For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

முகில்வண்ணன் இன்னமும் குரலைத்தாழ்த்தினார்.

“நீ....... என்னோட மகன் செந்தமிழோட கதையை முடிச்சிட்டேன்னு சொல்றே...... ஆனா அந்த திரிசூலம் ஹாஸ்பிடலில் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரலையே சாமுவேல். பையன் செத்துட்டான்னு தெரிஞ்சா அப்பாவுக்கு அந்த ஹாஸ்பிடலோட டாக்டர் போன் பண்ணி சொல்லணுமா இல்லையா ? “

சாமுவேல் அதிர்ச்சி விலகாத முகத்தோடு தலையாட்டினான். “அதான்ய்யா..... எனக்கும் சந்தேகமாயிருக்கு. தம்பி செந்தமிழ் செத்துட்டதை டாக்டர்கள் எதுக்காக மறைக்கணும்“

Rajesh Kumars Five Star Droham serial episode 44

“சாமுவேல்.... நீ என்கிட்டே எட்டு வருஷமா ட்ரைவரா வேலை பார்க்கிறே...... நான் என்னோட கட்சிக்காரங்களையும் சொந்தக்காரங்களையும் நம்பாமே உன்கிட்டே எத்தனையோ பொறுப்புகளை ஓப்படைச்சிருக்கேன். நீயும் அதையெல்லாம் நிறைவேற்றிக் காட்டி என்னைச் சந்தோஷப்படுத்தியிருக்கே..... என்னோட அரசியல் பயணத்திற்கும், முன்னேற்றத்துக்கும் தடைக்கல்லாய் இருந்த நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டியனை தீர்த்துக்கட்டும் வேலையை ஆறு வருஷத்துக்கு முந்தி உன்கிட்டே கொடுத்தேன். காலையில் வாக்கிங் போன ஜெயபாண்டியனைப்போட்டு தள்ளற அந்த வேலையைக் கச்சிதமாய் நீயும் பண்ணி முடிச்சே. இன்னிக்கு தேதி வரை போலீஸாலே ஜெயபாண்டியனை கொலை பண்ணினது யார்ன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமாய் உன்னோட திறமை இருந்தது. அந்தத் திறமையை நம்பித்தான் உன்கிட்டே என்னோட மாப்பிள்ளை மணிமார்பனையும்,

மகன் செந்தமிழையும் சத்தமில்லாமே போட்டு முடிக்கச் சொன்னேன். நீ ரொம்பவும் தயங்கினே. நான் அப்ப என்ன சொன்னேன்? “

“அ.....அய்யா......அது.... வந்து வந்து“

“சொல்லு.... சாமுவேல்...... அப்ப நான் என்ன சொன்னேன்? “

“அந்த ரெண்டு பேரையும் நீங்க போட்டுத் தள்ளலைன்னா அவங்க ரெண்டு பேரும் அந்த 500 கோடி ரூபாய் பணத்துக்காக உங்களைத் தீர்த்துக் கட்ட ஒரு திட்டத்தோடு தயாராக இருக்கிறதாய் நீங்க சொன்னீங்க. அதுக்கு ஆதாரமாய் உங்க மாப்பிள்ளை மணிமார்பனும், மகன் செந்தமிழும் பேசிகிட்ட அந்த ஆடியோ பதிவை எனக்குப் போட்டுக் காட்டீனீங்க...... “

“அந்த ஆடியோ பதிவைக் கேட்டுட்டு நீ கோபப்பட்டு ஆத்திரப்பட்டு கத்தினே..... அப்ப நீ என்ன சொன்னே? “

“நீங்க உயிரோடு இருக்கணும்ன்னா அவங்க ரெண்டு பேரும் உயிரோடு இருக்கக்கூடாதுன்னு சொன்னேன். அவங்க ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டற பொறுப்பையும் என்கிட்டே கொடுத்தீங்கய்யா. நானும் அந்தப் பொறுப்பை எடுத்துகிட்டு ரெண்டு பேரோட கதையையும் முடிச்சேன். ஆனா நான் பண்ணின ஒரே தப்பு அந்த வாட்டர் லாரி டிரைவர் நீலகண்டனை நம்பி அவன்கிட்டே மணிமார்பனோட பாடியை டிஸ்போஸ் பண்ணச் சொன்னதுதான். போலீஸ் அவனை மோப்பம் பிடிப்பாங்கன்னு கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. அந்த க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் துல்லியமாய் விசாரணை பண்ணி புத்திசாலித்தனமாய் மூவ் பண்ணிட்டிருந்தார். அவரை டைவர்ட் பண்றதுக்காக ரோட்டோரத்துல தூங்கிட்டிருந்த ஒரு பிச்சைக்கார பெண்ணை மர்டர் பண்ணி அவ கையில் MMS ன்னு பச்சை குத்த வெச்சு மாப்பிள்ளை மணிமார்பனோட பாடியோடு சேர்த்து புதைச்சேன். ஆனா மணிமார்பனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்க வாய்ப்பில்லைன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னதும் வேல்முருகன் விசாரணையோட கோணத்தை மாற்றி இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணி மிருணாளினி வரைக்கும் போயிட்டார்“

முகில்வண்ணன் நரை ரோமம் வளர்ந்திருந்த தன்னுடைய தாடையைத் தடவியபடி மெல்லச் சிரித்தார்.

“அந்த வேல்முருகன் அப்படி திசைமாறிப் போனதும் ஒருவகையில் நமக்கு அதிர்ஷடமான விஷயம்தான். என்னோட மாப்பிள்ளை மணிமார்பனுக்கும் மிருணாளினியோட அக்கா ஜெயதாராவுக்கும் எதுமாதிரியான தொடர்பு இருந்தது என்கிற விஷயமும், ஜெயதாரா மும்பைக்கு போய் தற்கொலை பண்ணிகிட்டு சாகக்காரணமே மணிமார்பன்தான் என்கிற விஷயமும் வேல்முருகனுக்கு தெரிஞ்சிருக்கும். தன்னோட அக்காவின் மரணத்துக்கு காரணமான மணிமார்பனை மிருணாளினிதான் பழி தீர்த்திருக்கான்னு போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்தை வெச்சு போலீஸ் டிபார்ட்மெண்டையே நம்ப வைக்கணும்..... அதே மாதிரி செந்தமிழோட மரணத்துக்கு காரணம் போன வருஷம் ரியல் எஸ்டேட் பிசினஸில் செந்தமிழுக்கும் ஈச்சம்பாக்கத்தில் இருக்கிற பட்டறை கஜாவுக்கும் நடந்த மோதலை காரணம் காட்டணும்“

“அய்யா “

“என்ன ? “

“போலீஸூக்கு உங்கமேலேயும் என்மேலேயும் சந்தேகம் வந்துடாதே? “

“எப்படி வரும் சாமுவேல் ? மாப்பிள்ளை மணிமார்பனும், என் மகனும் என்னைக் கொத்த காத்திருந்த கருநாகங்கள் என்கிற விஷயம் உனக்கு மட்டும்தான் தெரியும். இந்த உலகத்தோட பார்வைக்கு அவங்க ரெண்டு பேருமே என்னோட பாசமான மாப்பிள்ளை, அன்பான மகன்...... “

“அய்யா..... இந்த வீட்ல இன்னும் எத்தனை நாள் நாம தங்கியிருக்கப் போறோம் ? “

“என்னோட பொண்ணு கயல்விழியும், மருமகள் மலர்க்கொடியும் ஒரு மனமாறுதலுக்காக இங்கே என்னைக்கூட்டிட்டு வந்து இருக்காங்க. நோயாளி வேஷம் போட்டாச்சு. இனி அவங்க சொல்றவரைக்கும் இங்கேயே இருக்க வேண்டியதுதான்.... எனக்கு இருக்கிற ஒரே மனக்குழப்பம் என்னான்னா திரிசூலம் ஹாஸ்பிடலில் இருக்கிற செந்தமிழோட கதையை முடிச்சுட்டதாய் நீ சொல்றே. ஆனா அங்கேயிருக்கிற டாக்டர்ஸ் எனக்கு போன் பண்ணி செந்தமிழ் இறந்துட்டதாய் எனக்கு இன்ஃபாரம் பண்ணலை. அப்படீன்னா செந்தமிழ் உயிரோடு இருக்கான்னு அர்த்தம் “

“இல்லீங்கய்யா..... அந்த ஹாஸ்பிடலோட ஆர்டர்லிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பின்பக்க வாசல் வழியா போய் தம்பியோட கதையை நான்தான் முடிச்சேன். ஆக்ஸிஜன் வர்ற குழாயை அழுத்திப் பிடிச்சுகிட்டேன். உடம்பு உயிருக்காக போராடி துடிக்க ஆரம்பிச்சது. கடைசி துடிப்பு வரைக்கும் இருந்து பார்த்துட்டுதான் வெளியே வந்தேன். சுவரில் மாட்டியிருந்த கார்டியோ கிராப் மானிட்டரைப் பார்த்தேன். இதயத்துடிப்பு நின்று போனதுக்கு அறிகுறியாய் சிவப்புக்கோடு மட்டும் இருந்தது. நீங்க வேணும்ன்னா ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி தம்பி செந்தமிழுக்கு இப்போ எதுமாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கீங்கன்னு கேளுங்கய்யா...... “

“ நீ சொல்றதும் சரிதான் அந்தப்போனை எடு..... ! “

சாமுவேல் எழுந்து போய் சுவர் அலமாரியில் சார்ஜரில் இருந்த முகில்வண்ணனின் செல்போனை எடுத்தான். டிஸ்ப்ளேயில் ட்ரூ காலர் அழைப்பில் ஒரு புது எண் தெரிந்தது.

“ அய்யா..... உங்க போன் மியூட்ல இருந்தபோது ட்ரூ காலர்ல யாரோ ரெண்டு தடவை கூப்பிட்டு இருக்காங்க....... “

“நெம்பர் என்ன ? “

சாமுவேல் எண்களை வாய்விட்டுப் படித்தான். கேட்ட முகில்வண்ணன் லேசாய் முகம் மாறினார்.

“இது ஏதோ ஒரு புது நெம்பர் மாதிரி தெரியுது. அந்த நெம்பர்க்கு கால் பண்ணி என்கிட்டே குடு“

சாமுவேல் அந்த எண்ணைத் தொட்டுவிட்டு அந்த நெம்பர்க்கு கால் ஆப்ஷனுக்கு போய் அதைத் தேய்த்தான்.

மறுமுனையில் ரிங் போக செல்போனை முகில்வண்ணனிடம் நீட்ட அவர் வாங்கித் தன் வலது காதுக்குப் பொருத்தினார். மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.

“ஸார்....... நான் கமிஷனர் ஆபீஸில் இருக்கிற கான்ஸ்டபிள் சார்லஸ் பேசறேன் “

முகில்வண்ணன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“சொல்லு...... என்ன விஷயம்“

“ஸாரை காண்டாக்ட் பண்ணிப் பேச சாயந்தரம் ஏழு மணியிலிருந்து போன் பண்றேன்..... “

“என்னோட போன் மியூட்ல இருந்தது. ஏதாவது முக்கியமான விஷயமா ? “

“ஆமா..... ஸார்“

“சொல்லு “

“கமிஷனர் ஆதிமுலம் கட்சி மாறிட்டார்“

“ நீ சொல்றது புரியலை “

“ஸார்.... போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் மத்திய அமலாக்கப்பிரிவுத்துறை அதிகாரிகளுக்கும் விசுவாசமாய் மாறி வேலை பார்த்துட்டு இருக்கார்“

“ நீ என்ன சொல்ற ? “

“உண்மையை சொல்லிட்டிருக்கேன் ஸார். சாயந்தரம் ஆறுமணியிலிருந்து சென்னை ஈ சி ஆரில் இருக்கிற உங்க பண்ணை வீட்ல வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அங்குலத்தையும் துருவி பாரத்துட்டாங்க... ஸ்பாட்ல நம்ம கமிஷனர் ஆதிமுலமும் இருந்தார். உங்க வீட்டு செக்யூரிட்டி அதிகாரிகள் இப்போ போலீஸ் வளையத்துக்குள்ளே இருக்காங்க. அவங்க செல்போன்களும் போலீஸ் மேற்பார்வையில். நீங்க உங்க செக்யூரிட்டிகளிடம் பேசினாலும் அவங்க இயல்பாய் எதுவும் நடக்காத மாதிரிதான் பேசுவாங்க..... நீங்க இப்போ எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நேரம் ஸார்......நான் இப்படி உங்களுக்கு தகவல் கொடுக்கக் காரணம் எம் பொண்ணோட கல்யாணத்தை நல்லவிதமாய் நடத்தி முடிக்க நீங்க எனக்கு ரெண்டு லட்ச ரூபாய் குடுத்து உதவி பண்ணினதுதான்......“

முகில்வண்ணன் சில விநாடிகள் வரை அதிர்ச்சியில் இருந்துவிட்டு பிறகு சுய உணர்வுக்கு மீண்டார்.

“சார்லஸ் “

“ஸார்“

“என்னோட வீட்ல சோதனை எவ்வளவு மணி நேரம் நடந்தது“

“ரெண்டரை மணி நேரம் ஸார்“

“ஏதாவது கைப்பற்றினாங்களா ? “

“இல்ல ஸார்..... எதுவும் கிடைக்கலைன்னு பேசிகிட்டாங்க.......! “

“சரி.....அங்கே என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிச்சுப் பார்த்து எனக்கு அப்பப்ப தகவல் கொடு ! “

“ கண்டிப்பா ஸார்“

முகில்வண்ணன் செல்போனை மெளனமாக்கிவிட்டு சாமுவேலை ஏறிட்டார்.

“சாமுவேல்! “

“அய்யா...... “

வேட்டை நாய்கள் பணவாசனையை மோப்பம் பிடிச்சிருச்சு..... என்ன பண்ணலாம் ? “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 45
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X