For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நோ மோர் டாக்ஸ்... வாட்ஸ் அப்"பை பாருங்க .. பைவ் ஸ்டார் துரோகம் (31)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்


வேல்முருகன் செல்போன் பேச்சை தொடர்ந்தார்.

“ஸார்..... வாட்ஸ் அப்“ல என்ன மெஸேஜ் .... எனிதிங் இம்பார்ட்டண்ட்...... ...? “

“நோ மோர் டாக்ஸ்...... வாட்ஸ் அப்“யைப் பாருங்க. அதுல நான் என்ன மேட்டர் கொடுத்து இருக்கேனோ அதன்படி உங்க நடவடிக்கைகள் இருக்கட்டும்........! “

“ எஸ்......ஸார்“

“இன்னொரு விஷயம்..... எக்ஸ் சீப் மினிஸ்டர் முகில்வண்ணனோட மகன் செந்தமிழ் காணாமே போன விஷயம் மீடியாக்களுக்கு தெரிய வேண்டாம். அதே மாதிரி முகில்வண்ணனுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ட்ரீட்மெண்ட்ல இருக்கிறதும் தெரிய வேண்டாம்“

“ எஸ்......ஸார்“

rajesh kumar series five star dhrogam part 31

“இப்ப வாட்ஸ் அப்“யைப் பாருங்க..... “

“பார்த்துடறேன் ஸார்.......“ வேல்முருகன் செல்போனை மெளனமாக்கி விட்டு நிமிர்ந்தார்.

அருள், நித்திலன், சாதுர்யா, கஜபதி, அஞ்சனா ஐந்து பேரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அருள் கேட்டார்.

“கமிஷனர் என்ன சொல்றார்...? “

“வாட்ஸ் அப்“ல ஏதோ மெஸேஜ் அனுப்பியிருக்கிறதாய் சொன்னார். அந்த மெஸேஜ்படி நான் நடவடிக்கை எடுக்கணும்ன்னு சொல்லியிருக்கார். அந்த மெஸேஜ் என்னன்னு இப்ப பார்த்துடலாம்“

சொன்ன வேல்முருகன் தன் செல்போனின் “வாட்ஸ் அப்“ ஆப்ஷனுக்குப் போய் தனக்கு வந்து இருந்த செய்தியைப் பார்த்தார். வாய்விட்டு படித்தார்.

நீங்கள் உடனடியாய் கிளம்பி திரிசூலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் இரண்டாவது பிளாட்பாரத்தில் காத்திருக்கவும். நீங்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கும்போது உங்கள் “வாட்ஸ் அப்“புக்கு என்னுடைய இரண்டாவது மெஸேஜ் வரும். எக்காரணம் கொண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்ய வேண்டாம்.

எல்லோரும் குழப்பமாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அருள் வேல்முருகனிடம் கேட்டார்.

“என்ன இப்படியொரு மெஸேஜ் ...? “

“தெரியலை........ திரிசூலம் போனால்தான் தெரியும்...... “

“நாங்க யாராவது உங்களோடு வரட்டுமா...? “

“வேண்டாம்..... ஏதோ விவகாரமான விஷயம் இருக்கப்போய்த்தான் கமிஷனர் ஆதிமுலம் இந்த செய்தியை “வாட்ஸ் அப்“புல அனுப்பியிருக்கார்...... “வாட்ஸ் அப்“ மேட்டரை செல்போனில் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லலை...... சம்திங் ராங்க்...... நான் புறப்படறேன். திரிசூலம் போனதும் அங்கே நடக்கிற நிகழ்வுகளை உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன். உங்கள்ல யாராவது அஞ்சனாவை பத்திரமாய் கூட்டிட்டுப்போய் அவங்க வீட்ல விட்டுருங்க........! “

சாதுர்யா சொன்னாள்.

“ நான் அந்த பொறுப்பை ஏத்துக்கறேன்...... ஸார்“

“தேங்க்யூ“ என்று சொன்ன வேல்முருகன் அஞ்சனாவிடம் திரும்பினார்.

“இதோ பார் அஞ்சனா...... உன்னோட தோழி மிருணாளினி ஏன் தலைமறைவாய் இருக்கான்னு தெரியலை..... மிருணாளினி போலீஸோட கைக்கு கிடைக்கும்வரை நீ கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கணும்.... “

அஞ்சனாவின் கண்களில் நீர் பளபளத்தது.

“ஸார்...... நடக்கிற சம்பவங்களை எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு“

“பயப்படாதே அஞ்சனா.... மிருணாளினி ரொம்ப நாட்களுக்கு தலைமறைவாய் இருக்க முடியாது. எப்படியும் வெளியே வந்துதான் ஆகணும்..... அவ உனக்கு போன் பண்ணிப் பேசினா எதுவுமே உனக்குத் தெரியாத மாதிரி பேசு..... அவ எங்கே இருக்கான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோ. டென்ஷன் வேண்டாம்“

“ஸார்...... எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்துடாதே........! “

“ நீ எந்த தப்பும் பண்ணலைன்னா யார்க்கும் பயப்பட வேண்டியது இல்லை....... “

சொன்ன வேல்முருகன் எல்லோரையும் பார்த்து தலையசைப்பால் விடை பெற்றுக்கொண்டு கடற்கரையின் இருட்டில் கலந்து மறைந்தார்.

-----

திரிசூலம் ரயில்வே ஸ்டேஷன் அந்த ராத்திரியின் 12.30 மணி வேளையில் சோகையான ட்யூப்லைட் வெளிச்சத்தோடு வெறிச்சோடிக் காணப்பட்டது. ரயில் ஏதும் வருவதற்கான அறிகுறி இல்லாததால் மனித நடமாட்டம் அறவே அற்றுப்போய் ஏதோ தீவில் தன்னந்தனியாய் இருப்பது போன்ற உணர்வோடு வேல்முருகன் ஸ்டேஷனின் இரண்டாவது பிளாட்பாரத்தில் லேசாய் விரிசல் விட்டிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சின் மேல் உட்கார்ந்திருந்தார்.

நிமிடத்திற்கு ஒரு தடவை செல்போனை எடுத்து “வாட்ஸ் அப்“ பில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதாவென்று பார்த்து வரவில்லைன்னு தெரிந்ததும் பெருமூச்சுவிட்டார். கமிஷனரின் மேல் லேசாய் கோபம் வந்தது.

“எதற்காக இவர் இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் ...? “

“விஷயம் எதுவாக இருந்தாலும் போனில் நேரிடையாய் பேச வேண்டியதுதானே ...? “

சரியாய் 12.40 மணிக்குத்தான் அந்த “வாட்ஸ் அப்“ வந்தது. பார்வை பரபரவென்று வரிகளின் மேல் படர்ந்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வரவும். ஆட்டோ ஸ்டாண்ட்டிற்கு சற்றுத்தள்ளி இருட்டில் ஒரு ஆம்னி வேன் நின்று கொண்டு இருக்கும். இயல்பாய் நடந்து போய் வேனின் பின் சீட்டில் ஏறி அமரவும். ஏறி அமர்ந்ததும் வேன் கிளம்பும். வேனை ஓட்டும் டிரைவரிடம் பேச்சு கொடுக்கவோ அவர் யார் என்று தெரிந்து கொள்ளவோ சிறிதும் முயற்சிக்க வேண்டாம். வேண்டாத விளைவுகளை உண்டாக்கும். வேன் ஒரு பத்து நிமிஷம் பயணம் செய்துபின் ஒரு கட்டிடத்துக்கு முன்பாய் போய் நிற்கும். இறங்கிக்கொள்ளவும். ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். அது ஃபேக் ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர்

“வாட்ஸ் அப்“ செய்தி முடிந்து போயிருக்க, வேல்முருகன் எழுந்து வேகவேகமாய் நடைபோட்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார்.

சாலை விளக்குகள் எரியாததால் அரையிருட்டில் ஓரே ஓரு ஆட்டோ மட்டும் ஸ்டாண்டில் தெரிந்தது. இரண்டு பக்கமும் படுதா தொங்க ஆட்டோவின் பின்சீட்டில் ட்ரைவர் தூங்கிக்கொண்டிருப்பதற்கு அறிகுறியாய் குறட்டை சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது.

வேல்முருகன் சுற்றும்முற்றும் பார்த்தார். ஆள் நடமாட்டம் இல்லாமல் எல்லா கடைகளும் சாத்தப்பட்டு தெரிய கனமான நிசப்தம். ஆட்டோ ஸ்டாண்டிற்கு சற்றுத்தள்ளி அந்த வெள்ளை நிற ஆம்னி வேன் காத்திருந்தது.

மெதுவாய் நடைபோட்டு வேனை நெருங்கியவர் அதன் பின்பக்கக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தார். வேன் அடுத்த விநாடியே புறப்பட்டது. ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர் தன்னுடைய அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு மப்ளரை தலைக்குக் கட்டியிருந்தான். வேனுக்குள் நிரம்பியிருந்த காற்றில் ஆல்கஹால் வாசம்.

“வேனை ஓட்டும் டிரைவரிடம் பேச்சு கொடுக்கவோ அவர் யார் என்று தெரிந்து கொள்ளவோ சிறிதும் முயற்சிக்க வேண்டாம்“ என்ற “வாட்ஸ் அப்“ செய்தியின் வரி வேல்முருகனை எதுவும் பேச விடாமல் தடுக்கவே அவர் நெற்றியைப்பிடித்துக்கொண்டு சீட்டுக்கு சாய்ந்து உட்கார்ந்தார்.

வேன் போக்குவரத்தற்ற சாலையில் சீரான வேகத்தில் ஒட இரண்டு பக்கமும் இருட்டு கூடவே வந்தது. தொலைதூரத்தில் மின்விளக்குகள் கண்சிமிட்டிவிட்டு

உடனே காணாமல் போயிற்று.

சரியாய் பத்து நிமிஷ பயணத்திற்குப் பிறகு, வேனின் வேகம் குறைந்து சற்றே வெளிச்சமான ஓரு கட்டிடத்துக்கு முன்பாய் நின்றது.

வேல்முருகன் கேட்டார், மெதுவான குரலில் “இந்த இடம்தானா ...? “

“ம்........ “ ட்ரைவர் முனக – ஓரு சின்ன பயத்தோடு, தயக்கமாய் இறங்கிக்கொண்டார்.

வெளியே காற்று வேகமாய் வீசிக்கொண்டிருந்தது. “இது என்ன கட்டிடம்“ என்று திரும்பிப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வேன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து எதிர்திசையில் விரைந்து அடுத்த பத்து விநாடிகளுக்குள் காணாமல் போயிற்று. வேல்முருகன் திகைத்துத் திணறிக்கொண்டிருந்த விநாடி அவருடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்துப்பார்த்தார்.

டிஸ்ப்ளேயில் போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் தெரிய வேல்முருகன் பதட்டமடைந்து செல்போனை இடது காதுக்கு ஒற்றினார்.

“ஸார்........! “

“என்ன வேல்முருகன், வேன்ல போய் அந்த கட்டிடத்திற்கு முன்னாடி இறங்கிட்டீங்களா ...? “

“இப்பத்தான் இறங்கினேன் ஸார்“

“எனக்கும் இப்பத்தான் “வாட்ஸ் அப்“ மூலமாய் தகவல் வந்தது“

“தகவல் தந்தது யார் ஸார் ...? “

“அது யார்ன்னு உங்களுக்கு எப்படி தெரியாதோ ...... அதே மாதிரிதான் எனக்கும் தெரியாது...... “

“நீங்க பேசறது எனக்குப் புரியலை ஸார் “

“வேல்முருகன்........! மூணு மணி நேரத்துக்கு முந்தி ஓரு பெண் எனக்கு போன் பண்ணி காணாமே போன முகில்வண்ணனோட மகன் செந்தமிழ் எந்த இடத்துல எதுமாதிரியான நிலைமையில் இருக்கான்னு நீங்க தெரிஞ்சுக்க விரும்பினா நான் அனுப்புற “வாட்ஸ் அப்“ மெஸேஜை உங்க சி.பி.சி.ஐ.டி ஆபீஸர் வேல்முருகனுக்கு அப்படியே பார்வேர்ட் பண்ணி அந்த இடத்துக்குப் போகச்சொல்லுங்க. அவர் அங்கே போக லேட் பண்ணினாலோ, போகாமே இருந்தாலோ

செந்தமிழ் உடல் கூட அடக்கம் பண்ண கிடைக்காதுன்னு சொல்லிட்டு போன் இணைப்பை கட் பண்ணிட்டா.....“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X