For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன மேடம் சொல்றீங்க.. ராஜேஷ்குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (25)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

“போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க......“ என்று பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகி சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த மிருணாளினி பதட்டம் அடைந்தவளாய் கேட்டாள்.

“என்ன மேடம் சொல்றீங்க... ? “

“உண்மையைச் சொல்லிகிட்டு இருக்கேன். அன்னிக்கு அந்த நீலகண்டனை நீ பள்ளிக்கூட வாசல்ல வெச்சு ஸ்லிப்பரில் அடிச்சதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லைன்னு நீ என்கிட்டே சொன்னே..... ஆனால் அந்த நீலகண்டனுக்கு வேண்டிய ஓரு பொண்ணு பார்த்து இருக்கா. அவ பேரு லலிதா. ஓரு பலான தொழில்காரி... அவ உன்னை நல்லாவே அடையாளம் பார்த்து அந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன்கிட்டே சொல்லியிருக்கா.... அவர் என்கொயரிக்கு வந்துட்டார்...... பட் நான் சமாளிச்சுட்டேன்.... “

“இப்ப என்ன பண்றது மேடம்... ? “

rajesh kumar series five star dhrogam part 25

“நீ கொஞ்ச நாளைக்கு ஸ்கூல் பக்கம் வராதே ! வெளியே எங்கேயாவது போறதாய் இருந்தால் ஹேர்ஸ்டைலையும், ட்ரஸ்கோடையும் மாத்திக்க...... முக்கியமான விஷயமாய் இருந்தால் மட்டும் எனக்கு போன் பண்ணு..... எல்லாத்தையும் காட்டிலும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா... ? “

“ சொல்லுங்க மேடம்“

“உன் செல்போனோடு காண்டாக்ட்ஸில் இருக்கிற எல்லா போன் நெம்பர்களையும் டெலிட் பண்ணிடு. காலரி, வாட்ஸ்அப் மெளஸஞ்சர் இன்பாக்ஸ் எல்லாமே சுத்தமாய் இருக்கட்டும்“

“சரி ... மேடம்...... எல்லாத்தையும் டெலிட் பண்ணிடறேன்“

“நீ எனக்கு போன் பண்ண வேண்டாம். ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா உன்னோட பேஸிக் செல்லுக்கு போன் பண்றேன்“

“மேடம்...... “

“என்ன ... ? “

“எனக்கு பயமாயிருக்கு ... ? “

“எதுக்கு பயம் ... ? “

“டி.வி.யில் மணிமார்பனைப் பத்தின மர்டர் ந்யூஸ் எல்லா சேனல்களிலும் ப்ரேக்கிங் ந்யூஸ்களோடு பரபரப்பா போயிட்டிருக்கு. அவர் கொலை

செய்யப்பட்டதற்கான பின்னணி என்னவாய் இருக்குன்னு பலபேர் பலவிதமாய் சொல்லிட்டு இருக்காங்க....... !“

“இதோ பார் மிருணாளினி..... எந்த ஓரு பரபரப்பான செய்தியாக இருந்தாலும் சரி, எல்லாமே ஓரு மூணு நாளைக்குத்தான்.......! நாளைக்கே ஓரு புது சினிமாப்படம் வரட்டும்...... இந்த மணிமார்பனின் கொலை விவகாரம் மீடியாக்களின் பார்வையிலிருந்து விலகிப்போயிடும்.......! “

“இருந்தாலும் போலீஸோட சந்தேக வளையத்துக்குள்ளே நானும் வந்துட்டேனே ....... மேடம்........ “

“அது நீ பண்ணின தப்பு..... அன்னிக்கு நீலகண்டன் உன்னை பள்ளிக்கூட வாசல்ல வெச்சு பேசும்போது அவனை நீ தவிர்த்து இருக்கணும். அவனைப் பார்க்காமே பள்ளிக்கூடத்து பின் வாசல் வழியாய் போயிருந்தா இப்ப இந்த போலீஸ் விசாரணையை மீட் பண்ணியிருக்க வேண்டியது இல்லை. நான் எவ்வளவோ சொன்னேன். நீ கேட்கலை. மணிமார்பன் மேல உனக்கு இருந்த கோபத்தை நீலகண்டன் மேல காட்டிட்டே...... அதுவும் ஸ்லிப்பரில் அடிச்சு........ “

“நான் அவனை அப்படி அடிச்சதுக்குக் காரணம் அவன் என்கிட்டே பேசின பேச்சுதான் மேடம்........ “

“சரி...சரி........இனிமே அதைப்பத்திப் பேசி எந்த ஓரு பிரயோஜனமும் இல்லை.....போலீஸ் வளையத்துக்குள்ளே இருக்கிற நீ இப்போ...... வெளியே வர்றதுதான் முக்கியம்..... அதுக்கு ஏற்ற மாதிரியான விஷயங்களைத்தான் இனிமேல் நாம் யோசிக்கணும்..... நீ செல்போனை 'கட்' பண்ணிட்டு நார்மலாய் இரு..... முடிஞ்சா ஓரு காரியம் பண்ணு“

“என்ன மேடம்......? “

“உன்னோட கிராமத்துக்குப் போயிடு.... “

“வேண்டாம் மேடம்...... போன வாரம்தான் ஓரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண ஊருக்கு போனேன். நான் இங்கேயே இருக்கேன்..... “

“சரி..... உனக்கு நான் எதையும் சொல்ல வேண்டியது இல்லை. போலீஸ் நம்மைவிட்டு ரொம்ப தூரத்தில் இருக்கிற மாதிரிதான் தெரியும். ஆனா அவங்களுக்கு ஓரு துரும்பளவு சின்ன க்ளூ கிடைச்சாலும் போதும். நம்ம தோள் மேல கையை வெச்சுருவாங்க...... ஏன்னா நம்ம போலீஸ் டிப்பாட்மெண்ட்டைப்பத்தி எனக்கு தெரியும். அவங்களாலே ஓரு குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முடியும். குற்றம் பண்ணின ஓருத்தரை குற்றவாளி இல்லைன்னு சொல்லி அவரைக் காப்பாத்தவும் முடியும்“

“ஐ.....நோ......மேடம்....... மணிமார்பன் எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை. அவர் கொலை செய்யப்படறது சாதாரண விஷயம் இல்லையே.... நம்ம தமிழ்நாட்டு போலீஸ் இந்நேரம் ஓரு ராணுவமாய் மாறியிருக்கும் “

“அது உனக்குப் புரிஞ்சா சரி....... இன்னிக்கு சாயந்தரம் நாலு மணி சுமாருக்கு அந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகனும், நீலகண்டனுக்கு பழக்கமான அந்த லலிதாவும் மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து என்னோட அறையில் இருக்கிற சி.சி.டி.வி. காமிரா யூனிட்டுக்கு முன்னாடி உட்கார்ந்து குழந்தைகளைக் கூட்டிட்டுப்போக வருகிற குழந்தைகளோட அம்மாக்களை மானிட்டரிங் பண்ணப்போறங்க..... எனக்கு அது வீண் வேலைதான். வேற வழியில்லை..... போலீஸூக்குத் தேவையான ஓத்துழைப்பை நாம விரும்பியோ, விரும்பாமலோ கொடுக்க வேண்டியிருக்கு..... முகத்துல எந்த ஓரு சலனத்தையும் காட்டாமே நடிக்க வேண்டியிருக்கு.... எல்லாவற்றுக்கும் மேலாய் போலீஸ் நம்மை விட்டு விலகிப்போகிறவரைக்கும் நாம ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு........ “ சொன்ன தெய்வநாயகி சட்டென்று குரலைத் தாழ்த்தினாள்.

“மிருணாளினி..... ! டீச்சர்ஸ் யாரோ வர்ற மாதிரியிருக்கு. நான் இன்னிக்கு நைட் உனக்கு போன் பண்றேன்...... அதுக்கு முன்னாடி நீ எனக்கு போன் பண்ணாதே....... ! “

“ஓ.கே.மேடம் “

இரண்டு பக்க செல்போன்களும் ஊமையாயின.

முதலமைச்சர் வஜ்ரவேலுவின் அறை. இரவு ஓன்பது மணி.

எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன், அவருடைய மகன் செந்தமிழ் இருவரும் அவர்க்கு முன்பாய் கவலையும், பயமும் உறைந்து போன முகங்களோடு உட்கார்ந்திருக்க, போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் முதலமைச்சர் அருகே குனிந்து பவ்யமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஸாரோட மாப்பிள்ளையைக் கொலை செய்யும் அளவுக்கு நீலகண்டனுக்கும், அவருக்கும் எதுமாதிரியான பகை இருந்திருக்கும்ன்னு தெரியலை ஸார். இன்வெஸ்டிகேஷன் போயிட்டிருக்கு. எப்படியும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுடலாம் ஸார்..... “

முகில்வண்ணன் கோபத்தோடு குறுக்கிட்டார்.

“கமிஷனர் ஆரம்பத்தில் இருந்தே தப்பாய் பேசிட்டிருக்கார். என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட வேற ஏதோ ஓரு பெரிய காரணம் இருக்கு.... வாட்டர்கேன் லாரியை ஓட்டற நீலகண்டனுக்கும், என்னோட மாப்பிள்ளைக்கும் பெரிசா எதுமாதிரியான பகை இருக்க வாய்ப்பு இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாய் இப்போ நீலகண்டன் உயிரோடு இல்லை. அவன் உயிரோடு இருந்தா என்னிக்காவது உண்மை வெளியே வந்துடும் என்கிற பயத்துல அவனோட கதையையும் முடிச்சுட்டாங்க..... “

முதலமைச்சர் வஜ்ரவேலு எல்லாவற்றையும் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மெல்ல பேச ஆரம்பித்தார்.

“முகில்...... ! நீ நம்ம கட்சியை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கே..... அந்த கஷ்டத்துல உண்மையான தியாகம் இருந்த காரணத்தால உன்னை ரெண்டு தடவை சி.எம்.மாய் தேர்ந்து எடுத்து அழகு பார்த்தது. அந்தச்சமயத்துல கூட உன்மேல யார்க்கும் பொறாமையோ, கோபமோ இருந்தது இல்லை. ஆனா இன்னிக்கு நிலவரப்படிப் பார்த்தா நீ சி.எம். கிடையாது. கட்சியிலும் ஓரு பெரிய பதவி கிடையாது. இப்படிப்பட்ட நிலைமையில் உன் பேரிலும், உன் குடும்பத்து பேரிலும் யார்க்கு என்ன பகை இருக்க முடியும்... ? கொஞ்சம் நிதானமாய் யோசனை பண்ணு..... “

கண்களில் மின்னும் நீரோடு முதலமைச்சர் வஜ்ரவேலுவை ஏறிட்டார் முகில்வண்ணன்.

“வஜ்ரவேலு இப்ப உன்கிட்டே ஓரு உண்மையைச் சொல்லட்டுமா?“

“என்ன ... ? “

“ இப்ப சட்டசபையில் நம்ம ஆளும்கட்சியும், எதிர் கட்சியும் கிட்டத்தட்ட சம பலத்தோடு இருக்கு.... நம்ம கட்சியில் இருந்து ஓரு

இரண்டு பேர் அந்தப்பக்கம் போனாலே போதும் ஆட்சி ஆட்டம் கண்டிரும். இந்த உண்மை எல்லார்க்கும் தெரியும். கட்சித் தலைமை உன்னை முதலமைச்சராய் தேர்ந்து எடுத்தபோது எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் என்னோட மாப்பிள்ளை மணிமார்பனை ஓரு ரகசியமான இடத்தில் வெச்சு தனியாய் சந்திச்சு, உன்னோட மாமனாரையே மறுபடியும் முதலமைச்சர் சீட்ல உட்கார வெச்சு அழகு பார்க்க நாங்க தயார். உங்க கட்சியிலிருந்து ஓரு இரண்டு பேர் கட்சி மாறணும்ன்னு சொல்லியிருக்கார்“

வஜ்ரவேலு நிமிர்ந்து உட்கார்ந்தார். “ அட ..... இது புது செய்தியாய் இருக்கே.... மேற்கொண்டு என்ன நடந்தது முகில்...... ? “

“ என்ன நடந்து இருக்கும்ன்னு நினைக்கிறே வஜ்ரம் ...... ? “

“மணிமார்பன் எதிர் கட்சித்தலைவர் அறிவரசனை கடுமையான வார்த்தைகளால் பேசிட்டாரா ...... ? “

“அப்படி ஏதாவது பேசியிருந்தா கூட பரவாயில்லை“

“அப்புறம்...... ? “

“வாய்ல..... போட்டு மென்னுகிட்டு இருந்த பீடாவை அறிவரசன் மூஞ்சி மேலேயே ரத்தம் தெறிச்ச மாதிரி துப்பிட்டு வந்திருக்கார்

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 25
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X