For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையா.. பைவ் ஸ்டார் துரோகம் (46)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்


சாமுவேல் முகில்வண்ணனை கலக்கத்தோடும் பயத்தோடும் பார்த்தான்.

“அய்யா ...... என்ன சொல்றீங்க ? “

“போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் தன்னோட காக்கி யூனிஃபார்ம் புத்தியைக் காட்டிட்டார். வருமானவரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கார். டெல்லி அதிகாரிகளும், சென்னை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் நம்ம வீட்டை சோதனை என்கிற பேர்ல புரட்டிப் போட்டு இருக்காங்க.... வீட்டுக்குக் கீழே கட்டியிருக்கிற செல்லர் அறைகளையும் கண்டுபிடிச்சு சோதனை போட்டு இருக்காங்க“

“அய்யா....... பண்ணை வீட்ல செல்லர்கள் கட்டியிருக்கிற விஷயம் கமிஷனர்க்குத் தெரிய வாய்ப்பில்லையே“

“அந்த நன்றி கெட்ட கஜபதி சொல்லியிருப்பான்“

Rajesh Kumars Five Star Droham serial episode 46

“அய்யா....... இப்ப அந்தப் பணம் தூங்கிட்டு இருக்கிற இடம் உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். அந்த இடம் தெரிஞ்ச உங்க மாப்பிள்ளையும், மகனும் இப்போ உயிரோடு இல்லை. நான் உயிரோடு இருக்கிறவரை உங்களுக்கும் சரி அந்தப் பணத்துக்கும் சரி, பாதுகாப்பாய் இருப்பேன்ய்யா..... “ முகில்வண்ணன் பரிவான பார்வையோடு சாமுவேலின் தோளின் மீது கையை வைத்தார்.

“நீ என்கிட்டே வேலைக்குச் சேர்ந்த போது உன்னை நான் ஒரு சாதாரண ட்ரைவராதான் நினைச்சேன். ஆனா என் மேல நீ காட்டின அன்பையும் பிரியத்தையும் பார்த்து இந்த வீட்ல ஒருத்தனாய் உன்னை என்னோட மனசளவில் ஏத்துகிட்டேன். என் மேல ஒரு சின்னதாய் துரும்பு விழுந்தாகூட துடிச்சுப் போனதை நான் பார்த்து இருக்கேன். எனக்கு சி.எம்.போஸ்ட் கிடைக்காதபோது என்னால ஒரு நேரம் மட்டும்தான் சாப்பிட முடியலை. ஆனா நீ ரெண்டு நாள் சாப்பிடாமே அழுதிட்டே இருந்தேன்னு தெரிய வந்தபோது உன்னை அந்த நிமிஷமே என்னோட மகனாய் நினைச்சுகிட்டேன். என்னோட விரோதிகள் யார்ன்னு எனக்குக்கூட தெரியாது. ஆனா உனக்குத் தெரியும். என்னை அழிக்க நினைச்சவங்களை எல்லாம் நீ அடையாளமே தெரியாத அளவுக்கு அழிச்சே. அதனாலதான் என்னோட ரகசியங்களையெல்லாம் உன்கூட நான் பகிர்ந்துகிட்டேன். இனி என்னோட வாழ்நாள் பூராவும் நீ ஒருத்தன் போதும்.....! “

“அய்யா....... “ சாமுவேல் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

“என்ன ? “

“அந்த போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்தை நீங்க மன்னிக்கலாம். நான் மன்னிக்க தயாராயில்லை. உங்களுக்கு துரோகம் பண்ணின ஆள் இனி உயிரோடு இருக்க கூடாது“

“வேண்டாம் சாமுவேல் ........ கமிஷனரை பழி தீர்க்க வேண்டிய நேரம் இது அல்ல.... வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் நாம ஒளிச்சு வெச்சிருக்கிற பணத்தைத் தேடித் தேடி களைச்சுப் போகட்டும். மணிமார்பன், செந்தமிழ் மரணங்களை போலீஸ் அவ்வளவு சுலபத்துல விட்டுடமாட்டாங்க. இன்வெஸ்டிகேஷனை தீவிரப்படுத்துவாங்க. ரெண்டு பேரோட மரணத்துக்கும் காரணம் மிருணாளினிதான்னு போலீஸை நம்ப வைக்க வேண்டியது நம்ம வேலை... இல்லேன்னா தலைமறைவாய் இருக்கிற அவளை போலீஸூக்கு முன்னாடி நாம தேடிக் கண்டுபிடிச்சு அவளை இல்லாமே பண்ணனும். இல்லாத அவளை போலீஸ் தேடிகிட்டே இருக்கட்டும்“

“அய்யா...... ! நீங்க இதை இப்பத்தான் சொல்றீங்க... நான் அவளை எனக்குத் தெரிஞ்ச ஆட்கள் மூலமா.... ரெண்டு நாளா தேடிகிட்டு இருக்கேன். கிடைச்சா அதே நிமிஷம்....... “ முகில்வண்ணன் கையமர்த்தினார்.

“அவசரப்படாதே சாமுவேல்.... போலீஸ் இப்ப நம்ம பக்கம் இல்லை. சி.எம். வஜ்ரவேலுவும் எனக்கு எதிராகத்தான் இருக்கார். வஜ்ரவேலுக்குத் தெரியாமே என்னோட வீட்ல ஐ.டி.ரெய்ட் நடக்க சாத்தியமேயில்லை. நாம இப்போ எப்படி காய் நகர்த்தினாலும் சரி, மாட்டிக்க வாய்ப்பு அதிகம். பொறுமையாய் இருப்போம். இன்னும் ஒரு வாரம் பத்துநாள் இதே கிராமத்து வீட்லயிருந்துகிட்டே என்னோட ஹார்ட்அட்டாக் நடிப்பைக் கண்டினியூ பண்றேன். சென்னையில் எதுமாதிரியான விஷயங்கள் போயிட்டு இருக்குன்னு இன்ஃபார்ம் பண்ண கமிஷனர் ஆபீஸ்ல சார்லஸ் என்கிற கான்ஸ்டபிள் இருக்கார். அங்கே எது நடந்தாலும் நம்ம காதுக்கு வந்துடும். இப்ப எனக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்“

“சொல்லுங்கய்யா “

“செந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையான்னு தெரியணும். அந்த திரிசூலம் ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு கொடு. நான் டாக்டர்கிட்டே பேசறேன்“

“அய்யா.......! எனக்கு ஒரு சந்தேகம். என்னோட மனசுல இருக்கிறதைச் சொல்லிடறேன். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் செந்தமிழ் உயிரோடு இல்லை என்கிற விஷயத்தை உங்ககிட்டே சொல்லாமே நேரத்தைக் கடத்தறாங்க. நாளைக்குக் காலையில் பத்து மணி வரைக்கும் பார்ப்போம். அதுக்கப்புறம் போன் பண்ணி கேட்கலாம்.... செந்தமிழோட சாவில் டாக்டர்ஸூக்கு சந்தேகம் வந்து இருக்கலாம். போலீஸூக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கவும் வாய்ப்பு இருக்கு.... “

“நீ சொல்றதும் சரிதான். செந்தமிழ் செத்ததை எத்தனை நேரத்துக்குத்தான் மறைக்க முடியும்.... நாளைக்கு காலை வரை பார்ப்போம். அந்த தகவல் வர்றதுக்கு முன்னாடி நான் இன்னொரு காரியத்தைப் பண்ணியாகணும்“

“என்னான்னு சொல்லுங்கய்யா “

“அந்த ஐநூறு கோடி ரூபாய் பணத்தை மறைச்சு வெச்சிருக்கிற இடம் எதுன்னு இந்த நிமிஷம் வரைக்கும் உனக்கும் எனக்கும்தான் தெரியும் இல்லையா? “

“ஆமாங்கய்யா “

“அந்த இடத்தை என்னோட பொண்ணு கயல்விழிக்கும், மருமகள் மலர்க்கொடிக்கும் காட்டிடலாம்ன்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்குப் பின்னாடி அதை பாதுகாப்பாய் வெச்சிருக்க வேண்டியது அவங்க பொறுப்பு. மாப்பிள்ளை மணிமார்பனும், மகன் செந்தமிழும் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தா அந்த மொத்த ரூபாயும் அவங்களுக்குத்தான் கிடைச்சிருக்கும். ஆனா என்னையே போட்டுத்தள்ள முயற்சி பண்ணினதாலதான் அவங்களையே இல்லாமே பண்ண வேண்டியதாயிடுச்சு......“

“அய்யா..... ! இந்த 500 கோடி பண விஷயம் உங்க பொண்ணுக்கும், மருமகளுக்கும் அதிர்ச்சியாய் இருக்காதா ? “

“இருக்காது..... ஏன்னா இந்த பண விவகாரம் அவங்களுக்குத் தெரியும். எங்கே இருக்குன்னுதான் தெரியாது. நாளைக்குக் காலையில் அதையும் காட்டிடலாம்ன்னு இருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னாக்கூட நீதான் அவங்களுக்கு பாதுகாப்பாய் இருக்கணும்“

“அய்யா..... ! நான் இந்த வீட்டு நாய். நீங்க யாரை கைக்காட்டி பார்த்துக்கன்னு சொன்னாலும் நான் அவங்களுக்கு கடைசி வரைக்கும் விசுவாசமாய் இருப்பேன்“

“ அந்த நம்பிக்கையில்தான் உன்கிட்டே நான் எல்லாத்தையும் சொல்லியிருக்கேன்... சரி... நீ போய் படு. நாளைக்குக் காலையில் ஆறுமணிக்கெல்லாம் என்னை எழுப்பி விட்டுடு... குளிச்சு சாப்ட்டுட்டு ஒரு எட்டுமணிக்குள்ளே கிளம்பிடலாம்..... ! “

“சரிங்கய்யா “

“அந்த மாத்திரையை எடு..... அதை விழுங்கினாத்தான் தூக்கமே வரும்“

சாமுவேல் சுவர் அலமாரிக்க்குப் போய் மாத்திரை எடுத்து வந்தான்.

மறுநாள் காலை எட்டு மணி

முகில்வண்ணன் குளித்து பளீரென்று வேஷ்டி சட்டையில் நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி காப்பியைக் குடித்துக் கொண்டிருக்க, எதிரில் மகள் கயல்விழியும், மருமகள் மலர்க்கொடியும் நின்றிருந்தார்கள்.

கயல்விழி கலக்கமான பார்வையோடு கேட்டாள். “ அப்பா அந்த 500 கோடி ரூபாயை இந்த கிராமத்துல எந்த இடத்துல வெச்சிருக்கீங்க ? “

முகில்வண்ணன் தன் உதட்டில் நெளியும் ஒரு விரக்தியான புன்னகையோடு கேட்டார்.

“ஏம்மா... மாப்பிள்ளை உன்கிட்டே சொல்லலையா ? “

“ஒரு தடவை அவர்கிட்டே கேட்டேன். கன்னத்துல பளார்ன்னு ஒரு அறை விட்டு உனக்குத் தெரிய வேண்டிய நேரத்துல தெரியும்ன்னு சொன்னார்“

முகில்வண்ணன் பார்வை இப்போது மலர்க்கொடியின் மேல் பதிந்தது.

“என்னோட மகன் செந்தமிழ் உன்கிட்டே 500 கோடி ரூபாயைப்பத்தி என்னிக்காவது சொல்லியிருக்கானாம்மா ? “

“இல்ல மாமா....அவர்க்கு எந்நேரமும் கட்சிப்பணிதான். ஒரு ரெண்டு நிமிஷம் கூட என்கிட்டே நின்னு பேச மாட்டார்“

“உங்க ரெண்டு பேரோட நிலைமை எனக்குப் புரியுதும்மா. எனக்கு மகனாய் பொறந்தவனும் சரி, மாப்பிள்ளையாய் வந்து வாய்ச்சவரும் சரி, மனசுல ஈரத்தன்மை இல்லாதவங்க. நாளைக்கு நடக்கப்போகிற பின்விளைவுகளைப் பற்றி தெரிஞ்சுக்காமே முரட்டுத்தனத்தோடு செயல்படக்கூடியவங்க..... என்கிட்டேயும் அது மாதிரியான முரட்டுத்தனம் இருக்கு. ஆனா நான் அதை வெளிப்படுத்தற விதம் வேற மாதிரி இருக்கும்“ என்று பேசிக்கொண்டே போனவர் சில விநாடிகளுக்கு பேச்சை நிறுத்திவிட்டு பின்பக்கம் திரும்பிப்பார்த்து குரல் கொடுத்தார்.

“சாமுவேல் ! “

ஒரு தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டான் சாமுவேல் “அய்யா..... ! “

“இப்படி வந்து எம் முன்னாடி நில்லு“

அவன் கையைக் கட்டிக்கொண்டு நின்றான். முகில்வண்ணன் மகளையும் மருமகளையும் பார்த்தபடி பேச ஆரம்பித்தார். “ நான் இனி எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப் போறேன்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்குப் பின்னாடி நீங்க நம்ப வேண்டிய ஒரு ஆள் இருக்கான்னா அவன் சாமுவேல்தான். நம்ம குடும்பத்துக்காக தன்னோட உயிரையேகூட கொடுக்கத் தயங்காதவன். அரசியலில் பழம் சாப்பிட்டு கொட்டையைப் போட்ட நானே ஒருத்தனை நம்பறேன்னா அவன் எந்த அளவுக்கு இருப்பான்னு நீங்களே நினைச்சுப் பார்த்துக்கலாம். இந்த கிராமத்துல அந்த 500 கோடி ரூபாய் எங்கே இருக்குன்னு எனக்கும் சாமுவேலுக்கு மட்டும்தான் தெரியும். இப்ப நீங்களும் தெரிஞ்சுக்கப் போறீங்க.... புறப்படுங்க போலாம் “

முகில்வண்ணன் சொல்லிக்கொண்டே எழுந்து வீட்டு வாசலில் நின்றிருந்த காரை நோக்கிப் போக, கயல்விழியும், மலர்க்கொடியும் கலக்கம்படிந்த முகங்களோடு பின்தொடர்ந்தார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 46
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X