For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 11

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

பத்ரி சொன்னதைக் கேட்டு கஜபதி தன் முகத்தில் இருந்த ஒட்டு மொத்த ரத்தத்தையும் தொலைத்துவிட்ட தினுசில் நிலைத்த விழிகளோடு நிமிர்ந்தார்.

"பத்ரி! நீ என்ன சொல்றே.... முகிலோட மாப்பிள்ளை மணிமார்பன் என்னைத் தேடிகிட்டே இருக்கானா?"

"ஆமா...."

"எதுக்கு...?"

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 11

"தெரியலை.... நான் ஃபங்க்‌ஷனுக்கு வந்துகிட்டு இருந்தவங்களைப் போய்ப் பார்த்து காப்பி வேணுமான்னு கேட்டுகிட்டு இருந்த போது மணிமார்பன் அந்தப் பக்கமாய் வேகவேகமாய் வந்தான். மேடைக்கு முன்புறமாய் உட்கார்ந்துகிட்டிருந்த ஒருத்தர்கிட்டே போய் 'கஜபதியை பார்த்தியா'ன்னு கேட்டான், அந்த ஆள் பார்க்கலைன்னு சொன்னதும் மணிமார்பன் உடனே தன்னோட செல்போனை எடுத்து யார்க்கோ டயல் பண்ணி 'அந்த கஜபதியை நான் உடனே பார்க்கணும். இந்த கூட்டத்துல எங்கே இருக்கார்ன்னு தெரியலை... நீ பார்த்தா எனக்கு போன் பண்ணு'ன்னு பேசிட்டே மண்டப வாசலை நோக்கிப் போயிட்டான்."

"சி.எம். உள்ளே வந்துட்டாரா?"

"இல்லை...."

"சி.எம்.மை வரவேற்று உள்ளே கூட்டிகிட்டு வரவேண்டிய இந்த நேரத்துல மணிமார்பன் எதுக்காக என்னைத் தேடிகிட்டு அலையணும்...."

பேரர் யூனிஃபார்மில் இருந்த பத்ரி லேசாய் முகம் வியர்த்துப் போனவராய் தடுமாற்றமான குரலில் சொன்னார்.

"கஜபதி....! மணிமார்பன் கொஞ்சம் டென்ஷனோடு இருந்தான். அவன் உன்னை ஸ்மெல் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்."

"அதுக்கு வாய்ப்பு இல்லை பத்ரி... போன பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் அப்பா, மகன், மாப்பிள்ளை மூணு பேரும் என்கிட்டே நல்ல முறையில் சிரிச்சு பேசிட்டுதானே இருந்தாங்க...? ஐ.டி. ஆபீஸர்ஸ் நித்திலன் சாதுர்யாவை முத்துப் பாண்டியனோட மகன் மருமகள்னு நான் சொன்னதையும் நம்பினாங்களே...? இப்ப மட்டும் எப்படி சந்தேகம் வரும்?"

"இதோ பார் கஜபதி..... நீ இப்போ நிலைமை புரியாமே பேசிட்டு இருக்கே.... நீ, நான், நித்திலன், சாதுர்யா நாம நாலு பேருமே உடனடியாய் இங்கேயிருந்து தப்பிச்சுப் போயிடறது உத்தமம்.!"

"பத்ரி....! நீ ரொம்பவும் பயப்படறே... அந்த மணிமார்பன் என்னை ஸ்மெல் பண்றதுக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவன் எதுக்காக என்னைத் தேடறான்னு நேர்லயே பார்த்து கேட்டுடறேன். வேற ஏதாவது விஷமாய் இருக்கும்...."

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் மெளனம் காத்த நித்திலன் பத்ரியை ஏறிட்டான்.

"மிஸ்டர் கஜபதி சொல்றதுதான் சரியாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அவர் மணிமார்பனைச் சந்திக்கட்டும்."

பத்ரியின் குரலில் லேசாய் கோபம் தெறித்தது.

"நித்திலன்...! உங்களுக்கு முழு விபரம் தெரிய வாய்ப்பில்லை யூனிஃபார்ம் போட்டு பேரர் வேஷத்துல இருக்கிற நான் உண்மையிலேயே யார்ன்னு உங்களுக்குத் தெரியுமா?"

நித்திலன் தெரியாது என்பது போல் தலையாட்டினான்.

"என்னோட முழுப்பெயர் பத்ரிநாராயணன். விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரப்ஷன் டிபார்மெண்டில் ஃபர்ஸ்ட் க்ரேட் ஆபீஸராய் இருக்கேன். கஜபதியும் நானும் ஒரே ஸ்கூல்ல டென்த் வரைக்கும் படிச்சோம். அதுக்கப்புறம் கஜபதிக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போக நான் மட்டும் போஸ்ட் கிராஜுவேசன் வரை படிச்சுட்டு இந்த லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனா, கஜபதியோ அரசியலில் புகுந்து ஒரு அரசியல் கட்சிக்கு செயலாளராகி வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டான். நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு துறையில் இருந்தாலும் வாரத்துல ஒருநாளாவது மீட் பண்ணிப் பேசிக்குவோம். லஞ்சம் வாங்குறதும் சரி, கொடுக்கிறதும் சரி தப்பு இல்லைன்னு போயிட்டிருந்த கஜபதியை நான்தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு உதவி பண்ற அளவுக்கு கொண்டு வந்தேன். சட்ட விரோதமாய் 5000 கோடி ரூபாய் ஊழல் செய்த முகில்வண்ணனை பொறி வெச்சு பிடிக்க திட்டமும் போட்டோம். அந்தத் திட்டத்தோட முதல் கட்டம்தான் இது. நான் நேரிடையாய் இந்த ஃபங்க்‌ஷன்ல கலந்துக்க முடியாதுங்கிறதால தெரிஞ்ச கேட்டரிங் மூலமாய் ஒரு பேரராய் உள்ளே வந்தேன்."

நித்திலனும் சாதுர்யாவும் ஆச்சர்யத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்க பத்ரிநாராயணன் தொடர்ந்தார்.

"உங்க ரெண்டு பேரை இங்கே பார்த்ததும் நீங்க ஐ.டி. டிபார்ட்மெண்ட் ஆட்கள் என்கிற உண்மையை நான்தான் கஜபதிகிட்டே சொன்னேன். எங்க நோக்கத்துக்கு நீங்களும் உதவியாய் இருப்பீங்க என்கிற நம்பிக்கையில்தான் கஜபதி முகில்வண்ணன்கிட்டே உள்ளே கூட்டிட்டுப் போய் முத்துப்பாண்டியனோட மகனும், மருமகளும்ன்னு அறிமுகப்படுத்தினார். முத்துப்பாண்டியனும் முகில்வண்ணனும் அரசியலில் பரம விரோதிகள். அவர் இந்த ஃபங்க்‌ஷனுக்கு வரமாட்டார் என்கிற தைரியத்துல கஜபதி அந்தப் பொய்யைச் சொன்னார். ஆனால், எதிர்பாராதவிதமாய் முத்துபாண்டியனே முகில்வண்ணனுக்கு போன் பண்ணிப் பேசினது ஒரு ஆச்சர்யமான விஷயம். நல்லவேளையாய் சி.எம். வந்துட்டதால அந்த ரெண்டு பேரும் தொடர்ந்து பேசலை. பேசியிருந்தா உண்மை வெளியாகியிருக்கும்."

Rajeshkumars new political thriller Five Star Dhrogam Chapter 11

நித்திலன் குறுக்கிட்டுக் கேட்டான். "இப்ப அந்த உண்மை வெளியாகியிருக்கும்ன்னு நினைக்கறீங்களா மிஸ்டர் பத்ரி நாராயணன்?"

"ஆமா....."

"எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க?"

"அந்த முத்துப்பாண்டியன் மறுபடியும் போன் பண்ணிப் பேசியிருக்கலாம்.... அப்படிப் பேசும் போது அவர் நான் 'என்னோட மகனையும், மருமகளையும் ஃபங்க்‌ஷனுக்கு அனுப்பலையேன்னு சொல்லியிருக்கலாம்."

சாதுர்யா குறுக்கிட்டாள்.

"இதைத் தவிர வேற காரணம் இருக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?"

"கண்டிப்பாய்....!"

கஜபதி எழுந்தார்.

"ஓ.கே..... பத்ரி... இப்ப நாம என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறே....?"

"நாம நாலுபேரும் இந்தப் பண்ணைவீட்டை விட்டு உடனே கிளம்பிப் போயிடணும்....."

"அப்படி போயிட்டா மட்டும் நம்ம மேல மணிமார்பனுக்கு சந்தேகம் வராதா...?"

"சந்தேகம் வந்தாலும் பரவாயில்லை. ஆனா நாம இங்கே இருந்தா உயிரோடு இருக்க முடியாது.... மொதல்ல தப்பிச்சுப் போகிறவழியைப் பார்ப்போம்...."

"அந்த மணிமார்பன் எதுக்காக என்னைத் தேடறான்னு தெரிஞ்சுகிட்டா என்ன பத்ரி?"

"அது ரிஸ்க் கஜபதி.... நாம உயிரோடு இருந்தால்தான் நாளைக்கு இவங்களோட கோடிக்கணக்கான ஊழல் பணத்தை வெளியே கொண்டு வர முடியும்...ம்.... கிளம்பு"

பத்ரிநாராயணன் சொல்லிக் கொண்டே அந்த அறையினின்றும் வெளிப்பட மூன்று பேரும் பின் தொடர்ந்தார்கள்

பிரகாசமான ட்யூப்லைட்களின் வெளிச்சத்தில் ஆட்களின் நடமாட்டம் ஆங்காங்கே தெரிந்தது. வீட்டுக்கு வெளியே வாசலில் சி.எம்மை வரவேற்கும் விதமாக பேண்ட் வாத்திய சத்தமும், பட்டாசுகள் வெடித்துச் சிதறும் ஓசையும் விட்டு விட்டு கேட்டது.

நான்கு பேரும் வேக வேகமாய் நடந்தார்கள். பத்ரி குரலைத் தாழ்த்தினார். "கஜபதி....! உனக்குத்தான் இந்த வீட்டோட எல்லைகள் துல்லியமாய் தெரியும். எந்தப் பக்கமாய் போனால் நமக்கு பாதுகாப்பாய் இருக்கும்?"

"வீட்டோட வடகிழக்கு திசையில் கட்டப்பட்டு இருக்கிற காம்பெளண்ட் சுவர் கொஞ்சம் உயரம் கம்மியாய் இருக்கும். ஆட்களோ நடமாட்டமும் அதிகமாய் இருக்காது அந்தப்பக்கமாய் போயிடலாம்."

வெளிச்சமான பகுதிகளை விட்டு விலகி இருட்டிலேயே நடந்தார்கள். யாரேனும் பார்வைக்குத் தட்டுப்படும் போது ஒரு சில விநாடிகள் மறைந்து நின்று பின் வேகமாய் நடந்தார்கள். ஒரு ஐந்து நிமிட ஜாக்ரதையான நடைக்குப் பின் பண்ணை வீட்டின் வடகிழக்கு மூலைக்கு வந்தார்கள்.

வைகறை இருட்டு இன்னமும் கெட்டியாக கறுப்புச் சாயம் கரையாமல் இருக்க, கஜபதி நின்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குரலைத் தாழ்த்தினார்.

"பத்ரி... இந்த காலி இடத்துல மொதல்ல காய்கறித் தோட்டம் போட்டிருந்தாங்க.. இப்ப இல்லை. ஆனா இந்த இடம் கொஞ்சம் குண்டும் குழியுமாக இருக்கும்.. பார்த்து வரணும்."

"காம்பெளண்ட் சுவர் எங்கே இருக்குன்னு தெரியலையே..."

"இன்னும் நூறடி தூரம் நடக்கணும்...."

கஜபதி சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தார்.

"பார்த்து வா.. இங்கே ஒரு பெரிய குழி இருக்கும்...." கஜபதி சொல்லிக் கொண்டு நடக்க மூன்று பேரும் அவரை அடியொற்றி பின் தொடர்ந்தார்கள்.'

சாதுர்யாவுக்குப் பின்னால் நடந்து கொண்டு இருந்த நித்திலன் சட்டென்று நின்றான்.

"ஒரு நிமிஷம்...!" என்றான்.

முன்னால் போய்க் கொண்டிருந்த கஜபதியும் பத்ரி நாராயணனும் திரும்பிப் பார்த்தார்கள்.

"என்ன....?"

"குழிக்கு உள்ளேயிருந்து ஏதோ சத்தம் கேட்குது"

"ச.... ச.... சத்தமா...?"

"ம்.... யாரோ முனகற மாதிரி...." நித்திலன் சொல்லிக் கொண்டே தன்னுடைய செல்போனை எடுத்து டார்ச்சை உசுப்பினான். பால் நிறத்தில் வெளிச்சம் பாய்ந்து அங்கிருந்த இருட்டை விரட்டியது.

வெளிச்சத்தை அப்படியே குழிக்குள் கொட்டினான்.

உள்ளே,

ரத்தம் நனைந்த உடம்போடும், மரண முனகலோடும் மணிமார்பன் மல்லாந்து விழுந்திருந்தான்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 11th episode of Rajeshkumar's new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X