For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வே....வே.... வேண்டாம்மா"... பைவ் ஸ்டார் துரோகம் (50)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

மறுமுனையில் சார்லஸ் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட முகில்வண்ணனின் முகத்தில் ஒரு கண்ணில் கிலியும் இன்னொரு கண்ணில் திகிலும் பரவி தெரிந்தது.

கயல்விழி மெல்ல நடந்து போய் அவருடைய கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டாள். பிறகு இதழோரம் தொற்றிக் கொண்ட ஒரு சின்ன புன்னகையோடு கேட்டாள்.

“என்னப்பா..நிலைமை இப்போ ரொம்பவும் சிக்கலாயிருச்சு போலிருக்கே..?“

முகில்வண்ணனின் குரல் அவருடைய தொண்டையிலிருந்து பிசிறடிப்போடு வெளிப்பட்டது.

Rajesh Kumars Five Star Droham serial episode 50

“இதோ பாரம்மா கயல்விழி ......நான் உன்னோட அண்ணனையும், மாப்பிள்ளையையும் என்னோட உயிர் மேல் இருந்த பயத்தால தீர்த்துக் கட்டினது தப்புதான். யோசனை பண்ணியிருக்கணும். அதுக்காக உன்கிட்டேயும், மலர்க்கொடிகிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்“

கயல்விழி கையில் இருந்த துப்பாக்கியை இறுகப்பற்றிக்கொண்டு மலர்க்கொடியை ஒரு சின்ன சிரிப்போடு பார்த்தாள். “ என்ன அண்ணி உங்க மாமனாரை மன்னிச்சுடலாமா ..? “

“மன்னிச்சுடலாம்“

என்னண்ணி சொல்றீங்க ? “

ஆமா.... கயல் ..... மகனும், மாப்பிள்ளையும் திடீர் வில்லன்களாய் மாறி அவரோட உயிர்க்கே உலை வைக்கப் பார்த்தா அவர் சும்மா இருப்பாரா..? அதனால்தான் அந்த ரெண்டு பாம்புகளையும் அடிச்சு கொன்னுட்டார். அவர் தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக செஞ்ச அந்த ரெண்டு கொலைகளும் நியாயமானதுதான். மன்னிச்சுடலாம். ஆனா இன்னொரு விஷயத்துக்காக அவரை நான் மன்னிக்கத் தயாராயில்லை“

“ இன்னொரு விஷயமா.... அது என்ன அண்ணி? “

“ மகனும், மாப்பிள்ளையும் கொலை பண்ணப் பார்த்தாங்க.... இவர் முந்திகிட்டார். சரி, ஆனா என்னையும் உன்னையும் வெட்டி கொலை பண்ண அரிவாளோடு சாமுவேலை ஏவி விட்டாரே...... அதை மன்னிக்க நான் தயாராக இல்லை....இதைப்பத்தி நீ என்ன சொல்றே கயல் ? “

“நானும் மன்னிக்க தயாராக இல்லை“

“அப்படீன்னா சுட்டுரு “

“அந்தக்காரியத்தை நீங்களே பண்ணுங்க அண்ணி. ஏன்னா என்ன இருந்தாலும் அவர் என்னோட அப்பா..... என்னை மார்லேயும் மடியிலேயும் போட்டு வளர்த்திருக்கார். நீங்க வேற குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு. உங்களால அவரை தயக்கம் இல்லாமே சுட முடியும்....... “

“நீ சொல்றதும் சரிதான்“ சொல்லிக்கொண்டே கயல்விழி கொடுத்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டாள் மலர்க்கொடி.

முகில்வண்ணன் விதிவிதிர்த்துப் போனவராய் தரையில் நெடிஞ்சாண்கிடையாய் விழுந்து மருமகளை கையெடுத்து கும்பிட்டார்.

“என்னை சுட்டுடாதேம்மா.... நான் பணம் சம்பாதிச்சது எல்லாமே உங்களுக்காகத்தான்“

“கடந்த பத்து வருஷமாய் நீங்க பணம் சம்பாதிக்கலை மாமா.... திருடினீங்க. இந்த நிலவறையில் ஒரு ரூபாய் நோட்டில் கூட உங்க வியர்வை இல்லை. அதுல ரத்தக்கறைதான் தெரியுது, இந்தப்பணம் எங்களுக்கு வேண்டாம் மாமா..... எங்களுக்கு மட்டும் இல்லை..... இனி யார்க்கும் இந்த 500 கோடி ரூபாய் பணம் உபயோகப்படப் போறதில்லை. அதே மாதிரி உங்களை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கித்தரவும் எங்களுக்கு இஷ்டம் இல்லை.... உங்க அம்மாவும் அப்பாவும் சமாதியான இதே இடத்திலேயே நீங்களும், நீங்க முறைகேடாய் சம்பாதிச்ச பணமும் எல்லாத்துக்கும் மேலாய் உங்களோட விசுவாச ஊழியன் சாமுவேலுவும் ஒண்ணா இருக்கப்போறீங்க..... இந்த பாக்கியம் வேற யார்க்கு கிடைக்கும். சந்தோஷமாய் செத்துப் போங்க மாமா! “

சொன்ன மலர்க்கொடி தன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி முகில்வண்ணனின் மார்பை குறி பார்த்தாள்.

“வே....வே.... வேண்டாம்மா.....!“ சொல்லிக்கொண்டே அவர் எழுந்து ஒடினார். கரன்ஸி நிரம்பிய பெட்டிகளுக்குப் பின்னால் போய் ஒளிய முயன்றார்.

மலர்க்கொடி துப்பாக்கியின் ட்ரிக்கரை சுண்ட தோட்டா பாய்ந்து முகில்வண்ணனின் முதுகில் ஒரு ரத்தக்குழியைப் பறித்தது. பெரிய அலறலோடு

திரும்பினார்.

மார்பிலும் ஒரு தோட்டா பாய்ந்தது. பீறிட்ட ரத்தத்தோடு மார்பை பற்றிக் கொண்டே நிலைத்துப்போன விழிகளோடு இரண்டாய் மடங்கி ஏற்கனவே உயிரை விட்டிருந்த சாமுவேலின் உடலின் அருகே மல்லாந்து விழுந்து சில விநாடிகள் துடித்து நிசப்தமானார்.

----

காலை பதினோரு மணி

கிராமத்தில் வெய்யில் ஏறியிருக்க காற்றில் அனல் வீசியது,

ஒரு ஆப்பிள் பழத்தை கையில் வைத்துக்கொண்டு தோல் சீவிக்கொண்டிருந்த கயல்விழியை கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மலர்க்கொடி வியப்பாய்ப் பார்த்தாள்.

“ கயல் “

“ சொல்லுங்க அண்ணி “

“ நாம செஞ்சது சரிதானா ? “

கயல்விழி தலையை உயர்த்துப்பார்த்து முறைத்தாள். “ அண்ணி ! நீங்க இதே கேள்வியை இதுவரைக்கும் பத்து தடவைக்கு மேலே கேட்டுட்டீங்க. நானும் நாம செஞ்சது சரிதான்னு சொல்லி சொல்லி களைச்சுப் போயிட்டேன்“

“உனக்கு இருக்கற தைரியம் எனக்கு இல்லை. மனசுக்குள்ளே ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி உணர்ச்சி. விஷயம் வெளியே தெரிஞ்சுடுமோ என்கிற பயம் வேற ! “

ஆப்பிளை துண்டு போட்டுக்கொண்டே கயல்விழி பேசினாள்.

“இதோ பாருங்க அண்ணி .... நாம கொன்னது என்னோட அப்பாவையோ, உங்க மாமனாரையோ அல்ல. ஒரு கொலைகாரனை, மக்களோட பணத்தைக் கொள்ளையடிச்ச ஒரு திருடனை.... நாம சரியான தண்டனையைத்தான் கொடுத்து இருக்கோம். இந்த விஷயம் வெளியே இருக்கிற யார்க்கும் தெரிய வாய்ப்பில்லை..... சமாதி நிலவறைக்கு போகிற வழியை பழையபடியே மேக்னடிக் லாக்கரால மூடிட்டோம். அந்த லாக்கரை ஒப்பன் பண்ணக்கூடிய லேசர் தொழில்நுட்பத்தோடு இருந்த என் அப்பாவோட செல்போனை உடைச்சு தூள்தூளாக்கி, அந்த தூள்களையும் பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வரப்போகிற ஐ.டி. பீப்பிள், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இந்த வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டு தேடினாலும் ஒரு சின்ன தடயத்தைக்கூட அவங்களால எடுக்க முடியாது. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. என்ன கேள்வி கேட்டாலும் நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் பதில் சொல்லணும்..... அது எது மாதிரின்னு உங்களுக்கு சொல்லியும் கொடுத்து இருக்கேன். அதை மட்டும் மறந்துடாதீங்க. “

“ அது நல்லாவே ஞாபகம் இருக்கு கயல் “

“ அப்புறம் முக்கியமாய் இன்னொரு விஷயம் “

“ என்ன சொல்லு ? “

“ அவங்களுக்கு பதில் சொல்லும்போது வேர்த்து வழியக்கூடாது.... தலையைக் குனிஞ்சுகிட்டு பேசக்கூடாது. யார் கேட்டாலும் சரி தைரியமாய் நிமிர்ந்து அவங்களோட கண்களைப் பார்த்துத்தான் பேசணும்.... “

“ சரி “ என்று சொல்லி மலர்க்கொடி தலையாட்டிக்கொண்டு இருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு வாகனத்தின் இரைச்சல் கேட்டது.

கயல்விழி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி பதட்டப்படாமல் மலர்க்கொடியிடம் சொன்னாள்.

“அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். மொதல்ல வர்றவர்தான் ஐ.டி.சீஃப் ஆபீஸர் அருள், அவர்க்குப்பின்னாடி வர்றவங்க அவரோட அஸிஸ்டெண்ட்ஸ் நித்திலன், சாதுர்யா, அவங்களுக்கும் பின்னாடி வர்றவங்க சி.பி.ஐ.ஆபீஸர்ஸ், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், க்யூ பிராஞ்ச் ஆபீஸர் வேல்முருகன்னு ஒரு படையே வர்றாங்க. நான் முதல்ல போய் ரிஸீவ் பண்றேன். நீங்க ரெண்டு நிமிஷம் கழிச்சு சமையலறையிலிருந்து கேஷூவலா வாங்க அண்ணி “

கயல்விழி சொல்லிவிட்டு வீட்டு வாசலை நோக்கிப் போனாள்.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம்தான் முதன்முதலாய் பார்வைக்குத் தட்டுபட்டார். கயல்விழி கைகளைக் குவித்தாள்.

“ வணக்கம் ஸார் “

“ அப்பாவைப் பார்க்க வந்தோம். அப்பா ரெஸ்ட்ல இருக்காராம்மா ..?“

“ அப்பாவைப் பத்தி நானே உங்ககிட்ட பேசலாம்ன்னு இருந்தேன் ஸார்“

“ நீ என்னம்மா சொல்றே ..?“

“ ஸார் ....! இன்னிக்குக் காலையில் அப்பாவும் ட்ரைவர் சாமுவேலும் தென்னந்தோப்பு வரைக்கும் போய்ட்டு வர்றோம்ன்னு கிளம்பிப் போனாங்க போனவங்க இன்னமும் திரும்பி வரலை “

“நடந்து போனாங்களா இல்லை கார்லயா ..? “

“ நடந்துதான்.....கார் வேண்டான்னு அப்பா சொல்லிட்டார். எட்டுமணிக்கு போனவங்க பத்துமணியாகியும் வராமே போகவே நானும், அண்ணியும் காரை எடுத்துகிட்டு தோப்புக்குப்போய் பார்த்தோம். எங்கே போனாங்கன்னு தெரியலை. இந்த கிராமத்துல அவர் வழக்கமாய் போகிற எல்லா இடத்துக்கும் போய்ப் பார்த்துட்டோம். எந்த இடத்திலும் அவங்க இல்லை“

ஐ.டி. சீஃப் அதிகாரி அருள் கயல்விழியை ஒரு கோபப்பார்வை பார்த்தார்.

“என்னம்மா.... நீ..... உங்க ஃபேமிலியை குறி வெச்சு யாரோ வேட்டையாடிகிட்டு இருக்காங்க. உங்கப்பாவை வெளியே போக விட்டிருக்கியே..?“

உள்ளேயிருந்து மலர்க்கொடி வேகமாய் வந்தாள்.

“ சொன்னா கேட்டாதானே ஸார்...... இது நான் பொறந்து வளர்ந்த கிராமம். யாரும் என்னை எதுவும் பண்ண முடியாதுன்னு கிளம்பிப் போனார். போனவரை இன்னமும் காணோம். மடியில் நெருப்பை கட்டிகிட்டு நானும் கயல்விழியும் காத்துகிட்டு இருக்கோம்“

“ செல்போனை எடுத்துட்டுப் போனாரா ..?“

“ம் எடுத்துட்டுப் போனார்.... அந்த நெம்பர்க்கு காண்டாக்ட் பண்ணிப்பார்த்தா எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை... எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியாமே முழிச்சுட்டு இருக்கும்போதுதான் நீங்க வந்து இருக்கீங்க.....! “

இப்போது கயல் பொய்க்கோபத்தோடு குரலை உயர்த்தினாள். “ இதெல்லாம் அந்த மிருணாளினியோட வேலையாகத்தான் இருக்கும். மொதல்ல அவளைக் கண்டுபிடிக்கணும் ஸார் “

சற்று தள்ளி நின்றிருந்த க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் இரண்டடி முன்னால் வந்து நின்றார்.

“ ஸாரி மேடம்..... உங்க குடும்பத்தை குறி வெச்சு அழிக்க நினைக்கிறது மிருணாளினி இல்லை “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 50
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X