For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எ...எ.....என்னது வீடியோ சாட்சியமா...? பைவ் ஸ்டார் துரோகம் (26)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

முதலமைச்சர் வஜ்ரவேலு மிரண்டு போன முகத்தோடு முகில்வண்ணனை ஏறிட்டார்.

“முகில்...... ! நீ என்ன சொல்றே... ? “

“இதுவரைக்கும் யார்க்கும் தெரியாத வெளியே வராத ஓரு செய்தியை இப்ப உன்கிட்டே சொல்லிட்டிருக்கேன்“

“எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் முகத்துல பீடாவை மென்னு துப்பின விஷயம் சாதாரண விஷயம் இல்லை...... உன்னோட மாப்பிள்ளை மணிமார்பன் அப்படிப்பட்ட ஓரு காரியத்தைப் பண்ணியிருந்தான்னா அப்பவே விஷயம் வெளியே வந்து இருக்குமே...? “

rajesh kumar series five star dhrogam

“எப்படி வரும் வஜ்ரவேலு ...? அறிவரசன் பேசின விஷயம் வெளியே சொல்லக்கூடிய ஓண்ணா என்ன ...? திருடனுக்கு தேள் கொட்டினா அவன் கத்துவானா

என்ன ...? “

“சரி.... இந்த சம்பவத்தை நேர்ல பார்த்தவங்க யாராவது இருக்காங்களா ... ? “

“வீடியோ சாட்சியமே இருக்கு “

“எ...எ.....என்னது வீடியோ சாட்சியமா ...? “

“ஆமா...... என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் அறிவரசன் கூப்பிட்ட பேச்சு வார்த்தையில் கலந்துக்க போனபோது ஓரு நானோ ஸ்மார்ட் செல்போனையும் எடுத்துட்டு போயிருக்கார். அந்த போனின் வீடியோவை “ஆன்“ பண்ணிட்டுத்தான் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சிருக்கார். அது எல்லா டைரகஷன்களையும் பார்த்து சுழல்கிற வீடியோ காமிரா. நடந்த சம்பவத்தையும் பேசின பேச்சுக்களையும் துல்லியமாய் பதிவு பண்ணியிருக்கு... அதை மாப்பிள்ளை மணிமார்பன் என்கிட்டே கொண்டு வந்து காட்டினார். நான் அந்தப் போனை வாங்கி என்னோட கஸ்ட்டியில் வெச்சுகிட்டேன். இந்த விஷயம் என்னோட மகன் செந்தமிழுக்கும் கூட தெரியாது......“ சொன்ன முகில்வண்ணன் தன் கையோடு கொண்டு போயிருந்த ஓரு கைப்பையின் ஜிப்பைப் பிரித்து அந்த நானோ செல்போனை எடுத்தார்.

முதலமைச்சர் வஜ்ரவேலு, போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், முகில்வண்ணனின் மகன் செந்தமிழ் எல்லோருடைய பார்வையும் வியப்பில் உறைந்து போயிருக்க, முகில்வண்ணன் அந்த செல்போனை எடுத்து 'வீடியோ ப்ளே’ ஆப்ஷனுக்கு போய் ஸ்கீரினை டச் செய்தார்.

வீடியோவும், ஆடியோவும் கதம்பமாய் கலந்து இயங்கியது. எல்லோரும் பார்க்கும்படியாய் செல்போனை உயர்த்தி பிடித்தார் முகில்வண்ணன்.

எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் அழுத்தம் திருத்தமான குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

“இதோ பார் மணிமார்பன்....... உன்னோட மாமனார் முகில்வண்ணன் இந்த தமிழ்நாட்டுக்கு ரெண்டு தடவை சி.எம்.மாய் இருந்திருக்கார். மூணாவது தடவையும் அவர் முதலமைச்சராய் பதவி ஏத்திகிட்டா அது அவர்க்கு மிகப்பெரிய கெளரவமாய் இருந்து இருக்கும். ஆனா கட்சித்தலைமை ஏதோ ஓரு காரணத்தைச்சொல்லி அவர்க்கு சி.எம். போஸ்ட் தரலை.. இது எவ்வளவு பெரிய அநியாயம் தெரியுமா...? “

மணிமார்பன் குரல் சிரித்தது. “அநியாயம்தான். கோபம் வரத்தான் செய்யுது. அதுக்காக கட்சித்தலைமையோட கட்டளையை மீற முடியுமா...? “

“மீறினா என்ன...? “

“மீறினால் என்னாகும்ன்னு உங்களுக்கு தெரியாதா அறிவரசன்...? கட்சி உடையும். சொற்ப மெஜாரிடியில் உயிரைப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்த உடனே நீங்க ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர்கிட்டே போவீங்க. பதவிக்கு ஆசைப்பட்டு எங்க கட்சியைச்சேர்ந்த நாலைஞ்சு பேர் உங்க அணிக்கு மாறுவாங்க... நீங்க சி.எம். ஆயிடுவீங்க... இதுதானே உங்க எண்ணம்..? “

rajesh kumar series five star dhrogam

“சேச்சே..... அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்கு அறவே கிடையாது மணிமார்பன்.... இப்ப எனக்கு என்ன வயசு.. நாற்பது. நான் சி.எம்.மாய் வர இன்னும் காலம் இருக்கு. என்னோட ஆசை என்னான்னா உன்னோட மாமனார் முகில்வண்ணனை மூணாவது தடவை முதலமைச்சராக்கி அழகு பார்க்கணும். அதுக்கு நீ செய்ய வேண்டிய ஓரே வேலை. உன்னோட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரெண்டு பேரு நம்ம கட்சிக்கு வந்தா போதும்........ “

அறிவரசன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மணிமார்பன் தன்னுடைய உதடுகளைக் குவித்து “தூ“ என்று பீடாச்சாறோடு உமிழ முகம் முழுவதும் ரத்தம் தெளித்தாற் போல் சிவப்பாக மாறியது.

அறிவரசன் ஓரு விநாடி நேரம் அதிர்ந்து போனாலும் அடுத்த விநாடியே தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி ஓரு புன்முறுவலோடு பேசினார்.

“நல்லவேளை மணிமார்பன்..... இந்த இடத்துல நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம். என்னோட தொண்டர்கள் யாருமில்லை. ஓரு தொண்டன் இந்த இடத்தில் இருந்திருந்தா கூட உன்னால உயிரோடு திரும்பிப்போயிருக்க முடியாது..... “

மணிமார்பன் தன் சுட்டுவிரலை உயர்த்தினான்.

“இதே எச்சரிக்கைதான் உனக்கும்..... நானும் வரும்போது என்கூட யாரையும் கூட்டிட்டு வரலை. அப்படி யாரையாவது கூட்டிட்டு வந்திருந்தா நீ ரெண்டு எம்.எல்.ஏ.க்களை கேட்ட விநாடியே உன்னோட கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும்... “

“மணிமார்பன் உன்னோட மாமனாருக்கு நல்லது செய்ய நினைச்சேன்“

“எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்..... நீ உன்னோட வேலையை மட்டும் பாரு“மணிமார்பன் சொல்லி கொண்டே எழுந்தான். இப்போது அறிவரசன் குரல் உயர்ந்தது.

“இந்த அவமானத்தை நான் மறக்கவே மாட்டேன். இதுக்கு நீ ஓரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்“

“என்ன விலைன்னு சொல்லு..... மறுபடியும் ஓரு நடை வந்து கொடுத்துட்டு போறேன்“

இந்த உரையாடலோடு வீடியோ அணைந்து போயிற்று. அறையில் சில விநாடிகளுக்கு கனத்த நிசப்தம். போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அந்த மெளனத்தைக் கலைத்தார்.

“ஸார்.... இந்த சம்பவம் நடந்து ஓரு வருஷம் இருக்குமா.......? “

“ம்..... இருக்கும்....... “

“மணிமார்பனை கொலை செய்தது எதிர் கட்சித்தலைவர் அறிவரசனாய் இருக்கலாம்ன்னு சந்தேகப்படறீங்களா.......? “

“இப்ப லேசாய் ஓரு சந்தேகம் வருது...... அறிவரசன் ஓரு வருஷம் வரைக்கும் தன்னோட கோபத்தை வெளியே காட்டிக்காமே இருந்து சமயம் பார்த்து மணிமார்பனின் கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம். வாட்டர் வேன் டிரைவர் நீலகண்டனுக்கும், அறிவரசனுக்கும் எதுமாதிரியான நட்பு இருந்ததுன்னு தெரிய வந்தா அறிவரசனை மடக்கிடலாம்.........“

அதுவரையிலும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த செந்தமிழ் வாயைத்திறந்தான்.

“அப்பா...... என்னோட மனசுக்குப்பட்டதை சொல்லட்டுமா.......? “

“என்ன.......? “

“அறிவரசன் நம்ம மாப்பிள்ளையை கொலை பண்ணியிருக்க வாய்ப்பு இல்லை “

“எப்படி சொல்றே .......? “

“அறிவரசனைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவன் ஓருத்தனை பழி வாங்கணுன்னா கையில் இருக்கிற கத்திக்கு வேலை கொடுக்க மாட்டான். தன்னோட புத்தியை உபயோகப்படுத்தி மனரீதியாய்தான் தண்டிப்பான். அவனோட லாயர் டீம்ல இருக்கிற ஓரு லாயர் பேரு சத்யப்பிரகாஷ். அந்த லாயரும் இதைத்தான் சொல்லுவார். நம்ம மாப்பிள்ளை மேல அறிவரசனுக்கு அளவு கடந்த ஆத்திரமும், கோபமும் இருந்திருக்கலாம். ஆனா கூலிப்படையை அமர்த்தி கொலை செய்கிற அளவுக்கு போயிருக்க மாட்டான்“

முகில்வண்ணன் தன் மகன் செந்தமிழை ஓரு கோப்ப்பார்வை பார்த்தபடி கேட்டார்.

“சரி... நம்ம மாப்பிள்ளையோட கொலைக்கு அறிவரசன் காரணமாயிருக்க முடியாதுன்னா வேற என்ன காரணம் இருக்க முடியும்.......? “

“அது.... அது.... வந்து...... “

“சொல்லு.... எதுவாய் இருந்தாலும் சொல்லு“

“அப்பா.....நம்ம மாப்பிள்ளைங்கிறதுக்காக சில விஷயங்களை நாம மூடி மறைக்க முடியாது. அவர் பெண்கள் விஷயத்துல ரொம்பவும் வீக்“

“அதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி... நம்ம வீட்ல பெண்ணைக் கட்டினதுமே திருந்திட்டார்... நம்ம குலதெய்வ கோயிலுக்கு வந்து சூடம் ஏற்றி சத்தியம் பண்ணியிருக்கார்....... “

“அப்படி அவர் ஓழுக்கமாய் இருந்திருந்தா அவரைக் கொலை பண்ணின நபர் ஓரு பெண்ணோட டெட்பாடியோடு சேர்த்து ஏன் புதைக்கணும்.....? அந்த பெண்ணோட கையில் M.M.S ன்னு பச்சை குத்தியிருக்கிற அடையாளம் ஓண்ணே போதும். ரெண்டு பேர்க்கும் எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கும்ன்னு வெளிப்படையா சொல்ல வேண்டியதே இல்லை....... !“

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இடைமறித்தார்.

“செந்தமிழ் ......நீங்க நினைக்கிற மாதிரி மணிமார்பனுக்கும், அவரோடு சேர்த்து புதைக்கப்பட்ட பெண்ணுக்கும் எந்த ஓரு சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை...!“

“என்ன ஸார் சொல்றீங்க.......? “

“நான் சொல்லலை..... அந்த பெண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது “

“ என்னான்னு .......? “

“ மணிமார்பனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இருந்திருந்தா அந்தப் பெண் M.M.S ன்னு பச்சை குத்த வாய்ப்பு இருக்கு இல்லையா .......? “

“ஆமா....... !“

“பி.எம் ரிப்போர்ட்ல டாக்டர்ஸ் தெளிவாய் குறிப்பிட்டிருக்காங்க. அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அதாவது இறந்த பிறகு கொலையாளி அவளுடைய கையில் M.M.S ன்னு பச்சை குத்தி மணிமார்பனோடு சேர்த்து புதைத்து இருக்கிறான்“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 26
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X