For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பேசுறது யாரு...?".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (64)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஜோன்ஸின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டதும் அழைப்பது யாரென்று டிஸ்ப்ளேயில் பார்த்தாள் வளர்மதி.

பெயர் இல்லாமல் ஒரு எண் மட்டும் ட்ரூ காலரில் தெரிந்தது. வளர்மதி ஐந்து விநாடி நேரம் யோசித்துவிட்டு செல்போனை தன் இடது காதுக்குப் பொத்தினாள். பேசுவது யாரென்று தெரிந்து கொள்வதற்காக மெளனம் காக்க, மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது. சற்றே பதட்டம் நிரம்பிய குரல்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 64

” பேசுறது யாரு..... ஜோன்ஸா...... ? ”

வளர்மதி எச்சரிக்கையோடு ஜோன்ஸின் குரலையும், அவன் சற்றுமுன் வரை பேசிக்கொண்டிருந்த குரல் மாடுலேஷனையும் மூளையின் மையத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு கனைத்தாள். சற்று சிரமப்பட்டு ஆண் குரலுக்கு மாறி, அதில் தூக்கக் கலக்கத்தையும் கலந்து கொண்டு கரகரப்பாய் பேசினாள்.

”நான் ஜோன்ஸ்தான்..... நீ.... நீ.....நீங்க யாரு...... ? ”

” ஸாரி ஜோன்ஸ்.... நீங்க நல்லாத் தூங்கிட்டிருந்தீங்க போலிருக்கு. டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஒரு முக்கியமான விஷயத்தை தெரியப்படுத்த வேண்டியிருந்ததால நீங்க என்னிக்கோ பேப்பர்ல எழுதி என்கிட்ட கொடுத்த உங்க செல்போன் நெம்பரை தேடி எடுத்து போன் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப நாளானதால என்னோட குரல் உங்களுக்கு அடையாளம் தெரியலை போலிருக்கு..... நான் செம்மேடு கிராமத்துல வி.ஒ.வாய் இருந்த ஞானமூர்த்தி.... இப்போ ரிடையர்ட் ஆயிட்டேன் ”

வளர்மதி இன்னமும் எச்சரிக்கையோடு ஜோன்ஸின் குரலை சிரமப்பட்டு தொண்டைக்குக் கொடுத்துப் பேசினாள்.

எ.....எ.....என்ன விஷயம் ...... ? ”

” ஈஸ்வர் அய்யாகிட்டே ஒரு விஷயத்தை உடனடியாய் கொண்டு போய் சேர்க்கணும் ”

” என்னான்னு சொல்லுங்க ”

” கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னோட வீட்டுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வந்து இருந்தார். செம்மேடு கிராமத்தை ஒட்டியிருக்கிற காட்டுப் பகுதியை ஆக்ரமிச்சு ஃபார்ம் ஹவுஸ் கட்டின ஈஸ்வர் அய்யாவைப் பத்தி விசாரிச்சார். நான் மொதல்ல ஈஸ்வர் என்கிற பேர்ல எனக்கு யாரையுமே தெரியாதுன்னு சொன்னேன். ஆனா அந்த இன்ஸ்பெக்டர் ஒரு வலுவான ஆதாரத்தை வெச்சு நான் சொல்றது பொய்ன்னு கண்டுபிடிச்சுட்டார். நான் ரொம்ப நேரத்துக்கு உண்மையை மறைக்க முடியலை. ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை ஈஸ்வர் அய்யாவோட பினாமிக்கு பட்டா பண்ணிக் குடுத்ததை என்னால சொல்லாமே இருக்க முடியலை. சொல்லிட்டேன். மேற்கொண்டு என்ன பிரச்சினை வந்தாலும் என்னை மாட்டிவிட வேண்டாம்ன்னு அய்யாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க...... இந்த வயசான காலத்துல என்னை ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க ஜோன்ஸ் ”

” ம்....சரி..... நான் அய்யாகிட்டே சொல்லி வேண்டிய ஏற்பாடுகளை பண்ணிடறேன் ”

” ரொம்ப நன்றி ஜோன்ஸ்..... அய்யாகிட்டே மறக்காமே சொல்லிடுங்க. விடியதுக்குள்ளே போலீஸோட வாயைச் சாத்தணும்..... மீடியாக்காரங்க மோப்பம் பிடிச்சுட்டாங்கன்னா நாளைக்குப் பூராவும் பிரேக்கிங் நியூஸா போட்டு என்னிக்கோ நாம புதைச்சு வெச்ச உண்மைகளையெல்லாம் வெளியே கொண்டு வந்துடுவாங்க ”

” நான் பார்த்துக்கிறேன் ” வளர்மதி சொல்போனை அணைத்துவிட்டு சற்று தூரத்தில் இருட்டின் அடர்த்தியில் ஒரு அவுட்லைன் மாதிரி நின்றிருந்த ஜான்மில்லரை நோக்கிப் போனாள். கையில் ஜெல்புல்லட் பிஸ்டலோடு பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டு பேசினாள்.

” டாக்டர்...... இப்போது சற்று நேரத்துக்கு முன்பு ஜோன்ஸின் செல்போனிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பேசிய நபர் தன்னுடைய பெயரை ஞானமூர்த்தி என்று சொன்னார். அவர் செம்மேடு கிராமத்தின் முன்னாள் வி.ஒ.வாக பணிபுரிந்தவர். அவரை உங்களுக்கு தெரியுமா ...... ? ”

ஜான்மில்லர் குரலைத் தாழ்த்தினார்.

” பெயர் என்ன சொன்னீர்கள்..... ஞானமூர்த்தியா ...... ? ”

” ஆமாம் ”

” அப்படி யாரையும் எனக்குத் தெரியாது ”

” பொய் சொல்லாதீர்கள் ”

” இனிமேல் நான் பொய் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போதைய என்னுடைய ஒரே நோக்கம் என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சொந்த நாட்டுக்குச் செல்வதுதான். ஜோன்ஸிடம் இரண்டு போன்கள் இருக்கும். ஒன்று அவனுடைய உபயோகத்திற்காக வைத்துக்கொண்ட ஒரு சாதாரண ஆண்ட்ராய்ட் போன். இன்னொன்று

இரிடியம் போன். அந்த நபரின் அழைப்பு எந்தப் போனில் வந்தது...... ? ”

வளர்மதி தன்னுடைய கைகளில் வைத்திருந்த செல்போன்களில் ஒன்றை எடுத்து அதை வெளிச்சப்படுத்திக் காட்ட ஜான்மில்லர் பார்த்துவிட்டு ” இது ஜோன்ஸின் ஆண்ட்ராய்ட் போன். அவனிடம் இருந்த இன்னொரு போனான இரிடியம் போனுக்கு ஈஸ்வர், தீபக் என்னைத்தவிர வேறு யாரும் தொடர்பு கொள்ள முடியாது ”

சில விநாடிகள் மெளனம் சாதித்த வளர்மதி செல்போனின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு மெதுவான குரலில் பேச ஆரம்பித்தாள்.

” டாக்டர்..... நான் உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. இப்படி நாம் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தால் ஃபார்ம் ஹவுஸீக்குள் சுற்றிக் கொண்டிருக்கிற மற்ற நாய்களும் நம்மை மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிடும். அவைகளிடமிருந்து நாம் தப்புவது என்பது முடியாத விஷயம். லேப்பிற்குள் போய்விடுவதுதான் நமக்கு பாதுகாப்பு. நீங்கள் முன்னால் சொல்லுங்கள் ”

ஜான்மில்லர் தலையாட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தார். வளர்மதி சுற்றும் முற்றும் பார்த்தபடி எச்சரிக்கையோடு பின்தொடர்ந்தாள்.

******

மேலும் ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்டு தூங்க முயற்சித்துக் கொண்டிருந்த ஹரியை அவனுடைய செல்போன் உசுப்பி எழ வைத்தது. கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.

மணி 3.15

ஹரி பதட்டத்தோடு செல்போனை எடுத்து காதுக்கு வைத்தான்.

மறுமுனையில் செவன்த் சென்ஸ் ஏஜென்ஸி டிடெக்டீவைச் சேர்ந்த பண்டரிநாத் பேசினார்.

” ஸார்.... நானும் சுனிலும் இப்போ ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கோம் ”

” என்ன பண்டரிநாத்... வளர்மதி பற்றின தகவல் ஏதாவது கிடைச்சுதா...... ? ”

” ஸாரி ஸார் மேடம் பற்றின தகவல் ஏதும் கிடைக்கலை ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் கொஞ்ச நேரத்துக்கு முந்தி செம்மேடு கிராமத்துக்குள்ளே போய் ஞானமூர்த்தி என்கிற ரிடையர்ட் வி.ஒ. ஆபீஸர் ஒருத்தரை விசாரிச்சுட்டு வந்திருக்கார் ”

” அந்த வி.ஒ. என்ன சொன்னார் ...... ? ”

” தெரியலை ஸார் ”

” இன்ஸ்பெக்டர்கிட்டே கேட்டீங்களா ...... ? ”

” கேட்டேன் ஸார்.... ஆனா ப்ராப்பரா அவர் எங்களுக்கு எந்த ஆன்ஸரும் பண்ணலை ”

” இன்ஸ்பெக்டர் குணசேகரன் பக்கத்துல இருக்காரா ...... ? ”

” ஸ்டேஷனுக்குள்ளே கண்ட்ரோல் கேபினுக்குள்ளே இருக்கார் ஸார் ”

” உங்க செல்போனை அவர்கிட்டே கொடுங்க நான் பேசறேன் ”

” இதோ தர்றேன் ஸார் ”

ஹரி கையில் செல்போனை வைத்துக்கொண்டு நிலை கொள்ளாமல் காத்திருக்க ஒரு நிமிஷம் கழித்து இன்ஸ்பெக்டர் குணசேகரனின் குரல் கேட்டது.

” சொல்லுங்க மிஸ்டர் ஹரி ”

” நீங்கதான் சொல்லணும் இன்ஸ்பெக்டர்.... என்னோட ஒய்ஃப் வளர்மதியைப் பற்றின தகவல் ஏதாவது கிடைச்சுதா ...... ? ”

” இன்னும் இல்லை.....வீ ஆர் ட்ரையிங். நாம சந்தேகப்படற ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸ் செம்மேடு கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் இருக்கிறதாய் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தகவல் கிடைச்சுது ”

” போய் பார்க்க வேண்டியதுதானே ...... ? ”

” அப்படியெல்லாம் போய் உடனடியாய் பார்த்துட முடியாது ஹரி. சில ஃபார்மாலிடீஸையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு ? ”

” என்ன பெரிய ஃபார்மாலிடீஸ்..... ? உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இன்ஃபார்மராய் இருந்து கடந்த ரெண்டு வருஷ காலமாய் உதவி பண்ணிட்டிருந்த என்னோட மனைவியை யாரோ கடத்திட்டுப் போயிருக்காங்க. இந்த நிலைமையில் உங்க டிபார்ட்மெண்ட் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இந்நேரம் அவளை மீட்டிருக்க வேண்டாமா ...... ? ”

” மிஸ்டரி ஹரி.... நிலைமை புரியாமே பேசாதீங்க. போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தாலும் அவங்க மேல எனக்கு இருந்த மரியாதை காரணமாய் உங்க மனைவி வளர்மதி காணாமே போன விஷயத்துல கூடுதல் கவனம் செலுத்தி இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணிட்டிருக்கேன். வளர்மதியைக் கடத்திட்டு போனது பிரபல தொழில் அதிபரும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவருமான ஈஸ்வராகத்தான் இருக்கணும்ன்னு திரிபுரசுந்தரி மேடம் சொன்னாங்க. அந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிச்சபோது ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸ் ஒண்ணு அவரோட பினாமி பேர்ல செம்மேட்டில் இருக்கிறது உறுதியாயிடுச்சு. அந்த ஃபார்ம் ஹவுஸூக்குப் போய் அங்கே இருக்கிற ஆட்களை என்கொயர் பண்ணனும்ன்னா கையில் சர்ச் வாரண்ட் இருக்கணும். ஈஸ்வர் ஒரு சாதாரண நபராய் இருந்தா சர்ச் வாரண்ட் இல்லாமலே போய் என்னால் விசாரிக்க முடியும். அவர் ஒரு பிக் ஷாட்டாய் இருக்கிறதாலத்தான் இந்தப்பிரச்சினை... அதுவுமில்லாமே மேடம் திரிபுரசுந்தரிக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்தி திடீர்ன்னு பி.பி. ”சூட் அப்”பாகி மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க. ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இன்னமும் சுயஉணர்வுக்கு திரும்பாத நிலையில் இருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையில் என்னால எதுமாதிரியான நடவடிக்கை எடுத்து உங்க மனைவி வளர்மதியை மீட்க முடியும்ன்னு நினைக்கிறீங்க ...... ? ”

ஹரி அதிர்ந்து போய் சில விநாடிகள் மெளனமாக இருந்துவிட்டு கேட்டான்.

” மேடம் இப்ப எந்த ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியிருக்காங்க? ”

” பாலாஜி நர்ஸிங் ஹோம். மேடம் சுயஉணர்வுக்கு வந்து அவங்க என்ன இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுக்கிறாங்களோ அதன்படிதான் என்னால நடக்க முடியும்”

” நீங்க போலீஸ் ஹை அஃபிஷியல்ஸோடு இதுபற்றி பேச முடியாதா ...... ? ”

” என்னோட போஸ்ட்டுக்கு அஸிஸ்டண்ட் கமிஷனர் அன்பரசன்தான் ஹை அஃபிஷியல். நான் அவர்க்கு போன் பண்ணினேன் ”

” என்ன சொன்னார் ...... ? ”

” அவர் என்னோட போனை அட்டெண்ட் பண்ணினால்தானே நான் பேச முடியும் ...... ? ”

” இன்ஸ்பெக்டர்.... நீங்க பொறுப்பாய் பேசற மாதிரி எனக்குத் தெரியலை ”

” வெரி ஸாரி மிஸ்டர் ஹரி... ஐ அக்ரி வித் யுவர் வேர்ட்ஸ்..... உங்க மனைவி வளர்மதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இருக்கு. ஆனா ஆட்கள்தான் சரியில்லை.... அயாம் ஹெல்ப்ல்ஸ். என்னால எதுவும் செய்ய முடியாது ”

ஹரி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு அழுகையில் கம்மிப்போன குரலோடு கேட்டான்.

” இப்ப என்ன செய்யலாம் இன்ஸ்பெக்டர்....... ? ”

குணசேகரன் தளர்ந்துபோன குரலில் சொன்னார்.

” விடிகிறவரைக்கும் பொறுமையாய் இருப்போம் ”

ஹரி எரிச்சலோடும் கோபத்தோடும் கத்தினான்.

” அதுக்குள்ளே வளர்மதிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா ....... ? ”

” இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது மிஸ்டர் ஹரி ” சொன்ன குணசேகரன் மறுமுனையில் செல்போனை அணைத்தார்.

******

இருட்டில் நடந்து கொண்டிருந்த ஜான்மில்லர் லாப்ரட்ரியை நெருங்கி அதனுடைய உலோகக் கதவுக்கு முன்பாய் நின்றார்.

வளர்மதியின் குரல் அவர்க்குப் பின்புறத்திலிருந்து கேட்டது. ” இந்த லேப்புக்குள்ளேதான் சில்பாவும் நர்மதாவும் இருக்கிறார்களா டாக்டர் ....... ? ”

” ஆமாம் ”

” கதவை அன்லாக் செய்யுங்கள் ”

ஜான்மில்லர் தன்னிடம் இருந்த மேக்னடிக் சாவியைப் பயன்படுத்தி லேப்பின் ஸ்டீல் கதவை திறக்க முயன்றார். ஒரு நிமிஷ நேரம் முயன்றும் முடியாமல் போகவே பின்பக்கம் திரும்பி குரல் கொடுத்தார்.

” லாக் சிஸ்டம் ஒத்துழைக்கவில்லை. கதவை திறக்க முடியவில்லை ”

வளர்மதி மெல்ல சிரித்தாள். ” இதோ பாருங்கள் டாக்டர். லாக் சிஸ்டம் ஒத்துழைப்பு தரவில்லையென்று சொல்லி நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது. நீங்கள் ஏமாற்ற நினைக்கிற ஒவ்வொரு விநாடியும் உங்களுக்கு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஃபார்ம் ஹவுஸூக்குள் சுற்றிக் கொண்டிருக்கிற நாய்கள் எந்த நிமிஷமும் நம்மை மோப்பம் பிடித்துக்கொண்டு இங்கே வந்து விடலாம். அப்படி வந்தால் நானாவது தப்பித்துக்கொள்வேன். ஏனென்றால் என்னிடம் துப்பாக்கிகள் இருக்கிறது. ஆனால் உங்கள் நிலைமையை எண்ணிப் பாருங்கள். ஒரு நாயிடம் சிக்கினாலே உங்கள் உடம்பு நார் நாராகிவிடும். மொத்தம் ஏழு நாய்கள். என்னாகும் யோசனை செய்யுங்கள் ”

ஜான்மில்லர் இருட்டில் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்தார். ” நான் சொல்வதை நம்புங்கள். மேக்னடிக் லாக் சிஸ்டம் ஒத்துழைப்பு தர மறுக்கிறது. நான் பொய் பேசவில்லை. இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் ”

ஜான்மில்லர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வளர்மதிக்கு இடதுபுறம் அந்த உறுமல் சத்தம் கேட்டது.

” வ்வ்ர்ர்ர் வ்வ்ர்ர்ர் ”

வளர்மதி திரும்பிப் பார்த்தாள்.

பழுப்பும் கருப்பும் கலந்த அந்த உயரமான அல்சேஷன் நாய் தன்னுடைய செந்நிற கண்களோடு உக்கிரமாய்ப் பார்த்தபடி கோரைப் பற்களைக் காட்டி உறுமிக்கொண்டிருந்தது.

வளர்மதி தன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி சுடுவதற்குள் அவள் மீது பாய்ந்தது. துப்பாக்கி எகிறி காற்றில் பறந்து ஜான்மில்லருக்குப் பக்கத்தில் போய் விழுந்தது.- (தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X