For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலு ......பேசிட்டிருக்கிறது நீதானே......?.. ராஜேஷ்குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (22)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வேல்முருகன் செல்போனை தன் காதோடு ஓட்ட வைத்தபடி ஜாக்கிரதைக் காத்தார். தன்னுடைய குரலை மறுமுனையில் பேசுபவன் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்று பேசாமல் மெளனிக்க அவன் சிரித்தான்.

“ என்ன நீலு..... சரக்கை ஃபுல்லா ஏத்துகிட்டே போலிருக்கு...... பேசவே மாட்டேன்கிற......? “

rajesh kumar series five star dhrogam part 22

இனியும் பேசாமல் இருப்பது சரியில்லை. குடிபோதையில் இருப்பவனைப்போல் குழறி குழறி பேச ஆரம்பித்தார் வேல்முருகன்.

“ம்.... சொ...ல்....லு......!..... ம....ம......மணிமார்பனோட பா....பா.....பாடியை எங்க வெச்சு டிஸ்போஸ் பண்ணினே ......? “

வில்லிவாக்கத்துக்கு பக்கத்துல ஓரு குப்பைமேடு இருக்கே......? “

“ஆ...ஆமா....... “

“அங்கே புளியமரத்தையொட்டி ஓரு பள்ளம். அந்தப் பள்ளத்துல வெச்சுத்தான் வேலையை முடிச்சோம்....... “

“யாரும் பார்த்துடலையே ......? “

“ஓருத்தரோட பார்வையில பட்டுட்டோம் நீலு“

“யாரது......? “

“உச்சிவானத்துல நிலா......! “ என்றவன் சிரித்தான். சும்மா தமாஷூக்கு சொன்னேன். .....சரி....பேசின பணம் என்னோட கைக்கு எப்ப வரும் ......? “

“இப்பவே என்னோட வீட்டுக்கு வா. முழுபணத்தையும் செட்டில் பண்ணிடறேன்......! “

வேல்முருகன் குரல் கொடுத்தார்.

“என்ன பேச்சையே காணோம் ......? “

மறுமுனையில் அந்த குரல் தயக்கமாய் வெளிப்பட்டது.

“நீலு ......பேசிட்டிருக்கிறது நீதானே......? “

“அதுல என்ன சந்தேகம்....... ஓரு ஃபுல் உள்ளே போயிருக்கிறதால பேசறதுக்கு வாய் ஓத்துழைக்க மாட்டேங்குது....... “

“இல்லை நீலு....... எனக்கு வித்தியாசம் தெரியுது. மணிமார்பனை தீர்த்து கட்டி டிஸ்போஸ் பண்ற வேலைக்கு நாம ஓரு கோடுவேர்ட் வெச்சுகிட்டோம். அந்த கோடுவேர்ட் என்னான்னு சொல்லு. பார்க்கலாம்....... “

வேல்முருகன் அமைதியாய் இருந்தார்.

“என்ன நீலு பேச்சையே காணோம் ......? “

“அது வந்து.... வந்து.... “

“சொல்லு......... இன்னிக்கு நீ குடிச்சிருந்தாலும் எனக்கொன்னமோ நீ பேசற மாதிரியே இல்லை..... அதுதான் கோடுவேர்ட் கேட்டேன். ..... நாம தொடர்ந்து பேசணுன்னா நீ அந்த கோடுவேர்டைச் சொல்லணும்.... “

வேல்முருகன் சில விநாடிகள் தயங்கிவிட்டு சற்று திணறலான குரலில் சொன்னார்.

“ஞாபகத்துக்கு வரலை......! “

“என்னது....... ஞாபகத்துக்கு வரலையா......? “

“ஆமா.............“

“எப்படி வரும்.. அப்படியொரு கோடுவேர்டே இல்லையே ....? “ என்று சொல்லி மறுமுனையில் சிரித்தவன் அடுத்த விநாடியே அடிக்குரலில் கேட்டான்.

“யார்ரா ....... நீ..... நீலகண்டனோட செல்போன் உன்னோட கைக்கு எப்படி வந்தது..... “

“நீலகண்டனோட வீட்டுக்கு வா....... நான் யார்ன்னு உனக்குத் தெரியும்......! “

வேல்முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறு முனையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வேல்முருகன் செல்போனை அணைத்துவிட்டு கலவரத்தோடு நின்றிருந்த லலிதாவைப் பார்த்தார்.

“போன்ல பேசினவன் நீலகண்டனை “நீலு நீலு“ ன்னு உரிமையோடு சொல்லி பேசறான். அவன் யார்ன்னு உனக்கு தெரியுமா ......? “

“எனக்குத் தெரியாது ஸார்“

“ஆறுமாசமாய் அவன் கூட பழகிட்டு இருக்கிறே....... ஆனா எந்தக் கேள்வியைக் கேட்டாலும் “தெரியாது“ன்னு ஓற்றை வார்த்தையில் பதில் சொல்லி தப்பிச்சுக்கிறே........ “

“சத்தியமாய் எனக்குத் எதுவும் தெரியாது ஸார். நான் ஓரு தொழில்காரி...... அவ்வளவுதான்..... “

“சரி .... சரி.... அப்படி ஓரமாய் போய் உட்கார். உன்னோட செல்போன் எங்கே......குடு.. “

அவளுடைய இடுப்பின் மறைவில் ஓளித்து வைத்திருந்த ஸ்மார்ட்போனை எடுத்து கொடுத்தாள். அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்ட வேல்முருகன் தன்னுடைய செல்போனை எடுத்து வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனின் கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு தான் யார் என்பதை சொல்லிவிட்டு பேசினார்.

“நான் சொல்ற ஸ்பாட்டுக்கு உடனடியாக போங்க. வில்லிவாக்கம் குப்பைமேடு ஓட்டி புளியமரம். அதற்குப் பக்கத்துல ஓரு பள்ளம். அந்தப் பள்ளத்துக்குள்ளே எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனோட உடல் புதைக்கப்பட்டு இருக்கிறதாய் தகவல் கிடைச்சிருக்கு. லேட் பண்ண வேண்டாம். சீன் ஆஃப் க்ரைம் பார்க்க ஃபாரன்ஸீக் பீப்பிள் போவது அவசியம். நான் இங்கே ஓரு என்கொயரியை முடிச்சுட்டு நேரா ஸ்பாட்டுக்கு வந்துடறேன். இப்ப வில்லிவாக்கம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் யாரு......? “

“ஜெயச்சந்திரன் ஸார்“

“சரி.... ஸ்பாட்டுக்கு போய் பாடியைத் தோண்டி எடுத்ததும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொல்லுங்க....... “

வேல்முருகன் செல்போனில் பேச்சை முடித்துக்கொண்டு தனக்கு இடதுபுறம் நின்று கொண்டிருந்த கஜபதியையும், அமிர்தலிங்கத்தையும் பார்த்தார்.

“நீலகண்டனோட செல்போனில் பேசினவன் தொடர்ந்து பேசியிருந்தா உண்மைகள் வெளியே வந்து இருக்கும்...... அதுக்குள்ளே அவன் என்மேல சந்தேகப்பட்டுட்டான்“

கஜபதி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார். “ஸார் மணிமார்பன் கொலை செய்யப்பட்டதும், அவனுடைய உடல் புதைக்கப்பட்ட இடமும் தெரிஞ்சிருச்சு. ஆனா ஓரு தண்ணி வேன் ட்ரைவர் எதுக்காக “மணிமார்பனை கொலை செய்யணும்......? மணிமார்பனுக்கும், நீலகண்டனுக்கும் நடுவில் எது மாதிரியான பகை இருந்து இருக்க முடியும்ன்னு என்னால கெஸ் பண்ண முடியலை ஸார்..... நீலகண்டன் யாரு ...... அவன் பின்னணி என்னான்னு கிளறிப்பார்க்க வேண்டியது ரொம்பவும் அவசியம் ஸார்...............!“

“எஸ் ....... மொதல்ல இந்த வீட்டை சர்ச் பண்ணி ஏதாவது தடயம் தட்டுப்படுதான்னு பார்ப்போம்“வேல்முருகன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே லலிதாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

“ஸார் “

திரும்பினார்.

“என்ன......? “

“இப்பத்தான் ஓரு விஷயம் ஞாபகத்துக்கு வருது ஸார் “

"சொல்லு“

“போன மாசத்துல ஓருநாள் சாயந்தரம் நாலு மணி இருக்கும் ஸார். கோடம்பாக்கத்துல ஓரு பார்ட்டியைப் பார்த்துட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போய்க்கிட்டிருந்தேன். யுனைடெட் இந்தியா காலனிப்பக்கம் வந்துட்டிருந்த போது அங்கே இருக்கிற ஸ்கூல் வாசல்ல நீலகண்டன் நின்னு யார்க்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. நான் ஆட்டோவை ஓரமாய் நிறுத்தி வெயிட்டிங்ல போட்டுட்டு நீலகண்டன்கிட்டே போனேன். என்னைப் பார்த்ததும் நீலகண்டனோட முகத்துல பெரிய அதிர்ச்சி. இருந்தாலும் அதைக் காட்டிக்காமே சிரிச்சான். என்ன ல்லலி இந்தப்பக்கம்ன்னு கேட்டான். நான் பதிலுக்கு நீ இங்கே ஸ்கூல் வாசல்ல யார்க்காக நின்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நான் வேலை செய்யற கம்பெனி முதலாளியோட பொண்ணு இந்த ஸ்கூல்ல படிக்குது. இன்னிக்கு அவரோட கார் ரிப்பேர். அதனால நான் வேன்ல கூட்டிட்டு போக வந்தேன்னு சொன்னான்“

கேட்டுக்கொண்டிருந்த அமிர்தலிங்கம் அதிர்ச்சியோடு குறுக்கிட்டார் “எனக்கு ரெண்டும் பசங்கதானே.....! பொண்ணு கிடையாதே......? அதுவும் இல்லாமே பசங்க ரெண்டு பேரும் வெளியூர்ல காலேஜ் கோர்ஸ் படிச்சுட்டு இருக்காங்க.... எதுக்காக அப்படி பொய் சொன்னான்னு தெரியலையே......?

லலிதா தொடர்ந்தாள்.

“எனக்கும் அந்த சந்தேகம் வந்தது ஸார். ஆனாலும் அந்த சந்தேகத்தை முகத்துல காட்டிக்காமே சரின்னு சொல்லி தலையாட்டிட்டு ஆட்டோவுக்குள்ள போய் உட்கார்ந்துகிட்டேன். ஆட்டோவில் புறப்பட்டு போற மாதிரி போக்கு காட்டிட்டு ரோட்டோட மறுபக்கத்துக்கு ஆட்டோவை கொண்டு போய் நிறுத்திகிட்டு நீலகண்டனை வாட்ச் பண்ணினேன். ஓரு பத்து நிமிஷத்துக்கு அப்புறம் ஸ்கூல் உள்ளேயிருந்து ஓரு பொண்ணு வெளியே வந்தது. அது படிக்கிற பொண்ணு மாதிரி தெரியலை. வயசு முப்பது இருக்கும். சிவப்பாய் அழகாய் இருந்தா. சுருட்டை முடி. நேராக நீலகண்டனுக்கு பக்கத்துல போய் நின்னா. ஓரு அஞ்சு நிமிஷம் பேசியிருப்பாங்க. அதுக்கப்புறம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 22
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X