Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேஷ்குமாரின் பரபர அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 3

Subscribe to Oneindia Tamil

முகில் வண்ணனின் முகம் கோப ரத்தத்தில் மாப்பிள்ளை மணிமார்பனையும் மகனையும் செந்தமிழையும் மாறி மாறிப் பார்த்தது.

"செந்தமிழ்! நீ என்ன சொல்றே.... ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்கிற பேர்ல நம்ம பண்ணை வீட்ல ஐ.டி, ரெய்டு நடத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கா?"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 3

"ஆமாப்பா..."

"உனக்குத் தகவல் கொடுத்தது யாரு?"

"மினிஸ்டரி ஆஃப் ஃபைனான்சில் இருந்து நமக்கு வேண்டிய தயான் வர்மா...."

"இது உறுதியான தகவல்தானா?"

"தயான் வர்மா சொன்னால் அது சரியாய்த்தான் இருக்கும். இதுக்கு முன்னாடி அவர் கொடுத்த எல்லாத் தகவல்களுமே சரியாய் இருந்திருக்கப்பா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் இதே பங்களாவுக்கு ஐ.டி. ரெய்டுக்கு வரப்போவதை முன்கூட்டியே சொன்னவர் தயான் வர்மா. அவர் அப்படி தகவல் கொடுத்ததினால்தான் நாம் பதுக்கி வெச்சிருந்த 100 கோடி ரூபாயையும் 50 கிலோ தங்கத்தையும் உடனடியாய் இந்த இடத்திலிருந்து நங்கநல்லூரில் இருக்கிற நம்ம ஃபேமிலி ஃப்ரண்ட் தேவேந்திரன் வீட்டுக்கு கடத்தி அதைக் காப்பாற்றினோம்'.

மாப்பிள்ளை மணிமார்பன் குறுக்கிட்டான்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 3

"ஆமா மாமா.... தயான் வர்மா நமக்கு விசுவாசமானவர். இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸ் நூறு சதவீதம் உறுதியான செய்தியாய்தான் இருக்கும்."

"சரி.... இப்ப என்ன பண்ணலாம்....?"

"மாமா.... நாளைக்கு உங்களுக்கு அறுபதுக்கு அறுபது சஷ்டியப்த பூர்த்தி. இந்த நேரத்துல நாம எந்த ஒரு டென்ஷனையும் காட்ட வேண்டாம், இப்போ தமிழ்நாட்ல நம்ம கட்சிதான் ஆட்சியில் இருக்கு. நீங்க பார்த்து ஓகே சொன்ன வஜ்ரவேலுதான் இங்கே முதலமைச்சர்.... சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருக்கிற காபினட் மந்திரிகளில் பாதி பேர் நமக்கு விசுவாசமாய் இருக்காங்க. இப்படி எல்லாமே நமக்கு சாதகமாய் இருக்கும் போது நாம ஏன் பயப்படணும்...?"

"நான் பயப்படலை மாப்பிள்ளை...," என்று சொன்னவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

"இந்த பண்ணை வீட்டுக்குள்ளேதான் நம்ம சம்பாதிப்புல முக்கால் பங்கு இருக்கு... இதை யார் எப்படி ஸ்மெல் பண்ணினாங்கன்னு தெரியலையே...."

"மாமா.... யார் ஸ்மெல் பண்ணினாலும் சரி நாம மறைச்சு வெச்சிருக்கிற இடத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட அவங்களால எடுக்க முடியாது."

"அது எனக்கும் தெரியும் மாப்ளே.... ஆனா இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத ஆப்ரேஷன் ஆக்டோபஸ்....? நாம சொன்னபடி யார்க்காவது பணத்தை செட்டில் பண்ணாமே விட்டுட்டோமா....?"

இப்போது செந்தமிழ் குறுக்கிட்டான்,

"அப்பா.... நாம ஒழுங்கா மூச்சு விடறோமோ இல்லையோ தெரியாது. ஆனா மாசா மாசம் யார் யார்க்கு பணம் போய்ச் சேரணுமோ.... அவங்களுக்கு ஒழுங்கா பணம் போயிடுது. அதுல எந்த ஒரு தப்பும் நடக்க வாய்ப்பு இல்லை...!"

"பின்னே எப்படி...?"

"தெரியலை..."

"நீ என்ன வஜ்ரவேலுக்கு ஒரு போன் போட்டு குடு, பேசிப் பார்க்கலாம்...!"

செந்தமிழ் தன் செல்போனை எடுத்து முதலமைச்சர் வஜ்ரவேலுவின் 'ஹாட் லைன்' இணைப்புக்குத் தொடர்பு கொண்டான். மறுமுனையில் முதலமைச்சர் பேசினார்.

"என்ன தம்பி.... காலங்காத்தால போன்?"

"அப்பா பேசணுமாம்"

"குடு... குடு..."

செந்தமிழ் செல்போனை முகில்வண்ணனிடம் தர அவர் வாங்கி வலது காதுக்கு ஏற்றினார்.

"வஜ்ரம்"

"வணக்கம் ... தலைவரே.... சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு...!"

"ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்திவரை எல்லாமே நல்லபடியாய் போயிட்டிருந்தது வஜ்ரம். இப்ப ஒரு பிரச்சனை எட்டிப் பார்த்ததால சந்தோஷமே தடம் புரண்டிருச்சு வஜ்ரம்".

"என்ன சொல்றீங்க தலைவரே....?"

முகில்வண்ணன் விஷயத்தை சுருக்கமாய் சொன்னார். முதலமைச்சர் வஜ்ரவேல் மறுமுனையில் ஆச்சர்யப்பட்டார்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 3

"என்னது ஆபரேஷன் ஆக்டோபஸ்ஸா?"

"ஆமா...."

"எனக்கு இதுவரைக்கும் ஒரு தகவல் கூட இல்லை தலைவரே. அப்படி ஏதாவது இருந்திருந்தா உளவுத்துறை மூலமாய் விஷயம் என்னோட காதுக்கு வந்து இருக்குமே....!"

"வஜ்ரம் ....! உளவுத்துறை இப்போ நமக்கு விசுவாசமாய் இல்லை. நான் சி.எம்.மாய் இருந்த காலத்திலேயே அவங்க நிறைய பொய் பேசினாங்க. போன தடவை நடந்த எலெக்‌ஷன்ல 25 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல நான் ஜெயிப்பேன்னு சொல்லி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாய் ரிப்போர்ட் கொடுத்தாங்க. ஆனா நான் 50 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல தோத்தேன். நீ தோப்பேன்னு சொன்னாங்க. ஜெயிச்சே!'

"ஆனா தலைவரே... நம்ம கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்ன்னு சரியாய் சொன்னாங்களே?"

"இதோ பார் வஜ்ரம்.... கட்சி மேலிடம் என்மேல் கொஞ்சம் அதிருப்தியாய் இருக்கிறதால் சி.எம்.மாய் நீ வர்றதுக்கு நான் பச்சை கொடி காட்டினேன்... டெல்லி மந்திரிகள் யார் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் நான் நல்லபடியாய் கவனிச்சு அனுப்பிச்சேன். அதுக்கு அவங்க காட்ற நன்றி இதுதானா?"

"நான் இப்ப என்ன பண்ணட்டும் தலைவரே?"

"உடனே டெல்லிக்கு போன் போடு. மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸின் சீஃப் ஆபீஸர் கிட்டே பேசு. ஆப்ரேஷன் ஆக்டோபஸ் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது."

"அவ்வளவுதானே....! இப்ப பேசிட்டு அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே உங்க லைனுக்கு வர்றேன்!"

"வா.... வெயிட் பண்ணிட்டிருக்கேன்' சொன்ன முகில்வண்ணன் கையில் இருந்த செல்போனை மகனை நோக்கி வீசிவிட்டு சுவரோரமாய் போட்டிருந்த சோபாவில் போய் சாய்ந்து கொண்டார். ஏ.ஸி. அந்த அறையை ஊட்டியாய் மாற்றியிருந்தாலும், முகமும் வழுக்கையும் வியர்வையில் மின்னியது. உதடுகளில் பத்து விநாடிகளுக்கு ஒரு முறை ஒரு கெட்ட வார்த்தை உற்பத்தியாகி வெளியே கோபத்தோடு வந்து விழுந்து காற்றை அசுத்தப்படுத்தியது.

சரியாய் பத்து நிமிஷம்.

செந்தமிழன் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

"அப்பா... வஜ்ரவேல்தான்!"

செந்தமிழ் நீட்டிய போனை வாங்கி கோபம் தணியாமல் பேசினார்.

"சொல்லு வஜ்ரம்"

"தலைவரே... மினிஸ்டர் கிட்டேயே பேசிட்டேன்"

"என்ன சொன்னார்?"

"அது வந்து...."

"வார்த்தைகளை முழுங்காமே பேசு வஜ்ரம்"

"மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸுக்கு சீஃப் ஆபீஸராய் இப்போ 'சதுர்புஜன்'ன்னு ஒருத்தர் வந்து இருக்காராம். அவரோட தாத்தா சுதந்திர போராட்ட கால வீரராம். போனவாரம்தான் ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணியிருக்கார், அன்னிக்கே CLOSED FILES செக்‌ஷனுக்குப் போய் ரேண்டமாய் ஒரு ஃபைலை எடுத்துப் பார்த்து இருக்கிறார். அப்படி அவரோட கைக்கு சிக்கின ஃபைல் உங்களோடதாம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க சி.எம்.மாய் இருந்தபோது காவல்துறைக்கு வாங்கிய அதி நவீன சாதனங்களில் பெரிய முறைகேடு நடந்ததை சரிவர விசாரிக்காமல் சி.பி.ஐ. க்ளோஸ் பண்ணின ஃபைல் அது. நிதானமாய் படிச்சுப் பார்த்துட்டு மறுபடியும் ஃபைலை ஓப்பன் பண்ணனும்ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு முன்னாடி உங்களுக்கு சொந்தமான வீடுகளில் ஒரு ரெய்டு பண்ணனும்ன்னு முடிவு எடுத்து அதுக்கு 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ன்னு பேர் கொடுத்து இருக்கார்."

"ஃபைனான்ஸ் மினிஸ்டர் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலையா?"

"இல்லையாம் தலைவரே"

"ஏன்....?'

"அந்த சீஃப் ஆபீஸர் சதுர்புஜன் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கி காட்டறதாய் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து டெல்லி மக்களுக்கு மத்தியில் செல்வாக்கோடு இருக்காராம். அப்படிப்பட்ட ஒரு நபர்கிட்ட போய் உங்க ஃபைலை விசாரிக்க வேண்டாம்ன்னு சொன்னால் மினிஸ்டரையே அவர் சந்தேகப்படுவாராம்.... அதனால...."

"எனக்குப் புரியுது.... நீ எதையும் விளக்கி சொல்ல வேண்டாம் வஜ்ரம்.... நீ உன்னோட வேலையைப் பாரு. ஐ.டி. காரங்க அவங்க வேலையை பார்க்கட்டும். நான் இனிமேல் என்ன வேலையை பார்க்கணுமோ அந்த வேலையை பார்க்கிறேன்."

கோபமாய்க் கத்தி செல்போனை அணைத்தார். பெருமூச்சு ஒன்றை நெருப்பாய் வெளியேற்றிவிட்டு செந்தமிழையும், மணிமார்பனையும் சைகையால் பக்கத்தில் அழைத்தார்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 3

இருவரும் நெருங்கினார்கள். முகில்வண்ணன் அடிக்குரலில் பேசினார். நாளைக்கு பண்ணை வீட்டில் ஃபங்க்‌ஷன் நடக்கும் போது உங்க ரெண்டு பேர்க்கும் என்ன வேலை தெரியுமா....? அந்த கூட்டத்துல சந்தேகப்படற மாதிரி யார் இருந்தாலும் அவங்க உயிரோட வெளியே போகக் கூடாது!"

-------------------------

அடுத்த நாள் காலை அதிகாலை வேளை 4.30 மணி. ஹெட்லைட்கள் வெளிச்சத்தில் ஈ.சி.ஆர் சாலையில் தன் ஸ்விப்ட் காரை மிதமான வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான் நித்திலன், அவன் அருகே இருந்த இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் செல்போனைத் தடவி எதையோ பார்த்துக் கொண்டிருந்த சாதுர்யாவை தொண்டையைக் கனைத்து ஈர்த்தான். சாதுர்யா கேட்டாள்.

"என்ன நித்தி.... தொண்டை சரியில்லையா?"

"அதெல்லாம் நல்லாயிருக்கு.... நீதான் சரியில்லை"

"எனக்கென்னவாம்?"

"கார்லதான் வேற யாரும் இல்லையே. அப்படியே தலையை ஒரு 45 டிகிரி கோணத்தில் சாய்ச்சு என் தோள் மேல....!"

"நித்தி...." என்று சொல்லி முறைத்த சாதுர்யா அவனுடைய வலுவான புஜத்தில் குத்தினாள். சொன்னாள்.

"நாம ஒண்ணும் டூர் போகலை. வீ ஆர் ஆன் ட்யூட்டி..."

"தெரியும் சாதுர்யா.... இருந்தாலும் முகில்வண்ணனோட பண்ணைவீடு வர்ற வரைக்கும் ஆன் டுயூட்டியை பார்க்காமே நம்ம ட்யூட்டியை பார்ப்போமே!"

"டேய்.... உதை விழும்.... ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு. இன்னும் சில நிமிஷங்கள்ல பண்ணைவீடு வந்துடும்... அதோ தூரத்துல பாரு வெளிச்சம்...."

நித்திலன் பார்த்தான்.

"அவரோட பண்ணை வீட்டுக்கு இன்னும் அஞ்சு கிலோமீட்டர் தூரம் இருக்கே.... இங்கிருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே."

கார் வெளிச்சத்தை நெருங்கியது.

சாலையின் இரண்டு பக்கமும் பத்தடிக்கு ஒரு ட்யூப் லைட் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ட்யூப்லைட்டுகள் இலவச மின்சாரம் சாப்பிட்டு அந்த விடியற்கால இருட்டை ஒரு பகல் நேரமாய் மாற்றியிருந்தன. விஸ்வரூபம் எடுத்து நின்ற ப்ளக்ஸ் போர்டு பேனர்களில் முகில்வண்ணன் விதவிதமாய் கும்பிட்டு சிரித்துக் கொண்டிருந்தார். கீழே எழுதப்பட்டிருந்த வாசங்கங்கள் பார்வையை உறுத்தின.

'நடமாடும் பாரதமே
உன் பாதம் பணிந்தோம்.'

"நித்தி! பார்த்தியா கொடுமையை"

"இந்தப் பக்கம் என்ன பேனர்ன்னு பாரு சாதுர்யா?" காரின் வேகத்தைக் குறைத்தான். சாதுர்யா படித்தாள்.

'தலைவா... இந்த தரணியில் உனக்கு
ஜனனம் மட்டுமே!
அந்த ஆண்டவனுக்கு ஆயுள் நிர்ணயம்
செய்பவன் நீ.'

நித்திலன் வாய்விட்டுத் திட்டினான்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 3

"அடப் பாவிகளா?"

சாதுர்யா ஏதோ சொல்ல முயன்ற விநாடி அவளுடைய செல்போன் 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாய் ஒர் 'அலர்ட் டோன்' கேட்டது.

எடுத்து வாட்ஸ் அப் ஆப்ஷனுக்குப் போய் பார்த்தாள்.

ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய 'எக்ஸ்' குறி தெரிந்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+