For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படீன்னா லலிதா சொன்னது..?.. பைவ் ஸ்டார் துரோகம் (29)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“குழந்தையோடு போய்க்கொண்டிருந்த அந்தப்பெண்ணை நோக்கி வேகமாய் நான் நடக்க பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகி குரல் கொடுத்தாங்க“

“ஒரு நிமிஷம் மிஸ்டர் வேல்முருகன்“ தெய்வநாயகியின் குரலில் இருந்த பதட்டம் என்னை அப்படியே ஆணியடித்த மாதிரி ஸ்தம்பிக்க வெச்சுது. திரும்பிப் பார்த்தேன். அவங்க பதட்டத்தோடு எனக்குப் பக்கமாய் வந்து நின்னாங்க. முகம் வேர்த்திருந்தது. நான் என் விஷயம்ன்னு கேட்டேன். அப்படி கேட்டதும் அவங்க தயக்கத்தோடு “குழந்தையோடு போற அந்தப்பெண்ணை விசாரிக்காதீங்க..... நீலகண்டனை ஸ்லிப்பரில் அடிச்ச பொண்ணு அவ கிடையாதுன்னு சொன்னாங்க. உடனே பக்கத்தில் இருந்த லலிதா “இல்ல மேடம்......இப்ப நாம சி.சி.டி.வி. காமிராவில் பார்த்த பொண்ணுதான் அன்னிக்கு நீலகண்டனை அடிச்சவ..... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..... அவளை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும்“ ன்னு சொன்னா. லலிதா இப்படி சொன்னதும் ரொம்பவும் டென்ஷனான தெய்வநாயகி நான்தான் அந்தப் பொண்ணு இல்லேன்னு சொல்றேனேன்னு தன்னையும் மீறி கத்திட்டாங்க!“

rajesh kumar series five star dhrogam part 29

சாதுர்யா, நித்திலன், அருள், கஜபதி நான்கு பேரும் வேல்முருகனையே பார்க்க அவர் சில விநாடிகள் மெளனம் காத்தார். அருள் கேட்டார். “அப்புறம் ...? “

தெய்வநாயகி அப்படி கத்தினதும் நான் அவங்களைப்பார்த்து “ஏன் இப்படி டென்ஷனாகறீங்க.... அந்தப்பெண்ணை விசாரிச்சா உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு

கேட்டேன்“

சாதுர்யா ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

“அதுக்கு தெய்வநாயகி என்ன சொன்னாங்க ...? “

“குழந்தையை கூட்டிட்டு போற அந்தப்பொண்ணு என்னோட அக்கா பொண்ணு. பேரு மீரா. ரொம்பவும் நல்ல பொண்ணு. நீங்க திடீர்ன்னு போய் விசாரிச்சா அவ மிரண்டு போயிடுவா..... நீலகண்டனை அடிச்ச பொண்ணு நிச்சயம் மீராவாய் இருக்க மாட்டான்னு தெய்வநாயகி மறுத்தாங்க. ஆனா லலிதா உறுதியான குரலில் தான் பார்த்தது இந்தப்பெண்ணைத்தான்னு தீர்மானமாய் சொன்னதும் தான் அந்தப் பொண்ணு மீராவை விசாரிச்சு பார்த்துடலாம்ன்னு கிளம்பினேன். அடுத்த விநாடி தெய்வநாயகி சட்டுன்னு என்னோட கையைப் பிடிச்சுட்டாங்க. “வேண்டாம் ஸார்..... அந்தப்பொண்ணை விசாரிக்காதீங்க. நீலகண்டனை அடிச்ச பொண்ணு யாரன்னு எனக்குத்தெரியும். வாங்க என்னோட ரூமுக்கு போய் பேசலாம்ன்னு சொன்னாங்க“

“அப்படீன்னா லலிதா சொன்னது ...? “

“பொய்.... தெய்வநாயகியின் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிறதுக்காக நானும், லலிதாவும் சின்னதாய் ஒரு ட்ராமா பண்ணினோம். மீரா தெய்வநாயகியின் அக்கா மகள் என்கிற விஷயத்தை நான் கண்டுபிடிச்சு அதையே ஒரு ஆயுதமாய் பயன்படுத்தினேன். தன்னோட அக்கா பெண் மீராவை போலீஸ் விசாரிக்கிறதை எந்த ஒரு சித்தியால தாங்கிக்க முடியும் ..? ஸோ மிருணாளினி வெளியே வந்துட்டா..... தெய்வநாயகி சொன்ன விபரங்களை வெச்சுகிட்டு மிருணாளினி வீட்டுக்கு போய் சர்ச் பண்ணிட்டு இருக்கும்போதுதான் மிருணாளினியோட தோழி அஞ்சனா வந்தாங்க. அவங்க மூலமாய் சில விஷயங்கள் தெரிய வந்தாலும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கலை“

அருள் வேல்முருகனின் கையைப்பற்றிக் குலுக்கி விட்டு கேட்டார். “குட் ஜாப் பட் மிருணாளினி பற்றிய உண்மைகளை அந்த ஸ்கூல் பிரின்ஸிபால் தெய்வநாயகி எதுக்காக மறைக்கணும் ...? “

“அதுக்கான காரணத்தையும் சொன்னாங்க. மிருணாளினி அந்த ஸ்கூலில் படிச்ச ஸ்டூடண்ட். அதுவும் ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடண்ட். அதனால மிருணாளினி மேல் தெய்வநாயகிக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருந்திருக்கு. பள்ளிப்படிப்பை முடிச்சு, கல்லூரிக்கு போன பின்பும் அந்தப் பாசப்பிணைப்பு தொடர்ந்திருக்கு. அம்மா, அப்பா இல்லாத மிருணாளினிக்கு ஆறுதல் தரும் ஒரு உறவாய் தெய்வநாயகி இருந்து இருக்காங்க... “

rajesh kumar series five star dhrogam part 29

நித்திலன் குறுக்கிட்டு கேட்டான்.

“சரி..... மணிமார்பன் கொலையில் சம்பந்தப்பட்ட நீலகண்டனை மிருணாளினி எதுக்காக ஸ்லிப்பரில் அடிச்சா..... தெய்வநாயகிகிட்டே காரணம் கேட்டீங்களா ஸார்...? “

“ம்.... கேட்டேன். மணிமார்பனுக்கும், மும்பையில் இறந்து போன நடிகை ஜெயதாராவுக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்ததே நீலகண்டன் தான். மணிமார்பன் பெரிய பணக்கார குடும்பத்துல பிறந்திருந்தாலும் சொந்தப்பணத்தை செலவழிக்க மாட்டானாம். ஜெயதாராவை கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்லி சொல்லியே அவ சினிமாவில் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சுரண்டியிருக்கான். அப்புறம் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனோட வீட்டு மாப்பிள்ளையானதும் ஜெயதாராவை கை கழுவியிருக்கான். அந்த ஏக்கத்திலேயே ஜெயதாரா சினிமாவில் நடிக்கிறதை விட்டுட்டு மும்பைக்கு போய் ஒரு இந்திப்பட டைரக்டருக்கு மனைவியாகி அங்கேயும் ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காமல் தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போயிட்டா. அவளோட மரணத்தைப்பத்தி கொஞ்சமும் கவலைப்படாத மணிமார்பன் ஒரு தடவை மிருணாளினியின் வீட்டுக்குப் போய் உன்னோட அக்காவை விட நீ நல்லாயிருக்கே. நீலாங்கரையில் வீடு வாங்கித்தர்றேன். குடும்பம் நடத்தலாமான்னு கேட்டிருக்கான். மிருணாளினி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு பயந்து போய் மணிமார்பன் வெளியே வந்துட்டான். இருந்தாலும் அடிக்கடி போன் பண்ணி தன்னோட விருப்பத்தை மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கான். தன்னோட கையாள் நீலகண்டனை தூது விட்டிருக்கான். நீலகண்டனும் மிருணாளினியை மீட் பண்ணி மணிமார்பனோட ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமயம் மிருணாளினி தெய்வநாயகியைப் பார்க்க ஸ்கூலுக்கு வந்தபோது நீலகண்டனும் ஃபாலோ பண்ணி வந்து மணிமார்பனோடு குடும்பம் நடத்தறதைப் பத்தி அவகிட்டே பேசியிருக்கணும். மிருணாளினி கோபத்தில் காலில் இருந்த ஸ்லிப்பரைக் கழற்றி அடிச்சிருக்கணும்“

அருள் இடைமறித்துக் கேட்டார்.

“இப்ப நீங்க சொன்னதெல்லாம் தெய்வநாயகி ஒரு ஸ்டேட்மெண்டாய் கொடுத்து இருக்காங்களா ...? “

“ஆமா...... “

“சரி...... மிருணாளினியைப்பற்றிய உங்க போலீஸ் பார்வை என்ன..?“

“கொலையும் செய்வாள் பத்தினி“

“ஸோ...... சந்தேகப்படறீங்க..?“

“கண்டிப்பாய்.... ! மிருணாளினி தப்பு பண்ணாதவளாய் இருந்தா ஏன் தலைமறைவாய் இருக்கணும் ..?“

சாதுர்யா வேல்முருகனை ஏறிட்டாள்.

“ஸார்....... என்னோட கெஸ் ஓர்க் என்னான்னு சொல்லலாமா...? “

“ம்...... சொல்லுங்க“

“மிருணாளினி தலைமறைவாய் இருக்காங்கிற ஒரே காரணத்துக்காக அவளுக்கும், மணிமார்பன் கொலை செய்யப்பட்டதுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றது தப்புன்னு என்னோட மனசுக்குப்படுது. ஒரு சாதாரண பெண்ணால ஒரு எக்ஸ் சீப்மினிஸ்டரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நடக்கிற இடத்துக்குப் போய் ஒரு கொலையைப் பண்ணியிருக்க முடியுமா ...? “

“யூ.மே.பி. கரெக்ட்..... ஒரு பெண்ணால அந்த இடத்துக்குப் போய் அவ்வளவு துணிச்சலாய் கொலையைப் பண்ணியிருக்க முடியாதுதான். ஆனா கொலை பண்ண உதவி செஞ்சு இருக்கலாமில்லையா...? “

“யார்க்கு ...? “

“யார்க்கு.... எப்படின்னு இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கண்டுபிடிச்சுடுவோம்“ வேல்முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் வைபரேஷனில் உறுமியது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் கூப்பிட்டுக்கொண்டு இருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தார்.

“எஸ்.... ஸார் “

“வேல்முருகன் இப்ப நீங்க எங்கே இருக்கீங்க ...?

“மயிலாப்பூர் லஸ் கார்னர்ல ஸார் “

“அங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க...? “

“பானிபூரி சாப்பிட்டுகிட்டு இருக்கேன் ஸார். பை... த.. பை எனிதிங் இம்பார்ட்டண்ட் ஸார் ...? “

“எஸ்..... நீங்க உடனே புறப்பட்டு எக்ஸ் சி.எம். முகில்வண்ணன் வீட்டுக்கு வாங்க....... !“

“ஸ...ஸ..... ஸார்....... எனி அன்வாண்ட்டட் ஹேப்பனிங்...? “

“எஸ்“

“என்ன ஸார் ...? “

“சொல்றேன்... பட் இப்போதைக்கு அதை யார்க்கும் கன்வே பண்ண வேண்டாம்“

“சர்ட்டன்லி நாட் ஸார் “

கமிஷனர் ஆதிமுலம் மறுமுனையில் குரலைத்தாழ்த்தினார்.

“முகில்வண்ணன் மகன் செந்தமிழ் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் சீப் மினிஸ்டரைப்பார்த்து பேச போயிருக்கார். ஆனா சி.எம். ஆபீஸூக்கு அவர் போகலை....... !“

“அப்புறம்..... எங்கே போனார்...? “

“அதுதான் தெரியலை.... முகில்வண்ணனும், நானும் செந்தமிழோட செல்போனை காண்டாக்ட் பண்ண முயற்சி பண்ணினோம். நோ ரெஸ்பான்ஸ். செல்போன் இன் டெட் மோட்“

“ஸ.....ஸார் “

“முகில்வண்ணன் ஆடிப்போயிட்டார். மைல்டு ஹார்ட் அட்டாக். ஃபேமிலி டாக்டர் சதாசிவம் வந்து பார்த்துட்டிருக்கார்“

“இதோ..... நான் உடனே புறப்பட்டேன் ஸார் “

“பறந்து வாங்க ....... !“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 29
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X