For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே ? .. பைவ் ஸ்டார் துரோகம் (47)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செந்தட்டி கிராமத்தின் மண் பாதையில் காரை நிதானமான வேகத்தில் விரட்டிக்கொண்டிருந்தான் ட்ரைவர் சாமுவேல். பக்கத்தில் நேர்பார்வை பார்த்துக்கொண்டு முகில்வண்ணன் அமர்ந்திருக்க காரின் பின்புறசீட்டில் கயல்விழியும், மலர்க்கொடியும் கலக்கம்படிந்த முகங்களோடு உட்கார்ந்திருந்தார்கள். காருக்குள் நிலவிய வேண்டாத மெளனத்தைக் கலைத்தாள் கயல்விழி.

" அப்பா "

" சொல்லு "

" நாம இப்ப எங்கே போயிட்டிருக்கோம் ? "

" நம்ம தென்னந்தோப்புக்கு "

" நான் ஓண்ணு சொன்னா கேப்பீங்களா ? "

" என்ன ? "

" போற வழியில்தானே நம்ம குலதெய்வக்கோயில். ஓரு பத்து நிமிஷம் கோயில்ல இருந்துட்டு அப்புறமா போவோம்பா "

Rajesh Kumars Five Star Droham serial episode 47

" கோயில் சாமியெல்லாம் சாயந்தரமா வந்து பார்த்துக்கலாம். மொதல்ல நீயும் உன்னோட அண்ணியும் அந்த 500 கோடி ரூபாய் இந்த கிராமத்துல எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுதான் முக்கியமான விஷயம். நம்ம பண்ணை வீட்ல சோதனை போட்ட இன்கம்டாக்ஸ் ஆபீஸர்ஸூம், சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு ஆபீஸர்ஸூம் எந்த நிமிஷமும் இந்த கிராமத்துக்கு வரலாம். என்னை கைது பண்ணவும் வாய்ப்பு இருக்கு., அப்படியெல்லாம் நடக்கிறதுக்கு முந்தி பணம் இருக்கிற இடத்தை நான் உங்களுக்கு காட்டியாகணும்.... ! "

முகில்வண்ணன் மேற்கொண்டு பேசும் முன்பாக அவருடைய செல்போன் யாரோ அழைப்பதற்கு அறிகுறியாய் வைபரேஷனில் அதிர்ந்தது. எடுத்து காதின் செவிமடலுக்குக் கொடுத்தார். மறுமுனையில் கான்ஸ்டபிள் சார்லஸ் பேசினார்.

"ஸார்..... நீங்க இப்ப ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கீங்களா...... ? "

" என்ன விஷயம் சொல்லு "

" ஸார்....ரெண்டு முக்கியமான விஷயம் ரெண்டும் அதிர்ச்சியானவை "

" வள வளன்னு பேசாமே விஷயத்தை சொல்லு "

" திரிசூலம் ஹாஸ்பிடலில்ல அட்மிட் செய்யப்பட்டு ட்ரீட்மெண்ட்ல இருந்த உங்க மகன் செந்தமிழ் நேற்றைக்கே இறந்துட்டார். ஆனா உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்குமேன்னு உடனடியாய் இன்ஃபார்ம் பண்ணாமே பத்துமணிக்கு மேல் இன்ஃபார்ம் பண்ணணும்ன்னு கமிஷனர் ஆதிமுலம் செல்போன்ல யார்கிட்டேயோ சொல்லிட்டு இருந்தார்"

முகில்வண்ணன் தன்னுடைய மகிழ்ச்சியை காட்டிக்கொள்ளாமல் செயற்கையான அதிர்ச்சியோடு "அப்படியா? " என்றார்.

" ஆமா.... ஸார்..... செந்தமிழ் இறந்து போனதில்கூட ஏதோ சந்தேகம் இருக்குன்னு டாக்டர் சொன்னதாய் கேள்விப்பட்டேன்"

முகில்வண்ணன் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

" சரி..... ரெண்டாவது விஷயம் என்ன ? "

" தமிழ்நாடு இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த அருள், நித்திலன், சாதுர்யா இந்த மூணு பேரும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளோடு இன்னும் ரெண்டு நாள்ல செந்தட்டி கிராமத்துக்கு வரப்போறாங்க. உங்ககிட்டே விரிவான ஒரு விசாரணையை கடுமையான முறையில் நடத்த திட்டம் போட்டு இருக்காங்க... உங்களை ஹவுஸ் அரஸ்ட் பண்ணக்கூடிய அளவுக்கு சி.எம்.வஜ்ரவேலு காய்களை நகர்த்திட்டிருக்கார் "

Rajesh Kumars Five Star Droham serial episode 47

முகில்வண்ணன் தன்னுடைய உதடுகளில் வறண்ட சிரிப்பொன்றை தவழவிட்டார்.

" அவங்க எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுத்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்த்து நின்னு சமாளிக்கக்கூடிய அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு.. நீ மட்டும் அப்பப்ப என்னை போன்ல காண்டாக்ட் பண்ணி அங்கே விஷயங்கள் எதுமாதிரி போயிட்டு இருக்குன்னு தகவல் கொடுத்துகிட்டே இரு "

" கண்டிப்பா ஸார்..... கமிஷனர் ஆபீஸ்ல நான் இருக்கிறதால எனக்குத் தெரியாமே எந்த ஒரு விஷயமும் நடக்காது... "

" சார்லஸ்..... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர்ஸ்களுக்கெல்லாம் லட்ச லட்சமாய் வாரி கொடுத்திருக்கேன்.... நான் சி.எம்மாய் இருந்தபோது தகுதியில்லாத ஆட்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்து சந்தோஷப்படுத்தியிருக்கேன். ஆனா இன்னிக்கு அவங்க எல்லாருமே சி.பி.ஐ. அமலாக்கத்துறை அதிகாரிகளோடு கைகோர்த்துகிட்டு எனக்கு எதிராய் திரும்பிட்டாங்க. ஆனா நான் என்னிக்கோ உன்னோட மகள் கல்யாணத்துக்கு கொடுத்த ரெண்டு லட்ச ரூபாயை நீ நன்றியோடு நினைச்சுப் பார்த்து எனக்கு சரியான நேரத்துல உதவி பண்ணிட்டிருக்கே. இதை நான் என்னிக்குமே மறக்கமாட்டேன்....."

ஸார்.... நீங்க ரெண்டு தடவை இந்த தமிழ்நாட்டுக்கு சி.எம்மாய் இருந்திருக்கீங்க. உங்களைப் போய் ஊழல் பேர்வழின்னும் 500 கோடி ரூபாய் சம்பாதிச்சிட்டதாகவும் அரசியல் வட்டாரத்துல பேசிக்கிறாங்க. நான் அதையெல்லாம் நம்பலை ஸார். யாரோ பொறாமை பிடிச்சவங்க உங்க குடும்பத்தை ஏதோ ஒரு காரணத்துக்காக அழிக்க திட்டம் போட்டு செயல்படுத்திகிட்டு இருக்காங்க... நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருங்க ஸார். லேண்ட் லைன்ல ஒரு போன் வருது. மறுபடியும் ரெண்டு மணி நேரம் கழிச்சு போன் பண்றேன் ஸார் "

மறுமுனையில் சார்லஸ் இணைப்பைத் துண்டித்துவிட முகில்வண்ணன் தன்னுடைய செல்போனையும் மெளனமாக்கினார். அவர் பேசி முடிக்கும்வரை காத்திருந்த மலர்க்கொடி மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

" மாமா "

" ம் "

திரிசூலம் ஹாஸ்பிடலிலுக்கு போன் பண்ணி அவர் எப்படி இருக்கார்ன்னு ஒரு வார்த்தை கேளுங்க மாமா "

" காலையிலேயே போன் பண்ணி கேட்டேன்மா. டாக்டர் போன் எடுக்கலை. ஒரு நர்ஸ்தான் போன் எடுத்து பேசினா. அவ சரியா பதில் சொல்லலை. பத்துமணிக்கு மேல போன் பண்ணுங்க.... டாக்டர் இருப்பார்ன்னு சொல்லிட்டு ரிஸீவரை வெச்சுட்டா "

"மாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே ? "

" செந்தமிழ் உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். தைரியமாய் இரும்மா...... "

" எனக்கு பயம்மாயிருக்கு மாமா ...... "

" எதுக்கும்மா பயம்...... ? வாழ்க்கையில் எதுக்காகவும் பயப்படக்கூடாது. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதை தைரியமாய் ஃபேஸ் பண்ணனும். உதாரணத்துக்கு உம் புருஷன் செந்தமிழுக்கு ஏதாவது ஆயிருச்சுன்னு வெச்சுக்க...... "

" மாமா "

" ஒரு பேச்சுக்கு சொன்னேன்மா.... அப்படி ஏதாவது ஆயிட்டா உன்னைவிட எனக்குத்தான் அது ஒரு பெரிய அதிர்ச்சியாய் இருக்கும். ஆனா அந்த அதிர்ச்சியிலிருந்து உடனே மீண்டு வெளியே வந்துடணும்.... அடுத்தபடியாய் நாம எதுமாதிரியாய் வாழப்போறோம்ன்னு ஒரு முடிவுக்கு வந்துடணும்.... என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் இப்ப உயிரோடு இல்லை. விஷயம் தெரிஞ்சதும் நீ, நான், கயல்விழி மூணு பேருமே நிலை குலைஞ்சு போயிட்டோம். அந்த அதிர்ச்சி மூணுநாள்தான். நாலாவது நாள் நாம எல்லோருமே நார்மலுக்கு வந்துட்டோம். கடவுள் புண்ணியத்துல நமக்கு சொத்து இருக்கு..... எல்லாத்துக்கு மேலாய் நம்ம குடும்பம் ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு 500 கோடி ரூபாய் பணத்தை கட்டிக்காக்க வேண்டியது நீயும் கயல்விழியும்தான் ! "

முகில்வண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் குளிர்ச்சியான தென்னந்தோப்புக்குள் நுழைந்து சற்றே கரடு முரடான பாதையில் குதித்து

குதித்து பயணித்தது.

ஒரு ஐந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு காரின் வேகம் குறைந்து தோப்பின் ஒரமாய் போய் நின்றது.

கயல்விழி கேட்டாள்.

"அப்பா...... ! இந்த தென்னந்தோப்புக்குள்ளே எப்படி எந்த இடத்துல அந்த 500 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைக்க முடியும் ? "

முகில்வண்ணன் காரிலிருந்து இறங்கிக்கொண்டே சொன்னார்.

"பணம் தென்னந்தோப்புக்குள்ளே இல்லேம்மா அதோ தெரியுதே அந்த இடத்துல " அவர் சுட்டிக்காட்டிய திசை பக்கம் திரும்பிப்பார்த்தாள் கயல்விழி.

நூறு மீட்டர் தொலைவில் மரங்களுக்கு நடுவே பளிச்சென்ற சுண்ணாம்பு பூச்சில் ஒரு பெரிய மண்டபம் பார்வைக்குத் தட்டுப்பட கயல்விழி ஆச்சரியப்பட்டாள்.

"அப்பா...... ! அது நம்ம தாத்தா பாட்டியோட சமாதிக் கட்டிடம்.... "

அதற்கு முகில்வண்ணன் பதில் சொல்வதற்கு முன் சாமுவேல் குறுக்கிட்டுப் பேசினான்.

"அம்மா...... ! போன வருஷம் வரைக்கும் அது வெறும் சமாதி. இப்போ அய்யாவோட சேஃப்டி லாக்கர்"

மலர்க்கொடி வியப்பில் விழிகளை விரித்தாள்.

" என்ன மாமா ...... ! சாமுவேல் சொல்றது உண்மையா ? "

" உண்மைதான்ம்மா...... என்னோட அம்மா அப்பா சமாதிக்கு முன்னாடி கார் போய் ரொம் நேரம் நின்னா அது இந்த கிராமத்துல இருக்கிற எவனோட பார்வையையாவது உறுத்தும். அதனால்தான் தென்னந்தோப்புக்குள்ளே காரை நிறுத்திட்டு இப்படி பின்பக்க வழியாய் நடந்து போகப் போறோம் "

"மாமா ...... ! அந்த ரெண்டு சமாதி மண்டபமும் அவ்வளவு பெரிசு கிடையாது. அதுக்குள்ளே போய் எப்படி 500 கோடி ரூபாயையும் பதுக்கி வைக்க முடியும் ?

" மனசு வெச்சா எல்லாமே முடியும்.....இப்படி ஒரு யோசனையோடு எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு கொடுத்தது வேறு யாருமில்லை. நம்ம சாமுவேல்தான். சாமுவேல் எனக்கு கார் ட்ரைவர் மட்டும் அல்ல. ஒரு சிவில் என்ஜினியராய் இருந்து அந்த சமாதிகளை முன்யோசனையோடு கட்டிக் கொடுத்தவன். சாமுவேலோட இப்படிப்பட்ட திறமைக்குக் காரணம் அவன் என்கிட்ட வேலைக்கு வந்து சேர்றதுக்கு முந்தி ஒரு ஆர்க்கி டக் என்ஜினியர்கிட்டே வேலை பார்த்தவன். இதுக்கு முன்னாடி நீயும் கயல்விழியும் எத்தனையோ தடவை இந்த கிராமத்துக்கு வந்து சமாதிகளுக்கும் போயிருக்கீங்க. ஆனா இந்த தடவை நீங்க ரெண்டு பேரும் பார்க்கப் போகிற சமாதி ஒரு ஆச்சர்யமான அனுபவத்தைக் கொடுக்கும். வாங்க என் பின்னாடி..... "

முகில்வண்ணன் சொல்லிக்கொண்டே சாமுவேலோடு அந்த சமாதிகளை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட, மலர்க்கொடியும் கயல்விழியும் கலவரம் படிந்த கண்களோடு பின் தொடர்ந்தார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 47
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X