For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனக்கு எந்த சத்தமும் கேட்கலியே அப்பா.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (57)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

தீபக் தன்னுடைய காதுகளுக்கு உன்னிப்பை கொடுத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு ஈஸ்வரை ஏறிட்டான்.

" எனக்கு எந்த சத்தமும் கேட்கலையே அப்பா "

ஈஸ்வர் தனக்கு வலது பக்கமாய் தெரிந்த ஒரு புதர் போன்ற மறைவுப் பகுதியைக் காட்டினார்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 57

" சத்தம் அந்த இடத்திலிருந்துதான் வந்தது. காய்ஞ்ச சருகுகள் மேல காலை வெச்சா ஒரு சத்தம் வருமே அது மாதிரியான சத்தம். யாரோ உன்னையும், என்னையும் ஃபாலோ பண்ணி வர்றாங்கன்னு நினைக்கிறேன் "

" அப்பா..... இந்த ஸ்பாட்ல நிறைய குழி முயல்கள் இருக்கிறதாய் நீங்களே சொல்லியிருக்கீங்க. நாம வர்றதைப் பார்த்துட்டு புதர் பக்கமாய் குதிச்சு ஒடியிருக்கும் "

" இல்ல தீபக்.... குழி முயல்கள் குதிச்சு ஒடினா அந்த சத்தம் இப்படியிருக்காது.... இது வேற மாதிரி இருந்தது "

" சரி..... நீங்க இங்கேயே இருங்க. நான் அந்தப் புதர் பக்கமாய் போய் பார்த்துட்டு வர்றேன் " சொன்ன தீபக் தன்னுடைய செல்போனின் டார்ச்லைட்டை உயிர்ப்பித்துக்கொண்டு துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடி நடந்தான்.

" நானும் உன்கூட வர்றேன் தீபக்..... எனக்குத் தனியாய் இருக்க பயமாயிருக்கு " மகனின் கையை நடுக்கமாய்ப் பற்றிக்கொண்டார் ஈஸ்வர். தீபக் ஈஸ்வரை வியப்பாய்ப் பார்த்தான்.

" அப்பா..... இதைவிட இக்கட்டான சமயங்களில் கூட உங்களை நான் தைரியசாலியாய் பார்த்திருக்கேன். இன்னிக்கு இப்படி நடுங்கறதைப் பார்த்தா.... நீங்க என்னோட அப்பாதானான்னு ஆச்சர்யமாயிருக்கு ...... "

ஈஸ்வர் மகனின் கையை கெட்டியாய் பற்றிக்கொண்டார். "தீபக்..... வளர்மதியை நான் ஒரு சாதாரணப் பெண்ணாய் நினைச்சு கடத்திட்டு வந்தது.... எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ன்னு இப்பத்தான் தெரியுது. கொஞ்சம் யோசனை பண்ணியிருக்கணும். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். மாதவனையும் டாக்டர் ஜான் மில்லரையும் அநியாயமாய் இழந்துட்டோம் "

" அப்பா..... அதைப்பத்தி இனிமேல் கவலைப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை...... நீங்க என் பின்னாடியே வாங்க.... அந்த வளர்மதியை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நாம மடக்கிடலாம்.... அந்தப் புதர்க்குப் பின்னாடி ஏதோ சத்தம் கேட்டதாய் சொன்னீங்க.... அது என்னான்னு போய்ப் பார்த்துடலாம் வாங்க...... "

தீபக் சொல்லிக்கொண்டே இடது கையில் வெளிச்சத்தை உமிழும் செல்போனோடும்,வலது கையில் உயர்த்திப் பிடித்துக்கொண்ட துப்பாக்கியோடும் சற்றுத் தொலைவில் இருந்த அந்தப் புதரை நோக்கி நடந்தான்.

ஈஸ்வர் கலவரப் பார்வையோடு தீபக்கைத் தொடர்ந்தார்.

******

ஜோன்ஸ் அந்த இருட்டில் கையில் துப்பாக்கியோடு சுற்றும் முற்றும் பார்த்தபடி தீபக்கின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான். இருட்டுக்கு பார்வை பழகியிருந்ததால் தொலைவில் இருக்கும் மரங்கள் கூட காற்றுக்கு அசைவது தெரிந்தது.

பத்து நிமிஷம் கரைந்திருந்த போது நூறடி தொலைவில் இரண்டு உருவங்கள் மெதுவான நடையில் வந்து கொண்டிருப்பது அவனது கூரிய பார்வைக்கு புலப்படவே விழிகளுக்கு உன்னிப்பைக் கொடுத்து உற்றுப் பார்த்தான்.

வந்து கொண்டிருப்பது தீபக்கும், ஈஸ்வரும் என்று தெரிந்ததும் அவர்களை நோக்கி நகர்ந்தான். வேக நடை போட்டு நெருங்கினான்.

" ஸ.....ஸ.....ஸார் "

தீபக் லேசாய் மூச்சு வாங்கிக்கொண்டே கேட்டான். " என்ன... ஜோன்ஸ்.... வளர்மதி பார்வைக்குத் தட்டுப்பட்டாளா ..? "

" இல்ல ஸார்.... நாய்கள் வெளியே சுத்திகிட்டு இருக்குன்னு நினைச்சு ஏதாவது ஒரு மறைவான இடத்துல பதுங்கியிருக்கலாம்.... "

" நீ அப்படி நினைக்காதே ஜோன்ஸ்..... வளர்மதி நம்மை மானிட்டரிங் பண்ணிட்டிருக்கா "

" எப்படி ஸார் சொல்றீங்க ..? "

" நானும் அப்பாவும் உன்னைப் பார்க்க வந்துட்டிருக்கும் போது ஒரு புதரோட மறைவுக்குப் பின்னாடியிருந்து சத்தம் வர்றதை அப்பா கேட்டிருக்கார். காய்ஞ்ச சருகுகள் மேல யாரோ காலை வெச்சு நடந்து போற மாதிரியான சத்தம். ரெண்டு பேரும் துணிச்சலை வரவழைச்சுகிட்டு புதர் பக்கமாய் போனோம்..... யாரோ மின்னல் வேகத்துல இருட்டுல ஒடி மறைஞ்ச மாதிரி இருந்தது. வளர்மதியோட கையில் துப்பாக்கி இருக்குன்னு நீ சொன்னதால ஃபாலோ பண்ணிப் போறது ரிஸ்க்ன்னு மனசுக்குப்பட்டது. திரும்பிட்டோம் "

" ஸார்.... மொதல்ல டாக் ஷெல்டர்க்குப் போய் நாய்களை அவிழ்த்து விடுவோம்..... வளர்மதியை நாய்கள் எப்படியும் கண்டுபிடிச்சுடும் "

மூன்று பேரும் இருட்டில் கரைந்து நடக்க ஆரம்பித்தார்கள். ஜோன்ஸ் முதல் ஆளாய் நடந்து கொண்டே பேசினான்.

" ஸார்..... டாக்டர் ஜான் மில்லரோட தூக்கத்துக்கு தொந்தரவாய் இருக்கக்கூடாதுன்னு நீங்க சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நாய்களைக் கொண்டு போய் ஷெல்டர்ல அடைச்சேன். அப்படி அடைக்காமே இருந்திருந்தா இந்நேரம் வளர்மதி பதுங்கியிருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிருக்கலாம் "

" நீ சொல்றது சரிதான் ஜோன்ஸ்..... இனிமே ஜான் மில்லரோட தூக்கத்தைப் பத்தி நாம கவலைப்படவேண்டியதில்லை. ஏன்னா இனிமே அவர் நமக்கு உபயோகப்பட மாட்டார் "

நடந்து கொண்டிருந்த ஜோன்ஸ் யாரோ பிடித்து இழுந்தாற்போல் சட்டென்று நின்றான்.

" என்ன ஸார் சொல்றீங்க........ டாக்டர் ஜான் மில்லர் உபயோகப்பட மாட்டாரா......?"

" அவர் இப்போ உயிரோடு இல்லை ஜோன்ஸ் "

" ஸ.....ஸார்....... "

" வளர்மதியால மாதவனுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் ஜான் மில்லர்க்கும்...... "

ஜோன்ஸ் பயத்தில் உறைந்து போனவனாய் அப்படியே நிற்க, தீபக் அவனுடைய தோள் மீது கையை வைத்தான்.

" உனக்கு இந்த செய்தி அதிர்ச்சியாய் இருக்கும்ன்னுதான் நான் போன்ல சொல்லலை.... "

" ஸார்..... நான் ஒரு யோசனை சொன்னா நீங்க கேப்பீங்களா ..? "

" என்ன சொல்லு...... "

" நம்ம மூணு பேர்ல யார்க்கு வேணும்ன்னாலும் வளர்மதியால ஆபத்து ஏற்படலாம். நீங்களும் அப்பாவும் உயிரோடு இருக்க வேண்டியது முக்கியம் ஸார். நான் மட்டும் டாக் ஷெல்டர்க்கு போய் நாய்களை வெளியே அனுப்பிட்டு வர்றேன் "

ஈஸ்வர் குறுக்கிட்டு கேட்டார்.

" நீ டாக் ஷெல்டர்க்கு போய்ட்டு வர்ற வரைக்கும் நானும் தீபக்கும் இதே இடத்துல நின்னுட்டிருக்க சொல்றியா ..? "

" இல்ல ஸார்.... இங்கே நீங்க நின்னுட்டு இருந்தாலும் உங்க உயிர்க்கு ஆபத்து வர வாய்ப்பிருக்குன்னு எனக்கு தெரியாதா என்ன ? இதோ பக்கத்தில் இருக்கிற நான் தங்குகிற அவுட் ஹவுஸீக்குப்போய் உள் பக்கமாய் பூட்டிகிட்டு பத்திரமாய் இருங்க ஸார் " ஜோன்ஸ் சொல்லிக்கொண்டே தன்னிடம் இருந்த அவுட் ஹவுஸின் சாவியை எடுத்தான்.

தீபக் ஜோன்ஸை ஏறிட்டான்.

" டாக் ஷெல்டர்க்கு தனியாய் போக பயமாயிருக்குன்னு சொன்னியே ஜோன்ஸ்..? "

" இப்பவும் பயம்தான் ஸார்.... ஆனா வேற வழியில்லை. யாராவது ஒருத்தர் ரிஸ்க் எடுத்து டாக் ஷெல்டர்க்கு போய்த்தான் ஆகணும். நானே போய்ட்டு வந்துடறேன் "

ஈஸ்வர் கோபத்தில் கொந்தளித்தார்.

" ஒரு பொட்டச்சிக்கு இப்படி பயப்பட வேண்டியிருக்கு ..? "

" அப்பா.... வளர்மதி கையில துப்பாக்கி இருக்கப் போய்த்தான் இவ்வளவு பயம்..? நாய்களை வெளியே விட்டுட்டா அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே வளர்மதி பதுங்கியிருக்கிற இடம் நமக்குத் தெரிஞ்சுடும். ஜோன்ஸ் சொல்ற மாதிரி நாம ரெண்டு பேரும் அவுட் ஹவுஸீக்குள்ளே பத்திரமாய் இருப்போம்"

" ஸார்..... பேசிட்டிருக்க நேரமில்லை.... வாங்க போலாம் "

ஜோன்ஸ் சற்றுத் தொலைவில் தெரிந்த அவுட் ஹவுஸை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட இருவரும் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு நிமிட வேகமான நடையில் ஜோன்ஸ் வழக்கமாக தங்கும் அவுட் ஹவுஸ் மரங்களுக்கு மத்தியில் தெரிந்தது. இருட்டில் தெரிந்த படிகளில் ஏறிய ஜோன்ஸ் வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து தள்ளினான். உள்ளே பரவியிருந்த இருட்டைத் துடைப்பதற்காக சுவிட்ச்சின் மேல் கையை வைக்கப் போன ஜோன்ஸை தீபக் தடுத்தான்.

" வெளிச்சம் வேண்டாம் ஜோன்ஸ். நானும் அப்பாவும் இருட்டிலேயே இருக்கோம். ஒரு அஞ்சு நிமிஷம் இருட்டுல இருந்தா போதும் இருட்டுக்கு பார்வை பழகிடும். நீ டாக் ஷெல்டர்க்கு போயிட்டு வந்துடு...... "

ஜோன்ஸ் தலையாட்டினான்.

" சரி ஸார்.... நான் போயிட்டு பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே வந்துடுவேன்..... "

" பத்திரம்..... ஜோன்ஸ்... உன்னோட கைத்துப்பாக்கி அலர்ட்லயே இருக்கட்டும்..... வளர்மதி பார்வைக்குத் தட்டுப்பட்டாலோ, அவள் பதுங்கியிருக்கிற இடம் தெரிஞ்சாலோ ஒரு விநாடி கூட யோசனை பண்ணாமே சுட்டுடு...... "

" இதை நீங்க சொல்லணுமா ஸார்.... ? நான் என்னைப் பார்த்துக்கிறேன். நீங்க கதவைச் சாத்தி உட்பக்கமாய் தாள் போட்டுகிட்டு ஸேஃப்பா இருங்க " என்னைப் பத்தின கவலை வேண்டாம் ஸார் "

ஜோன்ஸ் சொல்லிவிட்டு போய்விட ஈஸ்வரும், தீபக்கும் வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டார்கள்.

மூன்று அறைகளோடு கூடிய சற்றே பெரிதான அவுட் ஹவுஸ் அது. முதல் அறையில் போடப்பட்டு இருந்த ஒரு பழைய சோபாவில் இருவரும் போய் உட்கார்ந்தார்கள்.

ஈஸ்வர் பெருமூச்சு விட்டார்.

" தீபக்.....நீயும் டாக்டர் ஜான் மில்லரும் இந்தியாவுக்கு வந்த நேரம் சரியில்லை போலிருக்கு.... ஜான் மில்லர்க்கு இப்படியொரு நிலைமை ஏற்படும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. டாக்டரோட உதவியில்லாமே உன்னால இந்த செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் ஆராய்ச்சியை தொடர முடியுமா ..? "

" முடியும் "

" எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே ..? "

" அப்பா.... இந்த ரிசர்ச் சம்பந்தப்பட்ட ப்ராசஸ் எந்த நாளில் இருந்து ஆரம்பிச்சதோ, அந்த நாளில் இருந்து டாக்டர் ஜான் மில்லர்க்கு என்னென்ன தெரியுமோ அதெல்லாம் எனக்கும் தெரியும். அவரை இந்தியாவுக்கு நான் கூட்டிட்டு வந்ததற்கு காரணம் அவர் என்னோட கண்காணிப்பில் இருக்கணுங்கிறதுக்காகத்தான் "

" தீபக்.... நீ என்ன சொல்றே..... அவரை எதுக்காக நீ கண்காணிக்கணும் ..? "

" அவர் மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது "

" என்ன சந்தேகம்..? "

" அந்த செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவர் க்யூபா பயோ ரிசர்ச் சென்டர்க்கு விற்க பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்தார். நல்ல விலை படியாத காரணத்தால நாட்கள் தள்ளிப் போயிட்டிருந்தது "

ஈஸ்வர் திடுக்கிட்டுப் போனவராய் மகனைப் பார்த்தார்.

" தீபக்.... நீ சொல்றது உண்மையா ? இதை என்னால நம்ப முடியலை... "

" நம்புங்கள் ஈஸ்வர்.... உங்கள் மகன் தீபக் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை "

பின்பக்கம் குரல் கேட்டு ஈஸ்வரும் தீபக்கும் அதிர்ந்து போனவர்களாய் திரும்பிப் பார்த்தார்கள்.

வீட்டின் உள்ளறையில் இருந்து அந்த உருவம் மெதுவாய் வெளிப்பட்டது.

டாக்டர் ஜான் மில்லர்.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X