For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 14

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செந்தமிழனின் விழிகளில் பயம் நிரம்பியது.

கமிஷனரின் செல்போனில் ஆடியோ கான்வர்சேஷன் நிதானமான குரலில் போய்க் கொண்டிருக்க அதை உன்னிப்பாய் செவிமடுத்தான்.

"முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் இப்போ உயிரோடு இல்லையா...?" கமிஷனரின் குரல் நடுக்கமாய் கேட்க மறுமுனையில் குரல் சிரித்தது.

Five Star Dhrogam Chapter 14

"மணிமார்பனோட டெட்பாடியை பார்த்தால்தான் நம்புவீங்களா கமிஷனர் ஸார்?"

"மணிமார்பன் இப்ப எங்கே?"

"பாடி எங்கேன்னு கேளுங்க.... அவனோட உடம்பு இந்த பண்ணை வீட்டுக்குள்ளேயேதான் இருக்கு... போய் தேடி எடுத்து கண்டுபிடிச்சு முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளை நிறுத்திவிட்டு மணிமார்பனோட காரியங்களை பண்ண ஆரம்பிங்க... இது விஷயமாய் வேண்டியவங்க யார்க்கும் சொல்லி அனுப்ப வேண்டியது இல்லை... ஏன்னா வேண்டியவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் இங்கேயே இருக்காங்க....!"

அத்தோடு செல்போனின் கான்வர்சேஷன் அறுந்து போயிற்று. செந்தமிழ் கமிஷனரிடம் திரும்பினான். முகம் வெள்ளமாய் வியர்த்தியிருந்தது. "ஸார்.... பேசினவனின் செல்போன் நம்பரை நோட் பண்ணீங்களா?"

"அவன் செல்போனிலிருந்து பேசலை.... ஏதோ ஒரு பி.சி.ஓவிலிருந்து பேசியிருக்கான். நான் உடனே கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பி அந்த விஷயத்தை கன்பர்ம் பண்ணிகிட்டேன். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையிலிருந்து போன் பண்ணியிருக்கான். இந்த ஃபங்க்‌ஷன்ல குழப்பம் பண்ண யாரோ முயற்சி பண்றாங்கன்னு நினைக்கிறேன்... மிஸ்டர் மணிமார்பன் மேடையில்தானே இருக்கார்?"

செந்தமிழ் நெற்றி வியர்வையை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே கமிஷனரை ஏறிட்டான்.

"ஸார்... மாப்பிள்ளை மணிமார்பனை ஒரு அரைமணி நேரமாய் காணோம். அவரைத்தான் தேடிகிட்டு இருக்கேன்...!"

"என்னது... தேடிட்டு இருக்கீங்களா... அப்படீன்னா என்கூட செல்போன்ல பேசினவனை நாம அலட்சியம் பண்ண முடியாது. இதே பண்ணை வீட்டுக்குள்ளே அவர்க்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கணும்... உடனடியாய் சர்ச் ஸ்க்வாட் ஒண்ணை இன்பார்ம் பண்ணி தேடச் சொல்லணும்.... நான் அதுக்கான முயற்சியில் இறங்கட்டுமா...?"

"ம்... செய்யுங்க... ஆனா வந்து இருக்கிற யார்க்கும் தெரியாதபடி மணிமார்பனைத் தேடுங்க...."

கமிஷனர் தலையாட்டிவிட்டு நடந்து போக செந்தமிழ் தளர்ந்த நடையோடு ஃபங்க்‌ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தான். மேடையில் கஜபதி மைக்குக்கு முன்பாய் நின்றபடி ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தார்.

Five Star Dhrogam Chapter 14

"அண்ணன் முகில்வண்ணன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரு மனிதனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் புனிதனாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அந்த எளிய மனிதரின் அரிய குணநலன்கள் தெரியவரும். அவரைத் தேடி பதவிகள் வந்தன. ஒரே ஒரு தலையசைப்பால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சென்ற வருடம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு டெல்லியில் இருந்து அவர்க்கு ஒரு செய்தி வருகிறது. செய்தியில் குறிப்பிட்டிருந்த வாசகம் என்ன தெரியுமா? பிரதமர் நாளை மாலை உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்பதே. பிரதமரின் வார்த்தைக்கு மதிப்பளித்து அண்ணன் முகில்வண்ணன் மறுநாள் மத்திய அரசே ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுப் போனார். பிரதமரை அவருடைய வீட்டிலேயே சந்தித்தார். இந்த சந்திப்பு ரகசியமான முறையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பின் போது பிரதமர் நம் அண்ணனிடம் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதமா என்று கேட்டுள்ளார். அதற்கு அண்ணன் சொன்ன ஒற்றை வார்த்தை வேண்டாம் என்பதுதான். ஆனால் பிரதமர் விடவில்லை. 'முகில் ஜி... ஏன் குடியரசு தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?' என்று கேட்டபோது நமது அண்ணன் என்ன பதில் சொன்னார் தெரியுமா?"

கஜபதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் வஜ்ரவேலு முகில்வண்ணனின் காதருகே தலையைச் சாய்த்தார்.

"யோவ்... முகில் ... அந்த பிரதம மந்திரி இப்ப உயிரோடு இல்லை என்கிற தைரியத்துல உன்னோட ஆள் கஜபதி இப்படியெல்லாம் பொய் பேசறானே... கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லய்யா...."

"நான் என்ன பண்ணட்டும் வஜ்ரவேலு... எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துட்டேன். ஒருத்தனும் காதுல போட்டுக்கிறதில்லை... மைக்கைப் பிடிச்சான்னா பொய் தானா வருது.... இந்தப் பொய்யையும் நம்பறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு...."

"சரி... சரி.... உன்னோட பையன் செந்தமிழ் ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி வேர்த்து வழிஞ்சு வர்றான். விஷயம் என்னான்னு கேளு...!"

செந்தமிழ் கையில் இருந்த கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டே முகில்வண்ணனை நெருங்கி குனிந்தான்.

"அப்பா...."

"என்ன செந்தமிழ்... குரல் ஒரு மாதிரி இருக்கு... மாப்பிள்ளையைப் பார்த்தியா....?"

"அது விஷயமாய்த்தான் பேசணும்... ஒரு நிமிஷம் உள்ளே வாங்கப்பா..."

"என்ன மாப்பிள்ளை ஏதாவது பிரச்சனை பண்றாரா?"

"சொல்றேன்... உள்ளே வாங்கப்பா...."

முகில் வண்ணன் முதலமைச்சரிடம் திரும்பினார்.

Five Star Dhrogam Chapter 14

"வஜ்ரம்...! பையன் ஏதோ பேசணுமாம். ஒரு ரெண்டு நிமிஷம் உள்ளே போய்ட்டு வந்துடறேன்..."

"போய்ட்டு சீக்கிரமாய் வா.... நீ பேசினதும் நான் பேசிட்டு வேற ஒரு கல்யாணத்துக்கு போகணும்...."

"இப்ப வந்துடறேன்..."

முகில்வண்ணன் எழுந்து பட்டுத் துண்டால் முதுகைப் போர்த்திக் கொண்டு செந்தமிழைப் பின் தொடர்ந்தார்.

*********

விழா மேடையின் முன்னால் போடப்பட்டிருந்த முன்வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒருத்தரையொருத்தர் கலக்கமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

"கவனிச்சியா சாதுர்யா....?" நித்திலன் கிசுகிசுத்தான்.

Five Star Dhrogam Chapter 14

"ம்... கவனிச்சேன்.... முகில்வண்ணன் எந்திரிச்சு தன் பையன் பின்னாடி போறார்..."

"மணிமார்பன் கொலையான மேட்டர் செந்தமிழுக்கு தெரிஞ்சிடுச்சு போலிருக்கு..."

"விஷயம் தெரிஞ்சிருந்தா ஃபங்க்‌ஷன் நடக்காது. அதுக்கு முன்னாடி நாம இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்....ஏன்னா மணிமார்பனோட செல்போன் என்கிட்டதான் இருக்கு...."

"சிம் கார்டைத்தான் வெளியே எடுத்திட்டியே... அப்புறம் என்ன பயம்....?"

"பயமில்லைதான்.... இருந்தாலும் ஒரு பயம் என்னோட மனசுக்குள்ளே நொண்டிகிட்டே இருக்கு...." நித்திலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கஜபதி அவர்களுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவர் முகம் இருண்டு போயிருந்தது.

நித்திலன் சொன்னான்.

"அருமையா மேடைக்கு ஏற்ற மாதிரி பேசிட்டீங்க ஸார்"

"உங்க பாராட்டையெல்லாம் கேட்கிற மனநிலையில் நான் இல்லை நித்திலன். விஷயம் நம்ம தலைக்கு மேல் ஒரு விபரீதம் போயிட்டிருக்கு"

Five Star Dhrogam Chapter 14

"என்ன ஸார்?"

"மேடையில் நான் பேசி முடிச்சதும் முகில்வண்ணனும் அவருடைய மகனும் என்னை மேடைக்குப் பின்புறம் இருக்கிற அறைக்கு வரச் சொன்னாங்க... நானும் போனேன். அங்கே போலீஸ் கமிஷனரும் இருந்தார். கமிஷனருக்கு எவனோ ஒருத்தன் போன் பண்ணி மணிமார்பனோட டெட்பாடி இந்தப் பண்ணை வீட்டுக்குள்ளதான் இருக்குன்னு சொல்லியிருக்கான். பாதுகாப்புக்கு வந்து இருக்கிற போலீஸார் ரெண்டு குழுக்களாய் பிரிஞ்சு டெட்பாடி எந்த இடத்துல இருக்குன்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.... கொலையாளி இந்தப் பண்ணை வீட்லதான் இருக்கணும்ங்கிற சந்தேகத்தின் பேரில் இங்கே இருக்கிற யாரும் இன்னும் சில மணி நேரங்களுக்கு வெளியே போக முடியாதாம்..."

நித்திலனும் சாதுர்யாவும் சுவாசிக்கத் திணறினார்கள்.

Five Star Dhrogam Chapter 14

"இப்ப என்ன ஸார் பண்றது?"

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 14th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X