For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் புதிய தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 1

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

அந்த விடியற்காலை ஐந்தேகால் மணிக்கு சட்டென்று தூக்கம் அறுந்து போனது சாதுர்யாவிற்கு.

போர்வையை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். 'ஏதோ... சத்தம் கேட்ட மாதிரி இருந்ததே?'

"என்ன சத்தம்?"

அவளுடைய பார்வை ஜன்னலுக்கு வெளியே போயிற்று. வானம் இருட்டாக இருந்தாலும் அந்த வியாழக்கிழமை விடியும் பக்குவத்தில் தெரிந்தது. பக்கத்துத் தெரு பெருமாள் கோயிலிலிருந்து மாலே மணிவண்ணாவும் எதிர் தெருவின் தர்காவிலிருந்து 'அல்லா ஹூ அக்பர்' என்ற பாங்கு து ஆ வும் காற்றில் கலந்து சாதுர்யாவின் செவி மடலை ஸ்பரிசித்தது. அடுத்த வீட்டு பன்னீர்பூ மரம் 'ஸ்பிரே' அடித்த மாதிரி நுரையீரல் பூராவும் மணந்தது.

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 1

மறுபடியும் படுத்து தூக்கத்தைத் தொடரலாமா என்று யோசித்த விநாடி அவளுடைய தலைமாட்டில் இருந்த செல்போன் வைபரேஷனில் உறுமியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

சீஃப் கமிஷன் ஆஃப் இன்கம்டாக்ஸ் 'அருள்' பெயர் பச்சை நிறத்தில் வெளிச்சமாய் ஒளிர்ந்தது. போனை எடுத்து இடது காதுக்கு ஏற்றினாள்.

"குட்மார்னிங் ஸார்"

"வெரி வெரி குட்மார்னிங் சாதுர்யா... என்ன நல்ல தூக்கம் போலிருக்கு...? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு கால் கொடுத்தேன். நோ... ரெஸ்பான்ஸ். ரிங் போயிட்டே இருந்தது."

"ஸாரி... ஸார்... நேத்து லேட் நைட்தான் படுக்கப் போனேன். ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுன்னு இப்பதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன்.... உடனே உங்க போன்.... ஒன்ஸ் அகெய்ன் ஸார்."

"நோ ப்ராப்ளம் .... இப்ப உன்னோட ரூம்ல உன்னைத் தவிர வேற யாராவது இருக்காங்களா....?'"

"யாரும் இல்ல ஸார்... நான் மட்டும்தான். அம்மா அப்பா வழக்கம்போல கீழே ஹால் ரூம்ல. ஏன் ஸார் எனிதிங்க் இம்பார்ட்டண்ட்...?"

"எஸ்....! கொஞ்ச நேரத்துக்கு முந்தி மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸிலிருந்து எனக்கு ஒரு வோரல் ஆர்டர் வந்தது. நாம உடனடியாய் ஒரு ஆப்ரேஷனுக்குத் தயாராகணும், ஆப்ரேஷன் நேம் என்ன தெரியுமா சாதுர்யா?"

"சொல்லுங்க ஸார்"

"ஆப்ரேஷன் ஆக்டோபஸ்"

"டார்கெட் யார் ஸார்?"

"நேர்ல சொல்றேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நீ ரெடியாகி சாந்தோம் பீச்சுக்கு வரணும். டிபார்ட்மெண்ட் ஆஃப் ரெவின்யூவில் இருந்து நித்திலனையும் வரச் சொல்லியிருக்கேன்."

"சாந்தோம் பீச்ல 'லேண்ட் மார்க் பாய்ண்ட் எது ஸார்...?"

"ஹெர்பல் ஜூஸ் ஸ்டாலுக்குப் பக்கத்துல இருக்கிற வாக்கிங் பேவ்மண்ட்."

"சரியா ஆறு மணிக்கெல்லாம் அங்கே இருப்பேன் ஸார்," சொன்ன சாதுர்யா செல்போனை அணைத்து விட்டு கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்ட மாதிரி இயங்க ஆரம்பித்தாள்.

அடுத்த அரை மணி நேரத்துக்குள் குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி கீழே வந்தாள்.

சமையலறையில் ட்யூப்லைட் வெளிச்சம் தெரிய அம்மா ரோகிணி அங்கே இருப்பதற்கு அடையாளமாய் காப்பியின் மணம் காற்றில் கலந்திருந்தது. அம்மாவை பின்புறமாய் போய் கட்டிப் பிடித்து 'குட்மார்னிங் மாம்' என்றாள். ரோகிணி திகைத்துத் திரும்பினாள்.

"என்னடி... இவ்வளவு காலையில் எந்திரிச்சு 'ப்ரஷ்'ஷாகி வந்து இருக்கே...?"

"கடமை அழைக்குதம்மா. சீஃப் கமிஷனர் அரை மணி நேரத்துக்கு முந்தி போன் பண்ணியிருந்தார். சாந்தோம் பீச்சுக்கு வரச் சொல்றார்....!"

"என்ன விஷயம்ன்னு கேட்டியா?"

"அங்கே போனாத்தான் தெரியும்"

"உனக்கு இந்த இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை கிடைச்சபோது பொம்பள புள்ளைக்கு இந்த வேலை வேண்டாம்ன்னு தலைத்தலையா அடிச்சுகிட்டேன். நீயும் கேட்கலை. உங்க அப்பாவும் கேட்கலை... நேரங்கெட்ட நேரத்துல போன் வருது. போன மாசத்துல ஒரு நாள் நடுச் சாமம் ஒரு மணிக்கு போன் வந்தது. இன்னிக்கு காலங்காத்தால....."

"அம்மா... உன்னோட புலம்பலை அப்பா கிட்ட கன்டினியூ பண்ணு. நான் கிளம்பறேன்"

"இதோ... காப்பி ஆயிடுச்சு... ஒரு வாய் குடிச்சுட்டு போ...."

"அம்மா.... நான் காலை நேரத்துல கஷாயம் சாப்பிடறதை விட்டு ரொம்ப நாளாச்சுன்னு உனக்குத் தெரியாதா?"

"என்ன சொன்னே...?" ரோகிணி சமையல் மேசை மீது இருந்த கரண்டியை எடுக்க சாதுர்யா வெளியே ஓடினாள்.

"அம்மா! அப்பாகிட்டே சொல்லிடு. நான் கிளம்பறேன்".

சாதுர்யா வீட்டின் முகப்புக்கு வந்து மல்லிகைப் பந்தலுக்கு கீழே நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்துக் கொண்டு வெறிச்சோடிப் போயிருந்த சாலையில் வேகம் பிடித்தாள்.

சிக்னல்களில் பச்சை தாராளமாய்க் கிடைக்க சரியாய் ஆறுமணிக்கெல்லாம் சாந்தோமைத் தொட்டாள்.

சென்னையின் கிழக்கு திசை ரத்தச் சிவப்பான மேகங்களோடு சூரியனை எதிர்பார்த்து காத்திருந்தது.

சாதுர்யா ஸ்கூட்டியை டூ வீலரில் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வேகமாய் நடந்தாள். ஹெர்பல் ஜூஸ் ஸ்டால் வந்தது. மெகா சைஸ் தொப்பைகளோடு சிலர் டிஸ்போஸபில் டம்ளர்களில் அருகம்புல் ஜூஸைக் குடித்துக் கொண்டிருக்க வாக்கிங் பேவ்மெண்டில் போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்சில் 'ஜாக்கிங் சூட்'டில் அந்த அழகான இளைஞன் சமுத்திரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

"குட்மார்னிங் நித்திலன்...."

அவன் திரும்பி தன் சீரான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தான்.

"ஹாய் சாதுர்யா..."

"நீ வந்து ரொம்ப நேரமாச்சா...?"

"இப்பத்தான் வந்தேன்..."

சாதுர்யா அவனுக்குப் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.

"தலைவர் எதுக்காக கூப்பிட்டிருப்பார்ன்னு தெரியலை. எனி கெஸ் ஒர்க்?"

"அதான் போன்ல சொன்னாரே 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ன்னு"

"டார்கெட் யார்ன்னு சொல்லலையே?"

"அதை நமக்கு கடைசி நிமிஷத்துலதான் சொல்வார்..."

"எனக்கு ஒரு சந்தேகம் நித்தி," என்ற சாதுர்யா குரலைத் தாழ்த்தினான்.

"இந்த 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'ஸுக்கு உன்னையும் என்னையும் மட்டும்தான் செலக்ட் பண்ணியிருக்கார். கவனிச்சியா?"

"ம்... கவனிச்சேன்"

"ஒரு வேளை நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சிருக்குமோ?"

"தெரிஞ்சதுனாலத்தான் உங்க ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணினேன்."

தங்களுக்குப் பின்பக்கம் எழுந்த குரல் கேட்டு சாதுர்யாவும், நித்தியனும் திரும்பி பார்த்தார்கள்.

சீஃப் கமிஷ்னர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள் வெள்ளை நிற டீசர்ட், பேண்டில் மினி சிரிப்போடு நின்றிருந்தார். தனது 55 வயதான உடம்பை தினசரி வாக்கிங் மூலம் பொறாமைப்படும் அளவுக்கு இளமையாய் வைத்து இருந்தார்.

இருவரும் திகைப்போடு எழுந்தார்கள்

"ஸார்..."

"நான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே இங்கே வந்துட்டேன். நான் பார்க்க விரும்பாத நண்பர் ஒருத்தர் அந்த ஹெர்பல் ஜூஸ் ஸ்டாலில் நின்றிருந்தார். அவரை அவாய்ட் பண்றதுக்காக அந்த ஷெல்டர்க்குப் பின்னாடி நின்னுட்டிருந்தேன். அந்த நண்பர் புறப்பட்டுப் போனதும் நான் வந்தேன். பை...த....பை ... காதலிக்கிறது தப்பான விஷயம் கிடையாதே..?"

"தப்பான விஷயம் கிடையாதுதான். இருந்தாலும் ஒரு வருஷம் வரைக்கும் யார்க்கும் தெரியாதபடி மெய்ன்டைன் பண்ணலாம்ன்னு நினைச்சோம் ஸார்...."

"இட்ஸ் ஓகே..... இந்த 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்'க்கு உங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ண உங்க காதல் மட்டும் காரணம் இல்லை. ஐ லைக் யுவர் ட்யூட்டி டெடிகேஷன்".

"தாங்க்யூ ஸார்"

"நவ் லெட் அஸ் கம் டு த பாயிண்ட்....' இன்னிக்கு விடிகாலை நாலுமணிக்கு மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸிலிருந்து யோகேஷ்வர் சர்மா என்னோட 'வாட்ஸ் அப்'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியும் அதைப் பற்றின சில குறிப்புகளையும் அனுப்பி வெச்சிருந்தார். அதை நீங்களும் ஒருதடவை பார்த்துருங்க. அப்புறம் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்."

சொன்ன அருள் தன் செல்போனை எடுத்து வாட்ஸ் அப் ஆப்ஷனுக்கு போய் அந்த செய்தியை உயிர்ப்பித்தார்.

"ப்ளீஸ் டேக் ஏ வ்யூ"

சாதுர்யாவும் நித்திலனும் தங்களுடைய பார்வைகளை வாட்ஸ் அப்பில் பதித்தார்கள், ஓர் ஆங்கில செய்தித்தாளும் அதில் அச்சாகியிருந்த செய்தியும் தட்டுப்பட்டது. படித்தார்கள். தமிழாக்கம் மனசுக்குள் ஓடியது.

"அசலான ரூபாய் ஐநூறு கள்ள நோட்டு ரூ 300-க்கு விற்பனை டெல்லியில் சப்ளை. இதுபற்றி டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் ஷ்யாம் தயான் கூறுகையில் 'இந்த கள்ள நோட்டுக்கள் அனைத்தும் நல்ல தரமான காகிதத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சு அசலாக ஒரிஜினல் நோட்டுகள் போலவே இருக்கின்றன. ஆனால் மொத்த நோட்டுக்களை 'ஸ்கேன்' செய்தால் மட்டுமே அதில் உள்ள குறை தெரிகிறது. அதாவது கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் 250 நோட்டுக்களில் ஒரே சீரியல் எண் உள்ளது. 80 நோட்டுகள் 4 பொதுவான சீரியல் எண்களைக் கொண்டுள்ளன. தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் இந்த நோட்டுக்களுடன் பிடிபட்டபோது எப்படியோ தப்பி விட்டான். ஆனால் அவன் செல்போன் போலீஸார் கைக்கு கிடைத்தது. அந்த போனில் பல விபரங்கள் குழப்பமாக இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. அதை இப்போதைக்கு சொல்ல முடியாது."

சாதுர்யாவும் நித்திலனும் 'வாட்ஸ் அப்'பிலிருந்து அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்கள். அருள் கேட்டார்.

"என்ன படிச்சிட்டீங்களா?"

"படிச்சிட்டோம் ஸார்.! ஒரு விஷயம் மட்டு தெளிவாக உள்ளதுன்னு டெல்லி போலீஸ் கமிஷனர் சொல்லியிருக்கார் ஸார். அது என்ன விஷயம்?"

"அந்த கமிஷனரே எனக்கு போன் பண்ணி சொன்னார், நான் அதிர்ந்து போயிட்டேன்.... தமிழ்நாட்டில் இரண்டு முறை முதலமைச்சராய் இருந்த மாஜி அமைச்சர் முகில் வண்ணன் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார்."

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 1

சாதுர்யாவும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.

"ஸார் நீங்க சொல்றது?"

"பொய் கல்ப்பு இல்லாத ஐ.எஸ்.ஐ முத்திரையோடு கூடிய உண்மை!'

"ஸார்! மாஜி அமைச்சர் முகில் வண்ணன் வெரிபவர்புல் பர்சன். அவரை நெருங்கறது அவ்வளவு சுலபம் இல்லை"

"எனக்கு அது தெரியாதா என்ன..? கொஞ்சம் கொஞ்சமாய் அவரை நாம நெருங்குறோம். இந்த ஆப்ரேஷன் ஆக்டோபஸில் நீங்க ரெண்டு பேரும்தான் செயல்பட போறீங்க. இன்னிக்குத்தான் திட்டத்தோட முதல் கட்டம் ஆரம்பம். முகில் வண்ணன் நாளைக்கு நீலாங்கரையில் உள்ள தன்னோட பண்ணை வீட்டில் அவரோட அறுபது வயது நிறைவு சஷ்டியப்த பூர்த்தி விழாவை கொண்டாட பெரிய அளவில் ஏற்பாடு பண்ணியிருக்கார். அந்த விழாவுக்கு அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி,க்கள் நிறைய பேர் கலந்துக்கப் போறாங்க. அந்த விழாவில் நீங்க ரெண்டு பேரும் கலந்துக்கப் போறீங்க. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இன்னும் சொல்லப் போனா உயிரை பணயம் வெச்சு வேவு பார்க்கப் போறீங்க".

நித்திலன் சாதுர்யா இருவரின் உடல்களிலும் ஒரு எவரெஸ்ட் குளிர் ஊசியாய் மாறி ஊடுருவியது.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The first episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X