Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எ....எ.. என்ன ஸார்... சொல்றீங்க......?”.. ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (18)

Subscribe to Oneindia Tamil

கஜபதி செல்போனை அணைத்து விட்டு அந்த குளிரான ஏஸி அறையிலும் வியர்த்துப் போயிருந்த முகத்தை மேல் துண்டால் ஓற்றிக் கொண்டு, சீப் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ர் அருளையும், நித்திலன், சாதுர்யாவையும் லேசான கலவரம் படிந்த விழிகளோடு பார்த்தார்.

“முகில்வண்ணன் இந்த நேரத்துல என்னை எதுக்காக கூப்பிட்டார்ன்னு தெரியலையே ......?”

அருள் கேட்டார் “நீங்க ஐ.டி.டிபார்ட்மெண்ட்டுக்கு ஆதரவாய் இருக்கிறது ஓருவேளை அவர்க்குத் தெரிந்து இருக்குமோ ......?”

rajesh kumar series five star dhrogam

”அந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை ஸார் இந்த மிட் நைட் நேரத்துல எனக்கு போன் பண்ணி என்னை உடனடியாய் வரச்சொல்றார்ன்னா வேற ஏதாவது விஷயம் இருக்கலாம்...”

”வேற ஏதாவதுன்னா......?”

“ என்னால கெஸ் பண்ண முடியலை. அவரைப் போய்ப் பார்த்தாத்தான் தெரியும்...”

“ இந்த நேரத்துல அவரைப் போய் நீங்க பார்க்கிறது என்னோட மனசுக்கு சரியாப்படலை ..... நாளைக்குக் காலையில் போய் பார்க்கலாமே ......?”

“ வேண்டாம் ஸார்...... அவர் கூப்பிட்ட நேரத்துக்கு நான் போய்ப் பார்க்கலைன்னாத்தான் அவர்க்கு என் மேல சந்தேகம் வரும். நான் கிளம்பறேன் ...” கஜபதி சொல்லிக் கொண்டே எழுந்தார். சாதுர்யா குறுக்கிட்டாள்.

“ஓரு நிமிஷம் கஜபதி ஸார்...... “

“என்னம்மா ......?”

“ எனக்கொன்னமோ உங்க உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம்ன்னு என் மனசுக்குள்ளே ஓரு எண்ணம். நீங்க ஸ்பாட்டுக்குப் போய் முகில்வண்ணன்கிட்டே பேசும்போது உங்க செல்போனை ஆன் பண்ணி வையுங்க....அப்பத்தான் உங்களுக்குள்ளே எது மாதிரியான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்குன்னு எங்களுக்குத் தெரியும்...”


“ அதெல்லாம் வேண்டாம்மா...”

” ஏன் ...?

”முகில்வண்ணனை சுற்றியிருக்கிற ஆட்கள் சாதாரண நபர்கள் இல்லை.... அவர்கள் ஓரு உளவுத்துறை மாதிரி செயல்படுவாங்க ..... நான் முகில்வண்ணன்கிட்டே பேசும்போது என்னோட செல்போனை ”ஆன்”ல இருக்கிறத்தை ஓருத்தன் பார்த்துட்டான்னாலும் அது ஓரு பிரச்சினையாயிடும். அங்கே எது மாதிரியான பிரச்சினை நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன். நீங்க என்னைப் பத்தி கவலைப்படாதீங்க ” சொன்ன கஜபதி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

நித்திலன் எழுந்து பின்னாலேயே ஓடி வந்தான்.

“ ஸார் ! நான் வேணும்ன்னா உங்களை ஈ.ஸி.ஆர் எல்லை வரைக்கும் கொண்டு வந்து விடட்டுமா ......?”

“வேண்டாம் ..... நான் ஓரு டாக்ஸி பிடிச்சுப் போயிடறேன்.. !”

ஏதாவது பிரச்சினைன்னா எனக்கு போன் பண்ணுங்க ஸார்”

“கண்டிப்பாய்.. !” சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இருட்டில் இறங்கி மறைந்தார் கஜபதி.

கஜபதி ஓரு டாக்ஸி பிடித்து ஓரு மணி நேரம் பயணம் செய்து ஈ.ஸி.ஆரில் இருந்த முகில்வண்ணனின் பண்னை வீட்டை நெருங்கி நிசப்தமான நுழைவாயிலுக்கு முன்பாய் இறங்கிக் கொண்ட போது நேரம் இரண்டரை மணி.

குளிர்மிகுந்த கடல்காற்று சீராய் வீசி முகத்தை அலம்பிக் கொண்டிருந்தாலும் கஜபதிக்கு வியர்த்துக் கொட்டியது.

நுழைவு வாசலிலேயே முகில்வண்ணனுக்கு வேண்டிய நபர் சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான். கஜபதியைப் பார்த்த்தும் கையில் இருந்த சிகரெட் துண்டை காலுக்கு கீழே போட்டு நசுக்கிவிட்டு “வாங்கண்ணே உங்களுக்காகதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்“ என்றான்.

“ என்ன பிரச்சினை கோவிந்த் ...... அண்ணன் இந்த ராத்திரி நேரத்துல என்னைப் புறப்பட்டு வரச் சொல்லியிருக்கார்......?”

“தெரியல்லேண்ணே .... கமிஷனர் ஆதிமுலம் ராத்திரி பதினோரு மணியிலிருந்து இங்கேதான் இருக்கார்......“ கோவிந்தராஜ் பேசிக் கொண்டே நடக்க கஜபதி எகிறும் இருதயத்தோடு பின் தொடர்ந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையிருட்டான அறை வந்தது. “ப“ வடிவத்தில் போடப்பட்டு இருந்த சோபாக்களில் முகில்வண்ணனும், அவருடைய மகன் செந்தமிழும், மப்டி உடையில் போலீஸ் கமிஷனர் ஆதிமுலமும் நிழல் உருவங்களாய் உட்கார்ந்திருந்தார்கள்.

கஜபதி கும்பிடு போட்டார்.

“வணக்கம் அண்ணே“

முகில்வண்ணன் இறுகிப் போன முகத்தோடு கரகரப்பான குரலில் கேட்டார்.

“ என்ன கஜபதி ...... நல்லா தூங்கிட்டிருந்தியா ......?”

“ஆமாங்கண்ணே.........மனசு சரியில்லை. வருத்தமாய் இருந்ததாலே ஓரு க்வார்ட்டார் அடிச்சுட்டுப் படுத்துட்டேன். நல்ல தூக்கம். உங்க போன் வந்ததும் தூக்கம் காணாமே போயிருச்சு.... சொல்லுங்கண்ணே என்ன விஷயம்......?”

“மொதல்ல இப்படி உட்காரு.... கஜபதி“

“பரவாயில்லைண்ணே .... இப்படியே நிக்கறேன்“

“பேச வேண்டியது நிறைய இருக்கு ...... உட்காரு கஜபதி.....!“

பதைபதைப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் கஜபதி முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டு எதிரில் காலியாக இருந்த நாற்காலிவொன்றில் உட்கார்ந்தார்.

அறையில் சில விநாடிகளுக்கு ஓரு வேண்டாத நிசப்தம் நிலவ அதைக் கலைத்தார் முகில்வண்ணன்.

“ நம்ம வீட்டு மாப்பிள்ளை மணிமார்பன் நேத்து காலையில் ஃபங்க்சன் நடந்துகிட்டு இருக்கும்போதே காணாம போயிட்டார். அது பத்தின விபரம் ஏதாவது உனக்குத் தெரியுமா கஜபதி......?”

“அதை நினைச்சுத்தாண்ணே மனசு உடைஞ்சு போயிருக்கிறேன்...... அவர் அப்படி காணாமே போறதுக்கு ரெண்டு வயசு குழந்தையா ....... என்ன ......?”

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இப்போது பேச்சில் குறுக்கிட்டார்.

“கஜபதி உங்களுக்கு ஓரு உண்மையெச் சொல்லட்டுமா.....!“

“என்ன ஸார்....... ?“

“மாப்பிள்ளை மணிமார்பனை பண்னை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஓரு பள்ளத்துல வெச்சு தாக்கியிருக்காங்க. அந்த இடத்துல உறைஞ்சு போயிருக்கிற ரத்தத்தைப் பார்க்கும்போது அரிவாள் போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்“

“கஜபதியின் ஓட்டுமொத்த உடம்பும் ஓரு கலவர பூமியாய் மாறினாலும் அதை வெளிக்காட்டாமல் போலியான அதிர்ச்சியோடு கேட்டார்.

“எ....எ.. என்ன ஸார் ...... சொல்றீங்க. ......?”

“உண்மையைச் சொல்லிட்டிருக்கேன்...யாரோ திட்டம் போட்டு ஃபங்க்சன் நடக்கிற பண்னை வீட்டுக்குள்ளே வந்து மணிமார்பனை தீர்த்துக் கட்ட நினைச்சு இருக்காங்க....ரத்த சேத அளவை பார்க்கும்போது மணிமார்பன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லைன்னு என்னோட மனசுக்குப்படுது“

கஜபதி முகில்வண்ணனை ஏறிட்டார். “என்னண்ணே.... கமிஷனர் இப்படி சொல்றார்.......?” அப்படி மாப்பிள்ளையை வெட்டியிருந்தா அவரு அந்த இடத்துலதானே விழுந்து கிடந்து இருக்கணும் .......?”

“உடம்பை கடத்தியிருக்காங்க.....!“ என்றார் முகில்வண்ணன்.

“அது எப்படி அண்ணே இவ்வளவு பாதுகாப்பு இருக்கிற இந்த இடத்திலிருந்து கடத்தியிருக்க முடியும்.......?”

“இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி கஜபதி......?” அப்படி கடத்தினது யார்ங்கிறதையும் கண்டுபிடிச்சுட்டோம்“

“அ.. அப்படியா.... யார்ண்ணே அது......?”

“அதை நான் சொல்றதைவிட நீ சொன்னாத்தான் நல்லாயிருக்கும்....!“

“என்னண்ணே.... சொல்றீங்க. ......?”

“உனக்கு அவனைத் தெரியும்ன்னு சொல்றேன் கஜபதி“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+