For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோவ்.! செத்து கித்து போயிடப்போறான்.. பைவ் ஸ்டார் துரோகம் (36)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வேல்முருகன் செல்போனில் குரலைத் தாழ்த்தி போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்திடம் கேட்டார்.

“என்ன சாட்சியம் ஸார் ...? “

“போன்ல எதையும் பேச முடியாது. நீங்க கஜபதியோட பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிவிட்டு அடையார் சாஸ்திரி பவனுக்குப் பின்னாடி இருக்கிற உளவுப்பிரிவு செல்லுக்கு வாங்க..... உங்க வருகை ரகசியமாய் இருக்கட்டும். யார்க்கும் தெரியப்படுத்த வேண்டாம்“

வேல்முருகன் செல்போனை அணைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் பிரசன்னாவிடம் வந்தார்.

rajesh kumar series five star dhrogam 36

“கஜபதியோட டெட்பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பற ஃபார்மாலீடீஸை கன்டின்யூ பண்ணுங்க. நாளைக்குக் காலையில் ஜி.ஹெச்சில் பார்க்கலாம். நான் இப்போ வேற ஒரு வேலையாய் கிளம்பறேன்“

“எஸ் ஸார்“

“பை....த.....பை..... ஒன்மோர் இம்பார்ட்டன்ட் திங்க்........ யூ ஹேவ் டு பி மைண்ட் இட்...... “

“சொல்லுங்க ஸார்“

“நாளைக்கு ஜி.ஹெச்சில் கஜபதியோட டெட்பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ற டாக்டர்ஸ் யார்ங்கிறதை நோட் பண்ணி எனக்கு தகவல் கொடுங்க.... போஸ்ட்மார்ட்டம் நேர்மையாய் நடந்தால்தான் கஜபதியோட மரணம் கொலையா இல்லை தற்கொலையான்னு தெரிய வரும் “

“அந்த விஷயத்தை நான் “க்ளோஸ் ஃபாலோ அப்“ பண்ணிக்கறேன் ஸார் தேவைப்பட்டா டாக்டர்ஸ் போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போது வீடியோ கவரேஜ் பண்ண ஏற்பாடு பண்ணிடறேன் ஸார்“

“தட்ஸ் குட்.... “ என்று சொல்லிக்கொண்டே வேல்முருகன் வாசலை நோக்கி நகர்ந்த விநாடி அருளும், நித்திலனும் தயக்கமாய் எதிர்பட்டார்கள். நித்திலன் குரலைத் தாழ்த்தினான்.

“என்ன ஸார்..... புறப்பட்டீங்களா...? “

“ஒரு அஃப்பிஷியல் அர்ஜென்ஸி.... நான் உடனே கிளம்பிப்போகணும். நாம் நாளைக்கு காலையில் மீட் பண்ணலாம்“

“நேத்து ராத்திரி பீச்ல உட்கார்ந்து பேசும்போது நாங்க ஒரு விஷயம் சொன்னோம். முகில்வண்ணன் வீட்டுக்கு அதிரடியாய் போய் ஒரு ரெய்ட் பண்ணனும்ன்னு. அந்த ரெய்ட்டை நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு வெச்சுக்கலாம்ன்னு இருக்கோம்.... போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அந்த நேரத்தில் முகில்வண்ணன் வீட்டில் இருப்பாரா இல்லையான்னு நீங்க தகவல் கொடுத்தா எங்களுக்கு உதவியாய் இருக்கும்....... “

வேல்முருகன் எரிச்சலாகி இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார் “ஏன் இப்படி அவசரப்படறீங்க...? “

“அவசரப்படாமே என்ன ஸார் பண்றது...? முகில்வண்ணன்கிட்டே இருக்கிற 500 கோடி ரூபாய் ஊழல் பணத்தை அபகரிக்க யாரோ திட்டம் போட்டு அவரோட ஃபேமிலி மெம்பர்ஸை எய்ம் பண்ணி முடிச்சுட்டு வர்றாங்க.

முகில்வண்ணனுக்கு வலது கை மாதிரி இருந்த கஜபதியும் இப்ப உயிரோடு இல்லை. நடக்கிற சம்பவங்களின் வேகத்தைப் பார்த்தா அவரோட ஃபேமிலியில் யாருமே உயிரோடு இருக்க மாட்டாங்க போலிருக்கு. இந்தக் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னா முகில்வண்ணனோட பண்ணை வீட்டை ரெய்ட் பண்ணி அந்த 500 கோடி ரூபாய் பணத்தை வெளியே கொண்டு வரணும்“

“ஒரு ரெண்டு நாள் பொறுமையாய் இருங்க“

“எதுக்காக ரெண்டு நாள் அவகாசம் கேட்கறீங்க...? “

“இப்ப....... அது கொஞ்சம் பெரிய விவகாரம்....... மேலிடத்தின் முறையான உத்தரவு இல்லாமே நீங்க அதிரடியாய் ரெய்ட் பண்றது அவ்வளவு புத்திசாலித்தனமாய் எனக்குப்படலை. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்“

“என்ன ஸார்.....கட்சி மாறிட்டீங்க போலிருக்கு“

“நோ......நோ.....நான் என்னிக்குமே நியாயத்தோட கட்சிதான். நான் காரணமில்லாமே எதையும் சொல்ல மாட்டேன். நான் இப்போ ஒரு முக்கியமான விஷயத்துக்காக போயிட்டிருக்கேன். இப்ப நிலைமை சரியில்லை ரெண்டு நாள் பொறுங்க. நான் பச்சைக்கொடி காட்டினதும் உங்களோட சர்ஜிகல் ரெய்டை முகில்வண்ணன் வீட்ல நடத்தலாம்......“

அருள் சில விநாடிகள் யோசனையாய் வேல்முருகனை பார்த்து தலையசைத்தார்.

“இட்ஸ் ஓ.கே. மிஸ்டர் வேல்முருகன். வீ அக்ரி வித் யுவர் வேர்ட்ஸ். இதுவரைக்கும் உங்க இன்வெஸ்டிகேஷனில் நீங்க சரியாய் போயிட்டு இருக்கீங்க. நாங்க முகில்வண்ணன் வீட்ல ஒரு சர்ஜிகல் ரெய்ட் நடத்தப்போறதை நீங்க எதிர்க்கலை. ரெண்டு நாள் அவகாசம் கேட்கறீங்க. தட்ஸ் ஆல்..... 48 மணி நேரம்தானே..... வெயிட் பண்றோம்...... “

“தேங்க் யூ...... “

“மறுபடியும் நாம எப்போ மீட் பண்றோம் ...? “

“நானே உங்களுக்கு போன் பண்றேன்“

சொன்ன வேல்முருகன் வேகமான நடையில் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

நள்ளிரவைத் தாண்டிய அந்த நேரத்தில் ஒட்டுமொத்த அடையாரும் எல்.இ.டி. விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்தபடி நிசப்தமாய் தெரிந்தது.

சாஸ்திரி பவனுக்கு பின்புறம் இருந்த சாலையின் முகப்பிலேயே டாக்ஸியை நிறுத்தி இறங்கிக்கொண்ட வேல்முருகன் ட்ரைவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு சற்று தூரத்தில் தெரிந்த உளவுத்துறை பிரிவுக்கு சொந்தமான காவி நிற கட்டிடத்தை நோக்கி நடந்தார்.

கட்டிடத்துக்கு முன்பாய் ஒரு ஜீப்பும் காரும் தெரிந்தது. கட்டிடத்துக்கு உள்ளே அரைகுறையான வெளிச்சம் ஏதோ ஒரு அழுக்கு மஞ்சள் துணி போல் பரவியிருந்தது.

வேல்முருகன் நிதானமாய் நடை போட்டு கட்டிடத்தின் காம்பெளண்ட் கேட் அருகே செல்ல தோளில் சாத்திய ரைஃபிளோடு அங்கே நின்றிருந்த செண்ட்ரி கான்ஸ்டபிள் உத்யோகபூர்வமான சல்யூட்டை கொடுக்க அதை தலையசைப்பால் ஏற்றுக்கொண்டு உள்ளே போனார்.

முன்னறையிலேயே கமிஷனர் ஆதிமுலம் ஒரு நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருப்பது தெரிய அவர்க்கு முன்பாய் போய் நின்று சல்யூட் அடித்து தளர்ந்தார்.

செல்போனில் உடனடியாய் பேச்சை முடித்துக்கொண்ட ஆதிமுலம் தனக்கு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.

“உட்காருங்க வேல்முருகன்“

உத்தியோக பணிவுடன் வேல்முருகன் நாற்காலியில் ஒரு நேர்கோடாய் உட்கார்ந்தார். ஆதிமுலம் கேட்டார்.

“திரிசூலம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட செந்தமிழின் உடல்நிலை இப்போ எப்படியிருக்கு ...? “

“உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை ஸார்.. அவர்க்கு போடப்பட்டு இருக்கிற இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் அவரோட ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு தெரியலை...... “

“எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் ஹெல்த் கண்டிஷனும் சரியில்லை. மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட்டதும், செந்தமிழ் காணாமே போனதும் அவரை அதிர்ச்சியோட விளிம்புக்குக்கொண்டு போய் நிறுத்தியிருக்கு. ஏறின பி.பி.லெவல் குறையவேயில்லை.....எந்த நிமிஷமும் அவர்க்கு ஸ்ட்ரோக் வரலாம்ன்னு டாக்டர் சொல்லியிருக்கிறதால ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப் போயிருக்கு........ ! “

வேல்முருகன் குறுக்கிட்டு கேட்டார்.

“ஸார் ..... நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல பேசின போது சொன்ன கவர்னரோட பி.ஏ.வோட விஷயம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கலாமா ...? “

“நம்முடைய காவல்துறையின் உளவுப்பிரிவுத் தலைவர் ஞானசேகரன் தகவல் கொடுத்தா அது என்னிக்குமே பொய்யாய் போனதில்லை. தமிழக கவர்னர் சுக்தேவ் பட்டேலின் பி.ஏ.வாய் இருக்கிற ஷிவ்ராம் தத்தாத்ரேயாதான் முகில்வண்ணனோட வீட்டில் நடந்துட்டு இருக்கிற எல்லா அசம்பாவித சம்பவங்களுக்கும் காரணம்ங்கிறதை அதிகாரப்பூர்வமாய் கண்டுபிடிச்சு ஒரு சாட்சியத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டார்“

“யார் அந்த சாட்சி ..? “

“வாங்க பார்க்கலாம்...! “ போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் எழுந்து பக்கத்து அறையை நோக்கி நடக்க ஆரம்பிக்க வேல்முருகன் அவரைப் பின் தொடர்ந்து போனார்.

இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள். ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் அறை அழுது வடிய, அறையின் மையத்தில் போடப்பட்ட நாற்காலியில் இடுப்பில் ஜட்டியோடு உட்கார வைக்கப்பட்டிருந்தான் அந்த இளைஞன். வடநாட்டு முகம். நாற்பது வயது இருக்கலாம். அகலமான தோள்பட்டைகளில் ஆரோக்கியம் தெரிந்தது. அடிபட்ட இடங்கள் கன்றிப்போய் வீங்க ஆரம்பித்திருந்தன. கடைவாயில் வழிந்த ரத்தம் கருஞ்சிவப்பில் உறைந்து போய் கெட்டியாய் தெரிய தலை பக்கவாட்டில் தொங்கியிருந்தது.

கையில் லாட்டியோடு ஆறடி உயரத்தில் ஒரு தூண் போல் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் திரும்பினார் கமிஷனர்.

“என்ன மார்டின்...... மறுபடியும் வாயைத்திறந்து ஏதாவது சொன்னானா..? “

“இல்ல...... ஸார்...... மயக்கமாயிட்டான். மூஞ்சியில் ஐஸ் வாட்டர் அடிச்சும் மயக்கம் தெளியலை..... “

“யோவ்.! செத்து கித்து போயிடப்போறான். மொதல்ல ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணு...... அவன் உயிரோடு வேணுமய்யா...... இந்த சின்ன மீனை வெச்சுத்தான் பெரிய திமிங்கலத்தை பிடிக்கணும்... மூச்சு இருக்கா....இல்லையா ..? “

“மூச்சிருக்கு ஸார்..... ! “

“பேசிட்டிருக்காதே..... ஜி.ஹெச்சுக்கு போன் பண்ணு எமர்சன்ஸி ஆம்புலன்ஸ் வரட்டும் ..... ! “

“ இப்ப பண்ணிடறேன் ஸார் “கான்ஸ்டபிள் மார்டின் தன் கையில் இருந்த செல்போனை உயிர்ப்பித்துக் கொண்டிருக்க கமிஷனர் திரும்பி வேல்முருகனை ஏறிட்டார்.

“இவன் பேரு இஷ்மி பர்மான். மும்பை குர்லா பகுதியில் பெரிய தாதா, கடந்த ஒரு வார காலமாய் சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் இவனோட நடமாட்டம் இருந்ததை நம்ம போலீஸ் உளவுத்துறை மோப்பம் பிடிச்சு க்யூ பிராஞ்ச்சுக்கு தகவல் கொடுக்க நீலாங்கரை ரிசார்ட்டில் தங்கியிருந்த இவனை மூணு மணி நேரத்துக்கு முன்னாடி கைது பண்ணி இங்கே கொண்டு வந்துட்டோம். போலீஸ் மரியாதை கொடுத்து விசாரிச்சதில் அவன் சொன்ன ஒரே வாக்கியம் கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா எனக்கு சென்னையில் சில வேலைகள் கொடுத்தார். அதை செய்யவே வந்தேன்..... ! “

“என்ன வேலைகள்ன்னு நீங்க கேட்கலையா ஸார்.....? “

“கேட்டோம்..... அவன் வாயைத் திறக்கலை... அவனோட செல்போனை பறிமுதல் பண்ணி சோதனை பண்ணின போது போனில் காலரி ஆப்ஷனில்

முகில்வண்ணன், மணிமார்பன், செந்தமிழ், மணிமார்பனின் மனைவி, செந்தமிழின் மனைவி, கஜபதி உட்பட ஏழு எம்.எல்.ஏக்கள் போட்டோக்கள் இருந்தது. காண்டாக்ட்ஸில் போய்ப் பார்த்தபோது எஸ்.டி (S.D) என்கிற நபருக்கு நேற்று சாயந்தரம் ஆறுமணியிலிருந்து எட்டு மணிக்குள் பதினைந்து தடவை பேசியிருக்கான்“

“அது யார் எஸ்.டி ? “

“ஷிவ்ராம் தத்தாத்ரேயா..... “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 36
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X