For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னிக்கு ராத்திரி நாம சந்திக்க முடியுமா?.. பைவ் ஸ்டார் துரோகம் (39)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனின் டிஸ்ப்ளேயில் கவர்னரின் பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயாவின் பெயர் ஒளிர்வதைப் பார்த்ததும் முதலமைச்சர் வஜ்ரவேல் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியபடி பேச ஆரம்பித்தார்.

"சொல்லு ஷிவ்ராம் "

மறுமுனையில் இருந்த ஷிவ்ராம் தத்தாத்ரேயா தெளிவான உச்சரிப்போடு நல்ல தமிழில் பேச ஆரம்பித்தார்.

rajesh kumar series five star dhrogam

"என்ன வஜ்ரவேல் .......... நடந்துகிட்டு இருக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நீ இந்த தமிழ்நாட்டுக்கு சீஃப் மினிஸ்டராய் இருக்கிறியா ,இல்ல ஒரு கொலு பொம்மை மாதிரி இருக்கிறியா ன்னு ஒரு சந்தேகம் வருது...... "

"கொலு பொம்மை போன் எடுத்து பேசுமா என்ன ? "

"இதோ பார் வஜ்ரவேல்...... கேலியும் கிண்டலுமாய் பேசற நேரமில்லை இது..... மும்பை தாதா இஷ்மி பர்மானை கடத்திட்டு போன ஆம்புலன்ஸ் ஆட்கள் யார்ன்னு போலீஸ் மும்முரமாய் தேடிட்டு இருக்கு. அவனை உன்னோட ஆட்கள்தான் கடத்திட்டு போய் பாதுகாப்பான இடத்துல வெச்சு இருக்கிறதாய் நீ சொல்றே..... அந்த இடத்தை போலீஸ் மோப்பம் பிடிச்சுட மாட்டாங்களே? "

வஜ்ரவேல் சத்தம் வராமல் சிரித்தார்.

"ஷிவ்ராம் நீ கவர்னரோட பி.ஏ. அந்த வேலையை மட்டும் பாரு...... நான் இங்கே இனிமேல் முகில்வண்ணன் விஷயத்தில் என்ன பண்ணனுமோ அதைப் பண்ணி அந்த ஐநூறு கோடி ரூபாயை நம்ம பக்கம் கொண்டு வர்றேன்"

"வஜ்ரவேல்"

"என்ன? "

"இன்னிக்கு ராத்திரி நாம சந்திக்க முடியுமா? "

"எதுக்கு ? "

"கொஞ்சம் பேசணும்"

"பேசறதுக்கு என்ன இருக்கு..... ? "

"இப்போ போன்ல எதுவும் வேண்டாம். இன்னிக்கு ராத்திரி உன்னோட முட்டுக்காடு பங்களாவுக்கு வர்றேன். இஷ்மி பர்மான் இப்போ அங்கேதானே இருக்கான்..... ? "

"ஆமா.... "

"அவனை உயிரோடு எரிக்கிறதுக்கு முந்தி அவன் போலீஸ்ல என்ன சொல்லியிருக்கான்னு கேட்கணும் "

"ஷிவ்ராம் நீ எதுக்காக இவ்வளவு பயப்படறேன்னு எனக்குத் தெரியலை.... மத்தியிலும் சரி, மாநிலத்திலேயும் சரி நம்ம ஆட்சி நடக்குது. கிராமத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சி.பி.ஐ. வரைக்கும் நம்முடைய கண்ணசைவுக்காக காத்திருக்கு...... ஆரம்பத்திலேயே நான் உனக்கு வாக்கு கொடுத்த மாதிரி முகில்வண்ணனோட ஃபேமிலியில் இருக்கிற ஒவ்வொரு உறவையும் இல்லாமே பண்ணிட்டிருக்கேன். அடுத்த வாரத்துக்குள்ளே முகில்வண்ணனும் உயிரோடு இருக்க மாட்டான். மாப்பிள்ளை மணிமார்பனின் கொலை செய்யப்பட்டதும், மகன் செந்தமிழ் திரிசூலம் ஹாஸ்பிடலில் சுய உணர்வு இல்லாமல் கிடப்பதும் முகில்வண்ணனை ரொம்பவும் பாதிச்சிருக்கு. அதான் ஹார்ட் அட்டாக் வந்து டாக்டர்ஸோட கண்காணிப்புல இருக்கான். நான் இப்போ அவனைப் பார்க்கத்தான் கிளம்பிட்டிருக்கேன். என்னோட அறைக்கு வெளியே கமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"

rajesh kumar series five star dhrogam

"வஜ்ரவேல்..... உனக்கு இருக்கிற தைரியமும் எதுக்குமே பயப்படாத மனோதிடமும் எனக்கு இல்லை"

வஜ்ரவேல் சிரித்தார்.

"அதெல்லாம் உனக்கு வராது.... அதுக்கு என்ன காரணம் தெரியுமா..... ? "

"சொல்லு"

"வெள்ளை வேஷ்டியும், வெள்ளை சர்ட்டும் போடற என்னை மாதிரியான அரசியல்வாதிகளுக்குத்தான் இப்படிப்பட்ட துணிச்சல் இருக்கும். நீ ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு ஃபுல் சூட்ல இருக்கிற ஆசாமி. சட்டம், போலீஸ், கோர்ட் என்கிற இந்த வார்த்தைகளைக் கேட்டாலே அடி வயித்துல குளிர் இறங்கும். இருதயத்தோட துடிப்பு அதிகமாகும். நீ எதுக்கும் பயப்படாதே ஷிவ்ராம், நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். முகில்வண்ணன்கிட்டே இருக்கிற அந்த ஐநூறு கோடி ரூபாயை கிட்டத்தட்ட நாம நெருங்கிட்டோம் "

எனக்கு இஷ்மி பர்மானை பார்க்கணும். அவன்கிட்டே நான் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு "

"சரி.... இன்னிக்கு ராத்திரி என்னோட முட்டுக்காடு பங்களாவுக்கு வந்துடு"

"எத்தனை மணிக்கு ..... ? "

"பதினோரு மணிக்கு ..... ட்ரைவர் வேண்டாம். காரை நீயே ஒட்டிட்டு வா.... "

"சரி"

"லேட் பண்ண வேண்டாம்....... " சொன்ன வஜ்ரவேல் செல்போனை மெளனமாக்கி சட்டைப்பையில் சொருகிக்கொண்டு வெளியே வந்தார்.

கமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் முன்பு இருந்த இடத்தில் மெளனமாய் நின்றிருந்தார்கள். ஆதிமுலத்தை ஏறிட்டார் வஜ்ரவேல்.

"முகில்வண்ணனை போய்ப் பார்த்து ரெண்டு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வர்றேன். பாவம் மாப்பிள்ளை மணிமார்பன் அவர்க்கு ஒரு மகன் மாதிரி இருந்தார். பொறாமை பிடிச்சவன் யாரோ போட்டுத் தள்ளிட்டான். மகன் செந்தமிழ் முகில்வண்ணனுக்கு ஒரு படைத்தளபதி மாதிரி இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு ஊசி போட்டு ஹாஸ்பிடல்ல மரக்கட்டை மாதிரி படுக்க வெச்சுட்டானுக. முகில்வண்ணன் ரொம்ப நல்ல மனுஷன். கட்சிக்காக ரொம்பவும் பாடுபட்டிருக்கார். பதவியில் யார் இருந்தாலும் ஊழல் பண்ணத்தான் செய்வாங்க. இவரும் பண்ணினார். ஆனா என்ன எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணிட்டார். 500 கோடி ரூபாய் ஊழல் பண்ற அளவுக்கு முகில்வண்ணன் அவ்வளவு கெட்டிக்காரரும் கிடையாது. மணிமார்பன் கொலை செய்யப்பட்டதுக்கும், செந்தமிழுக்கு ஊசி போட்டு அவனை செயல்படாத நிலைமைக்கு கொண்டு போனதுக்கும் வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணம் என்னான்னு இஷ்மி பர்மானுக்கு மட்டும்தான் தெரியும். அவனையும் யாரோ திட்டம் போட்டு கடத்திகிட்டு போயிட்டாங்க"

ஆதிமுலம் குறுக்கிட்டார். " ஸார் ... இஷ்மி பர்மானை அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே நம்மாலே கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவன் உயிரோடு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை"

"ஏன் அப்படி சொல்றீங்க? "

"எல்லா உண்மைகளும் அவனுக்குத் தெரியும் ஸார். அப்படிப்பட்ட ஒருத்தனை கடத்திட்டு போனவங்க உயிரோடு விடமாட்டாங்க"

வஜ்ரவேல் போலியான கோபத்தோடு தன் இடது கையின் சுட்டுவிரலை உயர்த்தினார்.

"ஆதிமுலம் அந்த இஷ்மி பர்மான் உயிரோடு பிடிபடணும். நீங்க போலீஸ் ஃபோர்ஸை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கலாம். ஆனா எனக்கு வேண்டியது ரிசல்ட்.... அவனை மறுபடியும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரிக்கிற விதத்துல விசாரிச்சு எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வரணும். எஸ்.... ஸார்ன்னு சொல்லிட்டு நாளைக்கு இதே நேரம் எனக்கு முன்னாடி வந்து நின்னு ஸாரி சொல்லக்கூடாது"

"நோ ஸார்......... அடுத்த இருபத்திநாலு மணி நேரத்துக்குள்ளே அந்த இஷ்மி பர்மான் இருக்கிற இடத்தை எப்படியும் கண்டுபிடிச்சு போலீஸ் வளையத்துக்குள்ளே கொண்டு வந்துடுவோம்"

"உங்கமேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நாளைக்குப் பார்ப்போம். நான் இப்ப முகில்வண்ணனைப் பார்த்துட்டு அப்படியே ஃபோர்ட்டுக்கு கிளம்பறேன்"

ஆதிமுலமும், வேல்முருகனும் சல்யூட் அடித்து விறைத்து நிற்க வஜ்ரவேல் தலையசைப்பால் அதை ஏற்றுக்கொண்டு வாசலில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார்.

*****

"அப்பா..... "

குரல் கேட்டு கண்மூடி சோர்வாய் படுத்திருந்த முகில்வண்ணன் விழிகள் திறந்து தலையை உயர்த்தினார்.

மகள் கயல்விழி பார்வைக்குக் கிடைத்தாள். வறண்ட உதடுகளை அசைத்து என்னம்மா ? " என்று ஈனஸ்வரக் குரலில் கேட்டார்.

"சி.எம். உங்களைப் பார்க்க வந்துட்டிருக்கார்ன்னு அவரோட பி.ஏ. போன் பண்ணிச் சொன்னார். அப்படி ஹால்ல வந்து உட்கார்றீங்களா...... ? "

முகில்வண்ணன் பெருமூச்சுவிட்டார். "எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலேம்மா..... சி.எம். வஜ்ரவேல் வந்து ஆறுதல் சொன்னா நம்ம மாப்பிள்ளை உயிரோடு வந்துட்டப் போறாரா என்ன ...... ? "

"வேற யாராவது இருந்தா வராதேன்னு சொல்லிடலாம். ஆனா வர்றது சி.எம்.மாச்சே..... இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே வந்துடுவார். ஹால்ல வந்து உட்காருங்கப்பா...... "

முகில்வண்ணன் மெதுவாய் எழுந்து உட்கார்ந்தார். தாடையில் சொர சொரத்த நான்கு நாள் நரை ரோமத்தை தடவிக்கொண்டே கயல்விழியிடம் கேட்டார்.

"அண்ணி எங்கேம்மா ...... ? "

"இங்கதான் இருக்கேன் மாமா. உங்களுக்காக ஜூஸ் போட்டுகிட்டு இருந்தேன்" சொல்லிக் கொண்டே பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டாள் செந்தமிழின் மனைவி மலர்க்கொடி.

கண்களில் மின்னும் நீரோடு முகில்வண்ணன் மருமகள் மலர்க்கொடியைப் பார்த்தார்.

"எனக்கு எதுக்கும்மா ஜூஸ்...... ? செந்தமிழ் அங்கே ஹாஸ்பிடல்ல ரெண்டு நாளாய் கண்விழிக்காமே படுத்து கிடக்கும்போது என் தொண்டையில தண்ணி இறங்குமா? "

"மாமா...... இந்த வீட்ல இப்ப எனக்கும், கயல்விழிக்கும் இருக்கிற ஒரே ஆதரவு நீங்க மட்டும்தான். நீங்க தைரியத்தோடு இருந்தாத்தான் நானும், கயல்விழியும் எங்களுக்கு நேர்ந்த துக்கத்தை மறந்துட்டு நடமாடிகிட்டு இருப்போம்"

மலர்க்கொடி சொல்லிக்கொண்டிருக்கும்போதே முகில்வண்ணனின் பி.ஏ. அறைக்குள் எட்டிப்பார்த்தார்.

"சி.எம். வந்துட்டார்"

முகில்வண்ணன் எழுந்து தளர்வாய் நடந்து ஹாலுக்குள் நுழையும்போதே முதலமைச்சர் வஜ்ரவேல் காரின்றும் இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

முகில்வண்ணனை நெருங்கியவர் தன்னுடைய இரண்டு கைகளையும் அவருடைய தோள்களின் மீது வைத்தார்.

"என்ன முகில்.......அறுபது வயசானாலும் பார்க்கிறதுக்கு நாப்பது வயசுக்காரன் மாதிரி இருப்பே,,,,,,,, இன்னிக்கு ஏதோ எண்பது வயசு பெரிசு மாதிரி தளர்ந்து போயிட்டே....... இந்த மாதிரி நேரத்துலதான் மனசை இரும்பு மாதிரி வெச்சுக்கணும்...... ! "

"முடியலை வஜ்ரம்...... இந்த குடும்பத்தை தாங்கிப்பிடிச்ச ரெண்டு தூண்கள் இப்ப இல்லை......யார்க்கு என்மேல என்ன கோபம்ன்னு தெரியலை..... அப்படி ஏதாவது கோபம் இருந்தா என்னோட உயிரை அவங்க எடுத்து இருக்கலாம். என்னோட மாப்பிள்ளையையும், மகனையும் ஏன் குறி வைக்கணும் ? "

"கவலைப்படாதே முகில்.... உனக்கு ஒரு எதிரி இருக்கான்னா அவன் எனக்கும் எதிரிதான்..... உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணமாய் இருந்தாலும் சரி, நான் அவங்களை சும்மா விட மாட்டேன். சட்டம் தண்டிக்கிறதுக்கு முன்னாடி நான் அவங்களைத் தண்டிப்பேன்"

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 39
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X