ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 5

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 5

காரின் கண்ணாடிக் கதவை வெளியே இருந்தபடி அந்தப் பெண் வேகமாய்த் தட்டிக் கொண்டிருக்க, கார்க்குள் உட்கார்ந்திருந்த நித்திலனும் சாதுர்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 5

"சாதுர்யா... அது யார்ன்னு தெரியலையே..?"

"யாராய் இருந்தா என்ன நித்தி.. மொதல்ல கண்ணாடிய இறக்கு, யாரு என்னான்னு கேளு..."

கண்ணாடியை கீழே இறக்கினான் நித்திலன். அந்த இளம் பெண் பதறியபடி பார்வைக்குக் கிடைத்தாள். வியர்த்து வழியும் முகம்.

"ஸ...ஸ.... ஸார்.... ப்ளீஸ்....ஹெல்ப் மீ....."

"யார்... நீ.... என்ன ப்ராப்ளம் உனக்கு?"

"ஸார்... என் பேர் ரேகா. பிரச்சனை என்னான்னு அப்புறமாய் சொல்றேன்... நான் உங்க கார்க்குள்ளே ஏறி மறைஞ்சுக்கலாமா....? ஒரு பத்து நிமிஷ நேரம்தான்... அதுக்கப்புறம் நான் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டேன்.... என்னை ரெண்டு பேர் துரத்திட்டு வர்றாங்க"

"யா... யார்.....அவங்க...?"

"எ...எ....எல்லாமே சொ...சொல்றேன்....ஸார்... முதல்ல நான் கார்க்குள்ளே வந்துடறேன்... அவங்க வந்துட்டு இருக்காங்க"

"சரி ... உள்ளே வா....." நித்திலன் சொல்லிக் கொண்டே காரின் செண்ட்ரலைஸ்ட் லாக்கை விடுவித்தான்.

அவள் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு கிட்டத்தட்ட பாய்ந்து இருக்கைகளுக்கு கீழே இருந்த இடைவெளியில் ஒரு முயலைப் போல் உடம்பைக் குறுக்கி ஒளிந்து கொண்டாள். பெரிது பெரிதாய் மூச்சு வாங்கினாள்.

நித்திலன் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற போது சாதுர்யா அவனுடையத் தோளைத் தட்டி எதிர்புற ரோட்டைக் காட்டினாள். "நித்தி...! அங்க பாரு... மொதல்ல"

நித்தி பார்த்தான்.

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 5

சற்றுத் தொலைவில் இரண்டு பேர் ஓட்டமும் நடையுமாய் சுற்றும் முற்றும் பார்த்தபடி வேக வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள். ஒருவனின் கையில் ஏதோ ஓர் ஆயுதம் இடம் பிடித்து இருந்தது.

"அந்த இரண்டு பேரும் இந்தப் பெண்ணைத்தான் தேடிக்கிட்டு வந்துட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்...."

"அப்படித்தான் இருக்கணும்"

"இப்ப என்ன பண்ணலாம்?"

"மொதல்ல அவங்க என்ன பண்றாங்கன்னு அப்ஸர்வ் பண்ணலாம்."

சாதுர்யாவும் நித்திலனும் பரஸ்பரம் பேசிக் கொண்டே பதட்ட நடையோடு வந்து கொண்டிருந்த அந்த இரண்டு பேரையும் பார்த்தார்கள்.

சாதுர்யா குனிந்து கிசுகிசுப்பான குரலில் அந்த பெண்ணிடம் கேட்டாள்.

"உன் பேர் என்ன சொன்னே?"

"ரேகா..."

"ரேகா! கொஞ்ச தூரத்துல ரெண்டு பேர் வேகவேகமாய் வந்துகிட்டு இருக்காங்க. வேஷ்டியை மடிச்சு கட்டியிருக்காங்க. சிவப்புக் கலர் சர்ட் போட்டிருக்காங்க. உன்னை துரத்திட்டு வந்தது அவங்கதானே?"

"ஆமா அவங்கதான்...."

"சரி ... நீ மூச்சு காட்டாம அப்படியே இரு...," சொன்ன சதுர்யா நித்திலனை ஏறிட்டாள்.

"நித்தி! நீ காரை விட்டு இறங்கு. நான் காரோட பானட்டை ஓப்பன் பண்றேன். நீ காரை ரிப்பேர் பார்க்கிற மாதிரி பாவ்லா பண்ணு, அவங்க உன்கிட்டே ரேகாவைப் பத்தி விசாரிக்கிறாங்களான்னு பார்ப்போம்...!"

"இதுவும் நல்ல யோசனைதான்," நித்திலன் சொல்லிக் கொண்டே காரினின்றும் இறங்கினான். 'பானட்' க்ளிக் என்று விடுபட காரின் வாயைப் பிளந்தான். செல்போனின் 'டார்ச்' வெளிச்சத்தோடு குனிந்து உள்ளே பார்வையைப் போட்டபடி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த அந்த இரண்டு பேர்களையும் கவனித்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் பக்கத்தில் வந்தார்கள். ஒருவன் கேட்டான்.

"கார்ல என்ன ப்ராப்ளம்?"

நித்திலன் இயல்பாய் பேசினான் "தெரியலை... திடீர்ன்னு ஸ்ட்ரக்காகி நின்னுடுச்சு. அதான் பார்த்துட்டிருக்கேன்..."

"கார் இங்கே எவ்வளவு நேரமாய் நின்னுட்டிருக்கு...?"

"ஏன்...?"

"ஒரு பொண்ணு இந்தப் பக்கம் ஓடி வந்தாளா?"

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 5

"பொண்ணா?"

"ஆமா.... சின்னவயசுப் பொண்ணு. இருபந்தஞ்சு வயசு இருக்கும்....!"

"அப்படியாரும் இந்தப் பக்கம் ஓடி வந்த மாதிரி தெரியலையே?"

"கார்க்குள்ளே இருக்கிறது யாரு?" ஒருவன் சாதுர்யாவைப் பார்த்திக் கொண்டே கேட்டான்.

"என்னோட ஒய்ஃப்"

"எங்கே போயிட்டு இருக்கீங்க...?"

அவன் கேட்ட கேள்விக்கு நித்திலன் பதில் சொல்வதற்குள், சாதுர்யா காரினின்றும் இறங்கி அவர்களை நோக்கி வந்தாள். குரலை சற்றே உயர்த்தினாள்.

"அலோ.... உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்... எதுக்காக எங்ககிட்ட இப்போ இந்த போலீஸ் மாதிரியான விசாரணை....?"

"இதோ பாருங்கம்மா.... நாங்க காரணம் இல்லாமே உங்ககிட்டே விசாரணை பண்ணலை. இன்னிக்கு எக்ஸ். சி.எம். முகில்வண்ணன் அய்யாவோட மணிவிழா. இந்த மணிவிழாவுக்கு நெருக்கமான முக்கியமான நபர்களுக்கு மட்டும்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கு... அழைப்பிதழ் இல்லாமே யாரும் உள்ளே போக முடியாது. அப்படி யாராவது போக முயற்சி பண்ணினால் அவங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு எங்களோடது. அரைமணி நேரத்துக்கு முந்தி ஒரு பைக் இந்த ஏரியாவுக்குள்ளே வந்தது. ஒரு பொண்ணை அதோ அந்த சவுக்குத் தோப்பு இருட்டுல ட்ராப் பண்ணிட்டு போயிடுச்சு. பைக்ல வந்த ஆள் யார்ன்னு தெரியலை. பொண்ணை மடக்க முயற்சி பண்ணினோம். அவ எங்களைப் பார்த்ததுமே ஓட ஆரம்பிச்சா... நாங்க துரத்தினோம். அவ வேகத்துக்கு எங்களால ஓட முடியலை. ஆனா இந்த பக்கமாய்த்தான் ஓடி வந்தா..."

"அப்படி ஓடி வந்து இருந்தா எங்களோட பார்வைக்கு பட்டிருப்பாளே... நாங்க யாரையும் பார்க்கலை..."

"சரி.... நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்துக்கு எங்கே போய்கிட்டு இருக்கீங்க...?" ஒருவன் சாதுர்யாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அந்த சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார்கள்.

ஹெட்லைட் வெளிச்சத்தோடு இரண்டு பைக்குகள் இரைச்சலாய் வந்து நின்றன. பெண்ணைத் தேடி வந்தவர்கள் அவர்களை நோக்கிப் போனார்கள். இரண்டு பேர்வழிகளில் ஒருவன் கேட்டான்.

"என்ன முருகேஷ்.... அவ கிடைச்சாளா?"

"இல்லையே.... சவுக்குத் தோப்பு பூராவும் பைக்கை ஓட்டிப் பார்த்தோம், எப்படியோ தப்பிச்சுட்டா....!"

"நாங்களும் ரோட் சைட் பூராவும் பார்த்துட்டோம். கண்ணுல படலை. பட்டிருந்தா இந்நேரம் ரெண்டு துண்டாக்கி புதைச்சிருப்போம்."

"ஜெயபால்.... அவ மூஞ்சியை நீ பார்த்தியா?"

"பார்க்கலை..."

"முருகேஷ்.... நீ...?"

"நானும் பார்க்கலை"

"சரி ... அது யாரோட கார் அது...?"

"தெரியலை... கார்ல வந்தவங்க கணவன் மனைவி. கார்ல ஏதோ ரிப்பேர்ன்னு சொல்லி பார்த்துட்டு இருக்காங்க"

"அந்தப் பொண்ணைப் பத்தி அவங்க கிட்ட விசாரிச்சியா?"

"ம்... விசாரிச்சேன். யாரும் இந்தப் பக்கம் ஓடி வரலைன்னு சொல்றாங்க...!"

"அவங்க எங்கே போறாங்கன்னு கேட்டியா...?"

"கேட்டுகிட்டு இருந்தேன்... அதுக்குள்ளே நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்க..."

"வா... கேட்டுருவோம்..... அய்யாவோட மணிவிழா ஃபங்க்‌ஷன் நடந்து முடிகிற வரைக்கும் யாரையும் நம்ப முடியாது."

நான்கு பேரும் நித்திலன், சாதுர்யாவை நெருங்கினார்கள். சாராய நெடியோடு ஒருவன் கேட்டான்.

"கார்ல ரெண்டு பேர் மட்டும்தானா?"

"ஆமா..."

"எங்கே போறீங்க...?"

"எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் சஷ்டியப்த பூர்த்தி ஃபங்க்‌ஷனுக்கு....!"

"எ...எ....என்னது ... அய்யாவோட ஃபங்க்‌ஷனுக்கா?"

"ஆமா...."

"அழைப்பிதழ் இருக்கா....?"

Rajeshkumar's new political thriller Five Star Dhrogam Chapter 5

"இருக்கு...!"

"காட்டு...!"

முகத்தில் எந்தவிதமான சலனமும் இன்றி நித்திலன் சாதுர்யாவைப் பார்க்க, அவள் காரை நோக்கிப் போனாள். அதே விநாடி...

நான்கு பேர்களில் ஒருவன் குரல் கொடுத்தான். "ஒரு நிமிஷம்"

"என்ன...?"

"கார்ல நீங்க ரெண்டு பேரும் மட்டும்தானே வந்தீங்க?"

"ஆமா..."

"கார்ல வேற யாரோ இருக்கிற மாதிரி தெரியுதே?"

"இல்லையே?"

"யாரோ இருக்காங்க..... கார் இப்ப லேசா அசைஞ்ச மாதிரி இருந்தது....!" சொன்ன அந்த பைக் பேர்வழி காரை நோக்கிப் போனான்.

"இரு.... நானும் வர்றேன்....!" அவனோடு இன்னொருவனும் சேர்ந்து கொண்டான்.

அத்தியாயம் 6

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 5th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற