For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ சொன்னபடி வேலையை முடிச்சாச்சு.. ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (21)

Google Oneindia Tamil News

வேல்முருகன் சற்றே அதிர்ந்து போனவராய் கையில் சாவிக்கொத்தோடு கஜபதியையும், அமிர்தலிங்கத்தையும் மாறி மாறி பார்த்தபடி கேட்டார்.

"வீட்டுக்கு உள்ளேயிருந்து ஏதோ சத்தம் வர்ற மாதிரி இல்லை......? "

"ஆமா ஸார்..... யாரோ நடக்கிற மாதிரியும், நாற்காலியை தள்ளிப்போடற மாதிரியும் இருக்கு "

"இப்ப என்ன பண்ணலாம்......? "

" ஸார்..... உள்ளே இருக்கிறது திருடனாய் இருக்கலாம்"

rajesh kumar series five star dhrogam - 21

"பூட்டின வீட்டுக்குள்ளே எப்படி திருடன்......? "

"வீட்டுக்கு பின்புறமாய் வந்திருக்கலாம் ஸார்"கஜபதி சொல்ல அமிர்தலிங்கம் குறுக்கிட்டு மறுத்தார்.

" ஸார்..... நான் இந்த வீட்டுக்கு இரண்டு தடவை வந்திருக்கேன். வீட்டுக்கு பின்புறம் வழி கிடையாது"

" நிச்சயமாய் தெரியுமா ......? "

"தெரியும் ஸார்"

" சரி ..... நான் இப்ப இந்த "மாஸ்டர் கீ பன்ச்"சால் இந்தப் பூட்டை "அன்லாக்"பண்றேன். உள்ளே இருக்கும் நபர் நம்மைத் தாக்க முயற்சி பண்ணலாம். அலர்ட்டாய் இருக்கணும் "

வேல்முருகன் சொல்லிக்கொண்டே எதிரில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு நான்கைந்து சாவிகளை கொடுத்த பிறகு ஓரு சாவியின் நுழைவுக்குப்பின் சுலபமாய் திறந்து கொண்டது.

வேல்முருகன் காலால் தள்ளினார். அது உள் வாங்கிக் கொண்டது.

வீட்டுக்குள் ஓரு ஜீரோ வாட்ஸ் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க அந்த சோகையான வெளிச்சத்தில் ஓரு சிறிய பீரோ, மேஜை, டீபாய், டி.வி. தெரிந்தது. வேல்முருகன் தன்னிடம் இருந்த பிஸ்டலை சற்றே உயர்த்திப் பிடித்துக்கொண்டு எச்சரிக்கையோடு உள்ளே நுழைந்தார்.

அவரைத் தொடர்ந்து கஜபதியும், அமிர்தலிங்கமும் மிரண்ட பார்வைகளோடு பின் தொடர்ந்தார்கள்.

இரண்டே அறைகள். முதல் அறையில் யாரும் இல்லை. இரண்டாவது அறையான படுக்கையறையில் கட்டிலும், மெத்தையும் பார்வைக்கு தட்டுப்பட்டது. வேல்முருகன் சுவரில் இருந்த சுவிட்சைத் தேய்க்க ஓரு எல்.இ.டி. பல்பு ஓளிர்ந்து வெளிச்சத்தில் அறையை நிரப்பியது.

rajesh kumar series five star dhrogam - 21

"வீட்டுக்குள்ளே யாரும் இருக்கற மாதிரி தெரியல ஸார்"

"சத்தம் கேட்டதே......? "

"அது பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தமாய் கூட இருக்கலாம் ஸார். பொதுவாக இது மாதிரியான ராத்திரி வேளைகளில் பக்கத்து வீடுகளில் கேட்கிற சத்தம் கூட நம்ம வீட்ல கேட்கிற மாதிரி இருக்கும்"

"மே..... பி...... " என்று தலையசைத்த வேல்முருகன் அந்த அறையிலிருந்து நகர முயன்ற விநாடி சட்டென்று நின்றார். கஜபதி குழப்பமாய்ப் பார்த்தார்.

"என்ன ஸார்......? "

"ஏதோ வாசனை வரலை......? "

"வாசனையா......? "

"எஸ்...... ஏதோ பூவாசனை........ அநேகமாய் மல்லிகை வாசனை ....!"

"எனக்கு வரலை ஸார்......? "

ஓரு போலீஸ்காரனுக்கும், மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...... " சொன்னவர் சட்டென்று குனிந்து கட்டிலின் அடியில் பார்த்தார்.

மஞ்சள் நிற சேலையில் ஓரு பெண் பிராக்கெட் குறியைப்போல் உடம்பை வளைத்து படுத்திருந்தாள்.

வேல்முருகன் குரல் கொடுத்தார்.

"பார்த்துட்டோம்....... வா...... வெளியே...... "

சில நொடிகளுக்குப்பின் அந்தப்பெண்ணின் உடம்பு மெல்ல அசைந்தது. மெதுவாய் ஊர்ந்து வெளியே வந்தாள். தடுமாற்றமாய் எழுந்து நின்றாள். கை நடுக்கத்தோடு கும்பிட்டாள். அவள் தலையில் இருந்த மல்லிகைச்சரம் மூச்சையடைக்கிற மாதிரி மணத்தது.

" ஸார்..... என்னை ஓன்றும் பண்ணிடாதீங்க ஸார்"

அவளை நெருங்கினார் வேல்முருகன். தன் சுட்டுவிரலை உயர்த்தினார்.

"ஏய்..... நீ யாரு ....... பூட்டியிருக்கிற இந்த வீட்டுக்குள்ளே என்ன பண்ணிட்டிருக்கே....... எப்படி உள்ளே வந்தே......? "

"ஸ ... ஸ....ஸார்..... என்னை வீட்டுக்குள்ளே வெச்சு பூட்டிட்டு போனது நீலகண்டன்தான்...... என்னை தப்பா நினைக்காதீங்க ஸார்"

"நீலகண்டன் உன்னை பூட்டி வெச்சுட்டு போனானா......? "

"ஆமா ஸார்..... நீலகண்டனுக்கும் எனக்கும் ரொம்ப நாளாவே பழக்கம்..... "

"பழக்கம்ன்னா......?

" அது..... அது... வந்து...... "

"புரியுது...... நீ தொழில்காரியா......? "

"ஆமா ஸார்..... வாரத்துக்கு ஓரு தடவை என்னை இதுமாதிரியான ராத்திரி நேரத்துல வரச் சொல்லுவார். நானும் வருவேன். விடிகிற வரை இருந்துட்டு போவேன்.... இன்னிக்கும் அது மாதிரிதான் வந்தேன். சரக்கும், சாப்பிட பிரியாணியும் வாங்கி வர்றேன். .... நீ வீட்டுக்குள்ளே இருக்கிறது பக்கத்து வீட்டுகாரங்களுக்குத் தெரிய வேண்டாம்..... பூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டுப் போனவர் ரெண்டு மணி நேரமாய் வரலை... அவரோட செல்போனை காண்டாக்ட் பண்ணினேன்..... போன் "சுவிட்சு ஆஃப்"ன்னு வந்தது. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. எப்படி வெளியே போறதுன்னும் புரியலை. பயத்துல எதுவும் செய்யத் தோணலை. உட்கார்ந்துட்டு இருக்கும்போதுதான் உங்க பேச்சுக்குரலும், பூட்டை அசைக்கிற சத்தமும் கேட்டது. எந்திரிச்சு வந்து கதவோட சந்து வழியாக உங்க மூணு பேரையும் பார்த்தேன். நீங்க யாரு ..... எதுக்காக வந்து இருக்கீங்கன்னு தெரியலை..... அதுதான் பயந்து போய் கட்டிலுக்கு அடியில் ஓண்டிக்கிட்டேன்"

வேல்முருகன் அந்தப் பெண்ணையே சில விநாடிகள் வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு கேட்டார்.

"உம் பேர் என்ன ......? "

"லலிதா ஸார்"

"நீலகண்டனை உனக்கு எத்தனை வருஷமாய் தெரியும்......? "

"கடந்த ஓரு ஆறுமாத காலமாய்தான் தெரியும்"

"அவனோட பழக்கவழக்கமெல்லாம் எப்படி ......? "

" ஸார்..... அந்த ஆளு என்னோட கஸ்டமர். வாரத்துக்கு ஓரு தடவை வந்துட்டு போவேன். பீடி, சிகரெட், டாஸ்மாக் சரக்குன்னு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு......."

"அவனோட ப்ரெண்ட்ஸ் யார் யார்ன்னு தெரியுமா......? "

"அதெல்லாம் தெரியாது ஸார்"

அரசியல் பற்றியோ ...... கட்சித்தலைவர்களைப்பற்றியோ உன்கிட்ட பேசியிருக்கானா ......? "

"இல்லை ஸார்"

"சரி ...... இந்த ஆறுமாச காலமாய் நீ நீலகண்டனோடு நெருக்கமாய் இருந்திருக்கே....... அவனோடு இந்த வீட்ல இருக்கும்போது அவனுக்கு வெளியில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்து இருக்கும். அவனும் அந்த போன் கால்ஸை அட்டெண்ட் பண்ணி பேசியிருப்பான். அப்படி அவன் பேசும்போது அந்த பேச்சை நீ நோட் பண்ணியிருக்கியா......? "

"இல்லை ஸார்"

"நல்லா யோசனை பண்ணிப்பாரு "

"இதுல யோசனை பண்ண என்ன ஸார் இருக்கு......? "

"சரி...... லாக்கப்புக்குள்ளே வந்து உட்கார்ந்து நிதானமா யோசனை பண்ணிச் சொல்லு...... "

அந்த லலிதாவின் முகம் கலவரத்துக்குப் போக வேல்முருகன் தொடர்ந்தார்.

"இதோ பார்........ உன்னை வீட்ல வெச்சு பூட்டிட்டு சரக்கும், பிரியாணியும் வாங்கப்போன நீலகண்டன் இப்ப உயிரோடு இல்லை. டாஸ்மாக் கடை வாசலிலே செத்துப்போயிருக்கான். பின்னந்தலையில் பெரிய ரத்தக்காயம். யாரோ அடிச்சு கொன்னிருக்காங்க "

லலிதா உறைந்து போயிருந்தாள். முகம் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

" ஸார்..... எனக்கு ஓன்றும் தெரியாது நீலகண்டன் எனக்கு ஓரு கஸ்டமர் அவ்வளவுதான்...... "

அதுவரை மெளனமாய் இருந்த கஜபதி லலிதாவிடம் ஏதோ பேச முயற்சித்தபோது அந்த சத்தம் கேட்டது. "ர்ர்ர்ர்ர்ர்"

ஏதோ ஓன்று உறுமியது போன்ற சத்தம்.

வேல்முருகன் திரும்பி பார்த்தார். அறையின் இடது பக்க மூலையில் பழைய நியூஸ் பேப்பர்கள் போடப்பட்டு குவியலாய் தெரிய அதற்குள்ளேயிருந்து அந்த "விர்ர்ர்ர்ர்ர்" சத்தம் கேட்டது.

வேக நடையில் போய் அந்த பழைய செய்திதாள்களை விலக்கினார் வேல்முருகன்.

செல்போன் ஓன்று வெளிச்சமாய் ஓளிர்ந்து வைபரேஷன் மோடில் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. எடுத்து "ஆன்" செய்துவிட்டு காதுக்கு ஓற்றினார். "ம்ம்ம்" என்று மட்டும் குரல் கொடுத்தார். மறுமுனையில் ஓருவன் சிரித்தான்.

" என்ன நீலு..... ஃபுல்மப்பா..... நீ சொன்னபடி வேலையை முடிச்சாச்சு..... ஆனா ரொம்ப தூரம் தள்ளித்தான் மணிமார்பனோட பாடியை டிஸ்போஸ் பண்ண வேண்டியதாயிருச்சு"

வேல்முருகனின் ஓட்டு மொத்த உடம்பும் 144 தடைச் சட்டத்துக்கு உட்பட்டு எச்சரிக்கையாயிற்று.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 21th episode of Rajeshkumars new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X