For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 8

By Shankar
Google Oneindia Tamil News

நித்திலனும் சாதுர்யாவும் அடிவயிற்றில் அமிலம் சுரந்து நிலை குலைந்து போனவர்களாய் தங்களுக்கு எதிரே ஒரு மினி ராட்சஸனைப் போல் நின்றிருந்த அந்த கஜபதியை கலவர விழிகளோடு பார்த்தார்கள்.

நித்திலனின் தோள்பட்டையை இன்னமும் இறுக்கமாய் பிடித்து அழுத்திய அவர் தங்கப்பல் ஒன்று இடம் பிடித்து இருந்த தன்னுடைய பல்வரிசையைக் காட்டிச் சிரித்தார்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 8

"என்ன தம்பி... உங்க அப்பா முத்துப்பாண்டியன் உன்னை ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பிட்டு தன்னோட சுயமரியாதையை தக்க வெச்சுகிட்டார் போலிருக்கு...!"

நித்திலன் மனசுக்குள் ஓர் எச்சரிக்கை போஸ்டர் அவசர அவசரமாய் பசை போட்டு ஒட்டப்பட்டது.

"இந்த அரசியல் வெள்ளைச்சட்டை ராத்திரி குடித்த விஸ்கியின் போதை தெளியாமல் யாரோ ஒரு முத்துப்பாண்டியனை என்னுடைய அப்பாவார் நினைத்துக் கொண்டு பேசுகிறார்."

முதுகில் ஒரு தட்டு விழுந்தது.

"என்ன தம்பி.... அப்படி பார்க்கிறே... நீ இங்கே யாரை வேணும்ன்னாலும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது...."

"அது வந்து...."

"இதோ பார் தம்பி.... உங்கப்பாவுக்கு பத்திரிக்கை அனுப்பும் போதே முகில்வண்ணன் என்கிட்டே 'முத்துபாண்டியன் வரமாட்டார். ... அவர் அவரோட வீட்டிலிருந்து யாரையாவது ஒருத்தரையாவது அனுப்பி வைப்பார்'ன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியேதான் நடந்திருக்கு.... உங்கப்பாவுக்கு ரோஷம் அதிகமாய் இருந்தாலும் பாசம் உள்ள மனுஷன்.... அதான் தனக்கு வர மனசில்லேன்னாலும் உன்னையும் உன் கூட தன்னோட மருமகளையும் அனுப்பி வெச்சிருக்கார். உங்கப்பாவை ரெண்டு வருஷத்துக்கு முந்தி கட்சி மாநாட்டில் பார்த்தது. அப்ப அவர் கூட நீயும் இருந்தே. இந்த சுருட்டை முடி க்ராப் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு...."

அந்த கஜபதி பேசிக் கொண்டே போக நித்திலனின் பார்வை கீழே விழுந்திருந்த இன்விஸிபிள் 'ஹியரிங் எய்ட்' நோக்கி போயிற்று. அதைக் கவனித்துவிட்ட கஜபதி கேட்டார்.

"அது என்ன தம்பி கறுப்பா....?"

"ஹியரிங் எய்ட்"

"செவிட்டு மெஷினா...?"

"ஆ...ஆமா...." சொல்லிக்கொண்டே அதை குனிந்து எடுத்து பொருத்திக் கொண்டான்.

"என்ன தம்பி! இந்த சின்ன வயசிலேயே காது கேட்காத பிரச்சனையா?"

"இல்லை... காதுக்குள்ளே ஒரு சின்ன கட்டி. ஒரு ரெண்டு மாசம் இதை போட்டுகிட்டு இருந்தா அது சரியாயிரும்ன்னு டாக்டர் சொன்னார்."

"அப்படியா... சரி... வாங்க...!"

நித்திலன் திகைத்து போனவனாய் "எங்கே?" என்றான்.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 8

"தலைவரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு ஃபங்க்‌ஷன் நடக்கிற இடத்துக்கு போயிடலாம்...."

"அவரை எதுக்கு பார்க்கணும் வேண்டாமே!" நித்திலன் குரலை இழுத்தான்.

"அது மரியாதை இல்லை தம்பி... முத்துப்பாண்டியன் தன்னோட மகனையும் மருமகளையும் ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பி வெச்சிருக்கார்ன்னு தலைவர்கிட்டே சொன்னால் அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ரெண்டு பேர்க்கும் மத்தியில் இருக்கிற கொஞ்ச நஞ்சம் பகையும் போயிடும்..."

"அது வந்து...."

"அப்பா தலைவரை பார்க்க வேண்டாம்ன்னு சொன்னாரா?"

"அந்த மாதிரியெல்லாம் அவர் சொல்லல"

"அப்புறம் என்ன... வாங்க தம்பி..." சொல்லிக்கொண்டே அவர் முன்னால் நடக்க ஆரம்பித்துவிட வேறு வழியில்லாமல் நித்திலனும் சாதுர்யாவும் அவரை பின் தொடர்ந்தார்கள். சாதுர்யா நித்திலனின் காதருகே மெல்ல முணுமுணுத்தாள்.

"நித்தி...!"

"என்ன?"

"வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழப்போறோம்."

"பயப்படாதே.... நான்தான் முத்துப்பாண்டியனோட மகன்னு நினைச்சு கூட்டிடுப் போறார். இது நமக்கு ப்ளஸ் பாயிண்ட்தானே?"

"எப்படி ப்ளஸ் பாயிண்ட்ன்னு சொல்றே...? ஒரு வேளை அந்த முத்துப்பாண்டியனே இந்த ஃபங்க்‌ஷனுக்கு வந்துட்டா...?"

"நீ வேற வயித்தைக் கலக்காதே.... எப்படியோ உள்ளே வந்துட்டோம். என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்...."

முன்னால் போய்க் கொண்டிருந்த நபர் திரும்பி நின்று குரல் கொடுத்தார். "சீக்கிரம் வாங்க... தலைவர் ஃபங்க்‌ஷனுக்கு போயிடப்போறார்....!"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 8

இருவரும் வேக நடை போட்டார்கள்.

உள்ளே போகப் போக பண்ணை வீடு ஏதோ ஒரு 'சினிமா செட்' போல் பிரம்மாண்டம் காட்டியது.

பெரிய பெரிய தேக்குமரத்தூண்கள் பாலீஷ் ஏற்றப்பட்டு கண்ணாடி போல் பிம்பங்களைக் காட்ட, கூரைகளின் உச்சியிலிருந்து லஸ்தர் விளக்குகள் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின. அந்த நீளமான ஹாலின் இரண்டு பக்கமும் நிறைய அறைகள். ஒவ்வொரு அறையும் கனமான பூட்டுகளோடு ரகசியம் காத்தன.

நித்திலன் தலையைச் சாய்த்து சாதுர்யாவிடம் கிசுகிசுத்தான்.

"எண்ணிட்டே...வா..."

"எதை...?"

"எத்தனை ரூம்ஸ் இருக்குன்னு"

"எண்ணிட்டேன்"

"எவ்வளவு"

"மொத்தம் 24 ரூம்.... வலது பக்கம் பனிரெண்டு இடது பக்கம் பனிரெண்டு. பண்ணை வீடு இவ்வளவு பெரிசாய் இருக்கும்ன்னு நான் நினைச்சே பார்க்கலை. இப்படி உள்ளே வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அந்த முத்துப்பாண்டியனுக்கு நன்றி."

"யார் அந்த முத்துப்பாண்டியன்?"

"யார்க்குத் தெரியும்.... ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் திகிலாகவும் இருக்கு..."

மறுபடியும் கஜபதி திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தார்.

"கொஞ்சம் சீக்கிரமாய் வா தம்பி... தலைவர் ஃபங்க்‌ஷன்ல போய் உட்கார்ந்துட்டார்ன்னு இன்னிக்கு சாயந்தரம் வரைக்கும் அவரை பார்க்க முடியாது...!"

"இதோ வந்துட்டோம்" நித்திலன் சொல்லிக் கொண்டே சாதுர்யாவோடு அவரைப் பின் தொடர்ந்தான்.

----------

முகில்வண்ணனின் அறை.

அவர்க்கு முன்பாய் மகன் செந்தமிழும், மருமகன் மணிமார்பனும் சற்றே கலவரம் தோய்ந்த முகங்களோடு நின்றிருக்க அவர் சென்சார் செய்யப்படாத கெட்ட வார்த்தைகளோடு திட்டிக் கொண்டிருந்தார்.

"யாரோ ஒரு ஆணும், பெண்ணும் நம்ம ஆட்களோட கண்காணிப்பையும் மீறி நம்ம பண்ணை வீட்டுக்குள்ளே நுழைஞ்சு வேவு பார்க்க முயற்சி பண்ணியிருக்காங்க.... அவங்களை பார்த்த இடத்திலே போட்டுத்தள்ளி குழி தோண்டிப் புதைச்சுட்டு வராமே அவங்க தப்பிச்சுட்டுப் போயிட்டாங்கன்னு எம்முன்னாடி வந்து நின்னு சொல்ல உங்க ரெண்டு பேர்க்கும் வெட்கமாயில்லை?"

"அது வந்துப்பா....!"

"செந்தமிழ்,.... நீ எந்த சால்ஜாப்பையும் சொல்லி என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணாதே. தப்பிச்சுட்டு போன அந்த ரெண்டு பேரும் யாரு என்னாங்கிற விபரம் எனக்கு இன்னிக்கு சாயந்தறதுக்குள்ளே தெரியணும். ஏன்னா இன்னிக்கு தமிழ்நாட்ல இருக்கிற அரசியல் நிலவரம் சரியில்லை. நமக்கு யாரு கறுப்பு ஆடு, எவன் விசுவாசின்னு சரியாய் கணிக்க முடியலை... ஒரு சமயத்துல எல்லாரையும் நம்ப வேண்டியிருக்கு. இன்னொரு சமயத்துல எல்லாரையும் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கு..."{

மாப்பிள்ளை மணிமார்பன் இப்போது குறுக்கிட்டான்.

"மாமா... இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்குள்ளே தப்பிச்சுட்டு போன அந்த ரெண்டு பேர் யார்ங்கிறதை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்துறேன். அதுக்கப்புறம் உங்க கண் எதிரிலேயே ரெண்டு பேரையும் வெட்டிச் சாய்க்கிறேன்.... நீங்க கலவரப்படாமே இருங்க மாமா?"

"எப்படி மாப்ளே கவலைப்படாமே இருக்க முடியும்....?' இந்த பண்ணை பங்களாவுக்குள்ளே 5000 கோடி ரூபாய் இந்த வீட்டு பத்தடி ஆழத்துக்குள்ளே கண்டெய்னர் சூட்கேஸ்களில் தூங்கிகிட்டிருக்கு. அதை வருமானவரித்துறையும், சிபிஐ-யும் மோப்பம் பிடிச்சுட்டாங்களோன்னு நெஞ்சுக்குள்ள ஒரே உதறலாய் இருக்கு!"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 8

"மாமா....! இது மாதிரியான சலசலப்புக்கெல்லாம் நீங்க பயப்படக்கூடாது. டெல்லியில் இருக்கிற மந்திரிகளில் மூணு முக்கியமான மந்திரிகள் நம்ம கையில்.... அங்கே நமக்கு எதிராய் சிறிய துரும்பு அசைஞ்சாலும் சரி உடனே நமக்கு தகவல் வந்துடும். அப்படியே வருமானத்துறை இந்த வீட்டை சோதனை போட வந்தாலும் வெளியே நின்னு வேடிக்கை பார்த்துட்டு போலாமே தவிர உள்ளே நுழைய முடியாது. டெல்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி யார் ஆட்சியில் இருந்தாலும் நமக்கு ஒரு குண்டூசி முனையளவு கூட பிரச்சனை வராது மாமா...!"

"மாப்ளே... நீங்க என்ன தைரியம் சொன்னாலும் சரி எம்மனசுக்கு நிம்மதியில்லை. இந்த வீட்டுக்கு வேவு பார்க்க வந்த அந்த ரெண்டு பேரும்....!" முகில் வண்ணன் குரலை உயர்த்தி கோபமாய் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்க்கு முன்பாய் டீ பாயில் இடம் பிடித்திருந்த அதி நவீன செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

மகனிடம் திரும்பினார் முகில்வண்ணன்.

"செந்தமிழ் போனை எடுத்து யார் கூப்பிடறாங்கன்னு பாரு...!"

செந்தமிழ் போனை எடுத்து டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்து கொண்டிருந்த பெயரை பார்த்துவிட்டு சொன்னான்.

"அப்பா லைன்ல யாரு தெரியுமா?"

"யாரு?"

"முத்துபாண்டியன்"

முகில் வண்ணன் சின்னதாய் மலர்ந்தான். "அட... நம்ம பழைய பங்காளி, அப்புறம் பகையாளி, போன வருஷம் மறுபடியும் பங்காளி. நடுவுல கொஞ்ச நாள் பகையாளி. இப்ப இவர் பங்காளியாய் போன் பண்றாரா பகையாளியாய் போன் பண்றாரான்னு தெரியலையே!"

"அப்பா...! அவர் பங்காளியோ பகையாளியோ நமக்கு தெரியாது. கட்சியில் பெரிய ஆள். தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள மனுஷன். அவரோட தயவு நமக்கு வேணும்.... வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிடறார்ன்னு நினைக்கிறேன். ரெண்டு வார்த்தை பேசிடுங்க....!"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 8

"சரி போனைக் கொண்டா...!"

செந்தமிழ் நீட்டிய போனை வாங்கி காதுக்கு ஏற்றிய முகில் வண்ணன் உற்சாகமாய் பேச ஆரம்பித்தார்.

"வணக்கம்.... முத்துபாண்டியன்"

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 8th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X