For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் அப்பைப் பாருங்க.. ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கேன்.. பைவ் ஸ்டார் துரோகம் (30)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வேல்முருகன் போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் செல்போன் பேச்சை முடித்துக்கொண்டு தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அருள், நித்திலன், சாதுர்யா, கஜபதி ஆகியோரை ஒரு பெருமூச்சோடு ஏறிட்டார்.

“சம்பவங்கள் இப்போ வேற லெவலில் போயிட்டிருக்கு“

“வேற லெவல்ன்னா ...? “

“முகில்வண்ணனோட மகன் செந்தமிழை கடந்த ரெண்டு மணி நேரமாய் காணோம். சீப் மினிஸ்டரைப் பார்த்துட்டு வர்றேன்னு போனவர் மிஸ்ஸிங். சீப் மினிஸ்டர் ஆபீஸூக்கு அவர் போகவில்லை..... செல்போன்ல காண்டாக்ட் பண்ணினா செந்தமிழோட போன் “டெட்“ மோடில் இருந்திருக்கு. இந்த விஷயம் தெரிய வந்ததுமே முகில்வண்ணனுக்கு ஹார்ட் அட்டாக். ஃபேமிலி டாக்டர் சதாசிவம் வந்து பார்த்துட்டிருக்காராம். என்னை கமிஷனர் உடனே கிளம்பி வரச் சொல்றார்“

வேல்முருகன் சொல்லிக்கொண்டே ஏழ முயல அருள் குறுக்கிட்டார்.

“ஒரு நிமிஷம்........! “

“ எஸ்...... “

“நாங்க ஐ.டி. பீப்பிள். நீங்க போலீஸ் டிபார்ட்மெண்ட். எங்களோட எய்ம் முகில்வண்ணன்கிட்டே இருக்கிற 500 கோடி ரூபாய். அந்தப்பணம் எங்கே பதுக்கப்பட்டு இருக்கலாம்கிற விபரங்களை முகில்வண்ணனோட நெருங்கிப்பழகின கஜபதி சொல்லியிருக்கார். உடனடியாய் ரெய்ட் நடந்த எங்க கையில் ஆர்டர் இருந்தாலும் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த ஒரு வாய்மொழி உத்தரவின் காரணமாய் உடனடியாய் எங்களால செயல்படாத நிலைமை. இருந்தாலும் நான் நித்திலன், சாதுர்யா மூணுபேரும் ஆஃப் த ரிக்கார்டாய் முகில்வண்ணனோட பண்ணை வீட்டை அடுத்த ரெண்டு நாளைக்குள்ளே அதிரடியாய் ரெய்ட் செய்ய முடிவு எடுத்திருக்கோம்...... அந்த ஆஃப் த ரிக்கார்ட் ரெய்டுக்கு நீங்க எங்களுக்கு உதவி செய்யணும்..... “

rajesh kumar series five star dhrogam part 30

பெரிதாய் திடுக்கிட்டார் வேல்முருகன்...... விழிகளில் அதிர்ச்சியலைகள் பரவியிருந்தது.

“என்ன ஸார் சொல்றீங்க...... ஆஃப் த ரிக்கார்ட் ரெய்ட் நடத்தப் போறீங்களா ...? “


“ஆமாம்......“

“அது எப்படி முடியும்...? “

அருள் சிரித்தார் மெல்ல.

“அசாத்தியமான துணிச்சல் இருந்தா எல்லாமே சாத்தியம்தான்“

“அப்படி நீங்க ரெய்ட் பண்ணினால் டிபார்ட்மெண்ட் உங்க மேல நடவடிக்கை எடுப்பாங்களே...? “

“எடுக்கட்டும்...... எங்க மேல சட்ட ரீதியாய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. மீறிப்போனா ஒரு ஆறு மாத காலத்துக்கு சஸ்பெண்ட் பண்ண முடியும் அவ்வளவுதான். ஆனா முகில்வண்ணனின் சட்ட விரோத சம்பாதிப்பான 500 கோடி ரூபாயை கண்டுபிடிச்ச சந்தோஷம் வாழ்நாள் பூராவும் இருக்குமே...... “

வேல்முருகன் ஒரு சில விநாடிகள் வரை மெளனமாய் இருந்துவிட்டு கஜபதியிடம் திரும்பினார். நிதானமான குரலில் அழுத்தந் திருத்தமாய் கேட்டார்.

“முகில்வண்ணனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் அந்த ஊழல் பணம் 500 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்குன்னு உங்களுக்கு நிச்சயமாய் தெரியுமா...? “

“தெரியும் ஸார்..... “

“அது எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றீங்க...? “

“ஸார்..... சில விஷயங்களை எல்லாம் வெளிப்படையாய் பேசமுடியாது. ஒரு காலத்துல நான் மோசமான அரசியல்வாதியாய் இருந்தவன். தலைவர் வாழ்க வாழ்கன்னு கத்தியே ரத்தம் சுண்டிப்போனவன். முகில்வண்ணனோடு எனக்கு பல வருஷ பழக்கம். என் பேர்ல அவர்க்கு ரொம்ப நம்பிக்கை. அதனால அவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு ரகசிய நிகழ்வாய் இருந்தாலும் சரி. எனக்குத் தெரியாமே அது நடக்காது. மூன்று கண்டெய்னர்களில் வந்த அந்த 500 கோடி ரூபாயை பதுக்கும் வேலை நடக்கும்போது நான் அவர் கூடவே இருந்தேன்“

“இந்த 500 கோடி ரூபாய் விஷயம் உங்களைத் தவிர வேற யார் யாருக்கெல்லாம் தெரியும் ...? “

“எங்க கட்சியில் இருக்கிற ஒவ்வொரு மந்திரிக்கும் தெரியும். ஆனா தெரியாத மாதிரி காட்டிக்குவாங்க “

“இப்போ இருக்கிற நம்ம சீப் மினிஸ்டர் வஜ்ரவேலுக்கு தெரியுமா ...? “

“ நல்லாவே தெரியும்....... ஆனா முகில்வண்ணன் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார். காரணம் சி.எம். 750 கோடி ரூபாயை சுவிஸ் வங்கிகளில் ரகசிய கோட் வேர்ட்ஸை உபயோகப்படுத்தி போட்டு வெச்சிருக்கிற விஷயம் முகில்வண்ணனுக்கு தெரியும்“

“நீங்க சொல்ற உங்க கட்சியில யாருமே நல்லவங்க கிடையாது போலிருக்கே “

“அப்படியும் சொல்லிட முடியாது ஸார். கட்சிக்காக உண்மையாய் உழைக்கிற தலைவர்களும் இருக்காங்க. ஆனா அவங்களையெல்லாம் இந்த பத்து விரல்களுக்குள்ளே எண்ணிடலாம்“

வேல்முருகனின் பார்வை இப்போது அருளின் மீது படிந்தது.

உங்க நியாயமான கோபம், ட்யூட்டி கான்ஸியஸ் எல்லாமே எனக்குப் புரியுது ஸார்…… ஆனா முகில்வண்ணனோட பண்ணை வீட்டில் நடக்க போகிற ஆஃப் த ரிக்கார்ட் அதிரடி ரெய்டை நடத்த என்கிட்டயிருந்து எது மாதிரியான உதவியை எதிர்பார்க்கறீங்க ...? “

“சொல்றேன்“ என்று சொன்ன அருள் இன்னமும் குரலைத் தாழ்த்தினார். “போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் காக்கி யூனிஃபார்மில் பொறுப்பு மிக்க காவல்துறை அதிகாரியாய் இருந்தாலும் முகில்வண்ணனுக்கு ஒரு அடியாள் மாதிரியே மாறிட்டார். நான் கேள்விப்பட்ட வரைக்கும் கமிஷனர்க்கு பண்ணை வீட்லயே தங்கிக்க ஒரு அறையை சகல வசதிகளோடு செஞ்சு கொடுத்து இருக்காங்க. இதனால கமிஷனர் தன்னோட அலுவலக அறையிலில் இருக்கிற நேரத்தைக் காட்டிலும் முகில்வண்ணனோட வீட்டில் இருக்கிற நேரம்தான் அதிகம். நாங்க அதிரடி ரெய்டை நடத்த போகும் போது கமிஷனர் ஆதிமுலம் அங்கே இருந்தா எங்களால ரெய்டை நடத்த முடியாது. ஸோ அவர் இல்லாத நேரம் பார்த்து அங்கே போனால்தான் எங்களால ரெய்டை நடத்த முடியும்“

வேல்முருகன் குறுக்கிட்டார்.

“நீங்க சொல்றது எனக்குப்புரியுது ஸார். கமிஷனர் ஆதிமுலம் அங்கே இல்லாத நேரம் எதுன்னு பாரத்து நான் சொல்லணும். அதுதானே...... ? “

“அதுதான்“

“ தாராளமாய் என்னால அந்த உதவியை பண்ண முடியும் ஸார். ஆனா கமிஷனர் அந்த பண்ணை வீட்ல இல்லாமே போனாலும் முகில்வண்ணனுக்கு ஆள் பலம் இருக்கே. அந்த வீட்ல குறைந்துபட்சம் இருபது அடியாட்களாவது இருப்பாங்க...... உங்க மூணு பேரால அங்கே போய் என்ன செய்ய முடியும் ...? “

“ நாங்க மூணு பேர் மட்டும் அங்கே போகப்போறது இல்லை..... மொத்தம் 52 பேர் போகப்போறோம்“

வேல்முருகன் அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்.

“எப்படி அவ்வளவு பேர்...... இது ஆஃப் த ரிக்கார்ட் ரெய்ட்தானே ...? “

“ஆஃப் த ரிக்கார்ட் ரெய்ட்தான். எங்களோடு வரப்போகிற ஐ.டி. ஆபீஸர்ஸ் எல்லாரும் கடந்த ரெண்டு வருஷ காலத்துல ஓய்வு பெற்ற அதிகாரிகள். நாட்டில் ஊழலே இருக்கக்கூடாதுங்கிற நேர்மையான எண்ணம் கொண்டவர்கள். மத்திய அரசாலும், மாநில அரசாலும் பதவியில் இருந்தபோது மேலதிகாரிகளால் பழி வாங்கப்பட்டவர்கள். இப்ப நாங்க எல்லோரும் ஒரே அலைவரிசையில் இருக்கோம். ஏதாவது அதிரடியாய் பண்ணி கோடிகளில் புரள்கிற ஊழலை ஓழிக்க நினைக்கிறோம். இப்படி ஒரு ஆஃப் த ரிக்கார்ட் ரெய்டை நடத்தறதின் மூலமாய் மத்திய மாநில அரசுகளின் கோபம் எங்கள் மீது பாயும். அதை சந்திக்கவும் நாங்க தயாராயிட்டோம்“

வேல்முருகனின் முகம் அந்த இருட்டிலும் சந்தோஷ மினுமினுப்போடு தெரிந்தது.

“ஸார்........ரியலி ஐ ஃபீல் ஹேப்பி. இன்னிக்கு நாட்டில் இருக்கிற அரசியல் ஊழல்வாதிகள் திருந்தணும்ன்னா இது போன்ற அதிர்ச்சி ஆப்ரேஷன்கள் தேவை. இந்த விநாடி முதல் நானும் உங்க அணியில் சேர்ந்துட்டேன். ஆனா அதிரடி ரெய்ட் நடத்த இது சரியான நேரமில்லை.....

முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட்டு விட்ட நிலையில் அவருடைய மகன் செந்தமிழும் கடந்த ரெண்டு மணி நேரமாய் காணோம். முகில்வண்ணனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு டாக்டர் பார்த்துட்டிருக்கார். இனிவரப் போகிற நாட்களில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். அதுக்கப்புறம் ஆஃப் த ரிக்கார்ட் ரெய்டை நடத்துவோம். உங்ககிட்டே ரெய்டு நடத்த ஆர்டர் இருக்கிறதால ஒரு பிரச்சினையும் இல்லை. மத்திய அரசின் நிதித்துறை அதிகாரியிடமிருந்து வந்த வாய்மொழி உத்தரவை நாம் மதிக்க வேண்டியது இல்லை..... “

வேல்முருகன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மறுபடியும் அவர் செல்போன் அழைப்பு வந்ததற்கு அறிகுறியாய் வெளிச்சமாய் ஒளிர்ந்தது. எடுத்தார். மறுபடியும் கமிஷனர் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றினார்.

“ஸார் “

“என்ன வேல்முருகன் ..... புறப்பட்டீங்களா ...? “

“வந்துட்டிருக்கேன் ஸார் “

“சரி...... வண்டியை ஓரமாய் நிறுத்திட்டு உங்களோட “வாட்ஸ் அப்“யைப் பாருங்கள். ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கேன்“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 30
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X