For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்?.. பைவ் ஸ்டார் துரோகம் (42)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

முதலமைச்சர் வஜ்ரவேலுவும், ஷிவ்ராமும் பதட்டமாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

பெரிது பெரிதாய் மூச்சிரைத்துக் கொண்டிருந்த இஷ்மி பர்மானை வஜ்ரவேலு தொட்டார். குனிந்து அவன் காதருகே கேட்டார்.

"இஷ்மி ......... முகில்வண்ணனோட ஃபேமிலிக்கு ஒரு பெண் எதிரியாக இருக்கிறதாய் சொன்னியே....... அந்தப் பெண் யாரு....... ? "

மூச்சுத்திணறல் அதிகமாகி இஷ்மியால் பதில் சொல்ல முடியாமல் தவிக்க ஷிவ்ராம் அறைக்கு வெளியே எட்டிப்பார்த்து குரல் கொடுத்தார் பலமாக.

Rajesh Kumars Five Star Droham serial episode 42

"டாக்டர்....... "

வெளியே வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் எழுந்து வேகவேகமாய்

வந்தார். முகம் மாறிப் போனவராய் கேட்டார்.

"எனி ப்ராப்ளம் ....... ? "

"டாக்டர் ! இஷ்மியால் பேச முடியலை..... அவனுக்கு உடனடியாய் ஏதாவது ட்ரீட்மெண்ட் குடுத்து இன்னும் ஒரு மணி நேரமாவது பேச வையுங்கள் டாக்டர்... மேற்கொண்டு பேசி அவன்கிட்டயிருந்து நிறைய விஷயங்களை வாங்க வேண்டியிருக்கு... ! "

டாக்டர் வேகவேகமாய் உள்ளே வந்தார். மலங்க மலங்க விழித்தபடி மூச்சிரைத்துக் கொண்டிருந்த இஷ்மியை நெருங்கினார். அவனுடைய இடது கை மணிக்கட்டைப்பிடித்து பத்து விநாடிகள் சோதித்தவர் லேசாய் முகம் மாறினார். வஜ்ரவேலை ஏறிட்டார்.

"ஸாரி ஸார்....... "

"என்னாச்சு... ? "

"ஸீம்ஸ் டு பி....... கார்டியாக் அரஸ்ட். பல்ஸ் வேகமாய் விழுந்துட்டிருக்கு.... ஹி ஈஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்"வஜ்ரவேல் பதட்டமானார். அவன் ஒரு அரை மணி நேரமாவது உயிரோடு இருக்கணும் டாக்டர். லைஃப் சேவிங் ட்ரக் ஏதாவது யூஸ் பண்ணி...... அவனைப் பேச வைக்க முடியாதா ... ? "வஜ்ரவேலு சொல்லிக் கொண்டிருக்கும்போதே இஷ்மி பர்மானின் தொண்டையில் இருந்து ஒரு விக்கல் கிளம்பியது. விழிகள் ஒரே திசையில் நிலைத்துப்போக உடம்பின் துடிப்பு சிறிது சிறிதாய் அடங்க ஆரம்பித்தது. சரியாய் முப்பது விநாடிகள் உடம்பு அடங்கியது.

டாக்டர் உதட்டைப் பிரித்து தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்தார்.

"முகுளம் போர்ஷனில் அடிபட்டாலே இப்படித்தான் டெத் சடனாய் வரும்......"

வஜ்ரவேலுவும், ஷிவ்ராமும் இருட்டடித்துப்போன முகங்களோடு அந்த அறையைவிட்டு வெளியேறி வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தொய்வோடு உட்கார்ந்தார்கள். வஜ்ரவேல் உஷ்ணமாய் பெருமூச்சுவிட்டார்.

"என்ன ஷிவ்ராம் ...... இஷ்மி இப்படி எல்லாத்தையும் தலைகீழாய் புரட்டிப்போட்டுட்டு போயிட்டான்? மணிமார்பனை தீர்த்துக்கட்டி, செந்தமிழுக்கு இண்ட்ராமஸ்குலர் ஊசி போட்டது இவன் இல்லைன்னா வேற யார் பண்ணியிருப்பாங்க ? "

"அதுவும் அது ஒரு பெண்ணாக்கூட இருக்கலாம்ன்னு சொல்லியிருக்கான்.."

"என்னோட சந்தேகம் எல்லாம் மிருணாளினி மேல்தான்........ போலீஸ் கமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் அந்த மிருணாளினியைக்கண்டு பிடிக்கறதுக்கு முந்தி நாம அவளைக் கண்டுபிடிச்சு இந்த இடத்துக்கு கொண்டு வந்து அவளை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சு உண்மைகளை வாங்கணும்"

"அவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்? "

"ஏன் முடியாது...... அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன். ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸிகிட்டே அந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருக்கேன். எப்படியும் ரெண்டு மூணு நாளைக்குள்ளே நல்ல தகவல் வந்துடும்...... "வஜ்ரவேல் சொல்ல ஷிவ்ராம் குரலைத்தாழ்த்தினார்.

"அது சரி.... முகில்வண்ணன் ஊழல் பண்ணி சம்பாதிச்சு வெச்சிருக்கிற 500 கோடி ரூபாய் பணம் பற்றிய விபரம் மிருணாளினிக்கு தெரிய வாய்ப்பு இருக்குன்னு நினைக்கறியா வஜ்ரம்? "

Rajesh Kumars Five Star Droham serial episode 42

"கண்டிப்பாய்......... "

"எப்படி சொல்றே ? "

"மிருணாளினியோட சிஸ்டர் ஜெயதாராவுக்கும், முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனுக்கும் தொடர்பு இருக்கும்போதே பல விஷயங்கள் அவங்களுக்குள்ளே பரிமாறப்பட்டு இருக்கலாம். அதுல ஒரு விஷயம் இந்த 500 கோடி ரூபாயாகவும் இருக்க வாய்ப்பு அதிகம்...... "

"வஜ்ரம் நீ சொல்றது உண்மையாய் இருந்தா உடனடியாய் நாம செயல்படணும்..... நாளைக்கு காலையில் முகில்வண்ணன் தன் குடும்பத்தோட செந்தட்டி கிராமத்துக்கு கிளம்பிப்போனதும் நமக்கு விசுவாசமாய் இருக்கிற வருமானவரி அதிகாரிகளை பண்ணை வீட்டுக்கு அனுப்பி ரெய்ட் என்கிற பேர்ல அந்த வீட்டின் செல்லர்களில் தூங்கிட்டு இருக்கிற 500 கோடி ரூபாயையும் கண்டெய்னர்களில் இங்கே கொண்டு வந்துடணும்"

"அது நாளைக்கு நாம செய்ய வேண்டிய வேலை. அதுக்கு முன்னாடி இன்னிக்கு ராத்திரிக்குள்ளே இஷ்மி பர்மானின் உடம்பை பின்னாடி எந்த ஒரு பிரச்சனையும் வராத அளவுக்கு டிஸ்போஸ் பண்ணியாகணும்..... என்ன பண்ணலாம் சொல்லு "

"மதுராந்தகத்துக்குப் பக்கத்துல எனக்கு சொந்தமான ஒரு பெரிய செங்கல் சூளை இருக்கு. அதுக்குள்ளே போட்டு பஸ்பம் பண்ணிட வேண்டியதுதான். இஷ்மி மும்பையில் ஒண்டிக்கட்டையாய் வாழ்ந்தவன். அவனைக்காணோம்ன்னு யாரும் போலீஸ்ல போய் புகார் தரமாட்டாங்க"

"சரி...... ஏற்பாடு பண்ணு "

ஷிவ்ராம் செல்போனை எடுத்துக்கொண்டு காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத்தொட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.

மறுநாள் மாலை ஆறு மணி

முதலமைச்சர் வஜ்ரவேலுக்கு முன்பாக கழுத்தில் டை கட்டியிருந்த அந்த பதினைந்து வருமானவரி அதிகாரிகளும் வெகு பவ்யத்தோடு நின்றிருக்க,

எல்லோர்க்கும் முன்பாய்த் தெரிந்த வழுக்கைத்தலை மனிதரைப் பார்த்து வஜ்ரவேலு பேசிக்கொண்டிருந்தார்.

இதோ பாருங்க ஹரிஹரன்...... முகில்வண்ணன் இப்போ அந்த பண்ணை வீட்டுல இல்லை. ராமநாதபுரத்தில் இருக்கிற அவரோட சொந்த கிராமமான செந்தட்டி போய் சேர்ந்துட்டார். செக்யூரிட்டி வேலை பார்க்கிற ஆட்கள் மட்டும்தான் பண்ணை வீட்டுல இருக்காங்க...... தடாலடியாய் போய் ரெய்ட் பண்ணி செல்லர் அறைகளில் இருக்கிற பணத்தை எடுக்க இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. இப்ப மணி ஆறு. நீங்களும் உங்க டீமும் பண்ணை வீடு போய் சேர எப்படியும் ஏழுமணியாயிடும். உங்களையெல்லாம் பார்த்ததும் செக்யூரிட்டி ஆட்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கும். உடனடியாய் அவங்க முகில்வண்ணனுக்கு தகவல் கொடுக்க முயற்சி பண்ணுவாங்க. செல்போன்களை எல்லாம் பறிமுதல் பண்ணிடுங்க. சோதனை முடிகிறவரைக்கும் செந்தட்டி கிராமத்தில் இருக்கிற முகில்வண்ணனுக்கு எந்த ஒரு தகவலும் போகக்கூடாது"

"நீங்க அதையெல்லாம் சொல்லவே வேண்டியது இல்லை ஸார். முகில்வண்ணன் வீட்ல சோதனை நடந்த விஷயம் நாளைக்கு காலைல ஆறு மணிக்கு மேல்தான் அவர்க்கே தெரியப்போகுது. சோதனையில் ஒரு பத்து கோடி ரூபாய் கிடைச்சுதுன்னு ஊடகங்களுக்கு நான் பேட்டி தர்றதை அவர் செந்தட்டி கிராமத்துல உட்கார்ந்துட்டு டிவியில் பார்க்கப் போறார். எல்லாமே திட்டம் போட்டபடி நடக்கும் ஸார்"

"சரி....... நீங்க கிளம்புங்க...... உங்களோட பாதுகாப்புக்காக போலீஸூம் வரும்"

அந்த ஹரிஹரனின் தலைமையில் இரண்டு வரிசைகளில் நின்றிருந்த வருமானவரி அதிகாரிகள் அனைவரும் சல்யூட் அடித்துவிட்டு அறையினின்றும் வெளியேறிப்போக வஜ்ரவேல் தன் செல்போனை எடுத்தார். ஷிவ்ராமை தொடர்பு கொண்டு பேசினார்.

"ஹலோ ஷிவ்ராம்"

"சொல்லு வஜ்ரம் "

"இன்னும் ஒரு மணி நேரத்துல அதிரடி ஆட்டம் ஆரம்பம். ஹரிஹரன் தலைமையில் பதினைந்து ஐ.டி. ஆபீஸர்ஸ் புறப்பட்டு போயிட்டு இருக்காங்க"

"நல்லபடியாய் முடியுமா ...... ? "

"உனக்கு எப்பத்தான் இந்த சந்தேகம் தீருமோ? "

" வஜ்ரம் ........ இஷ்மி பர்மான் உன்னையும், என்னையும் ஏமாத்தினதை நினைச்சா.... எந்த நேரத்துல எது நடக்குமோன்னு பயம்மா இருக்கு...... "

"இனிமேல் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. இஷ்மி பர்மானை சுத்தம் பண்ணியாச்சா ...... ? "

"கிள்ளி எடுக்க சாம்பல் கூட இல்லை. அவனை இனித் தேடணும்ன்னா காத்துலதான் தேடணும்... சரி அந்த மிருணாளினி எப்ப நம்ம கைக்கு கிடைப்பா .. ? "

"ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ"

"வஜ்ரம் I நான் ஒரு விஷயம் சொன்னா நீ கேப்பியா ? "

"என்ன ? "

"அந்த மிருணாளினியை இன்னும் ஒரு நாலைஞ்சு நாள் வெளியே விட்டு வெச்சா என்ன ? "

"எதுக்கு ? "

"மணிமார்பனை கொலை செய்ததும், செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசி போட்டு ஹாஸ்பிடல்ல படுக்க வெச்சதும், கஜபதியை தற்கொலை பண்ணிக்க வெச்சதும் அந்த மிருணாளினிதானே? "

"ஆமா..... "

தன்னோட சிஸ்டர் ஜெயதாராவின் மரணத்துக்கு காரணமான மணிமார்பனையும் முகில்வண்ணனோட ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்துக்கட்டறதுதானே அவளோட நோக்கம்? "

"ஆமா..... "

"நம்ம நோக்கமும் அதுதானே ? "

"அப்படீன்னா ..... அந்த வேலையை அந்த மிருணாளினியே பண்ணட்டுமே? "

"வேண்டாம் ஷிவ்ராம்...... மிருணாளினியோட நோக்கம் அந்த குடும்பத்தை மட்டும் அழிக்கிறதாய் இருந்தா பரவாயில்லை. அந்த 500 கோடி ரூபாய்க்காக உன்னையும், என்னையும் கூட டார்கெடு பண்ணலாம் இல்லையா.... ? "

"வஜ்ரம் நீ என்ன சொல்றே? "

"என்னோட மனசுக்குப்பட்டதைச் சொன்னேன். அந்த மிருணாளினி நம்ம கைக்கு கிடைக்கிறவரை நீயும் சரி நானும் சரி கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கிறது நல்லது"

"என்ன பயமுறுத்திறியா? "

"நியாயமான பயம்.... நான் இப்படி சொல்றதுக்கு காரணம் இருக்கு"

"என்ன காரணம்? "

"செந்தமிழ் அட்மிட்டாகியிருக்கிற திரிசூலம் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு நேரத்துக்கு முன்னாடி டாக்டர் எனக்கு போன் பண்ணியிருந்தார்"

"என்ன சொன்னார்? "

"செந்தமிழ் இப்போ உயிரோடு இல்லை.... "

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 42
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X