For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ என்ன சொல்றே வஜ்ரம்.. பைவ் ஸ்டார் துரோகம் (41)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

" நீ என்ன சொல்றே வஜ்ரம்...... சிங்கத்தோடு ரெண்டு புள்ளிமானும் மாட்டப்போகுதா ? "

ஷிவ்ராம் தத்தாத்ரேயா வியப்பு தடவிக்கொண்ட முகத்தோடு கேட்க, வஜ்ரவேல் போதை வழியும் கண்களோடு சிரித்தார்.

"ஆமா..... முகில்வண்ணன் மன அமைதிக்காக சென்னையை விட்டு சொந்த கிராமத்துக்கு நாளைக்கு காலையில் புறப்பட்டு போறானாம். போலீஸ் பாதுகாப்பு வேணுமாம். அவனோட பொண்ணு கயல்விழி போன் பண்ணியிருந்தா...... ஒட்டு மொத்த குடும்பமே அங்கே போகுதாம். இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருந்தேன்"

rajesh kumar series five star dhrogam 41

"முகில்வண்ணனோட குடும்பம் கிராமத்துக்கு போறதால நமக்கு எப்படி அது சாதகமான விஷயமாய் அமையும் வஜ்ரம்...... ? "

"அவனோட சொந்த ஊர் எதுன்னு உனக்குத் தெரியுமா ஷிவ்ராம்...... ? "

" தெரியாது "

"ராமநாதபுரத்தில் இருக்கிற செந்தட்டி கிராமம்தான் அவனோட சொந்த ஊர். ரொம்பவும் பழமையான கிராமம். இவன் ரெண்டு வருஷம் முதலமைச்சரா இருந்த காலகட்டத்தில் சம்பாதிச்ச ஊழல் பணத்தை வெச்சு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் தென்னந்தோப்புகளையும் வாங்கி பாதி கிராமத்தையே வளைச்சுட்டான். இன்னொரு தடவை சி.எம். போஸ்ட்ல இருந்திருந்தான்னா அந்த ஒட்டு மொத்த கிராமத்தையும் வாங்கியிருப்பான்"

"நல்லவேளை சி.எம்மாய் நீ வந்துட்டே...... ? "

"வந்து என்ன பிரயோஜனம் ஷிவ்ராம் ? முகில்வண்ணன் அடிச்ச மாதிரி பெரிசா நூறு கோடி இருநூறு கோடின்னு அடிக்க முடியலையே ! முகில் சி.எம்மாய் இருந்தபோது சிட்டி எக்ஸ்டன்ஷன் ப்ராஜக்ட்ன்னு சென்ட்ரல் கவர்மென்ட்டிலிருந்து அஞ்சாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் வந்தது. அதுல மட்டும் அவனோட பங்கு 500 கோடி. எனக்கு அப்படி எதுவும் ஜாக்பாட் அடிக்கலையே...... ? "

"இதோ பார் வஜ்ரம்.... அந்த 500 கோடி ரூபாய் பணம் முகில்கிட்டே இருக்குன்னு உனக்கும் எனக்கும் எந்த விநாடி தெரிஞ்சதோ அந்த விநாடியிலிருந்து அது நம்ம பணம்தான்னு திட்டம் போட்டு காய்களை நகர்த்திட்டு வர்றோம். இஷ்மி பர்மான் மூலமாய் மணிமார்பனை மொதல்ல போட்டு தள்ளினோம். ரெண்டாவதாய் செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசியைப் போட்டு திரிசூலம் ஹாஸ்பிடல்ல படுக்க வெச்சோம். முகில்வண்ணனோட ரெண்டாவது மனைவி சகுந்தலா ஏதோ பிரச்சனை காரணமாய் அவனை விட்டு பிரிஞ்சு போய் எங்கேயோ செட்டில் ஆயிட்டா. இப்ப

அந்த குடும்பத்துல இருக்கிறது மூணே மூணு பேர்தான். முகில், கயல்விழி, மலர்க்கொடி. இந்த மூணு பேர்ல அடுத்த டார்கெட் யாரு ? "

"மலர்க்கொடி"

rajesh kumar series five star dhrogam 41

"இஷ்மி பர்மான் போலீஸ் கைல மாட்டி இப்படி அடி வாங்கி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுய உணர்வு இல்லாமே இருக்கும்போது அவன் எப்படி மலர்க்கொடியோட கதையை முடிப்பான்.... ? "

"வேற ஒரு ஆளை ஃபிக்ஸ் பண்ண வேண்டியதுதான். திருநெல்வேலியில் சங்கரலிங்கம்ன்னு ஒருத்தன் இருக்கான். ரெண்டு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு போனவாரம்தான் வெளியே வந்தான். அவன்கிட்டே முகில், கயல்விழி, மலர்க்கொடி மூணு பேரையும் போட்டுத்தள்ள அசைன்மென்டை கொடுப்போம். கச்சிதமாய் பண்ணிட்டு வந்து நமக்கு முன்னாடி ஒண்ணுமே பண்ணாத மாதிரி கைகட்டிகிட்டு வந்து நிப்பான்"

"சரி..... இஷ்மி பர்மானை என்ன பண்றது .... ? "

"அவனோட நிலைமை எப்படியிருக்குன்னு டாக்டர் சொல்லட்டும்... அதை வெச்சுகிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்"

" வஜ்ரம் "

" சொல்லு "

"இதுக்கு முன்னாடி இந்தக் கேள்வியை நான் மூணுதடவை கேட்டுட்டேன். இப்பவும் கேக்கறேன். நீ கோபப்படக்கூடாது"

வஜ்ரவேல் சிரித்தார்.

"நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்குத் தெரியும் ஷிவ்ராம்... இருந்தாலும் கேளு. உன்னோட ஆசையைக் கெடுப்பானேன் .... ? "

"முகில்வண்ணன் தான் ஊழல் பண்ணி கொள்ளையடிச்ச 500 கோடி ரூபாய் பணத்தை அவன் இப்ப இருக்கிற பண்ணை வீட்ல ஒவ்வொரு அறைக்கும் கீழே செல்லர் அறைகளை உருவாக்கி அந்த அறைகளில்தான் பதுக்கி வெச்சிருக்கான்... அதுல உனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லையே.... ? "

"ஒரு பர்சண்டு கூட சந்தேகம் கிடையாது ஷிவ்ராம். நான் ஒரு சீஃப் மினிஸ்ட்ராய் இருந்துகிட்டு இந்த விஷயத்தைக்கூட மோப்பம் பிடிக்கலைன்னா எப்படி ? அந்த செல்லர் அறைகளை சேஃப்டி லாக்கர்கள் மாதிரி கட்டிக் கொடுத்த என்ஜினியர் கடந்த மூணு மாச காலமாய் நம்ம வீட்டு நாய். மாசாமாசம் அதுக்கு பிஸ்கெட் போட்டிகிட்டிருக்கேன். பிஸ்கெட்டோட விலை எவ்வளவு தெரியுமா அஞ்சு லட்சம்"

"இந்த விஷயத்தை நீ இத்தனை நாளா என்கிட்டே சொல்லவேயில்லை"

rajesh kumar series five star dhrogam 41

"எந்த விஷயத்தை எப்ப சொல்லணும்ன்னு எனக்குத் தெரியும். இப்ப நாம நம்ம திட்டத்தோட க்ளைமேக்ஸூக்கு வந்துட்டோம். இனிமேல் நான் எடுக்கப் போகிற அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா ஷிவ்ராம் .... ? "

"சொல்லு..... "

"நாளைக்கு காலையில் முகில்வண்ணன் தன் மகள் கயல்விழியோடும், மருமகள் மலர்க்கொடியோடும் செந்தட்டி கிராமத்துக்கு புறப்பட்டு போறான். அவங்க புறப்பட்டு செந்தட்டி கிராமம் போய்ச் சேர எப்படியும் 10 மணி நேரமாயிரும். அதாவது சாயந்தரம் மணி நான்காயிரும். சேர்ந்த அடுத்த சில மணி நேரத்துக்குள்ளே நமக்கு விசுவாசமாய் இருக்கிற பத்து பதினஞ்சு வருமானவரி அதிகாரிகளை முகில்வண்ணனின் சென்னையில் இருக்கிற பண்ணை வீட்டுக்கு அனுப்பி வருமானவரி சோதனை என்கிற பேர்ல அதிரடியாய் ஒரு வேட்டையை நடத்தறோம். அறைகளுக்கு கீழே செல்லர்களில் தூங்கிட்டு இருக்கிற பணத்தை அள்ளி சூட்கேஸ்களில் அடைச்சு பண்ணை வீட்டுக்கு பின்புறமாய் இருக்கிற வழியாய் அங்கே காத்திட்டிருக்கிற கண்டெய்னர்களுக்கு கடத்தி இந்த வீட்டுக்கு கொண்டு வந்துடறோம் "

ஷிவ்ராம் வியப்பில் விழிகளை விரித்தார்.

" வஜ்ரம்..... இதெல்லாம் நடக்குமா .... ? "

"கண்டிப்பாய் நடக்கும்.... மாநிலத்தில் எனக்கு அதிகாரம் இருக்கு..... அதுக்கு மேல மத்திய அரசோட ஆசீர்வாதமும் இருக்கு. எந்த ஒரு அசாதாரணமான விஷயத்தையும் நம்மாலே சாதாரண ஒரு விஷயமாய் நடத்திக்க முடியும்... "

"நீ இப்படி பேசப்பேசத்தான் மனசுக்குள்ளே ஒரு தைரியம் எட்டிப்பார்க்குது"

"அப்ப ஒரு லார்ஜ் அடிக்கிறியா .... ? "

"நீயே ஊத்திக்கொடு..... "

"இப்பத்தான் நீ பழைய ஷிவ்ராம்" வஜ்ரவேல் சொல்லிக்கொண்டே குடுவை போன்ற அந்த விஸ்கி பாட்டிலை எடுத்த விநாடி அவருடைய அறையின் கதவருகே பி.ஏ. வந்து தயக்கமாய் நின்றார்.

"என்ன வாசுதேவன்.... ? "

"இஷ்மி பர்மான் சுய உணர்வுக்கு வந்து பேச ஆரம்பிச்சுட்டதாய் டாக்டர் போன் பண்ணி தகவல் கொடுத்தார்"

ஷிவ்ராம் சட்டென்று எழுந்தார். "வா வஜ்ரம் I மொதல்ல அவனைப் போய்ப் பார்த்து பேசிட்டு வந்துடுவோம்......."

"ஒரு பெக் அடி...... "

"எல்லாம் வந்து பார்த்துக்குவோம் வஜ்ரம். இஷ்மிக்கு மறுபடியும் கான்ஷியஸ் போயிடப் போகுது I"

இருவரும் அறையை விட்டு வெளியே வந்து அரையிருட்டான நீள வராந்தாக்களில் நடந்து மரங்கள் அடர்ந்த ஒரு மறைவான பகுதிக்கு வந்து மங்கலான வெளிச்சம் தெரிந்த அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

வஜ்ரத்தின் குடும்ப டாக்டர் தவிர மேலும் இரண்டு பேர் அந்த அறையில் தெரிந்தார்கள். பவ்யமாய் கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கி நின்றார்கள். வஜ்ரம் டாக்டரிடம் தாழ்ந்த குரலில் கேட்டார்.

"இஷ்மி பேசக்கூடிய நிலைமையில் இருக்கானா .... ? "

டாக்டரும் குரலைத் தாழ்த்தினார்.

இப்ப நல்ல கான்ஷியஸூக்கு வந்துட்டான். ஆனா அவன் உயிரோடு இருக்கப் போறது சில மணிநேரம்தான். காரணம் தண்டுவடமும், மூளையும் சேர்ற முகுளம் பகுதியில் போலீஸோட லத்தி அடி பலமா பட்டிருக்கு. அந்தப் பகுதியில் இருக்கிற செல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைவடைஞ்சுட்டு வர்றதால......... I"

"புரியுது டாக்டர்.....அவன்கிட்டே என்ன பேசணுமோ அதைப் பேசிடறோம்..I"

வஜ்ரவேல் சொல்லிக்கொண்டே அறையின் மூலையில் போடப்பட்டிருந்த கட்டிலில் கண் மூடிப்படுத்து இருந்த இஷ்மி பர்மானை நோக்கிப் போனார். ஷிவ்ராமும் தொடர்ந்தார்.

இடதுகை தோள்பட்டையும், கழுத்துப்பகுதியும் கன்றிப்போய் வீக்கத்தோடு தெரிய, தலையில் ரத்த காயத்துக்காக போடப்பட்டு இருந்த பேண்டேஜ் கட்டு சிவப்புத் தீற்றல்களோடு பார்வைக்குத் தட்டுப்பட்டது. வஜ்ரவேல் திரும்பி டாக்டரையும், அறையில் இருந்த மற்ற இரண்டு பேர்களையும் பார்த்து கண்ணசைக்க அவர்கள் மெளனமாய் அறையினின்று வெளியேறினார்கள்.

"ஷிவ்ராம் I இஷ்மிகிட்டே நீ பேசறியா...... நான் பேசட்டுமா .... ? "

"நானே பேசறேன்" சொன்ன ஷிவ்ராம் இஷ்மி பர்மானின் தலைமாட்டில் போய் நின்றார். குனிந்து கூப்பிட்டார்.

" இஷ்மி "

குரல் காதுக்குள் பாய்ந்ததும் அவனுடைய விழிகள் சிரமப்பட்டு பிரிந்தன. ஷிவ்ராமைப் பார்த்ததும் எழுந்து உட்கார முயல, உடம்பு ஒத்துழைக்க மறுத்து ஒரு சின்ன அசைவை மட்டும் வெளிப்படுத்தியது.

ஷிவ்ராம் இஷ்மி பர்மானின் இடதுகையை மெல்லத் தொட்டபடி கேட்டார்.

"உன்னால இப்ப பேச முடியுமா .... ? "

"முடியும் ஸார் ...I"

"இதோ பார் இஷ்மி.... நீ போலீஸ் பற்றியெல்லாம் பயப்படாதே..... நானும் சி.எம்மும் உனக்கு பக்கபலமாய் இருக்கும்போது யாரைப்பத்தியும் நீ கவலைப்பட வேண்டியதில்லை.... "

இஷ்மியின் உதடுகளில் ஒரு சிறு சிரிப்பு பரவியது.

"என்ன சிரிக்கிறே.... ? "

"நான் உயிரோடு இருக்கப்போறது இன்னும் சில மணிநேரம்தான்னு எனக்குத் தெரியும் ஸார். அப்புறம் எதுக்காக நான் பயப்படணும். கவலைப்படணும்.... ? "

"இ....ஷ்....மி...... I"

"நான் சாகறதுக்காக பயப்படலை ஸார்.......நான் மும்பையில் இருந்தபோது எத்தனையோ கொலைகளைப் பண்ணியிருக்கேன். போலீஸ் கைது பண்ணுவாங்க. அடிப்பாங்க. அதுக்கப்புறம் உங்களை மாதிரியான அரசியல் செல்வாக்குள்ள நபர்களால் அந்த கொலை வழக்குகளிலிருந்து விடுதலையாகியிருக்கேன். ஆனா இந்த தடவைதான் நான் செய்யாத கொலைகளுக்காக சென்னை போலீஸ்கிட்டே அடிவாங்கி இன்னும் சில மணிநேரங்களில் இந்த உலகத்தை விட்டு போகப்போறேன். நான் உயிரோடு இருக்கப்போறது இன்னும் சில மணிநேரங்கள்தான்னு டாக்டர் சி.எம்கிட்டே எவ்வளவோ மெதுவாய்தான் சொன்னார். ஆனா அந்த வார்த்தைகள் என் காதிலேயும் விழுந்ததுதான் ஆச்சரியம்...... I"

வஜ்ரவேல் பதட்டத்தோடு அவனை நெருங்கி அவசரக்குரலில் கேட்டார்.

" இஷ்மி.... நீ இப்ப என்ன சொன்னே செய்யாத கொலைகளா.... ? "

"ஆமாம் " என்பதுபோல் தலையசைத்தான் இஷ்மி.

"அப்படீன்னா முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை கொலை பண்ணினது .... ? "

"நானில்லை..... "

முகில்வண்ணனோட மகன் செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசி போட்டு திரிசூலம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினது .... ? "

"நானில்லை..... "

கஜபதியை தற்கொலை பண்ணிக்க வெச்சது.... ? "

"நானில்லை..... "

"மணிமார்பனை கொலை செய்ய வாட்டர் டாங்க் லாரி ஒட்ற ட்ரைவர் நீலகண்டனை உபயோகப்படுத்திகிட்டதாய் நீ சொன்னது? "

"பொய். நீலகண்டன் யார்ன்னே எனக்குத் தெரியாது. அந்த நீலகண்டனை கொலை பண்ணினது யார்ன்னே எனக்குத் தெரியாது "இஷ்மி பர்மான் நிதானமான குரலில் சொல்ல வஜ்ரவேல் கோபாவேசமானார்.

"எ...எ...எதுக்காக இவ்வளவு பொய் ? "

"இந்த கொலைகள் அசைன்மென்ட்டுக்கு ஷிவ்ராம் ஸார் எனக்குத் தர்றதாய் சொல்லப்பட்ட தொகை பத்து கோடி. என்னோட வாழ்நாள்ல நான் பார்த்த மிகப் பெரிய பிசினஸ் இதுதான். அட்வான்ஸாய் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் ஷிவ்ராம் ஸார். நானும் சென்னைக்கு வந்து மணிமார்பனையும், செந்தமிழையும், கஜபதியையும் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டேன். அந்த திட்டத்தை செயல்படுத்த நான் ஆரம்பித்தேன். ஆனா எனக்கு முன்னாடி யாரோ திட்டம் போட்டு நான் தீர்த்துக்கட்ட வேண்டிய நபர்களை விதவிதமாய் முடிச்சாங்க. அதையெல்லாம் நான்தான் பண்ணினேன்ன்னு நீங்க நினைச்சு என்னைப் பாராட்டினபோது என்னால மறுத்துப்பேச முடியலை. காரணம் நீங்க எனக்குத் தரப்போகிற பத்து கோடி ரூபாய். இப்ப அந்த பணமும் எனக்குக் கிடைக்கப் போறதில்லை. உயிரை விடறதுக்கு முன்னாடி உண்மையைச் சொல்லிட்டேன். முகில்வண்ணனோட ஃபேமிலிக்கு நீங்க ரெண்டு பேர் மட்டும் எதிரியில்லை. வேற யாரோ இருக்காங்க. அநேகமாய் அது ஒரு பெண்ணாக்கூட இருக்கலாம்"

பேசப்பேசவே இஷ்மி பர்மானுக்கு பெரிது பெரிதாய் மூச்சிரைக்க ஆரம்பித்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 41
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X