For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"எஸ் ஸார்...... அயாம் வெயிட்டிங்..." - ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (23)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

லலிதா பேச்சை நிறுத்த வேல்முருகன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தார்.

“எதிர்பாராத சம்பவமா......? “

“ஆமா ஸார்....... சிவப்பாய் அழகாய் இருந்த அந்தப் பொண்ணு நீலகண்டன்கிட்டே பேசிட்டு இருக்கும்போதே அவ தன் காலில் இருந்த ஸ்லிப்பரை கழற்றி அவனை அடிக்க ஆரம்பிச்சா.... அந்த அடியில் நிலை குலைஞ்சு போன நீலகண்டன் பின் வாங்கி ஓடிட்டான். ரோட்ல போயிட்டிருந்த யாருமே அந்தச் சம்பவத்தை கவனிக்கலை. நான் மட்டுந்தான் நோட் பண்ணினேன் “

“இந்த சம்பவத்தைப்பற்றி நீ அடுத்த முறை நீலகண்டனை சந்திக்கும்போது கேட்டியா......? “

“கேட்கலை ஸார்“

rajesh kumar series five star dhrogam 23

“ஏன் கேட்கலை.......“

“ஸார் நான் ஓரு தொழில்காரி. நீலகண்டனோட தாலி கட்டின பெண்டாட்டி கிடையாது. ஓரு பொண்ணுகிட்டே நீ ஏன் ஸ்லிப்பர்ல அடி வாங்கினேன்னு நீலகண்டன்கிட்டே நான் கேட்டா அந்த ஆளுக்கு கோபம் வரும். நீ என்னை வேவு பார்த்தியான்னு கேட்பான். அதுக்கு அப்புறம் அவன் என்னைக் கூப்பிடமாட்டான். அவன் அடி வாங்கினது எனக்கு தேவையில்லாத விஷயம்ன்னு நினைச்சேன். கேட்கலை....... ! “

சில விநாடிகள் மெளனம் சாதித்த வேல்முருகன் லலிதாவை ஏறிட்டார். “இந்த சம்பவம் எப்ப நடந்ததுன்னு சொன்னே......? “

“போன மாசத்துல ஓரு நாள் “

“தேதி ஞாபகம் இருக்கா ......? “

“இல்லை ஸார்“

“சம்பவம் நடந்த நேரம் ......? “

“சாயந்தரம் நாலு மணி “

“அது எந்த ஸ்கூல்......? “

“யுனைடெட் இந்தியா காலனிக்குப் பக்கத்துல அந்த ஸ்கூல் இருக்கு ஸார். ஸ்கூல் பேரு தெரியாது......!“

“அந்தப் பொண்ணை மறுபடியும் பார்த்தா உனக்கு அடையாளம் தெரியுமா ......? “

“தெரியும் ஸார்.... அந்தப் பொண்ணு ரொம்பவும் அழகாய் இருந்ததாலே முகம் நல்லாவே ஞாபகம் இருக்கு. டீச்சராய் வேலை பார்க்கிறான்னு நினைக்கிறேன் ஸார்“

“நாளைக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் நீயும், நானும் அந்த ஸ்கூலுக்கு ஓரு காரில் போறோம். ஸ்கூலுக்கு எதிர்ல காரை நிறுத்திவிட்டு அந்தப் பொண்ணை வாட்ச் பண்றோம்......“

“ஸார் ........ என்னை இந்தப் பிரச்சினையில் மாட்டி விட்டுடாதீங்க ஸார் ......... நீலகண்டன் ஓரு தப்பான ஆளுன்னு தெரிஞ்சிருந்தா அவன் கூட பழகியிருக்கவே மாட்டேன்......! “

“இதோ பார்........ நீலகண்டன் பண்ணியிருக்கறது திருட்டு இல்லை. கொலை..... அதுவும் கொலை செய்யப்பட்டவர் சாதாரண நபர் கிடையாது. முன்னாள் முதலமைச்சரோட மருமகன். இந்தக் கொலையை நீலகண்டன் மட்டும்தான் தனித்து பண்ணியிருக்க முடியாது. அவனுக்குப் பின்னாடி யாரோ சிலர் இருக்காங்க..... அந்த யாரோ யார்ன்னு கண்டு பிடிக்கற வரை நீயும் விசாரணை வளையத்தை விட்டு வெளியே வர முடியாது. உனக்கு வீடு எங்கே ......? “

“சூளைமேட்ல ஸார்“

“நீ ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு போக முடியாது. பெண் போலீஸோட கஸ்டடியில்தான் இருக்கணும்“

வேல்முருகன் அவளைப் பார்த்து கடுமையான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் அழைத்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். டிஸ்ப்ளேயில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் பெயர் தெரிந்தது.

செல்போனை காதுக்கு ஓற்றினார் வேல்முருகன்.

“சொல்லுங்க ஜெயச்சந்திரன்“

“ஸார் ..... நான் இப்ப ஓரு போலீஸ் டீமோடு வில்லிவாக்கம் வந்து நீங்க சொன்ன குப்பைமேட்டு ஸ்பாட்டுக்கு பக்கத்துல நின்னுட்டிருக்கேன். ஓரு இடத்துல மட்டும் மண் சற்று இளகியிருக்கிறதால அந்த இடத்தை தோண்டும் வேலை நடந்துட்டிருக்கு.... நீங்க ஸ்பாட்டுக்கு வர்றீங்களா ......? “

“நான் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே புறப்பட்டு வர்றேன்.... இங்கே ஓரு என்கொயரி போயிட்டிருக்கு. அதை முடிச்சுட்டு வந்துடறேன்..... ! “

“எஸ் ஸார்...... அயாம் வெயிட்டிங்...... “ செல்போனை அணைத்த வேல்முருகன் லலிதாவிடம் திரும்பினார்.

“இதோ பார்.... நீலகண்டனைப்பற்றி தெரிஞ்ச ஓரே நபர் இப்போதைக்கு நீ மட்டும்தான்...... போலீஸூக்கு நீ முழு ஓத்துழைப்பு கொடுத்தால் தான் முதலமைச்சரோட மருமகனை கொலை பண்ணினது யார்ங்கிற உண்மை தெரிய வரும். நீ ஏதாவது ஓரு விஷயத்தை மறைச்சாலும் அதுவே உன்னை இந்த கேஸ்ல மாட்ட வெச்சுடும்..... என்ன நான் சொல்றது புரியுதா ......? “

“பு...பு...புரியுது ஸார்....... !“

“இன்னும் கொஞ்ச நேரத்துல பெண் போலீஸ் வருவாங்க. அவங்க கூட போயிடு“

லலிதா மிரட்சியோடு தலையாட்டிக்கொண்டு இருக்கும்போதே வேல்முருகனின் செல்போன் மறுபடியும் வாயைத் திறந்தது. எடுத்துப்பார்த்தார்.

ஜெயச்சந்திரன் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். போனை காதுக்கு ஓற்றினார்.

“என்ன.... மணிமார்பனோட பாடி தோண்டின இடத்துல கிடைச்சுதா ......? “

“ கிடைச்சுது ஸார்.... ஆனா....... “

“ஆனா... என்ன...... சொல்லுங்க ஜெயச்சந்திரன் “

“மணிமார்பனின் டெட்பாடியோடு இன்னொரு டெட்பாடியும் இருக்கு ஸார். ரெண்டு பாடியையும் சேர்த்து புதைச்சிருக்காங்க “

“என்னது இன்னொரு பாடியா......? “

“ஆமா ஸார்..... அது ஓரு பெண்ணோட பாடி“

*****

விடியற்காலை நான்கு மணி.

ஜி.ஹெச்சின் பல பிளாக்குகள் இன்னும் இருட்டில் இருக்க முகில்வண்ணனின் கார் பிரதான நுழைவு வாயிலுக்குள் பிரவேசித்து ஹாஸ்பிடலின் பின்பக்கம் இருந்த மார்ச்சுவரிக்கு எதிரே இருந்த ஓரு மரத்துக்குக் கீழே போய் நின்றது.

காரின் நான்கு கதவுகளும் திறந்து கொள்ள முகில்வண்ணன், செந்தமிழ், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், டி.ஐ.ஜி.இப்ராஹிம் இறங்கினார்கள்.

மார்ச்சுவரிக்கு முன்பாக காத்திருந்த வேல்முருகனும், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனும் அவர்களை எதிர்கொண்டு சல்யூட் வைத்து தளர்ந்தார்கள்.

கமிஷனர் ஆதிமுலம் வேல்முருகனை ஏறிட்டார்.

“மீடியாவுக்கு நியூஸ் போகலையே“

“இல்ல ஸார்.... !“

“இனியும் போகக்கூடாது. மணிமார்பனோட டெட்பாடி மட்டும் கிடைச்சிருந்தா பரவாயில்லை. கூடவே ஓரு பெண்ணோட டெட்பாடியும் சேர்ந்து கிடைச்சிருக்கு. இந்த செய்தி மீடியாக்களுக்கு போனால் அது மிகப் பெரிய அதிர்வு அலைகளை உருவாக்கும்“

“தெரியும் ஸார்....... அதனால்தான் ஹாஸ்பிடல் டீனுக்கு தகவல் கொடுத்து இந்த செக்சனில் இருந்த எல்லோரையும் வெளியே அனுப்பிட்டோம்.... !“

முகில்வண்ணன் தளர்ந்து போன நடையோடும் கவலையில் இறுகிப்போன முகத்தோடும் மகன் செந்தமிழின் தோளைப்பற்றிக் கொண்டு நடந்தார். மார்ச்சுவரி

அறை ஃபார்மலின் திரவ வாசனையோடு வந்தது. வயிற்றைக் கலக்கியது.

ஹாஸ்பிடல் டீன் சகாயம் பவ்யமாய் எதிர்கொண்டு உள்ளே கூட்டிப்போனார். அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த அகலமான தகர மேஜையின் மேல் வெள்ளைத்துணிகளால் போர்த்தப்பட்ட மணிமார்பனின் உடம்பும், அந்தப்பெண்ணின் உடம்பும் பார்வையில் இடறியது.

முகில்வண்ணன் தடுமாற்றமாய் நடந்து போய் மணிமார்பனின் தலைமாட்டில் நின்றார். உதடுகள் துடித்து கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. குரல் தழுதழுத்தார்.

“மாப்ள..... உங்களை இப்படியொரு கோலத்தில் பார்க்கவா எம் பொண்ணை உங்களுக்கு கட்டி வெச்சேன்? மூணு நாள் கல்யாணம் நடத்தி ஊர்ல இருக்கிற கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து ஓரு லட்சம் பேர்க்கு விருந்து சாப்பாடு போட்டேன். தமிழ்நாட்ல இருக்கிற பராமரிக்கப்படாத கோயில்களையெல்லாம் என் பொறுப்புல எடுத்துகிட்டு கும்பாபிஷேகம் நடத்தி வெச்சேன். 108 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். எந்த ஓரு புண்ணியமும் எம்பெண்ணோட தாலியைக் காப்பாத்தல..... உங்களுக்கு எதுவும் நடந்து இருக்காது. நீங்க உயிரோடு திரும்பி வருவீங்க என்கிற நம்பிக்கையோடு எம்பெண்ணு வீட்ல காத்துட்டிருக்கா.... ஆனா நீங்க இப்படி...... “

கதறி அழுதவரை மகன் செந்தமிழ் ஆதரவாய் அணைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீருக்கு பதிலாய் அனல் பறந்தது.


“அப்பா ! இது அழறதுக்கான நேரம் இல்லை. நம்ம மாப்பிள்ளையை இப்படிக்கொண்டு வந்து படுக்க வெச்சவங்க யார்ன்னு கண்டுபிடிச்சு அதே மாதிரி அவங்களையும் படுக்க வைக்கணும்“

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அவனுடைய தோளைத் தொட்டார்.

“செந்தமிழ்“

அவன் திரும்பினான். கண்களில் நீரோடு என்ன என்பது போல் பார்த்தான்.

செத்துப்போன அந்தப் பொண்ணு யார்ன்னு தெரியுதா......? “

“தெரியல...... “

“பொண்ணோட வலது கையை பாருங்க“

செந்தமிழ் பார்த்தான்.

பார்வை நிலைத்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 23
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X