For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வஜ்ரம்........ நீ என்ன சொல்றே.. பைவ் ஸ்டார் துரோகம் (43)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

முதலமைச்சர் வஜ்ரவேல் சொன்னதைக்கேட்டு ஷிவ்ராம் முகம் வெளிறிப் போனவராய் திகைத்தார்.

“வஜ்ரம்........நீ என்ன சொல்றே?....... செந்தமிழ் இப்போ உயிரோடு இல்லையா? “

“இல்லை “

“என்னாச்சு...... செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசி போடப்பட்டதால் உடல் உறுப்புகள் தற்காலிகமாய் செயல் இழந்து போயிருந்தாலும் உயிர்க்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லைன்னு நீதானே சொன்னே? “

Rajesh Kumars Five Star Droham serial episode 43

“அப்படீன்னு நான் சொல்லலை. டாக்டர்தான் சொன்னார்“

“பின்னே எப்படி மரணம்? “

“போன் பண்ணிச்சொன்ன டாக்டருக்கு அதுதான் குழப்பம். முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மகன் என்கிற காரணத்தால் நல்ல முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருந்ததாகவும் அதன் காரணமாய் செந்தமிழ் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சுய உணர்வுக்குத் திரும்பிக்கூடிய வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் 1 மணி நேரத்துக்கு முன்னாடி திடீர்ன்னு மரணம் அடைந்துவிட்டதாகவும் சொன்னார்“

“செந்தமிழ் மரணத்துக்கு அந்த மிருணாளினிதான் காரணமாய் இருக்கலாம்ன்னு நினைக்கிறியா வஜ்ரம்? “

“என்னோட தீர்மானமான முடிவே அதுதான்“

“சரி...... இப்ப பண்ணலாம் ? “

“நாம ஒண்ணும் பண்ண வேண்டியது இல்லை. எனக்கு மிகவும் நம்பிக்கையான அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி அடுத்த ரெண்டு நாளைக்குள்ளே மிருணாளினியை கண்டு பிடித்து கொடுத்துடுவாங்க.... அதுக்கப்புறம் அவளை எப்படி ஹேண்டில் பண்ணனுமோ அப்படி பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி முகில்வண்ணனோட பண்ணை வீட்டில் செல்லர்களில் தூங்கிட்டிருக்கிற 500 கோடியை என்னோட இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துடணும். அந்த வேலையை செஞ்சு முடிக்கத்தான் நமக்கு விசுவாசமான இன்கம்டேக்ஸ் அதிகாரிகளோட க்ரூப்பை முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்கு அனுப்பியிருக்கேன்“

ஷிவ்ராம் அவசரக்குரலில் குறுக்கிட்டு கேட்டார். “திரிசூலம் ஹாஸ்பிடலில் செந்தமிழ் இறந்துபோன விஷயம் முகில்வண்ணனுக்கு தெரியுமா ....... ? “

“தெரியாது.... அந்த டாக்டர்கிட்டே நான் பேசும்போது செந்தமிழ் இறந்துபோன விஷயத்தை நாளைக்குக் காலை பத்து மணிவரைக்கும் யார்க்கும் இன்ஃபார்ம் பண்ண வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேன். அவரும் சரின்னுட்டார்“

“வஜ்ரம்... ! “

“என்ன ....... ? “

“நாம ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கப்போறோம்ன்னு என்னோட மனசுக்குப்படுது“

வஜ்ரவேல் சிரித்தார். “ஷிவ்ராம்...... நீ பாட்டுக்கு உன்னோட பி.ஏ. டூ கவர்னர் வேலையைப் பார்த்துட்டு இரு..... நான் இந்தப்பக்கம் எல்லா விளையாட்டையும் முடிச்சுட்டு உனக்கு போன் பண்றேன். நீ எனக்காக செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை என்ன தெரியுமா ....... ? “

“சொல்லு“

“நம்ம கைக்கு வரப்போகிற 500 கோடி ரூபாய் பணத்துல பங்கு கேட்டு ஸ்டேட்லயிருந்து சென்டர் வரைக்கும் மொத்தம் ஏழு பேர் இருக்காங்க. அவங்க ஏழு பேரும் கடைசிவரைக்கும் நமக்கு விசுவாசமாய் இருக்கும்படி பார்த்துக்க வேண்டியது உன்னோட வேலை“

“அதைப்பத்தின கவலை உனக்கு ஒரு துளியும் வேண்டாம். ஏன்னா அந்த ஏழு பேரும் சி.பி.ஐ.யிலும் அமலாக்கப்பிரிவுத்துறையிலும் இருக்கிற பவர்ஃபுல் பர்சன்ஸ். நான் அவங்களோடு பேசிட்டுத்தான் இருக்கேன்“

“சரி...... இன்னும் மணி நேரம் கழிச்சு நான் உனக்கு போன் பண்றேன். நம்ம விசுவாசமான இன்கம்டேக்ஸ் ஆபீஸர்ஸ் ஹரிஹரனின் தலைமையில் இந்நேரம் முகில்வண்ணனின் பண்ணை வீட்டை நெருங்கியிருப்பாங்க. இனிமேல் எதிர்கொள்ளப் போகிற ஒவ்வொரு விநாடியும் நமக்கு முக்கியம். நீ டென்ஷன்படாமே நார்மலாய் இரு.....! “

பேசி முடித்து செல்போனை அணைத்த வஜ்ரவேல் இண்டர்காம் டெலிபோன் ரிஸீவரை எடுத்து மறுமுனையில் இருந்த தன்னுடைய பிரத்யேக செயலாளரிடம் பேசினார்.

“நமச்சிவாயம்...... நான் இப்போ ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன். வெளியே இருந்து யாரோட போன் வந்தாலும் சரி எனக்கு லிங்க் கொடுக்க வேண்டாம். நானே போன் பண்ணினா மட்டும் நீ போனை அட்டெண்ட் பண்ணினா போதும்“

“எஸ்.....ஸார்.... “மறுமுனையில் அந்த நமச்சிவாயம் பவ்யமான குரலில் சொல்ல வஜ்ரவேல் ரிஸீவரை அதனிடத்தில் வைத்துவிட்டு நாற்காலிக்குச் சாய்ந்தார்.

வருமானவரி அதிகாரி ஹரிஹரன் தனக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களோடு நான்கு கார்களில் பயணித்து முகில்வண்ணனின் பண்ணை வீட்டை அடைந்தபோது நேரம் சரியாய் 7.45 மணி. ஒட்டு மொத்த பண்ணை வீடும் வெறிச்சோடி இருட்டில் உறைந்து போயிருந்தது.

வீட்டின் பெரிய காம்பெளண்ட் கேட் இறுக்கமாய் சாத்தப்பட்டு தெரிய கேட்டின் இடதுபக்க மூலையில் இருந்த விக்கெட் டோரை நோக்கிப்போனார் ஹரிஹரன். கதவை பலமாய்த்தட்ட அரை நிமிட நேரத்திற்குப்பிறகு விக்கெட் டோர் லேசாய் திறக்கப்பட்டு செக்யூரிட்டி நபர் ஒருவரின் தலை எட்டிப்பார்த்தது. கும்பலாய் நின்ற அதிகாரிகளைப்பார்த்து திகைத்தது.

“யார் ஸார் ....... ? “

“ஐ.டி.டிபார்ட்மெண்டிலிருந்து வர்றோம் டோரை ஒப்பன் பண்ணு... ! “

செக்யூரிட்டி நபர் கதவைத் திறந்து கொண்டு அதிர்ச்சி உறைந்து போன முகத்தோடு வெளியே வந்தார்.

“ஸார் நீங்க ஐ.டியிலிருந்து வர்றீங்களா ....... ? “

“ஆமா...... ஏன் ஐ.டி கார்டைக் காட்டினாத்தான் உள்ளே விடுவியா ? “ஹரிஹரன் கோபமான குரலில் கேட்க செக்யூரிட்டி தலையை பலமாய் ஆட்டி மறுத்தார்.

“ஸாரி ஸார்...... நான் அந்த அர்த்ததுல கேட்கலை. உள்ளே ஏற்கனவே ஐ.டி.டிபார்ட்மெண்ட்ல இருந்து சோதனை போட்டுகிட்டு இருக்காங்க ... ! “

“ஏ...ஏய்..... நீ என்ன சொல்றே....... ஐ.டி பீப்பிள் உள்ளே இருக்காங்களா.... ? “

“ஆமா ஸார்......சாயந்தரம் ஆறு மணிக்கே வந்து உள்ளே சோதனை போட்டுகிட்டு இருக்காங்க“

“எத்தனை பேர் ....... ? “

“பத்து பேர்க்கு மேல இருக்கும் ஸார். உள்ளே வேன் ஒண்ணு நிக்குது பாருங்க ஸார். அதுலதான் வந்தாங்க“

அவங்க வந்தது முகில்வண்ணனுக்கு தெரியுமா .. ? “

“அய்யாவுக்குத் தெரியாது ஸார்......நான் அய்யாவுக்கு போன் பண்ணிடக்கூடாதேன்னு என்னோட செல்போனை வாங்கி வெச்சுட்டாங்க. லேண்ட் லைனையும் கட் பண்ணிட்டாங்க“

ஹரிஹரன் விக்கெட் டோரின் கதவை திறந்து கொண்டு வேகமாய் உள்ளே போக மற்ற அதிகாரிகள் பின் தொடர்ந்தார்கள்.

பண்ணை வீட்டின் உள்ளே இருந்த பல அறைகள் ட்யூப்லைட் வெளிச்சத்தோடு தெரிய ஆங்காங்கே ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது.

ஹரிஹரனிடம் ஒரு அதிகாரி கேட்டார். “ஸார்.... இவங்களைப்பார்த்தா உண்மையான ஐ.டி பீப்பிள் மாதிரி தெரியலை. நான் உள்ளே போய் யார்ன்னு பார்த்துட்டு வரட்டுமா....... ? “

ஹரிஹரன் குரலைத்தாழ்த்தினார். “வேண்டாம். இங்கே இருக்கிறவங்க யார்ன்னு எனக்கு நல்லாவே தெரியுது“

“யார் ஸார் ....... ? “

“ஸ்பெஷல் விங் ஆஃப் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த ஆபீஸர்ஸ்......அதோ அங்கே ஒருத்தர் உயரமாய் நின்னுட்டு ஏதோ இன்ஸ்ட்ரகஷன் கொடுத்துட்டு இருக்காரே அவர்தான் சீப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள். அவர்க்குப் பக்கத்துல கையில் ஒரு ஃபைலோடு தெரியறாளே ஒரு பெண் அவள் சாதுர்யா. வெரி இண்டலிஜெண்ட் கேர்ள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஒரு வழுக்கைத்தலை நபரிடம் பேசிட்டிருக்கிறானே ஒரு இளைஞன் அவன் பேரு நித்திலன். அது சாதாரண டீம் கிடையாது. மத்திய அமலாக்கப்பிரிவுக்குக் கட்டுப்பட்டது“

“இப்ப நாம என்ன பண்றது ஸார்“

“ஒண்ணும் பண்ண முடியாது. அதோ அருள், சாதுர்யா ரெண்டு பேருமே என்னைப்பார்த்துட்டு வர்றாங்க. நீங்க யாரும் எதுவும் பேச வேண்டாம். அவர் கேட்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்“

ஹரிஹரனும், மற்ற அதிகாரிகளும் மெளனமாய் நிற்க அருளும், சாதுர்யாவும் அவர்களை நெருங்கிவந்தார்கள். அருள் பக்கத்தில் வந்ததும் சல்யூட் அடித்துவிட்டு நிமிர்ந்து நின்றார்கள்.

அருள் கேட்டார்.

“என்ன ஹரிஹரன்....... எக்ஸ் சீஃப் மினிஸ்டர் முகில்வண்ணன் வீட்டுக்கு ஒரு ஸ்க்வாடோடு வந்து நிக்கறீங்க ? “

“அது.....அது வந்து ஒரு ஸ்பெஷல் சர்ச் வாரண்ட் ஸார்“

“எதுக்காக சர்ச் வாரண்ட் .... ? “

“அது.....அது“ ஹரிஹரன் வியர்த்தார்.

“முகில்வண்ணனோட பண்ணை வீட்டுக்குள்ளே அந்த 500 கோடி ரூபாயை எங்கே பதுக்கி வெச்சிருக்கார்ன்னு கண்டு பிடிக்கத்தானே ? “

“எ...எ....எஸ் ஸார்“

“ஆர்டரை இஷ்யூ பண்ணினது யாரு ? “

“ சி.எம் ஸார்“

சாதுர்யா புன்னகையோடு சொன்னாள். “பாம்பின் கால் பாம்பறியும்...... ஐ.டி பீப்பிளுக்கு உத்தரவு பிறப்பிக்க சி.எம்முக்கு அதிகாரம் இல்லையே... ? “

ஹரிஹரன் இன்னமும் வியர்த்தார்.

“தெரியும். இருந்தாலும் அவரோட உத்தரவை மீற முடியலை. சோதனை போட வந்தோம்“

அருள் ஹரிஹரனை நெருங்கினார்.

“உங்க நிலைமை எனக்குப் புரியுது. அதிகாரத்தில் இருக்கிற ஒரு முதலமைச்சரோட கட்டளையை நம்மை மாதிரியான அரசு அதிகாரிகள் உதாசீனப்படுத்த முடியாது. நீங்க எந்த நோக்கத்துக்காக இங்கே வந்தீங்கன்னு எனக்குத்தெரியாது. நானும் என்னோட டீமும் மினிஸ்ட்டரி ஆஃப் ஃபைனான்ஸ்லிருந்து வந்த ஒரு வோரல் ஆர்டரின் அடிப்படையில் பண்ணை வீட்டின் செல்லர் அறைகளில் தூங்கிட்டு இருக்கிற 500 கோடி ரூபாயை பறிமுதல் பண்ணி அரசு கஜானாவில் சேர்க்க வந்தோம். ஒன்றரை மணி நேரம் சோதனை போடறோம். ஒரு பத்து ரூபாய் நோட்டைக்கூட எங்களால எடுக்க முடியலை..... பூமிக்கு கீழே இருக்கிற செல்லர் அறைகளில் நெல் மூட்டைகள்தான் இருக்கு. முகில்வண்ணன் அந்தப்பணத்தை வேற எங்கேயோ கொண்டு போய் பதுக்கிட்டார். நாங்க தேடிப் பார்த்து களைச்சுட்டோம். நீங்க வேணும்ன்னா முயற்சி பண்ணிப்பாருங்க“

“ஸாரி ஸார்..... நீங்க சோதனை போட்டே கிடைக்காதது நாங்க போட்டா மட்டும் கிடைச்சுடுமா ? நாங்க கிளம்பறோம் ஸார் “

“ஒரு நிமிஷம்... ! தனக்குப் பின்னால் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் ஹரிஹரன்.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் பார்வைக்குக் கிடைக்க அவருக்கு இடதுபுறமும், வலதுபுறமும் வேல்முருகனும், நித்திலனும் புன்னகை பூத்த முகங்களோடு தெரிந்தார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 43
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X