For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ....நீ..... நீங்களா...?.. பைவ் ஸ்டார் துரோகம் (28)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கடற்கரை இருட்டில் கரைந்து நிழல் உருவங்களாய் தெரிந்த அந்த இரண்டு பேர்களையும் பார்த்து அருள், கஜபதி, சாதுர்யா அசையாமல் அமர்ந்திருக்க நித்திலன் மட்டும் துணிச்சலாய் எழுந்து நின்றான். சிறிது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.

"யாரது ...? "

உருவங்கள் முன்னேறி வந்தன.

ஒரு ஆண், ஒரு பெண்

அந்த ஆளைப்பார்த்ததும் கஜபதி சற்றே பதட்டத்துடன் எழுந்தார்.

"நீ....நீ..... நீங்களா...? " என்றவர் அருளிடம் திரும்பினார்.

"ஸார்....... இவர் வேல்முருகன்....சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர். மணிமார்பன் கொலை செய்யப்பட்ட வழக்கை இவர்தான் இப்போதைக்கு இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு வர்றார்" கஜபதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேல்முருகன் அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றார். நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

rajesh kumar-series five star dhrogam -28

"ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். நாலுபேரும் இங்கே உட்கார்ந்து ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தீங்க போலிருக்கு. நானும் அந்த பேச்சு வார்த்தையில் கலந்துக்க அனுமதி உண்டா...? "

நித்திலன் சிரித்தான்.

யூ.... ஆர் வெல்கம் மிஸ்டர் வேல்முருகன்.... வாங்க..... உட்காருங்க........ நாங்க பேசிட்டிருந்த விஷயமும், நீங்க பேசப் போகிற விஷயமும் ஒரே அலைவரிசையில் இருந்தால் மணிமார்பனின் கொலைக்கு காரணமான நபர் யார் என்கிற விஷயமும், கொலைக்கான மோட்டிவேஷன் எது என்கிற கேள்விக்கான பதிலும் கிடைக்கும். நாங்க ஐ.டி.பீப்பிள். அயாம் நித்திலன், ஷீ ஈஸ் சாதுர்யா, ஹி ஈஸ் அவர் பாஸ் மிஸ்டர் அருள் ......."

"எனக்குத் தெரியும்....... !" என்று சொல்லிக்கொண்டே அருளுக்கு பக்கத்தில் மணலில் உட்கார்ந்தார் வேல்முருகன். மெல்ல பேச ஆரம்பித்தார்.

"கடந்த ரெண்டு நாட்களாய் கஜபதியை நான் ஃபாலோ அப் பண்ணிட்டு வந்தேன். அவர் உங்க கூட தொடர்பில் இருக்கிறது தெரிய வந்தது"

கஜபதி குறுக்கிட்டு படபடத்தார்.

"என்ன ஸார் இது ....... மணிமார்பன் கொலை விஷயமாய் என்மேல சந்தேகப்படறீங்களா ? "

"ஏன் சந்தேகப்படக்கூடாதா....... ? மணிமார்பனின் ஃபேமிலியோடு உங்களுக்கு நெருக்கம் அதிகம். மணிமார்பனுக்கும், உங்களுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் விரோதம் ஏற்பட்டு இருக்கலாம் இல்லையா? "

rajesh kumar-series five star dhrogam -28

"ஸார்......நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும், முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் குடும்பத்துக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்தது. அதெல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதுக்கப்புறம் அந்த குடும்பமே ஒரு கொள்ளைக்கூட்டமாய் மாறி மக்களோட வரிப்பணத்தை சுரண்டி கோடி கோடியாய் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க..... துவக்கத்துல நானும் அந்த ஊழலுக்கு உதவியாய் இருந்தேன். போகப்போக எனக்குப்பிடிக்கலை. ஒரு தடவை முகில்வண்ணன்கிட்டே 'தலைவரே...... இப்படி பணம் சம்பாதிக்கிறது ஒரு நாளைக்கு ஆபத்துல போய் முடியலாம். சம்பாதிச்சது போதும்ன்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டே 'கஜபதி! ஒரு வாளியை எடுத்துட்டுப்போய் கடலில் தண்ணியை மொண்டுட்டு வந்தா யார்க்கு தெரியப்போகுதுன்னு சொன்னார். அதுக்கப்புறம் நான் அவருக்கு புத்தி சொல்றதை விட்டுவிட்டேன். அதே நேரத்துல அவரை விட்டு ஒரேடியாய் விலகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் விலக முடிவு பண்ணினேன். முகில்வண்ணன் சம்பாதிச்சு வெச்சுருக்கிற கோடிக்கணக்கான ஊழல் பணத்தைப்பற்றிய தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நினைச்சேன். அந்த சமயத்துலதான் ஐ.டி.ஆபீசர்ஸ் நித்திலனையும், சாதுர்யாவையும் முகில்வண்ணனோட பங்களாவில் அவரோட அறுபதாவது பிறந்ததின விழாவில் எதிர்பாராதவிதமாய் சந்திச்சேன். ரெண்டு பேருமே வருமான வரித்துறை ஆபீசர்ஸ்ன்னு ஏற்கனவே எனக்கு தெரிஞ்சிருந்ததால அவங்ககிட்டே முகில்வண்ணனைப்பத்தி எல்லா விபரங்களையும் சொன்னேன். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்துட்டிருக்கும்போதுதான் மணிமார்பன் கொலை செய்யப்பட்டார். எனக்கும், மணிமார்பன் கொலை செய்யப்பட்டதற்கும் ஒரு நூலிழை அளவு கூட சம்பந்தம் இல்லை ஸார்"

வேல்முருகன் கையமர்த்திவிட்டு கேட்டார்.

"அப்படீன்னா மணிமார்பனோட கொலைக்கு காரணமானவங்க யாராய் இருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க ? "

"கோடம்பாக்கம் பள்ளிக்கூட வாசல்ல வெச்சு நீலகண்டனை ஒரு பொண்ணு தன்னோட காலில் இருந்த ஸ்லிப்பரை கழற்றி அடிச்சதா அந்த பலான தொழில்காரி லலிதா தன்னோட ஸ்டேட்மெண்ட்ல சொல்லியிருக்கா. அந்தப் பொண்ணு யார்ங்கிறதை கண்டுபிடிச்சுட்டா மணிமார்பனோட கொலைக்கு காரணமான நபர் யார் என்கிற உண்மை வெளியே வந்துடும் ஸார் "

rajesh kumar-series five star dhrogam -28

"அந்தப் பொண்ணு யார்ங்கிறதை கண்டுபிடிச்சுட்டேன்"

"யார் ஸார் அது ... ? "

"பேரு......... மிருணாளினி........ " வேல்முருகன் இப்படிச் சொன்னதும் அவரோடு வந்திருந்த அந்த இளம் பெண்ணை கஜபதி, அருள், நித்திலன், சாதுர்யா நான்குபேரும் திரும்பிப்பார்த்தார்கள்.

வேல்முருகன் மெல்லச் சிரித்தார்.

"நீங்க நினைக்கிற மாதிரி இந்தப் பெண் மிருணாளினி கிடையாது. மிருணாளினியோட ஃப்ரண்ட் அஞ்சனா. மிருணாளினியை தேடி அவளுடைய வீட்டுக்குப் போனபோது அவளுடைய வீடு பூட்டியிருந்தது. அவளுடைய செல்போன் எண்ணைக் காண்டாக்ட் பண்ணின போது எந்த ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை....... மிருணாளினியோட வீட்டை சோதனை போட்டுகிட்டு இருக்கும்போதே அவளைத்தேடி இந்தப் பெண் அஞ்சனா வந்தாங்க. மிருணாளினியைப்பற்றி அஞ்சனாகிட்டே விசாரிச்சபோதுதான் சில உண்மைகள் வெளியே வந்தது"

வருமானவரித்துறை அருள் கேட்டார்.

"என்ன உண்மைகள்... ? "

"கஜபதி ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி உங்ககிட்டே என்ன சொல்லிட்டிருந்தார் ? மணிமார்பனுக்கும் நடிகை ஜெயதாராவுக்கும் தொடர்பு இருந்ததையும் பிறகு ஜெயதாரா வடநாட்டுப்பக்கம் போய் ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பையில் செட்டிலாகி அப்புறம் ஏதோ ஒரு பிரச்சனைக்காக விஷம் குடிச்சு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொன்னாரா இல்லையா ... ? "

"ம் ...... சொன்னார் "

"கஜபதி கடைசியாய் ஒரு வார்த்தை சொன்னார். அதாவது ஜெயதாரா நாலைஞ்சு வருஷத்துக்கு முந்தி தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கும், மணிமார்பன் இப்ப கொலை செய்யப்பட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னார்"

"ஆமா..... "

"வாய்ப்பு இருக்குன்னு நான் சொன்னேன். அதுக்கு என்ன காரணம் தெரியுமா... ? "

அருள் மெலிதாய் புன்முறுவல் பூத்தார்.

"அதை நீங்கதான் சொல்லணும்"

"மிருணாளினி வேறு யாருமில்லை. ஜெயதாராவோட யங்கர் சிஸ்டர். ஜெயதாரா சினிமாத்துறைக்கு போயிட்டதால ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜெயதாரா மும்பையில் இருந்தபோது மிருணாளினி அடிக்கடி போய் பார்த்துட்டு வந்திருக்கா....உறவும் சீராய் இருந்திருக்கு....... ஜெயதாராவோட வாழ்க்கை திசைமாறிப்போனதுக்குக்காரணம் மணிமார்பன்தான் என்கிற கோபம் மிருணாளினிக்கு நிறையவே இருந்திருக்கு. ஸோ..... மணிமார்பனின் கொலைச்சம்பவத்துக்குப் பின்னால் மிருணாளினியின் பங்களிப்பும் இருக்க வாய்ப்பு அதிகம். அதனால்தான் அவ இப்போ தலைமறைவாய் இருக்கா....... ! "

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் இருந்த சாதுர்யா வேல்முருகனை ஏறிட்டாள்.

"அந்த மிருணாளினியை எப்படி கண்டுபிடிச்சீங்க.......... "

வேல்முருகன் மெல்லச் சிரித்தார். "போலீஸை ஒரு நாள் ஏமாற்றலாம். ரெண்டு நாள் ஏமாற்றலாம். ..... எல்லா நாளும் ஏமாற்ற முடியாதே....... ! "

சாதுர்யா குழப்பமாய்ப் பார்க்க வேல்முருகன் அதே சிரிப்போடு தொடர்ந்தார்.

"மணிமார்பனின் கொலைவழக்கில் முக்கியமான ஒரு நபர் நீலகண்டன். அவனை ஸ்லிப்பரில் அடிச்ச பெண் யார்ன்னு தெரிஞ்சுக்க நானும், லலிதாவும் தொடர்ந்து

மூணு நாள் அந்த ஸ்கூலுக்கு போனோம். குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கும், கூட்டிப் போவதற்கும் வரும் பெண்களை ஸ்கூல் பிரின்ஸிபால் ரூம்ல உட்கார்ந்து சி.சி.டி.வி. காமிரா மூலமாய் மானிட்டரிங் பண்ணிப் பார்த்தோம். லலிதா பார்த்த அந்தப் பெண் வரவேயில்லை. நானும், லலிதாவும் அந்த பிரின்ஸிபால் தெய்வநாயகி அறையில் இருக்கும்போது அந்த அம்மாள் டென்ஷனாவே இருப்பாங்க. நாங்க அறைக்குள்ளே போனதுமே தன்னோட செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவாங்க. அந்த ஏ.ஸி. ரூமிலும் வேர்த்து வழிவாங்க... இயல்பாய் இருக்கிற மாதிரி பேசுவாங்க. சிரிப்பாங்க. எல்லாமே செயற்கைத்தனம். இது என்னோட மனசுக்கு நெருடலாய் பட்டது. தெய்வநாயகியைப்பற்றி வெளியில் ஒரு ரகசிய விசாரணையை மேற்கொண்டபோது அவங்களைப்பத்தி எல்லாருமே நல்லவிதமாய் சொன்னதால எம் மனசுக்குள்ளே ஒரு குழப்பம் இருந்து வந்தது. அந்த சமயத்திலதான் அந்த சம்பவம் நடந்தது"

"என்ன சம்பவம் ஸார் ? "

நான்காவது நாள் காலை பிரின்ஸிபால் அறையில் உட்கார்ந்து மானிட்டரிங் பண்ணிக்கொண்டிருந்தபோது காரிலிருந்து ஒரு பெண் இறங்கி குழந்தையோடு ஸ்கூல் காம்பஸில் நுழைந்தாள். லலிதா என்னையும், பிரின்ஸிபாலையும் பார்த்தபடியே பதட்டமாய் எழுந்தாள். விழிகள் விரிய பெரிதாய் சத்தம் போட்டு... இந்த பெண்தான்....! இவதான் அன்னிக்கு நீலகண்டனை ஸ்லிப்பரில் அடிச்ச பொண்ணுன்னு சொல்லவே நான் நாற்காலியிலிருந்து வேகமாய் எழுந்தேன். பிரின்ஸிபாலோட அறைக்கதவை பிளக்காத குறையாக திறந்துகொண்டு வெளியே குழந்தையோடு நடந்து போகும் அந்தப்பெண்ணை நோக்கிப்போனேன்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 28
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X