For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன ஆதி..... ஏதாவது தகவல் கிடைச்சுதா? .. பைவ் ஸ்டார் துரோகம் (38)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

கமிஷனர் ஆதிமுலம், வேல்முருகன் இருவரும் முதலமைச்சர் வஜ்ரவேலின் அறைக்குள் நுழைந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவர்க்கு முன்பாய் நின்று சல்யூட் அடித்துவிட்டு விறைத்த உடம்புகளோடு நின்றார்கள்.

வஜ்ரவேல் செல்போனில் பேசுவதை நிறுத்தாமல் கண்ணசைவால் அவர்களுக்கு தனக்கு முன்பாய் இருந்த நாற்காலிகளைக் காட்டி உட்காரும்படி சைகை செய்ய இருவரும் உட்கார்ந்தார்கள். சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. அந்த அறையை ஊட்டியாய் மாற்றியிருந்தது. அவர்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் முதலமைச்சர் வஜ்ரவேலு கோபத்தையும் கெட்ட வார்த்தைகளையும் கலந்து செல்போனில் கொட்டிக்கொண்டிருந்தார்.

Rajesh Kumars Five Star Droham serial episode 38

"இதோ...... பாரய்யா....... இந்த எம்.பி. இடைத்தேர்தலில் நாம ஜெயிச்சாத்தான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் நம்மளைப்பார்த்து பயப்படும்... நம்ம கட்சியோடு கூட்டணி வெச்சுக்க என்னோட ரூமுக்கு வெளியே ஒரு மணி நேரமாவது அந்தக்கட்சித்தலைவர்கள் காத்துக்கிடக்கணும். ஜனங்களுக்கு நம்ம கட்சி மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் சரி. ஒரு வோட்டுக்கு ஐயாயிரம் கொடுத்தா எல்லாத்தையும் மறந்துடுவாங்க. எப்படிப்பட்ட கோபமும் காணாமே போயிடும். நீ அந்த மாவட்டத்துல பத்து வருஷமா நீ செயலாளராய் குப்பை கொட்டியிருக்கே. போன தடவை நடந்த சட்டசபை தேர்தல்ல ஆறு தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி மட்டும் ஜெயிச்சோம்...... அதுவும் 103 ஓட்டு வித்தியாசத்துல...... மறு வாக்கு எண்ணிக்கை நடத்தியிருந்தா அதிலேயும் தோத்து போயிருப்போம். மூத்திர வாடை அடிக்கிற ஒரு முட்டு சந்துக்குள்ளே கள்ளச்சாராயம் வித்துட்டிருந்த நீ இன்னிக்கு ரெண்டு ஹோட்டலுக்கும், ஒரு மல்ட்டிஃப்ளக்ஸ் தியேட்டர்க்கும், ஒரு என்ஜினீரிங் காலேஜூக்கும் ஓனர். ஊருக்கு ஒரு பொண்டாட்டி..... கட்சியை வளர்க்கிறதுக்குப் பதிலா உனக்கு வேண்டியதையெல்லாம் வளர்த்து வெச்சிருக்கே. உன்னை மாவட்ட செயலாளரா நியமிச்சதுக்குப் பதிலா சினிமாவில குத்தாட்டம் போடற எந்த ஒரு நடிகையை நியமிச்சு இருந்தாலும் இந்நேரம் கட்சி உருப்பட்டிருக்கும்..... நீ இப்போ எனக்கு எந்த ஒரு சமாதானத்தையும் சொல்லிட்டிருக்க வேண்டாம். ரெண்டு நாள் கழிச்சு பிராந்தி, விஸ்கி வாசனை இல்லாமே வந்து என்னைப்பாரு...... ! "

கோபமாய் பேசி செல்போனை அணைத்தவர் ஒரு உடனடிப் புன்னகையை உதட்டுக்குக் கொடுத்தபடி போலீஸ் கமிஷனரை ஏறிட்டார். மென்மையான குரலில் கேட்டார்.

"என்ன ஆதி..... ஏதாவது தகவல் கிடைச்சுதா? "

"இல்ல ஸார் ....... சம்பவம் நடந்து ரெண்டு நாளாகியும் மும்பை தாதா இஷ்மி பர்மானை கடத்திட்டு போன அந்தப் போலி ஆம்புலன்ஸ் ஆட்கள் யார்ன்னு கண்டுபிடிக்க முடியலை.... ரெண்டு ஸ்பெஷல் ஸ்க்வாட் 24 மணி நேரமும் அலர்ட்ல இருந்து 360 டிகிரி அப்சர்வேஷனை ஃபாலோ அப் பண்றாங்க. பட் வி குட் நாட் கெட் எனி யூஸ்ஃபுல் ரிப்ளை"

"இந்த கடத்தல் விவகாரத்துல கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா சம்பந்தப்பட்டிருப்பார்ன்னு நீங்க நினைக்கிறீங்களா ? "

"சர்ட்டன்லி ஸார்...... இஷ்மி பர்மான் மூலமாய் எந்த உண்மையும் வெளியே வந்துடக்கூடாதுன்னு கவர்னரோட பி.ஏ. செயல்பட்டு காய்களை மூவ் பண்ணிட்டிருக்கார். முகில்வண்ணனோட ஃபேமிலி மெம்பர்ஸை தீர்த்துக் கட்டற அளவுக்கு அவர்க்கு என்ன கோபம்ன்னு தெரியலை... "

Rajesh Kumars Five Star Droham serial episode 38

வேல்முருகன் குறுக்கிட்டார்.

"ஸார் ...... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஐநூறு கோடி ரூபாய் பணம். அந்தப் பணத்தை முகில்வண்ணன் கிட்டயிருந்து மீட்கிற முயற்சியிலதான் இத்தனை கொலைச்சம்பவங்கள் நடந்திருக்கு....... இந்திய அரசில் இருக்கிற ஒரு முக்கியமான புள்ளியோட மூளைதான் இந்த திட்டத்துக்கான தலைமை செயலகம்...... வருமானவரித்துறைக்கும் தெரியாமே அமலாக்கப்பிரிவுக்கும் தெரியாமே முகில்வண்ணன்கிட்டே இருக்கிற ஐநூறு கோடி ரூபாயை எப்படி அபகரிக்கலாம்ன்னு ஷிவ்ராம் தத்தாத்ரேயா திட்டம் போட்டிருக்கார். இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வரணும்ன்னா கடத்திக்கொண்டு போகப்பட்ட இஷ்மி பர்மான் நமக்கு உயிரோடு கிடைக்கணும் ஸார். அவன்கிட்டேயிருந்து ஒரு க்ளீயர் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டோம்ன்னா கவர்னரோட பி.ஏ.வை டெல்லி சி.பி.ஐ. உதவியோடு ஒரு ராத்திரி நேரத்துல அவரோட வீட்டுக்குப் போய் அரஸ்ட் பண்ணிடலாம் ஸார்....... "

முதலமைச்சர் வஜ்ரவேலு மெல்ல சிரித்தார்.

"இதெல்லாம் நடக்ககூடிய காரியமா.....அந்த இஷ்மி பர்மானை இந்நேரம் சாம்பலாக்கி கடல்ல கரைச்சிருப்பாங்க..... "

வேல்முருகன் மேற்கொண்டு பேசும்முன்பு அவருடைய செல்போன் இன்கம்மிங் கால் வருவதற்கு அறிகுறியாக வெளிச்சமாய் ஒளிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு கமிஷனரிடம் திரும்பினார்.

"ஸார் ...... முகில்வண்ணனோட மகன் செந்தமிழ் அட்மிட் செய்யப்பட்டிருக்கிற திரிசூலம் அமிர்தம் ஹாஸ்பிடலில் இருந்து சீஃப் டாக்டர் பேசறார்"

"ஸ்பீக்கரை "ஆன்" பண்ணிட்டுப் பேசுங்க"

"எஸ் ஸார்... என்று சொல்லி தலையசைத்த வேல்முருகன் ஸ்பீக்கரை "ஆன்" செய்துவிட்டு பேசினார்.

"சொல்லுங்க டாக்டர்...... அயாம் வேல்முருகன்"

"மிஸ்டர் வேல்முருகன்...... நானும் ஹாஸ்பிடல் நிர்வாகமும் எவ்வளவோ எச்சரிக்கையாய் இருந்தும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துருச்சு......."

"வாட் டூ யூ மீன் டாக்டர் ? "

"செந்தமிழ் இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கிற விஷயம் பிரஸ் பீப்பிளுக்கும், தொலைக்காட்சி சானல்களுக்கும் தெரிஞ்சு இருபதுக்கும் மேற்பட்டவங்க ஹாஸ்பிடலுக்கு வந்துட்டாங்க. அதுல ஒருத்தர் எப்படியோ செந்தமிழ் இருக்கிற அறைக்கே போய் வீடியோ எடுத்து அதை அவர் சேனலுக்கும் அனுப்பிட்டார். எந்த நேரத்திலும் அந்த டிவி பிரேக்கிங் நியூஸ் போடலாம்"

"அது எந்த டிவி..........? "

"ரெட் சன்" என்கிற ஒரு ஹிந்தி சானல் டிவி" டாக்டர் செல்ல வேல்முருகன் அதிர்ந்தார்.

"மைகுட்னஸ்....... அந்த ரெட் சன் சானல் நார்த்ல வெரி பவர் ஃபுல் சானல். அவன் ஒருத்தன் டெலிகாஸ்ட் பண்ணினாலே போதும். அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே இந்தியாவோட மூலை முடுக்குக்கெல்லாம் நியூஸ் போயிடும். அவனை எப்படி உள்ளே விட்டீங்க டாக்டர்..........? "

"ஸாரி மிஸ்டர் வேல்முருகன்.......... செந்தமிழ் இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி மூணு நாளாகுது. அவர் எக்ஸ் சீஃப் மினிஸ்டரோட மகன் என்கிற காரணத்தால் நாங்களும் செக்யூரிட்டி ஏற்பாடுகளை ரொம்பவும் டைட்டாத்தான் பண்ணியிருந்தோம். அவர் இருந்த வார்டு பக்கம் கூட நானும் ட்யூட்டி டாக்டர்ஸ் மட்டும்தான் போவோம். நர்ஸ்களை கூட அலவ் பண்ணலை. அப்படி இருந்தும் யாரோ ஸ்மெல் பண்ணி உள்ளே போயிட்டாங்க......... ஸாரி டூ ஸே திஸ்........ ! "

சில விநாடிகள் மெளனமாய் இருந்த வேல்முருகன் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு கேட்டார்.

"செந்தமிழோட கண்டிஷன் இப்போ எப்படியிருக்கு. மறுபடியும் கான்ஷியஸ் வந்ததா........ ? "

ரெண்டு தடவை கண்விழிச்சுப் பார்த்தார். ஆனா அவரால பேச முடியலை..... கைகால்களை அசைக்க முயற்சி பண்ணினார். அதுவும் முடியலை..... "

"எத்தனை நிமிஷம் வரைக்கும் சுய உணர்வோடு இருந்தார்..... ? "

"அஞ்சு நிமிஷம்........ ! "

"உண்மையிலேயே அவர்க்கு என்ன பிரச்சினை.... ? "

"நான் ஏற்கனவே சொன்னது போல் செந்தமிழுக்கு யாரோ இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் மருந்தை ஒவர்டோஸோய் அவரோட உடம்புக்குள்ளே செலுத்தியிருக்காங்க. அவரோட ப்ளட் ரிப்போர்ட்டும், நியூரோ ஸ்கேன் ரிப்போர்ட்டும் ரியலி அப் நார்மல். எங்க டாக்டர் டீம் அவரை கான்ஷியஸூக்கு கொண்டு வர்றதுக்கான முயற்சியில் முழு அளவில் ஈடுபட்டும் எதிர்பார்த்த பாஸிட்டீவ் ரிசல்ட் கிடைக்கலை........ ! "

"டாக்டர்......... ஐ வாண்ட் ஏ க்ரிஸ்டல் க்ளியர் ரிப்போர்ட் ஃபரம் யூ...... "

"செந்தமிழை பழைய நிலைமைக்கு கொண்டுட்டு வர முடியுமான்னு கேட்கப் போறீங்க இல்லையா.... ? "

"எஸ்...... அவரோட உயிருக்கு ஆபத்தும் இல்லைன்னு சொல்லிட்டீங்க. ஆனா நீங்க தர்ற ட்ரீட்மெண்ட்டுக்குப் பின்னாடி அவரோட ஹெல்த் எப்படி இருக்கும்.... ? "

"ஹி வில் பி ஜஸ்ட் லைக் ஏ வெஜிடபிள்"

"நீங்க இப்போ என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்.... ? "

"செந்தமிழ் அந்த இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் மருந்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தாலும் அவர் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் தான் வாசம் பண்ணியாகணும். சுய உணர்வு வரும். போகும். ஆனா அவரால பேசவோ கை கால்களை அசைக்கவோ முடியாது. நாளடைவில் இது ஒரு பார்கின்சன் நோயாக மாறும். இது ஒரு அன்ஹெல்தி இல்னஸ்...... குணப்படுத்த முடியாத நோய்"

"இந்த விபரங்கள் எல்லாம் முகில்வண்ணனோட ஃபேமிலி மெம்பர்ஸூக்கு தெரியுமா டாக்டர்.... ? "

"தெரியாது.... எக்ஸ் சி.எம் முகில்வண்ணனுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளின் காரணமாய் ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறதாய் கேள்விப்பட்டேன். அதனால செந்தமிழுக்கு ஏற்பட்டு இருக்கிற பாதிப்பைப்பத்தி சொல்லலை..... "

"ஒரு வாரத்துக்கு இதையே மெய்ன்டைன் பண்ணுங்க டாக்டர்...... நான் சாயந்தரம் ஹாஸ்பிடலுக்கு வரும்போது மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். மீடியா பீப்பிள் யாரையும் உள்ளே அலவ் பண்ண வேண்டாம். செந்தமிழுக்கு உடம்பு சரியில்லை. பன்றிக்காய்ச்சல்ன்னு சொல்லி சமாளிங்க"

"இப்போ அந்தப் பொய்யைத்தான் சொல்லிட்டிருக்கோம்"

"தட்ஸ் குட் பை த பை..... செந்தமிழோட ஹெல்த் ரிப்போர்ட்டை மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவை எனக்கு "வாட்ஸ் அப்"ல அனுப்பி வையுங்க"

வேல்முருகன் சொல்லிவிட்டு செல்போனை அணைக்க முதலமைச்சர் வஜ்ரவேலு கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்தார்.

"டாக்டர் சொல்றதைப்பார்த்தா செந்தமிழ் தேற மாட்டான் போலிருக்கே.. "

கமிஷனர் தலையாட்டினார். "என்னோட மனசுக்குள்ளும் அதே எண்ணம்தான் ஸார்......"

முதலமைச்சர் மேற்கொண்டு பேசும் முன்பு அவருடைய உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி அறைக்குள் தயக்கமாய் நுழைந்தார்.

"ஸார்......"

"என்ன கிருஷ்ணமூர்த்தி .... ? "

"முகில்வண்ணன் வீட்டுக்குப்போய் அவரோட உடல்நிலையைப்பற்றி விசாரிக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க"

"இப்ப கிளம்பிடலாம். மத்தியானமெல்லாம் போக முடியாது. வைஸ் பிரஸிடெண்ட் திருப்பதி போறதுக்காக சென்னை வர்றார். அவரை ரிஸீவ் பண்ண ஏர்போர்ட் போகணும்" சொல்லிக்கொண்டே நாற்காலியின்றும் எழுந்தார்.

அதே விநாடி - அவருடைய ஹாட்லைன் செல்போன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா பெயர் செல்போனில் டிஸ்ப்ளேயில் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 38
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Metrics Calculation