக்கு வெளியே போய் பேசினார்.

"ஸார்..... நானே உங்களை காண்டாக்ட் பண்ணி ஒரு விஷயத்தைப்பத்தி சொல்லலாம்ன்னு இருந்தேன்"

"அது என்ன விஷயம்ன்னு எனக்குத் தெரியும். கஜபதியோட தற்கொலை விவகாரம்தானே...? "

"ஆமா... ஸார்.. "

"டெப்டி கமிஷனர் நீயூட்டன் இப்பத்தான் எனக்கு சொன்னார். நீங்க ஸ்பாட்லதான் இருக்கீங்களா...? "

"ஆமா ஸார். இன்வெஸ்டிகேஷன் போய்கிட்டு இருக்கு........ ! "

"கஜபதியோட தற்கொலைக்கான காரணத்தை கெஸ் பண்ணிட்டீங்களா?"

"ஸாரி ஸார் "

"எதுக்கு ஸாரி ...? "

"கஜபதி தற்கொலை பண்ணிக்கலை ஸார். ஹி ஈஸ் மர்டர்ட்........ ! "

"எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க ...? "

"மணிமார்பன்....... கொலையா ...... தற்கொலையா ஸார் ...? "

"கொலை.... அதுல என்ன சந்தேகம்...? "

"மணிமார்பனை கொலை செய்ததாய் சொல்லப்படுகிற நபரான நீலகண்டன் கொலையா ...... தற்கொலையா ஸார் ...? "

"அதுவும் கொலைதான்"

"அதேபோல் செந்தமிழையும் யாரோ கொலை பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. அவர் இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கார் இல்லையா ஸார் ...? "

"எஸ்..... "

"கஜபதி இவர்களோடு சம்பந்தப்பட்ட ஒரு நபர். அந்த ஒரு காரணத்தை வெச்சு பார்க்கும்போது கஜபதி ஏன் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடாது...? "

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.... பை...த...பை.... இப்ப நான் உங்களுக்கு போன் பண்ணினது எதுக்காகத் தெரியுமா...? "

"சொல்லுங்க ஸார்.... "

"மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனையும் சேர்த்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்துக்கட்ட ஒரு திரைமறைவு வேலை நடந்துட்டிருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அந்த உண்மையும் வெளியே வந்தது"

"என்ன ஸார் சொல்றீங்க...? "

"உண்மை சொல்லிட்டிருக்கேன்.....பக்கத்துல யாராவது இருக்காங்களா..? "

"இல்ல ஸார்...... "

"சரி..... ஷிவ்ராம் தத்தாத்ரேயா என்கிற பெயரை கேள்விப்பட்டு இருக்கீங்களா..? "

"கேள்விப்பட்டிருக்கேன் "

"யார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்"

"நம்ம தமிழ்நாட்டோட கவர்னர் சுக்தேவ் பட்டேலுக்கு பி.ஏ.வாய் இருக்கார். கவர்னர் கலந்துக்கிற எல்லா ஃபங்கஷனிலும் இருப்பார். பார்த்து இருக்கேன்..... அவர்க்கு என்ன ஸார்..? "

"அந்த ஷிவ்ராம் தத்தாத்ரேயாதான் முகில்வண்ணனோட ஒட்டு மொத்த ஃபேமிலியையும், அவர்க்கு வேண்டப்பட்ட நெருங்கிய நண்பர்களையும் தவணை முறையில் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு காய்களை நகர்த்திட்டிருக்கார்"

வேல்முருகன் அதிர்ந்தார்.

"எ...எ..ன்ன ஸார்....சொல்றீங்க... ஒரு கவர்னரோட பி.ஏ. இப்படியெல்லாம் ஒரு க்ரிமினல் மாதிரி........ ""எப்படி செயல்பட முடியும்ன்னு கேட்கறீங்களா.....? எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனா நம்முடைய காவல்துறையின் உளவுப்பிரிவுத் தலைவர் ஞானசேகரன் கொடுத்த அதிகாரப்பூர்வமான "இன் காமிரா"தகவல் இது....."

"தகவல் ஓ.கே ஸார்.......ஆனா சாட்சியம் வேணுமே...? "

"சாட்சியம் கிடைச்சிருக்கு வேல்முருகன்"

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 35
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X