For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வஜ்ரம்...... நீதான் எனக்கு இப்போ ஒரே துணை.. பைவ் ஸ்டார் துரோகம் (40)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

முதலமைச்சர் வஜ்ரவேல் பேசப்பேச முகில்வண்ணனுக்கு தொண்டையடைத்துக் கொண்டு கண்களில் நீர் பளபளத்தது.

"வஜ்ரம்...... நான் அரசியல்வாதியாக இருந்து பணம் சம்பாதிக்கிறதுக்காக நிறைய ஊழல் பண்ணியிருக்கேன். ஆனா யாரோட குடும்பத்தையும் எப்பவும் கெடுத்தது இல்லை. கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்கேன். ஆனா யாரையும் ரத்தக்காயம் ஏற்படற அளவுக்கு அடிச்சதுகூட இல்லை.ரெண்டு மூணு கட்சி மாறியிருக்கேன். ஆனா யார் கூடவும் விரோதம் இல்லை. என் குடும்பத்து மேல யார்க்கு என்ன கோபம்ன்னு தெரியலை. மருமகன் மணிமார்பனோட காரியம் கூட இன்னும் முடியலை. என் மகன் செந்தமிழ் சுய உணர்வு இல்லாமலேயே உயிர்க்குப் போராடிகிட்டு இருக்கான்....."

முதலமைச்சர் வஜ்ரவேல் தன்னுடைய முகத்துக்கு சோக கவசத்தை மாட்டிக்கொண்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

rajesh kumar series five star dhrogam

"இதோ பார் முகில்.... உன்னைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு மத்தவங்களை மிரட்டத் தெரியும். ஆனா பழி வாங்கத் தெரியாது. ஆனா உன்னோட குடும்பத்தை ஒருத்தன் பழி வாங்கறான்னா அதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கும். கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு. உனக்கு யார் மேலாவது சந்தேகம் இருந்தா சொல்லு. தனிப்பட்ட முறையில் தூக்கிட்டுவந்து தட்டிப்பார்த்துடலாம்"

முகில்வண்ணனின் குரல் அழுகையில் கம்மியது. "அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே வஜ்ரம்"

"கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு" என்று சொன்னவர் முகில்வண்ணனின் மகள் கயல்விழியையும், மருமகள் மலர்க்கொடியையும் திரும்பிப் பார்த்தார்.

"நீங்களாவது சொல்லுங்கம்மா..... அப்பாகிட்டே முரட்டுத்தனம் இருந்தாலும் அவர் ஒரு குழந்தை மாதிரி. எல்லாரையும் சகட்டுமேனிக்கு நம்பிட்டு கடைசியில் ஏமாந்து போகிற ரகம்"

கயல்விழி சேலைத்தலைப்பை வாயில் பொத்திக்கொண்டு விம்மினாள். "அய்யா....... நாங்க இன்னமும் எல்லாரையும் நல்லவங்கன்னு நினைச்சுத்தான் பழகிட்டிருக்கோம். யாரையுமே சந்தேகத்தோடு பார்க்க முடியலை. அப்பாகிட்டே பல வருஷ காலமாய் விசுவாசத்தோடு இருந்த கஜபதி அங்கிள் தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போனதாய் தகவல் வந்த போது அப்படியே ஆடிப்போயிட்டோம். ஏன்னா கஜபதி அங்கிள் தற்கொலை பண்ணிகிற அளவுக்கு கோழையில்லை..... "

"அப்படீன்னா அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்ன்னு சொல்ல வர்றீயாம்மா ? "

"கண்டிப்பாய் அப்படித்தான் நடந்து இருக்கும்"

"ஒண்ணும் கவலைப்படாதேம்மா....... நான் இங்கே வர்றதுக்கு முந்தி டி.ஜி.பி.கிட்டே பேசிட்டு வந்திருக்கேன். அவர் ரொம்பவும் கெட்டிக்காரர். எப்படிப்பட்ட கேஸையும் சாமரர்த்தியமான முறையில் இன்வெஸ்டிகேட் பண்ணி குற்றவாளியை கண்டுபிடிக்கக்கூடியவர்"

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் சற்றுத்தள்ளி நின்றிருந்த மலர்க்கொடி ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தாள்.

"அய்யா"

"சொல்லும்மா "

"அவர் திரிசூலம் ஹாஸ்பிடல்ல சுய உணர்வு இல்லாமே மூச்சு பேச்சு இல்லாமே மூணு நாளாய் கிடக்கிறார். ஹாஸ்பிடலுக்கு போனா என்னைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டேங்கிறாங்க......நான் அவர்க்குப் பக்கத்துல இருந்து பார்த்துக்க ஆசைப்படறேன். நீங்கதான் ஏற்பாடு பண்ணனும்...... "

"உன்னோட மனசு படற பாட்டை என்னால புரிஞ்சுக்க முடியுதும்மா..... இருந்தாலும் இந்த குடும்பத்துக்கு வெளியே இருந்து பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதால நீங்க யாருமே வீட்டை விட்டு வெளியே போகாமே இருக்கிறது ரொம்பவும் நல்லது. நான் அந்த திரிசூலம் ஹாஸ்பிடல் டாக்டர்கிட்டே ஒரு நாளைக்கு மூணுதடவையாவது பேசி செந்தமிழ் உடல்நிலைபற்றி கேட்டு தெரிஞ்சுக்கிட்டு எக்ஸ்பர்ட் டாக்டர்ஸை வெச்சு ட்ரீட்மெண்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்ம்மா. நீ கவலைப்படாதேம்மா. செந்தமிழ் உன்னோட அப்பாவுக்கு மட்டும் மகன் இல்லை. எனக்கும் மகன் மாதிரிதான். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. செந்தமிழை பழைய ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு"

வஜ்ரவேல் வார்த்தைகளுக்கு இனிப்பு கோட்டிங் அடித்து பேசிக்கொண்டு இருக்க முகில்வண்ணன் உணர்ச்சிவசப்பட்டு அவருடைய கைகளைப்பற்றிக் கொண்டார்.

rajesh kumar series five star dhrogam

"வஜ்ரம்...... நீதான் எனக்கு இப்போ ஒரே துணை. எங்க எல்லாரையும் நீதான் காப்பாத்தணும்"

"ஒண்ணும் கவலைப்படாதே முகில். எல்லாத்தையும் நான் பார்த்து என்ன செய்யணுமோ அதை செஞ்சு முடிச்சுடறேன்" ஒரு சின்னப் புன்னகையுடன் முகில்வண்ணனின் தோளைத் தட்டிக் கொடுத்தார் முதலமைச்சர் வஜ்ரவேல். "நான் புறப்படறேன். நீ மொதல்ல உடம்பைப் பார்த்துக்கோ..... ரெண்டு நாள் கழிச்சு வர்றேன். ஏதாவது உதவி தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணு"

குரலுக்கும், முகத்துக்கும் ஒரு செயற்கையான புன்னகை பூச்சைக் கொடுத்தபடி வெளியேறினார் வஜ்ரவேல்.

---

இரவு பதினோரு மணி

முட்டுக்காடு பகுதி முழுவதும் இருட்டு சீராய் பரவியிருக்க, வானத்தில் பாதி நிலா ஒளி மங்கியிருந்தது. அடர்ந்த சவுக்குமரத் தோப்புக்குள் சோகையான வெளிச்சத்தோடு ஒரு பங்களா உயரமான காம்பெளண்ட் சுவர்களோடும், பிரம்மாண்டமான இரும்பு கேட்டோடும் தெரிந்தது.

தன்னுடைய ஸ்கோடா கறுப்புக்காரை காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் நிறுத்திய ஷிவ்ராம் தத்தாத்ரேயா சின்னதாய் ஒரே ஒரு முறை ஹார்ன் கொடுத்தார்.

அடுத்த சில விநாடிகளில் -

காம்பெளண்ட் கேட்டின் ஒரு பக்கக் கதவு மட்டும் திறந்து வழி கொடுக்க கார் உள்ளே நுழைந்து ஓடி 50 மீட்டர் தள்ளி இருந்த போர்டிகோவில் போய் நின்றது. இருட்டான இடது பக்கத்திலிருந்து செக்யூர்டி ஆள் ஒருவர் வேகவேகமாய் காரை நோக்கி வந்தார். காரினின்றும் இறங்கிக் கொண்டிருந்த ஷிவ்ராம் தத்தாத்ரேயுக்கு சல்யூட் ஒன்றை கொடுத்துவிட்டு தளர்ந்தார்.

"ஸார்"

"சி.எம். எந்த ரூம்ல இருக்கார்.....? "

"செக்கண்ட் ஃபுளோர்ல ஃபர்ஸ்ட் ரூம் ஸார். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கார் ஸார்"

தத்தாத்ரேயாவுக்கு அது பழக்கமான இடம் என்பதால் தயக்கமின்றி வேகவேகமாய் நடந்து எதிர்பட்ட மாடியின் படிகளில் ஏறி இரண்டாவது தளத்தைத் தொட்டு வராந்தாவில் நடை போட்டு முதலாவதாக வந்த அறைக்கு முன்பாய் நின்று லேசாய் சாத்தப்பட்டு இருந்த கதவுக்கு முன்பாய் நின்று அதைத் தள்ளினார்.

கதவு விரிய உள்ளே சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி வஜ்ரவேல் தெரிந்தார். கையில் வைத்து இருந்த புனல் வடிவ கண்ணாடி டம்ளரில் ஃபாரின் ஸ்காட்ச் பொன்னிறமாய் பளபளத்து அசைந்தது. டீபாயின் மேல் இருந்த ஒரு பீங்கான் தட்டில் மிளகுத்தூள் தூவப்பட்ட முந்திரிபருப்பு இன்னொரு தட்டில் க்ரில் சிக்கன் கருஞ்சிவப்பு நிறத்தோடு மல்லாந்திருந்தது.

கடைவாய்ப்பல் தெரிய சிரித்தார் வஜ்ரவேல்.

"வாய்யா...... ஷிவ்ராம் "

தத்தாத்ரேயா எதிரில் போய் உட்கார்ந்தார். முகத்தில் கோபம் தெறித்தது. "என்ன வஜ்ரம்......நாம எப்பேர்ப்பட்ட நிலைமையில் இருக்கோம்ன்னு தெரிஞ்ச பின்னாடியும் ஏதோ நாளைக்கு தீபாவளி என்கிற மாதிரி இவ்வளவு சந்தோஷமாய் இருக்கே......? "

"நீ மொதல்ல ஒரு ஸ்மால் அடி..... அப்புறம் ஒரு லார்ஜ் அடி. எல்லாம் சரியாய் போயிட்டு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வந்துடும்...... "

"ஸாரி வஜ்ரம்...... எனக்கு இப்ப இதையெல்லாம் சாப்பிடற மூடு இல்லை..... எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு"

"எதுக்கு பயம் ......? "

இஷ்மி பர்மான் போலீஸ்கிட்டே எது மாதிரியான வாக்குமூலத்தைக் கொடுத்து இருக்கான்னு எனக்குத் தெரியணும்...... ! "

புனல் டம்ளரில் இருந்த ஒட்டுமொத்த ஸ்காட்ச்சையும் தொண்டைக்குள் சரித்துக்கொண்டே வஜ்ரவேலு ஒரு கோணல் சிரிப்பு சிரித்தார்.

"இதோ பார் ஷிவ்ராம் I அந்த இஷ்மி பர்மான் உன்னோட பேரைப் போலீஸ்ல சொன்னதை நினைச்சு ஒரு சதவீதம் கூட கவலைப்படாதே. இப்போதைக்கு அந்த விஷயம் போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்துக்கும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் இல்லாமே முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் கொலைக்கும், செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசி போட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதுக்கும் நீதான் காரணம்ன்னு அவன் சொல்லலை. நீ சொன்ன சில வேலைகள் முடிக்கத்தான் சென்னை வந்தேன்னு மட்டும் சொல்லியிருக்கான்"

"அந்த ஒரு வாக்கியம் போதாதா என்ன ......? "

வஜ்ரவேல் மறுபடியும் டம்ளரில் ஒரு ஸ்மால் ஊற்றிக்கொண்டே சொன்னார்.

" ஷிவ்ராம்..... நீ சட்டம் படிச்சிருக்கே. ஆன நான் அந்த சட்டத்தையே உடைச்சவன். எது மாதிரியான தப்பு பண்ணினாலும் சரி, அதிலிருந்து தப்பிச்சுட்டு வர்றதுக்கான வழி என்னை மாதிரி அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் தெரியும். முகில்வண்ணனோட ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒழித்துக்கட்டி அந்த 500 கோடி ரூபாயை எடுக்கற முயற்சியில் நாம ஜெயிச்சதும் கொலைப்பழி முழுவதையும் சுமந்துகிட்டு ஜெயிலுக்குப் போகப் போகிறவள் அந்த மிருணாளினிதான்"

" அவதான் தலைமறைவாயிட்டாளே......? "

எத்தனை நாளைக்குத்தான் தலைமறைவாய் இருக்க முடியும். என்னோட ஆட்கள் மும்முரமாய் தேடிகிட்டு இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே கண்டுபிடிச்சுடுவாங்க..... அவ கைக்குக் கிடைச்சதும் என்னோட அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இன்னும் நம்ம கையில் நாலு வருஷ ஆட்சி இருக்கு..... இந்த நாலு வருஷத்துல நானூறு வேலைகள் பண்ணலாம்...... ! "

"வஜ்ரம்...... நீ என்னதான் தைரியம் சொன்னாலும் மனசுக்குள்ளே ஒரு குதிரை நொண்டிகிட்டே இருக்கு...... நான் இஷ்மி பர்மானை பார்க்கணும். பேசணும். அவன் போலீஸ்ல என்னதான் சொன்னான்னு தெரிஞ்சுக்கணும்.... அதுக்கப்புறம்தான் நான் இயல்பான நிலைமைக்கு வர முடியும்"

"அவன் இன்னும் மயக்கம் தெளிஞ்சு சுய உணர்வுக்கு வரலை. வந்ததும் பேசிடலாம். கீழே செல்லர் ரூம்லதான் இருக்கான். போலீஸ் அடி அவனோட முதுகுத்தண்டுவடத்தை நல்லாவே பதம் பாத்திருக்கு. நம்ம ஃபேமிலி டாக்டர்தான் பாத்துட்டிருக்கார். இஷ்மி பர்மான் பேசற நிலைமைக்கு வந்ததும் டாக்டரே எனக்கு போன் பண்ணுவார். நீ மொதல்ல ஒரு ஸ்மால் அடி ஷிவ்ராம். உன் மனசுக்குள்ளே இருக்கிற அந்த சின்ன பயமும் காணாமே போயிடும்" வஜ்ரவேல் சொல்லிக்கொண்டே ஒரு சின்ன கண்ணாடி குடுவை போல் இருந்த ஸ்காட்ச் பாட்டிலை நகர்த்தி வைத்தார். அதே விநாடி அவருடைய செல்போனும் வாயைத் திறந்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். முகில்வண்ணனின் செல் நெம்பர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது. காதுக்கு ஒற்றி குரல் கொடுத்தார்.

"சொல்லு முகில்"

"அய்யா, நான் அவரோட பொண்ணு கயல்விழி"

"சொல்லும்மா.... என்ன விஷயம்..... அப்பாவுக்கு ஏதாவது உடம்பு பிரச்சினையா...... ? "

"இல்லீங்கய்யா..... அப்பாவுக்கு சென்னையில் இருக்க பிடிக்கலை. சொந்த கிராமத்துக்கு போய் தங்கியிருக்கலாம்ன்னு சொல்றார். நாளைக்கு காலையில் புறப்படறோம். கிராமம் போய் சேர்கிறவரைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேணும். அதான் போன் பண்ணினேன்"

"போலீஸ் பாதுகாப்புதானே.... நான் உடனே ஏற்பாடு பண்றேன். காலையில் எத்தனை மணிக்கு புறப்படறீங்கம்மா...... ? "

"ஆறு மணிக்கு"

"ஐந்து மணிக்கு வீட்ல போலீஸ் இருப்பாங்கம்மா"

"ரொம்பவும் நன்றிங்கய்யா"

"என்னம்மா நன்றியெல்லாம் சொல்லிட்டு ? உன்னோட அப்பா எனக்கு கூடப் பொறந்த பொறப்பு மாதிரி. கிராமத்துக்கு போனதும் அப்பாவை நல்லபடியாய் பாரத்துக்கம்மா. முடிஞ்சா நானும் வந்து பார்க்கிறேன்" பேசிவிட்டு செல்போனை அணைத்த வஜ்ரவேல் ஷிவ்ராமை ஒரு புன்னகையோடு பார்த்தார்.

"ஷிவ்ராம்"

"சொல்லு"

"சிங்கத்தைப் பிடிக்க கூண்டு வெச்சோம். இப்ப உள்ளே ரெண்டு புள்ளிமானும் மாட்டும் போலிருக்கு...... !

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 40
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X