• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜேஷ்குமாரின் புதிய தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 2

By Shankar
|

-ராஜேஷ்குமார்

சாதுர்யாவும் நித்திலனும் சீஃப் இன்கம்டாக்ஸ் ஆபீஸர் அருளை ஒரு ஆச்சர்யப் பார்வையால் நனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள்.

"ஸார்... மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனின் அறுபதாவது பிறந்தநாள் விழாவுக்கு அரசியல் துறையைச் சேர்ந்தவங்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே கலந்துக்கப் போறாங்க இல்லையா?"

"ஆமா..."

"அப்படீன்னா நாங்க எப்படி உள்ளே போக முடியும் எண்ட்ரன்ஸ்லேயே தடுத்து நிறுத்திடுவாங்களே?"

"அது எனக்குத் தெரியாதா என்ன...? இந்தா இதைப் பிடிங்க....", சொன்னவர் தன் தோளில் போட்டிருந்த லெதர் பையின் ஜிப்பை விடுவித்து உள்ளேயிருந்த அந்த இரண்டு பொன்னிற கவர்களை உருவி எடுத்தார்.

"இதுதான் முகில் வண்ணனின் சஷ்டியப்த பூர்த்தி விழா அழைப்பிதழ். சில முக்கியமான ஊடகங்களுக்கு மட்டுமே இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கு. இதை வாசலில் இருக்கிற செட்யூரிட்டிகள் கிட்டே காட்டினால் போதும். உள்ளே அட்மிட் பண்ணிடுவாங்க...."

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 2

நித்திலனும், சாதுர்யாவும் அந்த அழைப்பிதழ்களை வாங்கிப் பார்த்தார்கள்.

"அடலேறு அவதரித்த அறுபதாவது பிறந்த நாள்.

வரலாறை வாழ்த்துவோம் வாரீர்."

என்ற வரிகள் தங்க நிறத்தில் தகதகத்தது. கவர்க்குள் இருந்த அழைப்பிதழ். கால் கிலோ அளவுக்கு கனத்தது.

அருள் சிரித்துக் கொண்டே சொன்னார். "நீங்க ரெண்டு பேரும் உள்ளே போறதுக்கான பாஸ்போர்ட் இது. கூடவே இந்த நேம் பேட்ஜையும் எல்லார்க்கும் தெரியும்படி சட்டைப் பை பக்கம் குத்திக்கணும்."

"இது என்ன பேட்ஜ் ஸார்?"

"வாங்கிப் பாருங்க"

வாங்கி பார்த்தார்கள்

'அனைத்துலக தமிழர் வாழ்வாதார முன்னேற்ற கட்சி' என்ற வாக்கியம் அரைவட்டமாய் தெரிய அந்த வட்டத்துக்குள் மாஜி முதல் அமைச்சர் முகில்வண்ணன் வழக்கைத்தலையோடு தங்கப்பல் தெரிய சிரித்தார். பின் மண்டை தலைமுடி 'டை'யின் உபயத்தால் கறுப்பு பிறையாய் தெரிந்தது.

சாதுர்யா புன்னகையோடு தலையசைத்தாள். "இப்பப் புரியுது ஸார்.... இந்த விழா அழைப்பிதழ்தான் பாஸ்போர்ட். இந்த நேம் பேட்ச்தான் விசா. இந்த ரெண்டும் இருந்தால்தான் விழா நடக்கிற அந்த நீலாங்கரை பண்ணை வீட்டுக்குள்ளே போக முடியும்."

"அதே அதே.... சபாபதே," என்றார் அருள்.

நித்திலன் கேட்டான்.

"ஸார்.... நாங்க பண்ணை வீட்டுக்குள்ளே போனதும் எது மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளணும்...?"

"நித்திலன்! அந்த பண்ணை வீடு ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட மிகப்பெரிய பங்களான்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். அவர் எம்.எல்.ஏ வாக இருந்த போதே அவர் பேர்ல ஏகப்பட்ட ஊழல் புகார்கள். நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு நிறைய லெட்டர்ஸ் வரும்.

அப்பவே கட்டின பண்ணை வீடு அது. ரெண்டாவது தடவையாய் அவர் எம்.எல்.ஏ ஆனபோது பொதுப்பணித்துறை மந்திரியாய் இருந்தார். மூணாவது தடவை தேர்தலில் ஜெயிச்ச போது சி.எம். ஆயிட்டார். மொத்தம் பத்து வருஷம் முதலமைச்சராய் இந்த முகில்வண்ணன் முறை கேடாய் ஊழல் பண்ணி கோடி கோடியாய் பணம் சம்பாதிச்சார். அதிகாரமும் பதவியும் அவரோட கையில் இருந்ததால் அவரை சி.பி.ஐ யும் சரி, அமலாக்கப் பிரிவும் சரி, நம்ம டிபார்ட்மெண்ட்டும் சரி, எதுவுமே பண்ண முடியலை. காரணம் சென்ட்ரல் கவர்மெண்டில் இருக்கிற சில சர்வ வல்லமை படைத்த அதிகாரிகள். ஆனா.... இப்ப.... நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு..."

"எப்படி ஸார்?"

"மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து சீஃப் சதுர்புஜன் எனக்கு பச்சை கொடி காட்டிட்டார். முகில்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கிறதுக்கு முன்பு அவரோட நெருக்கமான நண்பர்கள் யார்ங்கிறதை லிஸ்ட் பண்ணனும். இது மாதிரியான முக்கியமான விழாக்களின் போதுதான் அவர்க்கு நெருக்கமான நபர்கள் யார் என்கிற விஷயம் தெரிய வரும்.... நீங்க ரெண்டு பேரும் செல்போனில் வீடியோவாகவும் எடுக்கப் போறீங்க.... அதே நேரத்துல அந்த பண்ணை வீட்டில் எத்தனை அறைகள், எது மாதிரியான அமைப்புகளில் கட்டப்பட்டு இருக்கு என்கிற விபரங்களும் வேணும்."

"யூ டோண்ட் வொர்ரி ஸார்... நீங்க சொன்னது மட்டும் இல்லை சொல்லாத விபரங்களையும் சேர்த்து கொண்டு வர்றோம்."

அருள் அண்ணாந்து வாய்விட்டு சிரித்துவிட்டு நித்திலனின் தோள் மீது கையை வைத்தார்.

"நம்ம டிபார்ட்மெண்டிலேயே உங்க ரெண்டு பேரைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஹைலி டெடிகேட்டட் பர்ஸன்ஸ். எது மாதிரியான வேலையைக் கொடுத்தாலும் அதை ஒரு புதிய கோணத்தில் பார்த்து அதுக்கு முடிவுரை எழுதற கலை உங்ககிட்டே இருக்கு. எல்லாத்துக்கும் மேலா நீங்க ரெண்டு பேரும் ஐ.டி. டிபார்ட்மெண்டில் இருந்தாலும் வெளியுலகத்துக்கு தெரியாத 'இன் காமிரா' விங்கில் வேலை பார்த்துட்டிருக்கிறது இந்த ஆக்டோபஸ் ஆப்ரேஷனுக்கு ரொம்பவே உதவும்."

"ஸார்.... முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி ஃபங்க்‌ஷன் நாளைக்குத்தானே...?"

"ஆமா..."

"எத்தனை மணிக்குக் கிளம்பணும் ஸார்?"

"விடியற்காலை அஞ்சு மணிக்கு கணபதி ஹோம பூஜையும் சுதர்சன பூஜையும் இருக்குன்னு நிகழ்ச்சி நிரலில் போட்டிருக்காங்க. அந்த நேரத்துக்கே நீங்க ரெண்டு பேரும் போயிடறது பெட்டர். இது மாதிரியான பூஜைகளின் போதுதான் முகில்வண்ணனுக்கு நெருக்கமானவங்க இருப்பாங்க... நீங்க அந்த ஃபங்க்‌ஷனில் இருக்கும்போது உங்க நடவடிக்கைகளைப் பார்த்து யாரும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது... ஏன்னா நான் இப்படி உங்களை வார்ன் பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கு...!"

"என்ன காரணம் ஸார்?"

"முகில்வண்ணனோட முன்கதைச் சுருக்கம் என்னான்னு தெரியுமா?"

"தெரியாது ஸார்..."

"அவரோட சொந்த ஊர் ராமநாதபுரத்தில் இருக்கிற செந்தட்டி கிராமம். அப்பா அம்மா வெச்ச பேரு முத்துக்காளை. அஞ்சாங்கிளாஸுக்கு மேல் படிப்பு வரலை. அப்பா, அம்மா இறந்த பிறகு அந்த ஊர் கவுன்சிலர் வீட்ல போய் வேலைக்கு சேர்ந்து, அவர் கூடவே இருந்து வேலையும் பார்த்துகிட்டு அரசியலையும் கத்துகிட்டு வந்து ஒரு பேட்டைக்கு ரெளடியாகி, ஒரு பெண்ணை வலிய கெடுத்து அவளையே கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு மந்திரிக்கு அடியாளாக மாறி அவரோட சிபாரிசால கவுன்சிலராகி, எம்.எல்.ஏ.வாகி, மந்திரியாகி, இப்போ மாஜி முதல் மந்திரியாய் நாளைக்கு சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடப் போறார். ஒரு முத்துக்காளை முகில்வண்ணனாய் மாறிய கதை இதுதான்."

"ஸார்.. முகில்வண்ணனோட மனைவி இறந்துட்டதாய் எப்பவோ... பேப்பர்ல படிச்ச ஒரு ஞாபகம்"

"ஆமா முதல் மனைவி விஜயா சில வருஷங்களுக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. இருந்தாலும் அடுத்த ஆறு மாசத்துக்குள்ளே முகில்வண்ணன் தன்னோட மகளிர் அணி கட்சித் தலைவி சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். முதல் மனைவி மூலமாய் முகில்வண்ணனுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகன் பேரு செந்தமிழன். வயசு முப்பது. பொண்ணோட பேரு பூவிதழ். பூவிதழ்க்கு கல்யாணமாயிருச்சு. புருஷன் பேரு மணிமார்பன். அதே வீட்ல வீட்டு மாப்பிள்ளையாய் இருக்கார்...," என்று பேசிக் கொண்டே போன அருள் ஒரு சில விநாடிகளுக்கு பேச்சை நிறுத்தினார்.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார். "இப்ப நான் சொல்லப் போகிற விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் மனசுல நல்லா வாங்கிகிட்டு இந்த ஆப்ரேஷன்ல செயல்படனும்."

"சொல்லுங்க ஸார்"

"முகில்வண்ணனோட மகன் செந்தமிழும், மருமகன் மணிமார்பனும் சாதாரண நபர்கள் கிடையாது. சென்னையில் உள்ள பல கூலிப்படை அமைப்புக்கள் இவங்க ரெண்டு பேரோட கட்டுப்பாட்டுக்குள்ளேதான் இருக்கு... இவங்களோட கண்ணசைவுகள் எந்தப்பக்கம் போய் யார் மேல் பதியுதோ அவங்க ஒருவார காலம்தான் உயிரோடு இருப்பாங்க.... போலீஸ் எஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்றதோடு சரி. அதுக்கப்புறமாய் பெயரளவுக்கு ஒரு இன்வெஸ்டிகேஷனை பண்ணிட்டு ' THE CASE CAN NOT BE FOUND' என்கிற ஃபைல் லிஸ்ட்டுக்கு போயிடும்....'

நித்திலன் கோபமாய் குரலை உயர்த்தினான். "SIR THIS IS HIGHLY CONDEMNABLE".

"இது எல்லார்க்கும் தெரியும்.... ஆனா யாரும் எதுவும் பண்ண முடியாது. வீ ஆர் ஹெல்ப்லஸ்..."

"ஸார்! பணம், பதவி, அதிகாரம் இந்த மூணும் யார்கிட்ட இருந்தாலும் அவங்ககிட்டே சட்டம் செல்லுபடியாகாது. நியாயம் தர்மம் எடுபடாது. முகில்வண்ணன்கிட்டே பதவியும் அதிகாரமும் இருக்கக் காரணம் அவர் முறைகேடாய் சம்பாதிச்சு வெச்சிருக்கிற கோடிக்கணக்கான பணம்தான். அதை பறிமுதல் பண்ணி அரசு கஜானாவுக்கு கொண்டு போயிட்டாலே போதும். முகில்வண்ணன் மாதிரி இருக்கிற நபர்களோட ஆட்டமெல்லாம் ஆடி அடங்கி காணாமல் போயிடும்..."

"யூ ஆர் கரெக்ட் நித்திலன்... பட் நம்மால் இது முடிகிற காரியமா...?"

"நானும் சாதுர்யாவும் இந்த அராஜகத்துக்கு முடிவு கட்றோம் ஸார்...!"

"நீ என்ன சொல்றே சாதுர்யா?"

"நான் களத்துல இறங்கி ரொம்ப நேரமாச்சு ஸார்"

"தட்ஸ் குட்... நாளைக்கு நம்ம 'ஆபரேஷன் ஆக்டோபஸ்' திட்டத்தோட முதல் கட்டம் ஆரம்பம். சரியா காலைல அஞ்சு மணிக்கெல்லாம் முகில்வண்ணனோட நீலாங்கரை பண்ணை வீட்ல இருக்கணும்."

"இருப்போம் ஸார்"

-------------

காலை ஏழுமணி.

அடையார் போட்ஸ் கிளப் ரோட்டிலிருந்த பெரிய பங்களாவின் பூஜையிலிருந்து வெளிப்பட்ட மாஜி முதலமைச்சர் முகில்வண்ணன் அறைக்கு வெளியே நின்றிருந்த மகன் செந்தமிழையும், மருமகன் மணி மார்பனையும் ஆச்சர்யம் கலந்த கேள்விக்குறியோடு பார்த்தார்.

"என்ன.... செந்தமிழ்... நீயும் மாப்பிள்ளையும் இன்னுமா நீலாங்கரை பண்ணை வீட்டுக்குப் போகலை...?"

"இதோ போயிட்டிருக்கோம்...."

"கும்பகோணத்திலிருந்தும் வைத்தீஸ்வரர் கோயிலில் இருந்தும் மொத்தம் எத்தனை சிவாச்சாரியார்கள் ஹோம குண்ட பூஜை நடத்த வர்றாங்க...?"

"மொத்தம் பதினெட்டு.."

"அவங்க தங்கறதுக்கெல்லாம் இடம் ஏற்பாடு பண்ணியாச்சா?"

முகில்வண்ணன் கேட்ட கேள்விக்கு ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் இருந்த மணிமார்பன் பவ்யமாய் குனிந்து சொன்னான்.

"எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மாமா"

"சரி... நாம எத்தனை மணிக்கு இங்கிருந்து நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு கிளம்புறோம்...!"

"அ...அ... அது.... வந்து.... மாமா..."

நடந்து கொண்டிருந்த முகில்வண்ணன் சட்டென்னு நின்று இருவரையும் ஒரு குழப்பப் பார்வை பார்த்தார்.

"என்ன ரெண்டு பேரும் முகத்தை தொங்கப் போட்டுகிட்டு இருக்கீங்க...ஏதாவது பிரச்சனையா?"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 2

"கொஞ்சம் பிரச்சனைதான்," என்றான் செந்தமிழ்.

"என்ன?"

"நீங்க பூஜை ரூம்ல இருந்தப்ப டெல்லி மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து நம்ம ஆள் ஒருத்தர் போன் பண்ணியிருந்தார்ப்பா"

"என்னவாம்?"

"ஆபரேஷன் ஆக்டோபஸ்' என்கிற பேர்ல நம்ம பண்ணை வீட்ல ஐ.டி. ரெய்டு நடத்த திட்டம் தீட்டப்பட்டிருக்காம்... அதனோட முதல்கட்ட வேலைகள் ஆரம்பமாயிடுச்சாம்"

செந்தமிழ் சொல்லச் சொல்ல - முகில்வண்ணனின் முகம் அனல் குண்டமாய் மாறியது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
The second episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more