ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 4

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னுடைய 'வாட்ஸ் அப்'பில் தெரிந்த அந்த சிவப்பு 'எக்ஸ்; குறியைப் பார்த்ததும் லேசாய் முகம் மாறினாள் சாதுர்யா.

"நித்தி"

"ம்"

"காரை அப்படி ஓரமாய் நிறுத்து"

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 4

"ஏன் என்னாச்சு?"

"நம்ம பாஸ் அருள் என்னோட 'வாட்ஸ் அப்'புக்கு ரெட் எக்ஸ் குறி அனுப்பியிருக்கார்."

நித்திலனும் அதே விநாடி தன்னுடைய முக நிறத்தை தொலைத்துவிட்டு இடது பக்கமாய் காரை ஒடித்து ஒரு மரத்துக்கு கீழே கொண்டு போய் நிறுத்தினான்.

"அவர் உனக்கோ எனக்கோ வாட்ஸ் அப்'பில் ஒரு ரெட் எக்ஸ் குறி அனுப்பினால் நாம செல்போனில் பேசக்கூடிய நிலைமையில் இருந்தால் உடனே பேசனும்ன்னு அர்த்தம் இல்லையா?"

"ஆமா..."

"ம்... பேசு..."

சாதுர்யா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு செல்போனில் சீஃப் ஆபீஸர் அருளின் செல்போன் எண்ணைத் தொட்டான். மறுமுனையில் ஒரே ஒரு முறை ரிங் போய் அருளின் குரல் கேட்டது.

ஸ்பீக்கரை ஆன் செய்தாள் சாதுர்யா.

"சாதுர்யா"

"குட் மார்னிங் ஸார்"

"என்னால குட்மார்னிங் சொல்ல முடியாது"

"ஏன் ஸார்?"

"இப்ப நீயும் நித்திலனும் எங்கே இருக்கீங்க?"

"முகில் வண்ணனோட பண்ணை வீட்டுக்கு அஞ்சு கிலோமீட்டர் தள்ளி"

"காரை ஓரமாய் நிறுத்திட்டீங்களா?"

"நிறுத்திட்டோம்"

"உங்களை யாரும் நோட் பண்ணலையா?"

"ஸார்.... ரோட்டோட ரெண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான ட்யூப்லைட்டுகளும், ராட்சஸ பேனர்களும்தான் இருக்கு... ஆள்நடமாட்டம் அறவே இல்லை.... ஏன் ஸார்.... அந்த ரெட் எக்ஸ்.... எனிதிங்க் இம்பார்ட்டண்ட்?"

"மோஸ்ட் இம்பார்ட்டண்ட்"

"சொல்லூங்க ஸார்...."

"ஆப்ரேஷன் ஆக்டோபஸ் திட்டம் எப்படியோ கசிஞ்சு முகில்வண்ணனோட காதுக்குப் போயிடுச்சுன்னு டெல்லியில் இருந்து எனக்கு தகவல் வந்தது."

"எ...எ... எப்படி ஸார்?"

"தெரியலை.... நம்ம நாட்ல 1947-லில் தியாகிகள் இருந்தாங்க. இப்ப துரோகிகள்தானே இருக்காங்க... இந்தத் திட்டத்தை சதுர்புஜன் எவ்வளவோ ரகசியமாய் வெச்சிருந்தும் எப்படியோ கசிஞ்சு வெளியே வந்து யார் காதுக்கு விஷயம் போகக்கூடாதோ அவங்க காதுக்கு போயிடுச்சு"

"போனா என்ன ஸார்.... இது ஒண்ணும் அஃபிஷியல் ரெய்டு கிடையாதே... அந்த பண்ணை வீட்டை நானும் நித்திலனும் வேவு பார்க்கப்போறோம் அவ்வளவுதானே?"

"சாதுர்யா! நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்...."

"சொல்லுங்க ஸார்"

"முகில்வண்ணன் இந்நேரத்துக்கு 'அலர்ட்' ஆகியிருப்பார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கும். உங்க ரெண்டு பேர் மேலேயும் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் விளைவுகள் வேறுவிதமாய் இருக்கும்".

"எங்க உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம்ன்னு சொல்ல வர்றீங்களா ஸார்?"

"எஸ் ... நான் ஏற்கனவே சொன்னது போல் முகில்வண்ணன் வெரி பவர்ஃபுல் பர்சன்... ஏற்கனவே சி.எம்.மாய் இருந்தவர். அவர் பதவியில் இல்லைன்னாலும் இன்னிக்கும் அவர்தான் ஷேடோ சீஃப் மினிஸ்டர். அவர் நினைச்சா எந்த ஒரு அநியாயத்தையும் பண்ணிட்டு அதை நியாயப்படுத்த முடியும்....!"

"ஸார்... எனக்கொரு சந்தேகம்?"

"என்ன?"

"இப்ப என்கூட போன்ல பேசிட்டிருக்கிறது சீஃப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் எங்கள் பாஸ் அருள்தானே?"

"அதுல உனக்கென்ன சந்தேகம் சாதுர்யா?"

"இல்ல ஸார் அவர் இப்படியெல்லாம் டிஸ்கரேஜ் பண்ற மாதிரி பேச மாட்டாரே?"

"உன்னோட கேலி கிண்டல் எனக்குப் புரியுது சாதுர்யா.... ஆனா நேத்து காலையில் உங்ககிட்டே பேசின அந்த பாஸ் அருள் இப்படி கோழைத்தனமாய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. நமக்கு தைரியம் வேண்டியதுதான். ஆனா, அந்த தைரியம் விவேகத்தோடு இணைந்து இருக்கணும்."

"ஓ.கே. ஸார். ... நாங்க இப்ப என பண்ணணும்....?"

"முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குப் போக வேண்டாம். காரை திருப்பிகிட்டு வந்துடுங்க...!"

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் ஸ்பீக்கரில் அருள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நித்திலன் தயக்கமாய் குறுக்கிட்டான்.

"ஸார்.... நான் நித்திலன்"

"சொல்லு நித்தி"

"நான் பேசலாமா ஸார்?"

"தாராளமாய்"

"ஸாரி ஸார்"

"எதுக்கு இப்போ ஸாரி?"

"முதல் தடவையாய் நானும் சாதுர்யாவும் உங்க பேச்சை மீறி நடக்கப்போறோமே அதுக்காக....!"

"நித்தி....நீ... என்ன சொல்ற?"

"ஸார்... இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸ் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அதுக்கான பிள்ளையார் சுழியை இன்னிக்கு நாம போட்டுட்டோம். ஸ்டார்ட் பண்ணிடலாம். யார்க்காகவும் எதற்காகவும் நாம பயப்பட வேண்டியது இல்லை ஸார்."

"எனக்கு பயம் எல்லாம் கிடையாது நித்தி. டெல்லியில் இருந்து இப்போதைக்கு இந்த ஆபரேஷன் வேண்டாமேன்னு தகவல் தரும்போது நான் என்ன செய்ய முடியும்....? அயாம் ஹெல்ப்லஸ் .... நீங்க ரெண்டு பேரும் புறப்பட்டு வந்துடுங்க.... இல்லேன்னா பாண்டிச்சேரி போய் ஒருநாள் ஜாலியாய் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்க... லீவ் சாங்க்‌ஷன் பண்ணிடறேன்...."

"ஆஹா... இப்ப நீங்க ரெண்டாவதாய் ஒண்ணு சொன்னீங்களே அது ஓ.கே. ஸார்..."

"ரெண்டு பேரும் சாயந்தரம் அறு மணிக்குள்ளே திரும்பிடுங்க... ஏழு மணிக்கு ஐ.டி. ஆபீஸர்ஸ் மீட் ஒண்ணு ஏற்பாடு பண்ணப்பட்டிருக்கு... அந்த மீட்டிங்க்ல சில விஷயங்களை பத்திப் பேசப் போறோம்."

"சரியாய் ஆறு மணிக்கெல்லாம் சென்னையில் இருப்போம் ஸார்....!"

"ஹேவ் ஏ ஜாய்ஃபுல் டே..." மறுமுனையில் அருள் செல்போனை அணைக்க சாதுர்யா தன் செல்போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு நித்திலனை ஒரு தீப்பார்வை பார்த்தாள்.

நித்திலன் காரின் ஸ்டீரியங்கில் தாளம் போட்டுக் கொண்டே 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது' என்று பாடினான்.

"நித்தி .... உன்னோட வாயைக் கொஞ்சம் சாத்துறியா?"

"இதோ... சாத்திட்டேன்"

"நாம இப்போ பாண்டிச்சேரி போகப் போறதில்லை"

"போகப் போறதாய் நானும் சொல்லலையே...?"

"பின்னே... பாஸ் பாண்டிச்சேரிக்குப் போய் ஜாலியாய் ஒரு நாளை ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னப்ப 'ஆஹா'ன்னு சந்தோஷப்பட்டியே?"

"சந்தோஷப்பட்டதாய் யார் சொன்னது?"

"பின்னே?"

"சந்தோஷப்பட்ட மாதிரி நடிச்சேன்"

"நடிச்சியா?"

"ஆமா...."

"ஏன்?"

"அப்பத்தான் அவர் நம்புவார்....!"

"நித்தி.... நீ இப்ப என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியலை..."

"சாதுர்யா.... நாம இப்போ பாண்டிச்சேரி போறது இல்லை."

"சென்னை திரும்பறோமோ?"

"அதுவும் இல்லை...."

"அப்புறம்....?"

"ஆப்ரேஷன் ஆக்டோபஸை கண்டினியூ பண்றோம். நம்ம பாஸ் வேணுமின்னா மேலிடத்துக் கட்டளைக்குப் பணியலாம். நாம பணிய வேண்டியது இல்லை. பாஸ் நம்ம ரெண்டு பேர்க்கும் லீவு கொடுத்துட்டார். ஆனா ஸ்டில் வீ ஆர் ஆன் ட்யூட்டி. திட்டமிட்டபடி முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குள்ள நுழையறோம். ஆப்ரேஷன் ஆக்டோபஸில் நாம் என்னென்ன பண்ணனும்னு பாஸ் அருள் சொல்லியிருந்தாரோ அதையெல்லாம் கச்சிதமாய் செஞ்சு முடிக்கப் போறோம்....!"

சாதுர்யா நித்திலனை இமைக்காமல் பார்த்தாள். அவன் சிரித்தான். "இந்த பார்வைக்கு என்ன பொருள் என் பிரிய சகியே?"

"நி...த்...தி....!"

"சாதுர்யா! நீ ரொம்பவும் உணர்ச்சிவசப்படற மாதிரி தெரியுது. உன்னால பேச முடியலைன்னா பரவாயில்லை. ஒரு முத்தம் கொடுத்துடு.... அது டெபிட் கார்டாய் இருந்தாலும் பரவாயில்லை. கிரெடிட் கார்டாய் இருந்தாலும் பரவாயில்லை ஆல் கார்ட்ஸ் ஆர் வில் பி டேக்கன் ஹியர்"

சாதுர்யா தன் மென்மையான முஷ்டியால் அவனுடைய இடது கன்னத்தில் குத்தினாள்.

"நித்தி....! உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த தைரியம்தான்... நம்ம பாஸ் பண்ணை வீட்டுக்கு போக வேண்டாம்ன்னு சொன்னா அங்கே ஏதோ ஆபத்து இருக்குன்னு நூறு சதவீதம் நம்பலாம். ஆனா, நீ ரிஸ்க் எடுக்கிறே... உனக்கு பயமாய் இல்லை....?"

"நான் பயப்பட்டு ரொம்ப நாளாச்சு. அதாவது போன வருஷம் ஜூன் மாசம் ஏழாம் தேதி காலை 11.15 மணியிலிருந்து நான் பயப்படறதை விட்டுட்டேன்."

"ஏன் அன்னிக்கு என்ன நடந்தது?"

"அன்னிக்குத்தான் நீ என்னைப் பார்த்து நாம ரெண்டு பேரும் காதலிச்சா என்னடான்னு கேட்டே...!"

நித்திலன் சிரிப்போடு சொல்லிக் கொண்டிருக்க்ம்போதே காரின் கண்ணாடி கதவு வேகமாய்த் தட்டப்படும் சத்தம் கேட்டது.

"யாரது?"

திடுக்கிட்டு போனவர்களாய் இருவரும் உற்றுப் பார்த்தார்கள். ட்யூப்லைட்களின் வெளிச்சத்தில் அந்தப் பெண் தெரிந்தாள்.

இளம் பெண்.

வியர்த்து வழிந்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் 5

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 4th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற